உலகத்தில் இருக்கின்ற மக்கள் தங்களைக் காப்பதற்கு நல்லவன் வருவானா? அவன் எப்போது வருவான்? என்று ஏங்கிக் கொண்டே இருக்கின்றனர். தற்போது இருப்பவரைவிட ஒரு நல்லவன் வந்து நாட்டினை ஆண்டால் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று நினைக்கின்றனர். ஆனால், அடுத்து வருபவன் முன்னால் இருந்தவனே பரவாயில்லை என்று கூறுமாறு நடந்து கொள்கிறான். இதுதான் உலக நடைமுறையாக இருக்கின்றது. சரி நல்லவன் வந்து ஆள்கிறான் என்று வைத்துக் கொண்டால், அது பலருக்கும் பிடிக்காமல் போய் மீண்டும் பழைய நிலையேத் தொடர்கின்றது. இந்த நிகழ்வுகள் உலகமெங்கும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இது பற்றிய கதை ஒன்று புதுக்கோட்டை வட்டாரத்தில் மக்களிடையே வழங்கி வருகின்றது.
அது ஒரு பெரிய கிராமம். கோவில், குளம், பள்ளி என்று அழகான ஊர். அந்த ஊரின் எல்லைப்புறத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அது வழிக்போக்கர்கள் தங்கிச் செல்லுமிடமாகவும், ஊர்க்காரர்கள் தங்கி இளைப்பாறும் இடமாகவும் இருந்தது.
அந்த ஆலமரம் பறவைகளுக்கும் சின்னஞ்சிறு உயிரினங்களுக்கும் புகலிடமாகவும் இருந்தது. அந்த ஆலமரத்தில் ரெண்டு காகம் கூடு கட்டி வாழ்ந்து வந்ததுங்க. அந்தக் காகங்களுக்கு ஒரு குஞ்சு. அத ரெண்டு காகமும் பாசத்தோடு வளர்த்தது.
ஆனாலும் இந்த ஆண்காகத்துக்கு ஒரு கெட்ட வழங்கம் இருந்தது. அந்த ஆலமரத்து நிழல்ல வெயிலுக்காக வந்து தங்குறவங்க மேலே வேணுமின்னே எச்சம் பேண்டு விட்டுரும். அவங்க ஆலமரத்தின் எந்தப் பக்கம் ஒக்காந்தாலும் இந்தக் காகம் இப்படியேச் செய்யும். இதனால அங்க வர்றவங்க எல்லாரும் இந்தக் காகத்தை, “பாழாப் போன காக்கை ரொம்ப மோசம் பண்ணுதே. எப்பப் பாத்தாலும் எங்ஙன இருந்தாலும் ஆளுமேலேயே வந்து எச்சம் போட்டுட்டுப் போகுதே. இதை ஒரு வழி பண்ணணும்”னு சொல்லிக்கிட்டே போவாங்க. இருந்தாலும் அந்தக் காகத்தை அவங்களால ஒண்ணும் பண்ண முடியல.
வெயிலோட தாக்கத்துல இருந்து தப்பிக்கிறதுக்கு அவங்க அந்த ஆலமரத்தை நாடி வரவேண்டியதா இருந்தது. இப்படியேப் பல வருஷம் ஓடிப் போச்சு. ஆனா அந்த ஆண் காகம் மட்டும் தன்னோட பழக்கத்தை மாத்திக்கவே இல்லை.
அப்படி இருக்கறபோது, அந்தக் காகத்தோட மகன் வளர்ந்து பெரிய காகமா மாறிட்டான். ஆண் காகம் தன் மகன் காகத்து மேல ரொம்பப் பிரியமா இருந்துச்சு. ஒரு நாளு ஆண்காகத்துக்கு தீடீர்னு உடம்புக்கு முடியாமப் போயிருச்சு. சாகப் பொழைக்கக் கிடந்த ஆண் காகம் தன்னோட மகன் காகத்தைக் கூப்பிட்டு, “மகனே நான் சாகப் போறேன். அதப்பத்தி நான் கவலைப் படல. ஆனா எனக்கு ஒரு வருத்தம். அத நீதான் போக்கணும்”னு சொன்னது.
அதைக் கேட்ட மகன் காகம், “அப்பா ஒங்களோட வருத்தத்தைப் போக்குறது என்னோட முதல் கடமை. நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க நான் செய்யறேன்”னு சொன்னது.
அதுக்கு அப்பா காகம், “மகனே இந்த வட்டாரத்துல இருக்குறவங்க எல்லாரு மேலேயும் நான் எச்சம் போட்டு அவங்கள அசிங்கப்படுத்தியதால எல்லாரும் என்னைக் கேவலமாப் பேசுறாங்க. எனக்கு ரொம்ப கெட்டபேராப் போயிருச்சு. எனக்கு இருக்கிற கெட்ட பேர நீதான் போக்கணும். எனக்கு நல்ல பேர எடுத்துக் கொடுப்பியா?” அப்படீன்னு கேட்டது.
அதுக்கு மகன் காகம், “கண்டிப்பா ஒங்களுக்கு நல்ல பேர எடுத்துக் கொடுப்பேன். ஒங்கள நல்லவருன்னு இந்த வட்டாரத்துல இருக்குற மக்கள் எல்லாரும் பேசற மாதிரி ஆக்கிடுறேன்”னு சொன்னது. அதைக் கேட்ட அப்பா காகம் நிம்மதியாச் செத்துப் போயிருச்சு.
மறுநாளிலிருந்து மகன் காகம் அப்பா நல்லவருன்னு ஊருல இருக்கறவங்க எல்லாரையும் பேச வைக்க என்ன செய்யலாம்னு யோசிச்சது. அப்படி யோசிச்சி ஒரு முடிவுக்கு வந்தது.
அன்றையிலிருந்து தான் எடுத்த முடிவை செயல்படுத்த நினைச்சது. நிழலுக்கு ஒதுங்கிய மக்கள் மேல எச்சம் போடாம இருந்தது. அதைப் பாத்த மக்கள் அப்பா இங்க ஒரு காகம் இருந்து நம்ம மேல பீயைப் பேண்டுக்கிட்டு இருந்துச்சு. இப்ப அதக் காணோம். அப்படீன்னு மரத்தை நிமிர்ந்து பார்த்தாங்க. அப்ப வாயைத் திறந்து கொட்டாவி விட்டாங்க. அப்பப் பாத்து மகன் காகம் சரியா அவங்களோட வாயில எச்சத்தைப் போட்டது.
அதப் பாத்தவங்க, “அட நாசமாப்போற காக்கையே, இதுக்கு முந்தின காகம் எங்கமேலதான் எச்சம் போட்டது. ஆனா நீ எங்களோட வாயிலேயே எச்சத்தைப் போடுறியே. உன்னைவிட அந்தக் காகமே நல்லது. நீ ரொம்ப மோசம்” அப்படீன்னு பேசுனாங்க.
மகன் காகம் அதே மாதிரி தொடர்ந்து செஞ்சிக்கிட்டு வந்ததால, அதோட அப்பாவை எல்லாரும் ரொம்ப நல்ல காகம்னு பேசத் தொடங்கினாங்க. மகன் காகம் அப்பா காகத்துக்கிட்ட கொடுத்த வாக்கக் காப்பாத்திட்டோம்னு ரெம்ப சந்தோஷப்பட்டது.
இதை விளக்குறதுக்கு ஒரு பழமொழி ஒன்று உள்ளது.
“அப்பங் கெணத்தச் சுத்திப் பேண்டான். மகனோ கெணத்துக்குள்ளயே பேண்டானாம்” என்பதே அப்பழமொழி.
இந்தக் கதை எல்லாக் காலத்துலயும் பொருந்தி வரக் கூடிய கதையாக இருப்பதை எல்லாரும் உணரலாம்.