பணம் படைத்தவர்கள் சிலர் திமிர்பிடித்தவர்களாக இருப்பர். அவர்கள் யாரையும் மதித்து நடக்க மாட்டார்கள். பிறரை ஏன் மதிக்க வேண்டும்? பணம் வைத்திருப்பதால் மற்றவர்கள்தான் தன்னை மதித்து நடக்க வேண்டும் என்று இருமாப்புடன் நடந்து கொள்வர். மற்றவர்களை மதிக்காது நடப்பது அவமதித்து நடப்பது ஆகியவை வாழ்வில் துன்பத்தைத் தரும். இதை விளக்குவதற்காக புதுகை வட்டாரத்தில் ஒரு கதை வழக்கத்தில் இருந்து வருகிறது.
ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவருக்கு அந்த ஊருல நெறைய நிலங்கள் இருந்தன. அவரோட நிலத்துலதான் அந்த ஊருல இருக்கற பல பேரு வந்து வேலை செஞ்சாங்க. அவருக்கு எல்லாரும் ஒரு வகையில சொந்தக்காரங்களா இருந்தாங்க.
அப்படி இருந்தாலும் அவரு யாரையும் மதிக்கமாட்டார். அவருக்குச் சொந்தமில்லாதவங்களையும் மதிக்க மாட்டார். அவர்கள் வீடுகளில் ஏதாவது கல்யாணமோ, இறப்போ வேற நிகழ்ச்சிகளோ நடந்தாலும் அவர் போக மாட்டார். அதுக்குப் பதிலாகத் தன்னோட வேலைக்காரன்கிட்ட தன்னோட கைத்தடியக் கொடுத்துவிட்டு அங்க மொய்யும் எழுதச் சொல்லுவாரு.
யாராவது என்னங்க இப்படிச் செய்யறீங்களே! இது ஒங்களுக்கே நல்லா இருக்குதா? அப்படீன்னு கேப்பாங்க. அதுக்கு அவரு, ‘‘இங்க பாருய்யா... நான் போனா என்ன, என்னோடக் கைத்தடி போனா என்னய்யா... ரெண்டு பேரும் ஒண்ணுதாய்யா... பெருசா பேச வந்துட்டாரு... போய்யா ஒம்ம வேலையப் பாத்துக்குட்டு போ’’ன்னு சொல்லி விரட்டி அடிச்சிடுவாரு.
அவரு கைத்தடி வந்துட்டா, அவரு வந்த மாதிரின்னு எல்லாரும் நெனச்சிக்குவாங்க. ஆனா அவரு வீட்டுல ஏதாவது நிகழ்ச்சி நடந்தா எல்லாரும் கட்டாயம் வரணும்னு உத்தரவு போடுவாரு. இதுமாதிரி அந்தப் பணக்காரர் செய்யிறது எல்லாருக்கும் பிடிக்கல. இருந்தாலும் அவருக்கிட்ட சொல்லற தைரியமும் அந்த ஊருக்காரங்களுக்கிட்ட இல்லை. ஏன்னா அவரு தோட்டத்துக்குப் போயி வேலை செய்யிறதுனால வேலைக்கு வரக்கூடாதுன்னு சொல்லிடுவாரோன்னு பயந்துக்கிட்டே இருந்தாங்க.
ஆனாலும், அவங்க மனசுக்குள்ளாற ஒரு உறுத்தல் இருந்துக்கிட்டே இருந்தது. இவர எப்படியாவது திருத்தணும்னு ஒவ்வொருத்தரு மனசுக்குள்ளயும் இருந்தது. அதுக்குச் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அதுவும் வந்தது.
ஒருநாள் அந்தப் பணக்காரரோட மனைவி ஒடம்புக்கு முடியாம இறந்து போயிட்டாங்க. அவரோட வேலைக்காரன் எல்லாரு வீடுகளுக்கும் போயி விஷயத்தைச் சொல்லி வரச்சொன்னான். அந்த ஊருக்காரவுங்க எல்லாரும் ஊரு பொது இடத்துல வந்து கூடுனாங்க.
அவங்கள்ல வயசுல பெரியவரா இருந்த ஒருத்தரு எல்லாரையும் பாத்து, “இங்ங பாருங்க. நம்ம வீடுகளுக்கு இந்தப் பணக்காரரு ஒரு நாளு கூட வந்ததே கிடையாது. நம்ம வீடுகள்ல நடக்குற விசேஷங்களுக்கு அவரு தன்னோட கைத்தடிய மட்டுந்தான் கொடுத்துவிடுவாரு. அதனால நாமளும் இப்ப ஆளுக்கொரு கைத்தடிய இந்த வேலைக்காரனுகிட்ட கொடுத்துவிடுவோம். அப்பத்தான் இந்த ஆளுக்கு மத்தவங்க மனசப்பத்தி தெரியும்”னு சொல்லிட்டு எல்லாருகிட்டயும் கைத்தடிய வாங்கிக்கிட்டு அத ஒருத்தருக்கிட்ட கொடுத்து அதப் பணக்காரரோட வீட்டுக்குக் கொண்டு போயிக் கொடுக்கச் சொன்னாரு.
பணக்காரரு அவ்வளவு கைத்தடிகளையும் பாத்தாரு. என்னடா இது, ஆளுக வராம கைத்தடிகளக் கொடுத்து விடுறாங்க. எவ்வளவு திமிரு இருந்தா இப்படிச் செய்வானுகன்னு நெனச்சிக்கிட்டுத் தன்னோட வேலையாள அனுப்பி மறுபடியும் ஆளுகள எல்லாரையும் வரச்சொல்லச் சொன்னாரு.
அந்த வேலைக்காரனும் போயி பணக்காரரு சொன்னதச் சொன்னான். அதக் கேட்ட அந்த ஊராளுங்க, “இங்க பாருப்பா நீ வேணா பயப்படலாம். ஆனா நாங்க எதுக்கு அவருக்குப் பயப்படணும். அவரு எங்க வீடுகள்ல நடந்த விசேஷங்களுக்குத் தன்னோட கைத்தடியத்தான கொடுத்துவிடுவாரு. அதுமாதிரி நாங்களும் அவருவீட்டு நிகழ்ச்சிக்கு கைத்தடியக் கொடுத்துவிட்டுருக்கோம். கைத்தடி வந்தா நாங்க வந்ததுக்குச் சமம்னு போயி அவருக்கிட்ட சொல்லு” அப்படீன்னு சொல்லிவிட்டாங்க.
வேலைக்காரனும் அவங்க சொன்னத அப்படியேப் பணக்காரருக்கிட்ட சொன்னான். அதைக் கேட்டவரு மனசொடஞ்சு போயிட்டாரு. நாம செஞ்சது எத்தனை தவறுன்னு உணந்தாரு. பணம் இருக்கற திமிருனால யாரையும் மதிக்காம செஞ்சிட்டோமேன்னு அழுதாரு. நேரம் போயிக்கிட்டே இருந்தது. ஊருக்குள்ளருந்து யாருமே வரல.
சரி நாமலே போயி அவங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டு அவங்களக் கூட்டிக்கிட்டு வந்துடுவோம்னு வேகவேகமாப் புறப்பட்டு ஊருப் பொது இடத்துக்குப் போனாரு. அவரு வர்றதைப் பாத்த ஆளுங்க ஒண்ணுமே பேசாம நின்னுகிட்டே இருந்தாங்க. அவங்களப் பாத்த அந்தப் பணக்காரரு, “ஐயா எல்லாரும் என்னைய மன்னிச்சிருங்க. நாஞ்செஞ்சது தப்புத்தான். ஒங்கள எல்லாம் மனுசங்களாவே நான் மதிக்காம நடந்துக்கிட்டேன். நானும் கைத்தடியும் ஒண்ணுன்னு சொல்லி இருமாப்பா இருந்துட்டேன். எனக்குப் புத்தி வந்துருச்சு. எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்து அந்தக் காரியத்தை நடத்துங்க. இனிமே இப்படி நடந்துக்கிட மாட்டேன்”னு சொல்லி எல்லாரு கால்லயும் விழுந்து கும்புட்டு விழுந்தாரு. ஊருக்காரவுங்களும் அவர மன்னிச்சாங்க. அவர எழுப்பிவிட்டு அவரக் கூட்டிக்கிட்டுப் போயி அவரோட காரியங்கள் எல்லாத்தையும் ஆளாளுக்குச் செஞ்சாங்க.
பணக்காரரும் மனம் திருந்திட்டாரு. எல்லாருக்கும் மரியாதை கொடுத்தார். ஒருத்தர் நமக்கு மரியாதை தந்தா நாமளும் அவருக்கு மரியாதை தரணுங்கரதுக்கு இந்தக் கதையச் சொல்வாங்க.