உண்மையான அன்புக்கும் முயற்சிக்கும் நிச்சயம் கடவுள் உறுதுணையாக இருப்பார். அத்தகையவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அவர்கள் கேட்காவிட்டாலும் தானாக முன்வந்து கடவுள் அவர்களுக்கு உதவி செய்வார். இது குறித்த கதையொன்று புதுக்கோட்டை வட்டாரத்தில் வழக்கில் வழங்கி வருகின்றது.
அது ஒரு பெரிய காடு. பலவகையான மரங்கள் இருந்தன. அந்தக் காட்டில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அது காட்டில் பாதி இடத்தை நிறைத்துக் கொண்டு விழுதுகளுடன் பலவகையான மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் புகலிடம் தந்து செழிப்பாக இருந்தது. பல ஆண்டுகளா அந்த மரம் தன்னை அண்டி வந்த அத்தனை உயிர்களையும் அடைக்கலம் தந்து ஏற்றுக் கொண்டது.
அந்த ஆலமரத்தில் ஒரு சிட்டுக்குருவியோட குடும்பம் வசித்து வந்தது. அது தலைமுறை தலைமுறையா அந்த மரத்துலதான் வசித்து வந்தது. அதுக்கு அந்த மரத்தை விட்டா வேற எதுவும் தெரியாது. புயல், மழை. வெள்ளம் எதுவானாலும் சரி அந்த மரத்துலேயே அந்தச் சிட்டுக்குருவியின் குடும்பம் தங்கி இருந்துச்சு.
அந்தச் சிட்டுக்குருவியோட குடும்பம் அந்த மரத்தை ரொம்ப ரொம்ப நேசிச்சதுங்க. சுகமோ துக்கமோ அந்தக் குடும்பம் அந்த மரத்தோடயே பகிர்ந்துக்கிட்டதுங்க. காலையில அந்த மரத்துல இருக்கற கூட்டுல இருந்து பறந்து சென்று இரைதேடித் தின்றுவிட்டு பொழுது சாய இந்த மரத்தத் தேடி வந்து கூட்டுல அடைஞ்சிருங்க.
பொழுது போயிருச்சுன்னா அந்த மரத்துல பறவைகளின் மகிழ்ச்சியான சத்தத்தை மனசாறக் கேக்கலாம். எல்லா பறவைகளும் மரத்து மேல கூடுகட்டி வாழ்ந்ததுங்க. மரத்துக்குக் கீழ விலங்குகள் எல்லாம் இருந்துக்கிட்டதுங்க. இப்படியே சந்தோஷமா அதுகளோட வாழ்க்கை போயிக்கிட்டு இருந்தது.
அப்படிப் போயிக்கிட்டு இருந்த வாழ்க்கையில திடீர்னு புயல் வீசத் தொடங்குச்சு. மழை பெய்யவில்லை. இருந்தாலும் அங்கங்கே குளங் குட்டையில தண்ணி கொஞ்சம் இருந்தது. காட்டுல கிடைக்கிற இரைகளைத் தின்னுட்டு அந்தச் சிட்டுக்குருவியோட குடும்பம் ஆலமரத்துல வாழ்ந்துகிட்டு வந்ததுங்க.
அப்பப் பாத்து அந்தக் காட்டுல இருந்த மூங்கில்கள்ல திடீர்னு நெருப்புப் புடிச்சிருச்சு. காட்டுல இருந்த விலங்கு பறவை எல்லாம் வேற இடம் தேடிப் போனதுங்க. காட்டுத் தீ விறுவிறுன்னு பரவ ஆரம்பிச்சிருச்சு. ஆலமரத்துல கூடுகட்டி வாழ்ந்த பறவைங்களும் கீழ வாழ்ந்த விலங்குகளும் அந்த மரத்த விட்டுட்டு ஓடிடுச்சுங்க.
ஆனா அந்த சிட்டுக் குருவிக்கு மட்டும் அந்த ஆலமரத்த விட்டுட்டுப் போக மனசே இல்லை. எத்தனை காலம் நமக்கு எல்லாத்தையும் தந்த வீடான இந்த மரத்த ஆபத்துல விட்டுட்டு போகலாமா? நாம இந்த மரத்தையும் காட்டையும் எப்படியும் காப்பாத்தியாகணும். என்ன செய்யலாம்னு நெனச்சது.
ஒடனே தன்னோட குடும்பத்துல இருக்கற எல்லாக் குருவிங்கக்கிட்டயும், ‘‘இங்க பாருங்க நம்ம பலகாலமாக் காப்பாத்துன இந்த மரத்தையும் காட்டையும் ஆபத்துக்காலத்துல விட்டுட்டுப் போகக் கூடாது. இத எப்படியும் காப்பாத்தணும். நாம எல்லாரும் பறந்து போயி பக்கத்துல இருக்கற குளத்துல இருந்து தண்ணியக் கொண்டாந்து இந்த நெருப்புல ஊத்தி நெருப்ப அணைப்போம். வாங்க’’ அப்படீன்னு சொல்லிட்டு வேகவேகமாப் பறந்ததுங்க.
குளத்துல இருந்து தண்ணிய எடுத்துக்கிட்டு வந்து நெருப்புல ஊத்துச்சுங்க. இப்படியே ரெம்ப நேரமா முயற்சி செஞ்சிக்கிட்டே இருந்ததுங்க. இந்தக் குருவிங்களோட பாசத்தையும் அன்பையும் பாத்த கடவுளுக்கே ரெம்ப வருத்தமாப் போச்சு. இந்தக் குருவிகளுக்காகவாவது காட்டயும் மரத்தையும் அழியாமப் பாதுகாக்கணும்னு நெனச்சிக்கிட்டு கடுமையான மழை பெய்யக் கொண்டுவந்தாரு.
சும்மா இருந்த வானம் கருத்து இடி மின்னலோட நல்ல மழை பெய்யத் தொடங்கிடுச்சு. அதுவரையிலும் எரிஞ்சிக்கிட்டு இருந்த காட்டுத் தீ மழையினால அணைஞ்சிருச்சு. காடும் ஆலமரமும் நெருப்பில இருந்து தப்பிருச்சு. சிட்டுக்குருவிக எல்லாம் சந்தோஷப்பட்டதுங்க. மழைபெய்ய வச்ச இறைவனுக்கு நன்றியச் சொன்னதுங்க.
காட்டயும் மரத்தையும் விட்டுட்டுப் போன விலங்குக பறவைங்க எல்லாம் திரும்பவும் அந்தக் காட்டத்தேடி வந்ததுங்க. ஆலமரம் சிட்டுக்குருவிகளுக்கு நன்றியச் சொன்னது. மத்தவங்களுக்காக முயற்சி செய்யிறவங்களுக்குக் கடவுள் அவங்க கேக்காட்டியும்கூட உடனே வந்து உதவி செய்வாருங்கறதுக்கு இந்தக் கதைய இப்பவும் சொல்வாங்க.