பழக்கம் வழக்கமாக மாறும். அப்படி மாறிடுச்சுன்னா அதை மாத்தறது கொஞ்சம் கஷ்டம். இது தொடர்பான ஒரு கதை இந்த வட்டாரத்துல வழக்கில் வழங்கப்பட்டு வருது.
அது ஒரு பெரிய கிராமம். அதுல தோப்புக்குள்ளாற ஒரு வீடு. அந்த வீட்டுல அப்பா, அம்மா, அவங்களோட மக ஒருத்தி, வயதான கிழவன் கிழவி, அவங்களோட மகன் என எல்லாரும் ஒற்றுமையா இருந்து வந்தாங்க. அவங்க எல்லாரும் ஆளுக்கொரு வேலையாப் பாத்து நல்லா சந்தோஷமா இருந்தாங்க.
அவங்க தினந்தோறும் வயல்ல வேலை செஞ்சிட்டு வந்து சாப்பிட்டு சீக்கிரமே படுத்துட்டு மறுபடியும் காலையில வெகு சீக்கிரமா எழுந்து மறுபடி அன்றைய வேலையச் செய்யத் தொடங்கிடுவாங்க. ஆனா அவங்களோட மக மட்டும் எல்லாரும் எழுந்த பின்னாலயும் தூங்கிக்கிட்டே இருப்பா. அவங்களும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டாங்க. அவளும் திருந்துறது மாதிரியே தெரியல.
இதுனால அம்மாகாரிக்கு மக மேல ரொம்பக் கோபங் கோபமா வந்தது. அவ வெளியில கெடந்த வௌக்கு மாத்த எடுத்துக்கிட்டு வந்து ரெண்டு சாத்து சாத்துனா. அந்த அடியப் பொறுத்துக்க மாட்டாத மக அலறி அடிச்சிக்கிட்டு எழுந்து வேலையப் பாக்க ஆரம்பிச்சிட்டா.
இதேமாதிரி அம்மாகாரி மகள எழுப்பையில எழுந்திரிக்கலன்னா வௌக்குமாத்தால ரெண்டு போடு போடுவா. அந்த அடிய வாங்குன ஒடனேயே மககாரி எழுந்திருச்சி வேலைகளப் பாக்கத் தொடங்கிடுவா. இப்படியே மக எழுந்திரிக்காட்டி ஆத்தாகாரி வௌக்க மாத்துல அடிக்கிறதும் மக எழுந்து வேலையப் பாக்குறதுமா நடந்துக்கிட்டே இருந்துச்சு.
இது தொடர்ந்து நடந்ததால வழக்கமாகிப் போச்சு. ஆத்தாகாரி வௌக்குமாத்தால அடிச்சாத்தான் அவ எதுக்கா இருந்தாலும் போவா. இல்லாட்டி எங்கயும் போயி ஒரு வேலையையும் செய்ய மாட்டா. ஆத்தாகாரி அடிக்கிறதும். மககாரி அடிய வாங்கிக்கிட்டு வேலை செய்யிறதுமா ஆகிப்போயிருச்சு.
ஒருநாளு இவங்க வீட்டுக்கு விருந்தாளு வந்தாங்க. அது ஆத்தாகாரியோட நாத்தனார். அவ அண்ணன் மகள எப்படியாவது தன்னோட மகனுக்குப் பேசி முடிச்சிரணும்னு வந்தா. அண்ணன் மகளும் அத்தை அத்தைன்னு நல்லா ஒட்டிக்கிட்டா. அத்தைக்கு விதவிதமாச் சமைச்சு விருந்து வச்சாங்க.
மறுநாள் காலையில மகள ஆத்தாகாரி தண்ணிக்குப் போகச் சொன்னா. ஆனா மக போகாம பேசா ஒக்காந்துருந்தா. என்னடா மக போகா இருக்காளேன்னுட்டு ஆத்தாகாரி மக கிட்டக்கப் போயி, “ஏத்தா ஏன் தண்ணிக்குப் போகச்சொன்னா போகமா இருக்க. குடிக்கக் கொஞ்சங்கூட தண்ணியில்ல. போயி ஒரு கொடந் தண்ணி எடுத்துக்கிட்டு வா”ன்னு சொன்னா.
அதைக்கேட்ட மககாரி, “நான் போகமாட்டேன். நீ கொடுக்கறதக் கொடுத்தாத்தான் நான் போவேன்”னு சொல்லிட்டுப் பேசமா ஒக்காந்து இருந்தா. ஆத்தாகாரிக்குக் கோபமான கோபம். விருந்தாளுக வந்துருக்கற போது எப்படி மகள வௌக்கமாத்தால அடிக்கிறதுன்னு புரியல. விருந்துக்கு வந்துருக்கிற நாத்துனாகாரி முன்னாலயா மகள வௌக்கு மாத்தால அடிக்கிறதுன்னு நெனச்சிக்கிட்டு, “இன்னக்கி முடியாதுப்பா. நாளக்கிச் சேத்து வச்சிக்கலாம் இப்பப் போப்பா”ன்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டா.
ஆனா மககாரி பிடிவாதமா போகமாட்டேன்னு வம்படியா ஒக்காந்தே இருந்தா. இதப் பாத்த அத்தைகாரி, “ஏன் அண்ணமுண்டி நீதேன் அவ கேக்குறதக் கொடுத்தான் என்ன? அப்படி என்னதான் கேட்டா. அவ கேக்குறதக் குடுத்தா என்ன குடியா முழுகிப் போயிருது. சும்மா கொடு. நாங்கள்ளாம் எதுவும் சொல்லமாட்டோம்”னு சொன்னா.
அதக் கேட்ட ஆத்தாகாரி, “நாத்தனாரே எம்மக கொடுக்கறதக் கொடுத்தாத்தான் குடங்கொண்டு தண்ணிக்குப் போவா. ஆனா அவ கேக்குறத இப்பக் கொடுக்க முடியாது. நாளக்கித்தான் கொடுக்க முடியும்”னு சொன்னா.
அதக்கேட்ட அத்தைகாரி, “என்ன அண்ணமுண்டி இப்படி இருக்கறீங்க. நீங்க கொடுக்க முடியலன்னா அவ கேக்குறத நான் எம்மருமவளுக்குக் கொடுக்கட்டுமா”ன்னு கேட்டா.
இதைக் கேட்ட ஆத்தாகாரிக்கு ரெம்ப தர்மசங்கடமாப் போயிருச்சு. சே... போயும் போயும் நம்ம மக நாத்துனாகாரிக்கிட்டயா அடிபடணும்னு நெனச்சிக்கிட்டு, நாமளே வீட்டுக்குள்ளாறக் கூட்டிக்கிட்டுப் போயிக் குடுத்துருவம்”னுட்டு, “இல்லை நாத்துனா நானே கொடுத்துடறேன். எதுக்கு ஒங்களுக்குச் சிரமம்”னு சொல்லிட்டு மகள வீட்டுக்குள்ளாறக் கூட்டிக்கிட்டுப் போயி வௌக்கு மாத்தால ரெண்டு குடு குடுத்து தண்ணிக்குப் போகச் சொன்னா.
அடிய வாங்குன மககாரி சந்தோஷமா குடத்த எடுத்துக்கிட்டுத் தண்ணிக்குப் போனா. இதப் பாத்த அத்தைகாரி மககாரியக் கூப்பிட்டு, “இந்தாத்தா, ஒங்கம்மா ஒனக்கு மட்டும் ரகசியமா என்னமோ குடுத்தாளே, அப்படி என்னதான் குடுத்தா. அதச் சொல்லிட்டு எனக்குங் கொஞ்சங் குடுத்துட்டுப் போ”ன்னு சொன்னா.
அதக் கேட்ட மககாரி, “அத்தை எனக்கு அதைச் சொல்லறதுக்கு நேரமில்லை. நீங்களே என்னோட அம்மாகிட்ட கேட்டு வாங்கிக்கிடுங்க நான் தண்ணிக்குப் போறேன்”னு சொல்லிட்டு குடத்தத் தூக்கிக்கிட்டு குளத்துப்பக்கம் போனா.
திண்ணையில இருந்த நாத்துனாகாரி, ஆத்தாகாரியக் கூப்பிட்டு, “ஏன் அண்ணமுண்டி ஒம் மவளுக்கு மட்டும் ரகசியமாக் கொடுத்தியே. நானும் இந்த வீட்டுல பொறந்த ஒரு மகதான எனக்குங் கொஞ்சம் கொடு”ன்னு விடாப்பிடியாக் கேட்டா.
இதக் கேட்ட ஆத்தாகாரிக்கு ரொம்ப தர்ம சங்கடமாப் போயிருச்சு. என்னடா நம்ம நாத்துனாகாரி இப்படிக் கேக்குறா. எப்படி அவளுக்கு வௌக்கு மாத்தடி கொடுக்க முடியும்னு நெனச்சிக்கிட்டு, “நாத்தனாரே, எம்மவளுக்குக் கொடுக்கிறத எல்லாம் ஒங்களுக்குத் தரமுடியாது. பேசாம இருங்க”ன்னு சொன்னா.
இப்படி ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கயில அப்பங்காரன் வந்தான். வந்தவன் பொண்டாட்டியப் பாத்து, “ஏன்டி ஏந் தங்கச்சி கேக்குறதத்தான் கொடுத்தாத்தான் என்ன? ஏம் பிடிவாதம் பிடிக்கிற? பேசமாக் கொடுத்துரு”ன்னு சொன்னான்.
ஆத்தாகாரிக்கு ஒண்ணும் புரியல. என்னடா நம்ம வீட்டுக்காரருகூட தெரிஞ்சிக்காமப் பேசறாருன்னு நெனச்சிக்கிட்டு புருஷங்கிட்ட மறைமுகமா, “இந்தப் பாருங்க தெனைக்கும் நம்ம மகளுக்கு நாம குடுக்கறத ஒங்க தங்கச்சி தனக்கும் குடுங்கன்னு கேட்டுக்கிட்டு இருக்குறாங்க. நானு எப்படி கொடுக்க முடியும்”னு சொன்னா.
அதைக் கேட்ட புருஷங்காரன் புரிஞ்சிக்கிட்டான். அவனும் தன்னோட தங்கச்சிக்கிட்ட “அத ஒனக்குக் குடுக்கமாட்டாம்மா எம்பொண்டாட்டி. எப்பவும் ஒம் மருமக குடுக்கறதக் குடுத்தாத்தான் குடங்கொண்டு தண்ணிக்குப் போவாம்மா. அதத்தான் இவ செஞ்சிருக்கா. அதப் போயி எனக்கு வேணும்னு அடம்பிடிக்கிறியே”ன்னு கேட்டான்.
அதக் கேட்ட அவனோட தங்கச்சி, “ஏன் அண்ணமுண்டி, இப்படி பிடிவாதமா இருக்கற. எம்மருமவளுக்குக் குடுத்தத்தைக் கொடுத்தாத்தான் நான் ஒம் வீட்டுல இனி சாப்புடுவேன்”னு ஒப்பாரி வச்சா. ஆத்தாகாரிக்கு ஒன்னும் புரியல. என்ன பண்றதுன்னு புருஷங்காரனப் பாத்தா. அவன் சரி குடுங்கறது மாதிரி தலையசைச்சான்.
புருஷங்காரன் சொன்ன ஒடனே பொண்டாட்டிகாரி, “நாத்துனா வாங்க வீட்டுக்குள்ளாற...”ன்னு கூட்டிட்டுப் போனா. போனவா நாத்துனாவப் பாத்து, “என்ன நாத்துனா ஒனக்கும் குடுக்குறதக் குடுக்கணுமாக்கும். அப்பறம் நாங் குடுத்த ஒடனே கோபப் படக்கூடாது”ன்னு சொல்லிட்டு வௌக்கு மாத்த எடுத்துக்கிட்டு வந்து நாலு போடு போட்டா. அடி பொறுக்க மாட்டாத நாத்துனாகாரி, “ஐயையோ இதுதானா குடுக்குறது. இதுபோதும். இனிமே எஞ்ஜெம்மத்துக்கும் கேக்கமாட்டேன்”னு சொல்லிட்டு பேசாம வெளியில வந்தா.
அதப் பாத்த அண்ணங்காரன், “ஏப்பா ஒங்க அண்ணமுண்டி கொடுத்தத நல்லா வாங்கிக்கிட்டியா. இனிமே குடு குடுன்னு கேக்கமாட்டியில்ல”ன்னு கேட்டான். அதக்கேட்ட நாத்துனாகாரி கெளுற முழுங்குன பூனை மாதிரி முழிச்சா. இந்தக் கதைய இன்றைக்கும் சொல்லிச் சொல்லி சிரிப்பாங்க.