மனிதன் எதன் மீதாவது நம்பிக்கை வைத்தல் வேண்டும். யாரையும் நம்பாமல் வாழமுடியாது. ஆனால், நாம் நம்பியவர்கள் நமது நம்பிக்கைக்கு உரியவர்களாக இருத்தல் வேண்டும். அவர்கள், நமது நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டால் நமது மனம் மிகவும் புண்படும். நாம் நம்பியவர்களே நமக்குத் துரோகம் செய்தால் நாம் யாரை நம்பி ஒரு செயலில் இறங்க முடியும்? யாரிடமும் நாம் கூறமுடியாது. பேசாமல் அமைதி காப்போம். இதுதான் இயற்கை. இது குறித்த கதை ஒன்று வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது.
இராமன் காட்டுக்கெல்லாம் போய், பின்னர் இலங்கைக்குப் போய் இராவணனையும் அழித்துவிட்டுச் சீதையை மீட்டு அயோத்திக்கு வந்து அரியணையில் அமர்ந்து நல்லாட்சி செய்தார். இராமரோட ஆட்சியில் எல்லா உயிர்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.
யாரும் எந்தக் கஷ்டமும் படலை. நாடே செழிப்பா இருந்துச்சு. அப்படி இருக்கறபோது. கங்கைக் கரையில ஒரு தவளை வாழ்ந்துக்கிட்டு இருந்துச்சு. அது இராம நாமத்தைச் சொல்லிக்கிட்டே கங்கையிலக் குதிச்சு வெளையாடும். அதுக்குப் பெறகு கரையோரத்துல இருக்குற மரத்தடியில மண்ணுக்குள்ள போயி ஒக்காந்துக்கிட்டு இராமனையே நெனச்சிக்கிட்டு இருக்கும்.
இராமனை நெனக்கிறதுல அந்தத் தவளைக்கு அப்படியோரு மகிழ்ச்சி. இப்படியே நாள் போயிக்கிட்டு இருந்துச்சு. தவளை என்னைக்காவது ஒருநாள் நாம போயி இராமரைப் பாக்கணும்னும் நெனச்சிக்கிட்டு இருந்துச்சு. ஆனா அதால நாட்டுக்குள்ளாறப் போக முடியாது. இருந்தாலும் கூட அதுக்கு ஒரு நம்பிக்கை. கண்டிப்பா என்றைக்காவது ஒரு நாள் இராமனைப் பாத்துடலாம்னு தவளை நம்பிக்கையோட இருந்துச்சு.
ஒரு நாள் இராமன் கங்கையாற்றில் குளிப்பதற்காக வந்தாரு. வந்தவரு அந்தத் தவளை மண்ணுக்குள்ளாற இருக்குற இடத்துல தன்னோட கோதண்டத்தை ஊன்றி வச்சாரு. அப்ப அந்த மண்ணுக்குள்ள இருந்த தவளை மேல அந்தக் கோதண்டம் குத்திருச்சு. ஆனால், தவளை கத்தலை.
மண்ணுக்குள்ளாற இருந்து தலையக் கொஞ்சம் சிரமப்பட்டு வெளிய எட்டிப் பாத்துச்சு. இராமன் வேகமா கங்கையாத்துல குளிக்கப் போனாரு. அந்தத் தவளை இராமனோட முகத்தைப் பாத்துருச்சு. அதுக்குச் சந்தோஷம் தாங்க முடியல. ஆஹா யாரைப் பாக்கணும் பாக்கணும்னு நெனச்சோமோ அவரே வந்துட்டாரு. அவரோட முகத்தையும் பாத்துட்டோம். இனிமே நமக்கு என்ன கவலைன்னு அமைதியா மண்ணுக்குள்ளறயே குற்றுயிரும் குறை உயிருமாக் கெடந்துச்சு.
கங்கையாத்துல இறங்குன இராமர் நல்லா ஆசை தீர நீந்திக் குளிச்சி முடிச்சிட்டுக் கரையேறுனாரு. துணிகளைப் பிழிஞ்சி கட்டிக்கிட்டு அரண்மனைக்குப் போகலாம்னு தன்னோட கோதண்டங்கற வில்லை எடுத்தாரு. அப்ப அந்த வில்லோட நுனியில இரத்தக் கறை படிஞ்சிருந்தது.
இராமருக்கு அதிர்ச்சியாயிருச்சு. என்னடா இது எதுவுமே இல்லாத இடத்துல வில்லை ஊன்றி வச்சிட்டுக் குளிக்கப் போனோம். ஆனா அதனோட நுனியில இரத்தம். இது எப்படி வந்துச்சு அப்படீன்னு நெனச்சிக்கிட்டு கீழ குனிஞ்சு அந்த எடத்தை விரலாலக் கிளறிப் பாத்தாரு.
அப்ப அந்தத் தவளை உயிரோட போராடிக்கிட்டுக் கெடந்தது. அந்தத் தவளைய எடுத்து வெளியில போட்டுட்டு, “தவளையே நான் வில்லை ஊன்றிய போது அது உன்னோட ஒடம்புல பட்டுருக்கும்ல அப்ப நீ கத்தலாம்ல. பாம்போ வேற எதுவோ ஒன்ன பிடிக்க வர்றபோது மட்டும் கத்துறியில்ல. அதுமாதிரி இப்பவும் கத்தியிருக்கக் கூடாதா. நான் ஒடனே வில்லை எடுத்துருப்பேன்ல. ஏன் நீ கத்தமா பேசாம இருந்துட்ட?” அப்படீன்னு கேட்டாரு.
அதுக்குத் தவளை, “சுவாமி நான் ஒங்களையே நெனச்சிக்கிட்டு இருந்தேன். யாராவது என்னைத் தாக்க வந்தா ஒங்கள நெனச்சிக் கத்துவேன். அப்ப நீங்க என்னையக் காப்பத்திடுவீங்க. ஆனா என்னையக் காப்பாத்தக் கூடியவராகிய நீங்களே ஏம்மேல வில்லத் தெரியாம ஊன்றபோது நான் யாரைப் போயிக் கூப்புடுவேன். அதுமட்டுமில்லாம நான் ஒங்களை ரெம்ப நாளா பாக்கணுமின்னு காத்துக்கிட்டே இருந்தேன். ஆனா முடியல. இப்பத் திடீர்னு நீங்க வந்துட்டீங்க. என்னோட முதுகுல ஒங்களோட வில்நுனி பட்டதும் நான் மண்ண விட்டு எட்டிப் பாத்தேன். நான் யாரைப் பாக்கணும்னு நெனச்சேனோ அவரே நேர்ல வந்துட்டாரு. ஒங்களப் பாத்த பிற எனக்குப் பேச்சே வரல. என்ன பேசுறதுன்னும் எனக்குத் தோணல அதுதான் நான் கத்தலை”ன்னு சொல்லிட்டுக் கண்ண மூடிருச்சு.
இறந்துபோன தவளைய நெனச்சு இராமர் கண்ணீர் விட்டாரு. தெரியாம நாம ஒரு உயிரோட இறப்புக்குக் காரணமாயிட்டோமேன்னு வருத்தப்பட்டாரு. அந்தத் தவளைய எடுத்து அதுக்கு மரியாதை செஞ்சு மண்ணுக்குள்ளாறப் பொதைச்சாரு. அதுக்கு மோட்சத்தையும் கொடுத்தாரு. தெரிஞ்சோ தெரியாமலோ நாம பிறரோட துன்பத்துக்குக் காரணமா இருக்கக் கூடாது. நம்மை நம்புனவங்களோட நம்பிக்கைக்குத் துரோகம் பண்ணக் கூடாது. அப்படி நாம நம்புனவங்க நமக்குத் துரோகம் செஞ்சா அதை வெளியில சொல்ல முடியாதுங்கறதை இந்தக் கதை நமக்குச் சொல்லுது.