கிராமங்கள்ல பெரியவர்கள் பேசுகின்ற போது ‘‘அட அஞ்சுக்கு ரெண்டு பழுதில்ல. சும்மா போவியா’’ என்று கூறுவதைப் பார்க்கிறோம். எதற்காக இப்படிக் கூறுகின்றனர்? ஏன் அடிக்கடி கூறுகின்றனர்? என்பதற்குப் பலருக்கும் விடை தெரியாது. ஏதோ பெரியவர்கள் கூறுகின்றனர் என்று கேட்டுக் கொண்டு போய்விடுகின்றனர். இதைப் பற்றி புதுகை வட்டாரத்தில் ஒரு கதை வழங்கி வருகின்றது.
கிராமத்துல ஒருத்தர் பால்மாடு வாங்குறதுக்காக மாட்டுச் சந்தைக்குப் போனார். நல்லா பால் தரக்கூடிய மாடாப் பார்த்து வாங்கணும்னு சந்தைக்குள்ளாறப் போயி மாடுகளப் பார்த்துக்கிட்டு வந்தாரு. கன்னு போடற நிலையில இருக்கற மாடுகளாப் பார்த்துக்கிட்டு விசாரிச்சிக்கிட்டு வந்தாரு.
அவரு விசாரிக்கிறதப் பார்த்த ரெண்டு ஏமாத்துப் பேர்வழிகள் அவர மடக்கி தாம் வச்சிருக்கிற மாட்டை வித்துடணும்னு நெனச்சாங்க. மாடு வாங்க வந்தவரு அவங்களோட மாட்டைப் பாத்தாரு.
மாட்டைப் பாத்தவருக்கிட்ட அவங்க, “ஐயா இந்த மாடு இப்பத்தான் கன்னு போட்டுருக்கு. ஒரு நாளைக்கு அஞ்சு படி (இக்காலத்தில் அஞ்சு லிட்டர்) பாலு கொடுக்கும். நீங்க நல்லாத் தீனி போட்டுக் கவனிச்சிங்கன்னா கூட ஒரு படி பாலு கொடுக்கும். வாங்கிக்கோங்க” அப்படீன்னு சொன்னாங்க.
அவரும் மாட்டச் சுத்திச் சுத்தி வந்து பாத்தாரு. அவரு அவங்களப் பாத்து, “என்ன வெலை சொல்றீங்க”ன்னு கேட்டாரு.
அதுக்கு, “இந்த மாட்டை பத்தாயிரம் ரூபாய்க்கு விக்கலாம்னு நெனைக்கிறோம். ஒங்களப் பாத்தா நல்லவராத் தெரியரீங்க. ஒங்களுக்கு ஆறாயிரத்துக்குத் தரலாம்னு நெனைக்கிறோம்”னு சொன்னாங்க.
மாடு வாங்க வந்தவருக்கு அட நல்ல கொறச்ச விலைக்கு மாட்டைத் தர்றாங்களேன்னு மனசுக்குள்ளேயே சந்தோஷப்பட்டுக்கிட்டு இன்னும் கொறைச்சுக் கேப்போம்னு, “என்கிட்ட அவ்வளவெல்லாம் பணமில்லை. இன்னும் கொஞ்சம் கொறைச்சிக் கொடுத்தீங்கன்னா நான் வாங்கிக்குவேன்”னு சொன்னாரு.
அதுக்கு அவங்க, “சரி நீங்க எவ்வளவுக்குத்தான் கேக்குறீங்க. ஒங்க மதியச் சொல்லுங்க”ன்னு கோட்டாங்க. அவரும், “அஞ்சாயிரம்தான் என்னோட மதி. மாட்டத் தர்ரீங்களா”ன்னு கேட்டாரு. அவங்களுக்கும் சரி இவந்தலயில இந்த மாட்டக் கட்டிருவோம்னு, “சரிசரி நீங்க இப்படிக் கேக்குறதால நாங்க ஒங்களுக்கு மாட்டை விக்கிறோம்”னு சொன்னாங்க.
மாட்டை வாங்குறவரு, “இந்த மாடு கண்டிப்பா அஞ்சுபடி பாலு கொடுக்குமுல்ல. ஒங்கள நம்பலாமா? என்னைய ஏமாத்லைல்ல”ன்னு கேட்டாரு. அதுக்கு, “இங்க பாருங்கய்யா நாங்க பக்கத்தூருதான். நாங்க பொய் சொல்ல மாட்டம். வேணுமின்னா பக்கத்துல நிக்கிற இவரை சாட்சியா வச்சிக்கிடுவோம். இந்த மாட்டை வாங்கிக்கிட்டுப் போங்க. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லையா”ன்னு சொன்னாங்க.
மாடு வாங்குறவரும், “நெசமா இந்த மாடு நல்லா பாலு கொடுக்குமாய்யா”ன்னு வற்புறுத்திக் கேட்டாரு. அதுக்கு மாட்டை விக்கிறவங்களும், “நாங்கதான் சொல்லிட்டோமோ அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லைன்னு. நல்லா வாங்கிக்கிட்டுப் போங்க. ஏதாவது ஒன்னுன்னா எங்கள வந்து கேளுங்க”ன்னு அப்படி இப்படின்னு சொல்லி அவருக்கிட்ட மாட்டை வித்துட்டுப் பணத்தை வாங்கிக்கிட்டுப் போயிட்டாங்க.
மாட்ட வாங்குனவரும், “அந்தாளுங்க நல்லா ஏமாந்துட்டாங்க. அஞ்சுபடி பாலுகறக்கற மாட்ட எவனாவது அஞ்சாயிரத்துக்குத் தருவானுகளா? முட்டாப் பயலுங்க”ன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டு மாட்டையும் கன்னுக்குட்டியையும் ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு.
வந்தவரு மாட்டுக்கு நல்லா தீனியப் போட்டுக் கவனிச்சாரு. மறுநாள் காலையில மாட்டுல பால் கறந்தாரு. பால் கறந்தா அவருக்கு அதிர்ச்சியா ஆயிருச்சு. ஒரு ஒழக்குத்தான் அவரால கறக்க முடிஞ்சது. “என்னடா இது அஞ்சுபடி பாலு கறக்கலாம்னு சொன்னாங்க. ஒரு ஒழக்குப் பாலுகூடக் கிடைக்கல. ஒருவேலை நாம இன்னும் நல்லாத் தீனி போடல போல இருக்கு. சரி நல்லா தீனியப் போட்டுப் பாலக் கறந்து பாப்போம்னு’’ நெனச்சிக்கிட்டு மாட்டுக்குப் பருத்திக் கொட்டை, புண்ணாக்குன்னு பலமாக் கவனிச்சாரு.
மாடு நல்லாத் தின்னுச்சு. ஆனா அவரு ஒழக்குப் பாலுக்கு மேல கிடைக்கல. அதனால ரெம்ப மனசுக்கு கஷ்டமாப் போயிருச்சு. அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாவும் வந்தது. என்னடா செய்யிறதுன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தாரு. ரெம்ப யோசிச்ச பிறகு பஞ்சாயத்து வச்சித்தான் ஆகணும்னு முடிவு செஞ்சி தன்னோட ஊரு ஆட்களக் கூட்டிக்கிட்டு பக்கத்து ஊருக்கு மாடு கொடுத்தவங்களத் தேடிப் போயி பஞ்சாயத்து வச்சாரு.
பஞ்சாயத்துல நடந்ததை எல்லாரும் விசாரிச்சாங்க. விசாரிச்சவங்க, “என்னயா சொல்றீங்க. நீங்க பொய் சொல்லித்தான மாட்ட இந்தாளுக்கிட்ட வித்துருக்கீங்க. அதனால மாட்ட வச்சிக்கிட்டு அவருக்கிட்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்திடுங்க”ன்னு சொன்னாங்க.
அதுக்கு மாட்ட வித்தவங்க, “ஐயா நாங்க உண்மையத்தான் சொன்னோம். அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமக் கெடைக்கும் அப்படீன்னு சொல்லித்தான் மாட்டைக் கொடுத்தோம். இது மாட்டை வாங்குனவருக்கும் தெரியும். அதுக்குச் சாட்சி அவரு ஊருக்காரரும் கூட இருந்தாரு. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமக் கிடைக்குதா இல்லையான்னு அவரக் கேளுங்க”ன்னு சொன்னாங்க.
பஞ்சாயத்தாருங்க, ”என்னய்யா அவங்க சொல்றது உண்மையா? அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாம மாடு கொடுக்குதாய்யா? ஏய்யா சொல்லுயா” அப்படீன்னு கேட்டாங்க.
அதுக்கு மாட்டை வாங்குனவரு, ”எனக்கொண்ணும் புரியலைங்க. நான் வாங்குறபோது அஞ்சுபடி பாலு கறக்கும். அப்படியே இல்லன்னாலும் அஞ்சுக்கு ரெண்டு பழுதிருக்காதுன்னு திரும்பத் திரும்பச் சொன்னாங்க. சரின்னுட்டு புரியாம மாட்டை வாங்கிக்கிட்டு வந்துட்டேன். அந்த அஞ்சுக்கு ரெண்டுங்கறது எனக்குப் புரியல. அதை நான் அவங்ககிட்ட கேக்கவும் இல்லை. இத நீங்க அவங்களுக்கிட்டக் கேட்டுச் சொல்லுங்க”ன்னு சொன்னாரு.
பஞ்சாயத்தாருங்க மாட்டை வித்தவங்கக்கிட்ட, “அது என்னய்யா அஞ்சுக்கு ரெண்டு பழுதில்ல. அஞ்சுபடி பாலு கிடைக்கலன்னா ரெண்டு படி பாலாவது கிடைக்கும்கிறதா? இல்ல வேற அர்த்தமா? சொல்லுங்க” அப்படீன்னு கேட்டாங்க.
மாட்ட வித்தவங்க, “அது வந்துங்கய்யா, பாலு, மோரு, நெய்யி சாணம், கோமேயம் இதுதாங்கய்யா அஞ்சுங்கறதுக்குப் பொருள். இதுல மொதல்ல இருக்கற மூணு கிடைக்காட்டியும் பின்னால இருக்கற ரெண்டு குறையில்லாமக் கிடைக்கும்யா. இதைத்தான் நாங்க திரும்பத் திரும்ப சொன்னோம். அத மாடு வாங்குனவரு சரியாப் புரிஞ்சிக்கலை. அஞ்சுபடி பால் கிடைக்கலைன்னாலும் சாணமும் கோமேயம் (மாட்டோட மூத்திரம்) ரெண்டும் நிச்சயம் அட்டியில்லாமக் கிடைக்கும்னு சொன்னோம். நாங்க பொய் சொல்லலை. உண்மையச் சொல்லித்தான் வித்தோம்”னு சொன்னாங்க.
அதக் கேட்ட பஞ்சாயத்தாருங்களால ஒண்ணும் பேச முடியல. மாட்ட வாங்குனவரும் சரி நாம அவங்கள ஏமாத்தலாம்னு நெனச்சோம் ஆனா நாம ஏமாந்துட்டோம்னு நெனச்சிக்கிட்டு ஒண்ணும் பேசாம திரும்ப ஆளுகளோட வீட்டுக்குக் கிளம்பிட்டாரு.
அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லைங்கற பழமொழிக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்குங்கறத இந்தக் கதை நமக்குச் சொல்லுது. ஏமாத்தவும் கூடாது ஏமாறவும் கூடாதுங்கற கருத்தையும் இந்தக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது.