ஆசையில்லாத மனிதனை ஒலகத்துல பாக்கவே முடியாது. அப்படி ஆசையே இல்லாதவனா ஒருத்தன் இருந்தான்னா அவன்தான் ஞானியாவான். ஆசையும் அளவோட இருக்கணும். அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டா வாழ்க்கையில உள்ளதும் இல்லாமப் போயிடும்.
ஒரு ஊர்ல நல்லசாமி கந்தசாமின்னு ரெண்டு பேரு வாழ்ந்தாங்க. இவங்க ரெண்டுபேரும் அண்ணன் தம்பிக. அண்ணன் தன்னோட பேருக்கு நேரெதிரா இருந்தான். ஆனா தம்பியோ ரொம்ப நல்லவனா இருந்தான். அவங்க அப்பா இறக்கற போது தன்னோட மூத்தமகனப் பார்த்து, “டேய் பெரியவனே, இருக்கற சொத்த சமமாப் பிரிச்சு நீ ஒரு பாதியும் ஓந்தம்பிக்கு ஒருபாதியும் கொடுத்துச் சந்தோஷமா இரு” அப்படீன்னு சொல்லிட்டு எறந்துட்டாரு.
நல்லசாமி தன்னோட அப்பா சொன்னது மாதிரி நடந்துக்கல. அப்பா ஒனக்கு ஒண்ணுங் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. போனாப்போவுது ரெண்டு வீடு இருக்குல்ல... நீ ஒரு வீட்டுல இருந்துக்க... நானு ஒரு வீட்டுல இருந்துக்கறேன். மத்த சொத்துல ஒண்ணுகூட ஒனக்குக் கெடையாது” அப்படீன்னு சொல்லிட்டான்.
தம்பிகாரன் அண்ணன் சொல்றதக் கேட்டு அப்படியே நடப்பதற்கு ஒத்துக்கிட்டான். தெனந்தோறும் காட்டுக்குள்ளாறப் போயி மரத்தை வெட்டி ஊருக்குள்ளாறக் கொண்டு வந்து வித்துட்டு அதுல வர்ற காசவச்சி சாப்பிட்டுக்கிட்டு வாழ்ந்தான் தம்பி கந்தசாமி. கடுமையா ஒழைச்சான். இருந்தாலும் அவன் அப்பா மேலேயோ தன்னை ஏமாத்தின அண்ணன் மேலேயோ கோபப்படலை. ஆனா அண்ணன்காரன் சொகுசா வாழ்ந்தான். தம்பி கஷ்டப்படுறானேன்னு அவன் கவலப்படலை.
கந்தசாமி தெனமும் கோடலிய எடுத்துக்கிட்டுப் போயி வெறகு வெட்டிவித்துக் குடும்பத்த நடத்திக்கிட்டு வந்தான். ஒருநாளு கந்தசாமி வெறகு வெட்டுறதுக்காக கோடாலியை எடுத்துக்கிட்டு காட்டுக்குப் போனான். ஒவ்வொரு மரமாப் பாத்துக்கிட்டே போனான். வெட்டுற மாதிரி ஒருமரமும் அகப்படலை.
பொழுபோயிக்கிட்டே இருந்துச்சு. அவனுக்குக் கவலையாப்போச்சு. என்னடா இன்னைக்கு இப்படிச் சோதனையா இருக்குன்னு நெனச்சிக்கிட்டு கவலையா இருந்துச்சு. ரொம்பக் களைப்பா இருந்ததால ஒரு மரத்தடியில போயி கொஞ்சநேரம் ஒக்காந்துருந்தான். அவனுக்குத் தண்ணித் தாகம்வேற எடுத்தது. அவன் அந்த மரத்துல ஏறி பக்கத்துல எங்கயாவது குளமிருக்கான்னு பார்த்தான். ஆனா ஏதும் அவனுக்குத் தென்படலை. அப்படியே மரத்துமேலேயே இருந்துட்டான். பொழுது சாஞ்சிருச்சு. அசதியில அவன் தூங்கிட்டான். அப்ப அவனோட காதுல யாரோ ஒருத்தரு பேசற மாதிரி இருந்துச்சு. அவனுக்கு ஆச்சரியம் திடீர்னு கண்ண முழிச்சிப் பாத்தான் ஒருத்தருமில்லை. அப்ப யாரோ அவனக் கூப்புடுறது மாதிரி தெரிஞ்சது.
அந்த மரந்தான் அவனக் கூப்பிட்டது. “என்னப்பா கவலையோட பாக்குற... நான்தான் நீ ஏறி இருக்குறயில்ல. அந்த மரந்தான் பேசுறேன். ஒன்னப் பாத்தா பாவமா இருக்குது. நான் பறக்குற மரம். ஒனக்கு ஒதவி செய்யலாம்னு நெனக்கிறேன். ஒனக்கு என்ன வேணுமின்னு கேளு”. அப்படீன்னு சொன்னிச்சு. அவனுக்கு என்னத்தக் கேக்குறதுன்னே தெரியலே. அவனோட நிலைமையப் பாத்துப் பரிதாபப்பட்ட மரம் அவங்கிட்ட, “பறக்கும் மரமே பற அப்படீன்னு சொல்லு. நான் பறந்து போயி புதையல் இருக்கற இடத்துல ஒன்ன விட்டுடறேன். நீ வேணுங்கறத எடுத்துக்கிட்டு என்னோட கிளையில ஒக்காந்துக்க. நான் ஒனக்கிட்ட சொன்னது மாதிரி மறுபடி சொல்லு. அப்பறம் நீ எங்க போகணும்னு சொல்லு அந்த இடத்துல கொண்டுபோயி விட்டுடறேன்” அப்படீன்னு சொன்னது.
சரின்னு அவனும் மரம் சொன்னது மாதிரியே கிளைய நல்லாப் புடிச்சுக்கிட்டு, “பறக்கும் மரமே பற” அப்படீன்னு சொன்னான். மரம் வேகமாப் பறக்க ஆரம்பிச்சிருச்சு. கந்தசாமி பயத்துல கண்ண மூடிக்கிட்டான். ரெம்ப நேரமாப் பறந்துக்கிட்டுருந்த மரம் திடீர்னு ஒரு இடத்துல நின்னுச்சு. அந்த மரம் நின்ன எடத்தப்பாத்த பளபளன்னு மின்னுச்சு. மரத்தவிட்டுக் கீழ எறங்கிப் பாத்தான் கந்தசாமி.
தங்கம் வைரம் வைடூரியம் நிரம்பிக் கிடந்துச்சு. அவன் அதுகளக் கொஞ்சம் அள்ளி தெனந்தோறும் அரிசிவாங்கக் கொண்டுபோற பையில ரொப்பிக்கிட்டு மரத்துல ஏறி பறக்கும் மரமே பற. என்னய என்னோட வீட்டுக்கிட்ட விட்டுறுன்னு சொன்னான். மரமும் பறந்துபோயி கண்ணிமைக்கிற நேரத்துல அவனோட வீட்டுக்கிட்ட விட்டுருச்சு.
அவன் வந்தநேரம் இருட்டு நேரம். அவன் வீட்டுக்குள்ளாறப் போயி அவன் பொண்டாட்டிக்கிட்ட கொடுத்தான். அவளுக்கு ஆச்சரியம்னா ஆச்சரியம். எப்படிக் கிடச்சதுன்னு அவ கேட்டா. அவன் நடந்ததெல்லாத்தையும் சொன்னான். மறுநாளு டவுனுக்குப் போயி வைரத்தை வித்துட்டு வேணுங்கறத வாங்கிக்கிட்டு வந்தான்.
கொஞ்ச நாள்ல கந்தசாமி அண்ணனவிட பெரிய அளவுல வந்துட்டான். அவங்கிட்ட ஒதவின்னு வந்தவங்க எல்லாருக்கும் கொடுத்து ஒதவுனான். தம்பியோட வளர்ச்சியக் கண்ட அண்ணனுக்குப் பொறாமை வளந்துக்கிட்டே இருந்துச்சு. அவனோட பொண்டாட்டிக்கு அதுக்குமேல பொறாமை. எப்படி இப்படி பெரிய பணக்காரன ஆனான்னு தெரிஞ்சிக்கிட்டு வாங்க அப்படீன்னு புருஷனப் பாத்து நச்சரிச்சிக்கிட்டே இருந்தா.
நல்லசாமியும் பொண்டாட்டியோட நச்சரிப்புத் தாங்காம தம்பிக்கிட்டப் போயி, “தம்பி ஒனக்கு எப்படி இவ்வளவு பணம் கெடச்சது. அந்த ரகசியத்தச் சொல்லு. நீயி சொல்லாட்டி நான் செத்துப்போயிருவேன்” அப்படீன்னு சொன்னான்.
அண்ணன் செத்துப் போயிருவேன்னு சொன்னதால எறக்கப்பட்ட தம்பி எல்லாத்தையும் வெவரமாச் சொன்னான். அதக்கேட்டுக்கிட்டுப் போன நல்லசாமி தன்னோட பொண்டாட்டிக்கிட்டப் போயி நடந்ததச் சொன்னான். அவளும் நாலஞ்சு சாக்குகள எடுத்துக் கொடுத்து ஒரு கோடாலி, தூக்குச் சட்டியில கொஞ்சம் சோறு தண்ணி எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்து அவனப் போயி பொதையல எடுத்துக்கிட்டு வான்னு அனுப்பினா.
நல்லசாமியும் வேகவேகமாப் போனான். தம்பி சொன்னமாதிரியே காட்டுக்குள்ளாறப் போயி தம்பி சொன்ன அடையாளத்தை வச்சி அந்த மரத்தக் கண்டுபிடிச்சான். கொண்டுபோன சாப்பாட்ட அந்த மரத்தடியில வச்சிச் சாப்பிட்டான். பிறகு பொழுதுபோன நேரத்துல அந்த மரத்துல ஏறி, “பறக்கும் மரமே பற. பொதையல் இருக்கற இடத்துல கொண்டுபோயிவிடு” அப்படீன்னு சொன்னான். மரமும் பறந்துச்சு..நல்லசாமி கண்ண மூடிக்கிட்டான். அவன் கண்ணத் தெறந்தபோது புதையல் இருக்கற இடத்துல அந்த மரம் கொண்டுபோயி விட்டுச்சு. அவனுக்கு ரெம்பச் சந்தோஷம். அவன் மரத்தவிட்டு எறங்கிக் கொண்டுபோன சாக்குகள்ள தங்கம் வைரம் எல்லாத்தையும் அள்ளிப் போட்டு ரொப்பினான். அவனால தூக்க முடியல. மெதுவா எல்லாத்தையும் நகத்தி எடுத்து மரத்துக்கிட்டக் கொண்டுபோனான். அவனுக்குத் தலைகாலு புரியல.
அவன் மரத்தப் பற பறன்னு சொன்னான். மரம் பறக்கல. அவனுக்கு தம்பிசொல்லிக் கொடுத்த மந்திரம் மறந்து போயிருச்சு. மரத்தப் புடுச்சிக்கிட்டு. மரமே பற. பறன்னு கதறுனான். ஆனா நேரம் போயிக்கிட்டே இருந்துச்சு. மரம் பறக்கல.
நல்லசாமிக்குப் பயமாப் போயிருச்சு. அழுதான். கதறுனான். அவன் செஞ்ச தப்பெல்லாம் நெனச்சு நெனச்சு அழுதுகிட்டே இருந்தான். அப்பத் திடீர்னு மரம் பேசத் தொடங்கிச்சு. “டேய் பேராசைக்காரா! ஓந்தம்பி நல்லவன். அவன ஏமாத்தி அவன் சொத்தப்பூராம் எடுத்துக்கிட்டு அவன ஏமாத்துனதுமில்லா. அவன் நல்லா இருக்கறது ஒனக்குப் புடிக்காம பேராசைப்பட்டு இங்க வந்து இப்ப நல்லா மட்டிக்கிட்ட. இனிமே இங்கருந்து நீ தப்பிக்க முடியாது. இங்கேயே கெடந்து சாவு... நீ செஞ்சதப்புகளுக்கு இதுதான் தண்டனை...” அப்படீன்னு சொல்லிட்டு மரம் பறந்து போயிருச்சு. பேராசைப்பட்ட நல்லசாமி அங்கயே கெடந்து செத்துப்போயிட்டான்.
கந்தசாமிக்கு விவரம் தெரிஞ்சு அண்ணனத் தேடினான். காணலை. அண்ணனைக் கண்டுபிடிக்கறதுக்காகப் பறக்கற மரததையும் தேடினான். ஆனா அந்தப் பறக்கற தெய்வீக மரம் அந்தக் காட்டுலயே இல்ல. அவன் விதிய நொந்துக்கிட்டு வந்து விவரத்த தன்னோட அண்ணிகாரிக்கிட்ட சொல்லிட்டு கவலப்படாம இருக்கச் சொன்னான். கந்தசாமி எல்லாருக்கும் ஒதவியா இருந்து நல்லா வாழ்ந்தான்.