உலகில் ஏமாற்றுதல், ஏமாறுதல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. காலச்சூழலுக்கு ஏற்றவாறு இவை மாறுபடுகின்றனவே தவிர, ஆனால் குறைவின்றி ஏதோ ஒரு இடத்தில் இவ்விரண்டும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏமாறுபவன் தெளிவானால் ஏமாற்றுபவன் ஏமாறுவான். இது தொடர்பான கதை ஒன்று வழக்கில் வழங்கி வருகின்றது.
ஒரு சின்னஞ்சிறிய நாடு. அந்த நாட்டை நல்ல மனம் படைத்த ஒரு ராஜா நல்லவிதமா ஆண்டுகிட்டு வந்தாரு. மக்களும் அந்த நாட்டுல நல்லவங்களாத்தான் இருந்தாங்க. இப்படி இருக்கும்போது அந்த நாட்டுல எலிகளோட எண்ணிக்கை அதிகமாயிருச்சு.
எலிப்பொறி, எலிமருந்து, பூனை அது இதுன்னு என்னென்ன செஞ்சா எலிகள ஒழிக்க முடியுமோ அதையெல்லாம் செஞ்சி பார்த்தாலும் எலிகள ஒழிக்கவே முடியல.
மக்கள் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து ராஜாவப் பார்த்து இதைச் சொல்லுவோம். அவரு எதாவது ஒதவி செய்வாருன்னு நெனச்சிக்கிட்டுப் போனாங்க.
கூட்டமா வந்த மக்களைப் பார்த்த ராஜா, “எல்லாரும் என்ன இப்படிக் கூட்டமா வந்துருக்கீங்க. ஒங்களுக்கு என்ன பிரச்சனை? சொல்லுங்க தீத்து வைக்கிறேன்”னு சொன்னாரு.
மக்களும், “அரசே நாட்டுல எலிகளோட தொல்லை தாங்க முடியல. இதுக்கு நீங்கதான் ஒரு முடிவு கட்டணும்”னு சொன்னாங்க. அதைக் கேட்ட ராஜா, “நீங்க கவலைப்படாதீங்க. நான் யோசிச்சி ஒரு நல்ல முடிவச் சொல்றேன். இந்த எலிகள நிச்சயம் ஒழிக்கணும். போயிட்டு வாங்க. நாளைக்கு ஒங்களுக்கு இது தொடர்பா ஒரு முடிவச் சொல்றேன்”னு சொன்னாரு.
மக்களும் ராஜா கண்டிப்பா ஏதாவது செஞ்சி எலிகள ஒழிச்சிருவாரு. அவரும் யோசிச்சித்தான முடிவெடுக்கணும்னு நெனச்சிக்கிட்டு களைஞ்சி போனாங்க.
ராஜா ஒடனே மந்திரி சபையக் கூட்டுனாரு. என்ன செய்யிறதுன்னு மந்திரிகளப் பாத்துக் கேட்டாரு. அதுக்கு ஆளாளுக்கு ஒரு முடிவச் சொன்னாங்க மந்திரிங்க. ராஜாவுக்கு ஒண்ணும் சரியாப் படல. ராஜா மந்திரிங்களப் பாத்து, “நான் ஒரு யோசனை வச்சிருக்கேன். மக்கள் ஒவ்வொருத்தரும் எத்தனை எலிங்களக் கொண்டாந்து கொடுக்கிறாங்களோ அத்தன எலிகளுக்கும் சன்மானமா பணமாக் கொடுக்கலாம்னு நெனக்கிறேன்”னு சொன்னாரு.
மந்திரிங்கள்ல வயசானவரா இருந்த ஒருத்தரு, “மகாராஜா இந்த யோசனை நல்லாத்தான் இருக்கு. ஒரு எலிக்கு எத்தனை ரூவா கொடுப்பீங்க” அப்படீன்னு கேட்டாரு.
ராஜாவும், “ஒரு எலிக்கு ஒரு ரூவான்னு கொடுப்போம். அப்பறம் பாருங்க. நம்ம நாட்டுல ஒரு எலிகூட இருக்காது. எல்லா எலிகளையும் ஒழிச்சிப்புடலாம்”னு சொல்லிட்டு, இத மக்களுக்கு அறிவிக்கவும் ஏற்பாடு செய்யுங்கன்னு மந்திரிகளப் பார்த்துக் கட்டளையிட்டாரு.
மந்திரிகளுக்கும் இந்த யோசனை நல்லாப்பட்டது. அதனலா பட்டி தொட்டி எல்லா ஊருகள்லயும் தண்டோராப்போட்டு மன்னனோட கட்டளைய மக்களுக்கிட்டச் சொன்னாங்க.
அதக் கேட்ட மக்கள், ஆஹா ராஜான்னா ராஜாதான்னு நெனச்சிக்கிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டு எலிகளப் பிடிச்சிக்கிட்டு வந்து காட்டிட்டு கொன்னுட்டு அங்கங்க அதிகாரிகளுக்கிட்ட கொடுத்துட்டு காச வாங்கிக்கிட்டுப் போனாங்க. அதிகாரிங்க எல்லாரும் அந்த எலிகள மண்ணுக்குள்ளாறப் போட்டுப் பொதைச்சிட்டு மக்களுக்கு எத்தனை எலிகளோ அத்தனை எலிகளுக்கும் எண்ணிக் காசக் கொடுத்தாங்க.
இப்படியேக் கொஞ்ச நாளு போச்சு. நாட்டுல உள்ள எலிங்க எல்லா அழிஞ்சி போகக் கூடிய நிலை இருந்துச்சு. ஆனா மக்களுக்கு சுலபமா பணம் சம்பாதிக்கிற வழி என்னங்கறது தெரிஞ்சி போச்சு. மக்களுக்கு பணத்தை எப்படியாவது சேத்துடணும்னு நெனச்சி அங்கொண்ணும் இங்கொண்ணுமாத் திரிஞ்ச எலிங்களப் புடிச்சி வீட்டுல எலிப் பொறியில வச்சி வளத்துக் கொண்டுவந்து கொடுத்து காச வாங்கிக்கிட்டுப் போனாங்க.
மன்னருக்கு ஒண்ணுமே புரியல. என்னடா எவ்வளவு நாளாச்சு. நம்ம நாட்டுல எல்லாரும் முயற்சி செஞ்சும் எலிகள ஒழிக்க முடியலையா? இல்லை இந்த எலிங்க வேற எங்கயாவது போயி இனப்பெருக்கம் செய்யுதுங்களா? அப்படீன்னு நெனச்சிக்கிட்டு இருந்தாரு.
ஒடனே அமைச்சரக் கூப்பிட்டு என்னன்னு விசாரிங்கன்னு சொன்னாரு. மந்திரியும் விசாரிச்சதுல மக்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு எலிகள வளர்த்துக் கொண்டாறது தெரிஞ்சிபோச்சு. என்னடா மக்கள் இப்படி அடியோட மாறிட்டாங்க. அதை எப்படித் தடுத்து நிறுத்துறதுன்னு மன்னரும் அமைச்சரும் யோசனை செய்ய ஆரம்பிச்சாங்க. இனிமே யாரும் வீட்டுல எலிய வளத்துக்கிட்டு வந்து கொடுக்கக் கூடாது. அப்படிக் கொண்டு வந்து கொடுத்தா கடுமையான தண்டனை வழங்கப்படும். இனி எலியப் புடிச்சிக்கிட்டு வந்து காட்டுனா பணம் கொடுக்கப்படமாட்டாதுன்னும் அறிவிச்சாரு. மக்களும் பயந்துக்கிட்டு தங்களோட வீட்டுல வளத்த எலிங்களக் கொன்னுட்டாங்க. அந்த நாட்டுல பெருகிப் போயிருந்த எலிங்க கடடுக்குள்ளாற வந்துருச்சு. ஏமாத்துரவங்க முதல்ல திருந்தணும். ஏமாறுரவங்க ஏமறாம விழிப்போட இருக்கணும்னு இந்தக் கதை தெளிவா எடுத்துச் சொல்லுது.
எலிய ஒழிக்கப் போயி எலிய வளத்த கதைதான் என்று இன்றும் இந்த வட்டாரத்தில் மக்களிடையே இந்தக் கதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.