இறைவன் தன்னை மனதார நினைப்பவருக்கு எப்பொழுதும் அருள்புரிவார். தன்னை உண்மையாக நினைக்காமல் ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் வணங்கினாலும் அவருக்கும் அருள்புரிவார். எல்லோருக்கும் வேறுபாடு பாராமல் அவரவர்க்கு வேண்டிய அனைத்தையும் இறைவன் கொடுத்துக் கொண்டே இருப்பார். எதிர்பாராதவிதமா இறைவனாகிய சிவபெருமானை வணங்கினாலும் அவர் அருள் செய்வார். இது குறித்த கதையொன்று இந்த வட்டாரத்தில் வழங்கி வருகின்றது.
ஒரு பெரிய காடு ஒண்ணு இருந்துச்சு. அதுல புலி, சிங்கம், கரடி, யானை, குரங்கு என பல மாதிரியான விலங்குகளும் வாழ்ந்துகிட்டு இருந்ததுங்க. அது அடர்ந்த காடா இருந்ததுனால மனுஷங்க நடமாட்டம் ரொம்ப ரொம்பக் குறைவா இருந்துச்சு. அந்தக் காடே ரொம்ப அமைதியா இருக்கும். அப்படி இருக்கறபோது பக்கத்து ஊருல இருந்து ஒரு வேடன் வேட்டையாடுறதுக்காக அந்தக் காட்டுக்குள்ளாற வந்தான்.
காட்டுக்குள்ள இருக்கற விலங்குகள வேட்டையாடிக்கிட்டு வந்த போது அவன ஒரு பெரிய புலி ஒண்ணு தொரத்துச்சு. அவன் என்னடா இது வம்பாப் போச்சு. இந்தப் புலிக்கிட்ட இருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு நெனச்சி வேகவேகமா ஒடிப் போயி ரெம்ப உயரமா இருந்த மரத்துல ஏறி அதோட உச்சியில உக்காந்துக்கிட்டான். ஆனா புலி மரத்துல ஏறி ஏறிப் பாத்துச்சு. அதனால அந்த மரத்துல ஏற முடியல. வயசான புலியா இருந்ததால அதனால ஏறமுடியாமப் போயிருச்சு. ஏற முடியாத புலி அந்த மரத்தடியிலேயே அவன் இறங்கி வரட்டும்னு படுத்துக்கிருச்சு.
அவன் மரத்துக்குக் கீழ பாத்தான். அந்தப் புலி அன்னாந்து பாத்துக்கிட்டே இருந்துச்சு. அந்த வேடனுக்கு பயமாப் போயிருச்சு. என்ன செய்யிறதுன்னு யோசனை பண்ணுனான். பொழுது இருட்டிக்கிட்டே வந்தது. அவனால ஒண்ணும் செய்ய முடியல. சாப்பிடாததால களைப்பா வேற இருந்தது. நல்லா இருட்டிடுச்சு.
இவனுக்குச் சோர்வா இருந்ததால தூக்கம் வர ஆரம்பிச்சிடுச்சு. தூங்குனா அவன் கீழ தவறி விழுந்துருவான். அப்பறம் கீழ இருக்கற புலி கொன்னு தின்னுடும். அதனால அவன் மரத்துல இருந்த கிளையில உள்ள இலைகளை உறுவி உறுவி கொஞ்சங்கொஞ்சமாக் கீழ போட்டுக்கிட்டு இருந்தான். இதனால அவனோட தூக்கம் போயிருச்சு.
கிளையில இருக்கற தலைகளை எல்லாத்தையும் இப்படி உறுவிப் போட்டுக்கிட்டே இருந்ததால பொழுது விடிஞ்சிருச்சு. புலியும் ஓடிப் போயிருச்சு. அப்பப் பாத்து வானத்துல திடீர்னு ஒளிப் பிரவாகம் தோன்றுச்சு. அவன் பயந்து போயி மரத்துல இருந்தபடியே பாத்தான். அந்த ஒளிக்கிடையில சிவபெருமான் காட்சி கொடுத்தாரு.
அவனால நம்பவே முடியல. அவர் அவனப் பாத்து ஒனக்கு என்ன வரம்வேணும்னு கேட்டார். அவன், ‘‘சாமி நான் ஒங்கள வணங்கவே இல்லையே! அப்படி இருக்கயில எனக்கு இப்ப வந்து காட்சி கொடுக்குறீங்களே! நான் என்ன புண்ணியம் செஞ்சனோ தெரியலையே! சாமி நீங்க எனக்கு என்ன கொடுக்க நினைக்கிறீங்களோ அதைக் கொடுங்க. எனக்கு என்ன கேக்குறதுன்னு தெரியலைன்னு’’ கும்புட்டான்.
சிவபெருமான் அவனப் பாத்து, ‘‘வேடனே புலியா வந்தது வேற யாருமில்லை. நான்தான். நேற்று மகாசிவராத்திரி. நீ ஏறியிருக்குற மரம் வில்வ மரம். இந்த மரத்துக்குக் கீழ பாரு என்னோட உருவம் இருக்கு. நீ தெரிஞ்சோ தெரியாமலோ வில்வ இலையைப் பறிச்சு ராத்திரி முழுக்க எம்மேல போட்டுக்கிட்டே இருந்த தூங்கவும் இல்லை. என்னைய தூக்கம் முழிச்சி வில்வ இலையால வழிபட்டதால நீ அடுத்த பிறவியில அரசனாகப் பிறப்பாய். ஒன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும்’’ அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.
அந்த வேடனுக்கு ஆச்சரியம் தாங்கலை. அட சும்மா வில்வத்தைப் பறிச்சிப் போட்டதுக்கே இப்படி இறைவன் தானா வந்து அருள்புரியராரே நாம உண்மையா வழிபட்டா எப்படி இருக்கும்னு நெனச்சிக்கிட்டு அன்னையில இருந்து சிவபக்தனா மாறிட்டான். எந்த விலங்குகளையும் கொல்லாமா வாழ்க்கைய வாழ்ந்தான்.
அடுத்த பிறவியில பக்கத்து நாட்டு அரசனுக்கு மகனாப் பொறந்தான். இறைவனாகிய சிவபெருமான் தன்னை தெரியாம வழிபடறது மாதிரி சில செயல்களைச் செஞ்சாக்கூட அருள்புரிவார் என்பதற்கு இந்தக் கதை வழக்கத்துல இருக்குது.