எப்போதும் மனிதனை மதித்தல் வேண்டும். அவனிடம் இருக்கும் பணம், பொருள், நிலம், ஆடை, அணிகலன்களுக்காக மனிதனை மதித்தல் கூடாது. எதுவுமே இல்லை என்றாலும் அவன் மனிதன் என்பதற்காகவாவது ஒருவனை மதித்தல் வேண்டும். அவ்வாறு மதித்து நடவாமல் இருப்பின் அது மனிதத் தன்மையே இல்லை. இது தொடர்பாக ஒரு கதை வழக்கில் வழங்கப்படுகின்றது.
ஒரு ஊரில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வறுமை வாய்ப்பட்டவன். கிடைத்த கூலி வேலையைச் செய்து அவன் குடும்பத்தை நடத்தி வந்தான். கந்தாலடையையே அவன் அணிந்திருந்தான். நாள்தோறும் அவன் ஏதாவது வேலை கிடைக்கின்றதா என்று ஒவ்வொருவராகத் தேடிப் போய் வேலை கேட்டுப் பெற்று வேலை செய்துவிட்டு கிடைத்த கூலியை வைத்துக் கொண்டு காலந்தள்ளி வந்தான்.
அவனை யாரும் அந்த ஊரில் மதிப்பதே இல்லை. அவனிடம் பணமோ, பொருளோ இல்லாததால் யாரும் அவனை ஒரு பொருட்டாக மதிப்பதோ தங்களது வீடுகளில் நடக்கும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதோ கிடையாது.
அவனுக்கும் மனம் வருத்தமாக இருந்தது. நம்மை ஒருத்தரு கூட இந்த ஊரில் மனிதனாக மதிக்கவில்லையே என்று மனதிற்குள் மறுகினான். இதை யாரிடமும் அவன் சொல்லவில்லை. ஆண்டவன் நம்மை இப்படிப் படைத்துவிட்டானே என்று நினைத்துக் கொண்டு, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வந்தான்.
இவனுடைய நிலையைப் பாத்த இறைவன் இவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்து அவன் வயல்ல வேலை செய்யிறபோது பானை நெறைய தங்கக் காச புதையலா அவன் கண்ணுல படறமாதிரி செஞ்சாரு. அவன் வயல்ல மண்ணக் கொத்திக்கிட்டு இருக்கிறபோது டங்குன்னு ஒரு சத்தம் கேட்டது. அவன் என்னன்னு தோண்டிப் பாத்தான். அப்படிப் பாத்தபோது பானை நெறையத் தங்கக் காசா இருந்தது. அவன் சுத்தும்முத்தும் பாத்துட்டு அப்படியே வீட்டுல இருந்து கொண்டுக்கிட்டு வந்த கடகப் பொட்டிக்குள்ளாற அந்த வெங்கலப் பானைய வச்சு அதுக்குமேல வெறகுக் குச்சிகளயும் புல்லையும் போட்டு மறைச்சி வீட்டுக்கு யாருக்கும் தெரியாமக் கொண்டு வந்தான்.
வந்தவன் கொஞ்சம் கொஞ்சமா அந்தத் தங்கக் காசுகளை வித்து காடுகரைன்னு வாங்கினான். ஊருக்குள்ளேயே பெரிய வீடாக் கட்டினான். புதுப் பணக்காரன ஆயிட்டான். எல்லாரும் வியப்போட பாத்தாங்க. எப்படிடா இவன் பெரிய பணக்காரனா ஆனான்னு குழம்பிப் போயிட்டாங்க. ஆனா அவங்கிட்ட கேக்குறதுக்கு அவங்களால முடியல.
அதுவரைக்கும் அவன மதிக்காத அந்த ஊருக்காரவங்க அவனோட வளர்ச்சியப் பத்துட்டு வாயடைச்சிப் போயி அவனுக்கு மரியாதை கொடுக்க ஆரம்பிச்சாங்க. அவனப் பாத்த ஒடனேயே ஐயா வணக்கமுங்க அப்படீன்னு சொல்வாங்க. அவன் பதிலுக்கு வணக்கம் சொல்லாம அவங்களப் பாத்து, ‘நான் போயிச் சொல்கிறேன்னு’ சொல்லுவான்.
யாரு அவனுக்கு வணக்கம் சொன்னாலும், அவன் அவங்களுக்குப் பதில் வணக்கம் சொல்லாம நான் போய்ச் சொல்கிறேன்னே சொல்லிக்கிட்டு இருந்தான்.
எல்லாருக்கும் அவம்மேல கோபங்கோவமா வந்துச்சு. என்ன திமிரு இவனுக்கு. பணம் கண்ணை மறைக்குது. இல்லைன்னா நாம வணக்கம்னு சொல்றதுக்குப் பதில் வணக்கம் சொல்லாம நான் போய்ச் சொல்கிறேன்னு சொல்வானான்னு பலவாறு பேசினார்கள். அவன் பைத்தியக்காரன் என்று ஏசினார்கள். இதெல்லாம் அவன் காதில் விழுந்தாலும் அவன் தன்னோட பழக்கத்தை மாத்திக்கிறதா இல்லை.
அவன் வீட்டுக்கு வந்த பின்னால கால் கையெல்லாம் கழுவிக்கொண்டு பூசை அறையைத் திறந்து அங்க உள்ள பணப்பெட்டியை எடுத்து அதைத் திறந்து வைத்துக் கொண்டு முணுமுணுன்னு முணுமுணுப்பான். வீட்டில் இருந்த அவன் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. ஊரில் உள்ளவர்கள் அவனைப் பற்றி ஏளமாகவும், இளக்காரமாகவும் பேசியதைக் கேட்டுவிட்டு ஏன் நம் வீட்டுக்காரர் இப்படி நடந்து கொள்கிறார். ஒருவேளை இவருக்கு புத்திகித்தி பேதலிச்சிப் போச்சான்னு நெனச்சிக்கிட்டே அவன் செய்யறதை எல்லாம் கவனமாப் பாத்தா.
அவன் பூஜைஅறையைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்து என்னமோ முணுமுணுப்பதைத் தினந்தோறும் பாத்தவளுக்கு சரிசரி ஊருக்காரவுக சொல்றதுமாதிரி நம்ம புருஷனுக்கு புத்திதான் பேதலிச்சு போச்சு போல இருக்குன்னு நெனச்சிக்கிட்டு பெட்டியப் பாத்து முணுமுணுத்தவங்கிட்ட போயி ஏங்க என்னங்க இப்படி பெட்டியத் திறந்து வச்சிக்கிட்டுப் பேசிக்கிட்டு இருக்குறீங்க. ஒங்களுக்கு ஏதாவத ஆயிருச்சா. அப்படி என்னதான் பெட்டியத் திறந்து வச்சிக்கிட்டுப் பேசுறீங்கன்னு? கோபமாக் கேட்டா.
அதுக்கு அவன், “நாம ஏழையா இருந்தபோது யாரும் நம்மை மதிக்கலை. என்னோடு பேசுவதற்கே தயங்கினாங்க. நானே வலியச்சென்று பேசினாலும் அவங்க என்னைய ஒரு மனுஷனாவே மதித்துப் பதில் சொல்லமாட்டாங்க. ஏன் அவங்க வீட்டுல நடக்குற விசேஷங்களுக்குக் கூட நம்மளக் கூப்புட மாட்டாங்க. அப்படி இருந்தவங்க இப்ப எங்கிட்ட கொஞ்சம் பணம் வந்துருச்சுங்கறதுக்காக போற வார எடத்துல எல்லாம் என்னையக் கண்டா குனிஞ்சு வணக்கம் சொல்றாங்க. அது உண்மையிலேயே எனக்குச் சொன்ன வணக்கம் இல்லை. என்கிட்ட இருக்குற காசு பணத்துக்காக சொல்ற வணக்கம். அதனால எங்கிட்ட சொன்ன வணக்கத்தை எங்கிட்ட இருக்குற பணத்துக்கிட்ட போயிச் சொல்றேன்னு சொல்லிட்டு அவங்க சொன்ன வணக்கத்தை வீட்டுக்கு வந்து பணப்பெட்டியத் தொறந்து, இன்னக்கி கருப்பையா ஒனக்கு வணக்கம் சொன்னாரு, சுப்பையா வணக்கம் சொன்னாருன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். என்கிட்ட சொன்ன வணக்கத்தை நான் போயிச் சொல்றேன்னு சொல்லிட்டு என்னோட பணத்துக்கிட்ட வந்து சொல்றேன். இப்பப் புரிஞ்சதா நான் ஏன் அப்படிச் சொல்றேன்னு” என்று கூறினான்.
புருஷனோட விளக்கத்தக் கேட்டவுடனே மனைவி அசந்து போயிட்டா. அட உண்மையிலேயே நம்ம வீட்டுக்காரரு சொல்றது சரிதான். இந்த உலகத்துல மனிதன் என்பதற்காக ஒருத்தர மதிக்கிறதவிட அவருக்கிட்ட இருக்குற பணத்தையும் பதவியையும் பார்த்துத்தான் பழகி மதிப்புக் கொடுக்குறாங்கன்னு நெனச்சிக்கிட்டா. அவளுக்குத் தன்னோட வீட்டுக்காரரு மேல ரொம்ப மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுச்சு. பணத்துக்காகவோ பதவிக்காகவோ ஒருத்தரு கூட பழகக் கூடாதுங்கறத இந்தக் கதை நமக்குச் சொல்லுது.