எப்போதும் நல்லவங்களுக்கு உதவி செய்யறதுதான் நல்லது. கெட்டவர்களுக்கு உதவி செய்தால் அது கெடுதலையேத் தரும். கெட்டவர்கள் தங்களுக்கு உதவி செய்தவர்களை உடனே மறந்து அவர்களை அழிக்கவே முற்படுவர். அதனால் கெட்டவர்களுக்கு உதவக் கூடாது. இது குறித்த கதை ஒன்று இவ்வட்டாரத்தில் வழக்கத்தில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மிகப் பெரிய காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் பல மிருகங்கள் வசித்தன. அந்தக் காட்டுக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு கிராமங்கள் இருந்தன. கிராம மக்கள் அந்தக் காட்டக் கடந்துதான் எந்த வேலைக்காக இருந்தாலும் போகணும்.
அந்தக் காட்டக் கடக்கறபோது அந்தக் கிராம மக்களுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கும். இருந்தாலும் மனசத் திடப்படுத்திக்கிட்டு அவங்க ரெண்டு மூணுபேராச் சேர்ந்தே போவாங்க. அந்தக் காட்டக் கடந்து போயி அவங்களோட வயல்ல வேலை செஞ்சிட்டு வருவாங்க. இப்படி இருக்கறபோது அந்த வழியாகத் தன்னோட கிராமத்துக்கு ஒரு சிறுவன் போயிக்கிட்டு இருந்தான்.
அப்பப் பாத்து பாதை ஓரத்துல இருந்து, “தம்பி, தம்பி… என்னையக் காப்பாத்து”ன்னு ஒரு குரல் கேட்டது. என்னடா இது காட்டுக்குள்ளாற இருந்து நம்மைக் கூப்பிடறதுன்னு நெனச்சிக்கிட்டு குரல் வந்த திசையப் பாத்தான். அங்க ஒரு முதலை வேடனுடைய வலையில சிக்கிக்கிட்டு இருந்தது.
அவன் ஐயோ பாவம்னு நெனச்சிக்கிட்டு அதன் பக்கம் போனான். அவனப் பாத்த முதலை, “தம்பி வேடன் விரிச்சிருந்த வலையில நான் தெரியாம வந்து சிக்கிக்கிட்டேன். என்னைய இந்த வலையில இருந்து காப்பாத்திடு. ஒனக்குக் கோடிப் புண்ணியம் உண்டாகும்”னு கெஞ்சிக் கேட்டது.
அதக் கேட்ட அந்தச் சின்னப் பையன், “நான் ஒன்னைக் காப்பாத்தினா நீ என்னைய தின்னுடுவே. அதனால எனக்குப் பயமா இருக்கு. நான் ஒன்னைய வலையில இருந்து விடுவிக்க மாட்டேன்”னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பப் பார்த்தான்.
அதப் பாத்த அந்த முதலை, “தம்பி, தம்பி போயிடாதேப்பா. ஒன்னக் கெஞ்சிக் கேட்டுக்குறேன். என்னோட உசிரக் காப்பாத்தப் போற ஒன்னைய நான் திம்பனா. ஒன்னைய சத்தியமா திங்கமாட்டேன். என்னைய இந்த வலையில இருந்து காப்பாத்திடு”ன்னு மனச உருக்கற மாதிரி அந்தப் பையனப் பார்த்துக் கேட்டது.
அந்த முதலையோட கெஞ்சலைப் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்தப் பையன் முதலை மீது இரக்கப்பட்டு சரி காப்பாத்துவோம். ஆனா அந்த முதலைக்கிட்ட சத்தியம் வாங்கிக்கிருவோம்னு நெனச்சிக்கிட்டு, “சரி முதலையே ஒன்னைய நான் காப்பாத்துறேன். ஆனா நீ என்னையத் திங்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும். அப்படிச் சத்தியம் பண்ணிக் கொடுத்தாயானால் உன்னைக் காப்பாத்துவேன்”னு சொன்னான்.
அதக் கேட்ட முதலை, “சத்தியமா ஒன்னை ஒண்ணுஞ் செய்ய மாட்டேன். என்னையக் காப்பாத்து. என்னைய நம்பு” அப்படீன்னு சொல்லி சத்தியம் செஞ்சது.
முதலை சத்தியம் செஞ்ச ஒடனே அந்தப் பையன் மெதுவாப் போயி வலையில இருந்து முதலையை விடுவித்தான். வெளியில வந்த முதலை ஒடனே ரொம்ப சந்தோஷப்பட்டு, அவனோட காலை கெட்டியாப் புடிச்சிக்கிடுச்சு. அந்தப் பையன், “நன்றி கெட்ட முதலையே எனக்கு நீ சத்தியம் செஞ்சு கொடுத்தாயல்லவா? அந்தச் சத்தியத்த மீறி என்னையக் கொன்று தின்னப் பாக்குறியே. இது ஒனக்கே நல்லா இருக்கா? இது நியாயமா?” அப்படீன்னு கேட்டான்.
அதக் கேட்ட முதலை, “தம்பி தப்பிக்கிறது வரைக்கும் தான் எனக்கு நியாயம் தர்மம் எல்லாம். நான் தப்பிச்சிட்ட பிறகு நியாயம் தர்மம் எல்லாம் கிடையாது. புரிஞ்சதா?” அப்படீன்னு சொல்லிட்டு அவனத் திங்கறதுக்குத் தொடங்கியது.
அதைக் கண்ட அந்தச் சிறுவன், “என்னையத் திங்கறத நிறுத்து. இந்தக் காட்டுல இருக்கிற யாருக்கிட்டயாவது நீ செய்யிறதப் பத்திக் கேட்போம். அவங்க நீ செய்யிறது சரின்னு சொன்னாங்கன்னா அதுக்கு அப்பறமா என்னையத் தின்னு”ன்னு சொன்னான்.
முதலையும், “சரி நீ சொல்லறது மாதிரி செய்வோம். இந்தக் காட்டுக்குள்ளாற யாரு வராங்களோ அவங்கக்கிட்ட கேட்போம்”னு சொன்னது.
அப்பப் பார்த்து அந்தப் பக்கமா ஒரு முயல் ஒண்ணு வந்தது. அப்படி வந்த முயலப் பாத்து அந்தச் சிறுவன் இந்த முதலை செஞ்சதைப் பத்திக் கேட்டான். அதுக்கு முயல் எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு.
இப்படியே நாய், கொக்கு, கரடி எல்லாம் சொல்லிட்டுப் போயிடுச்சுங்க. இந்தப் பையன் நாம உதவி செய்யப் போயி இப்படி உபத்திரவத்துல மாட்டிக்கிட்டமேன்னு வருத்தப்பட்டு அழத்தொடங்கினான். அப்பப் பார்த்து ஒரு நரி அந்தப் பக்கமா வந்துச்சு. அந்த நரியப் பார்த்த அந்தச் சிறுவன், “அண்ணே நரியண்ணே... இந்த முதலைக்கு நான் உதவி செஞ்சேன், உதவி செஞ்ச என்னைய இந்த முதலை கொல்லப் பார்க்குது. இது நியாயமா? நீங்களே இதுக்கு ஒரு தீர்ப்பச் சொல்லுங்க”ன்னு சொல்லிட்டு அழுதான்.
அதுக்கு நரி முதலையப் பாத்து, “சரி அந்தப் பையன் சொல்லிட்டான். நீ ஒன்னோட நியாயத்தைச் சொல்லு. அதுக்குப் பிறகு நான் தீர்ப்பச் சொல்றேன்”னு சொன்னது.
அதக் கேட்ட முதலை, “நான் இந்த வலைக்குள்ளாற அகப்பட்டுக்கிட்டேன். என்னைய இந்தப் பையந்தான் வலையில இருந்து மீட்டான். எனக்குப் பசியா இருந்துச்சு. அதனால இவனக் கொன்னு சாப்பிடறதுக்காக அவனக் கவ்விப் பிடிச்சிட்டேன். பசியால வருந்துர நான் இவனச் சாப்பிடலாம்ல. இதுல என்ன தப்பு இருக்கு”ன்னு கேட்டது.
முதலை அநியாயமா இந்தச் சிறுவனை ஏமாத்திக் கொல்லப் பாக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்ட நரி, “அப்படியா. இந்தச் சின்னப் பையன் ஒன்னைய எப்படிக் காப்பாத்தினான்னு நான் எப்படி நம்புறது. நீ எப்படி இந்த வலைக்குள்ளாறக் கிடந்த நீ அவன விட்டுட்டு இந்த வலைக்குள்ளாற போயி முன்ன இருந்தது மாதிரி இரு. அதைப் பாத்துட்டு நானே ஒன்னைய வலையில இருந்து விடுவிச்சிட்டு இந்தப் பையன நீ திங்கறதுக்காகத் தருவேன்”னு சொன்னது.
இதக் கேட்ட முதலை, “சரி நரியாரே நீங்க சொல்லறதக் கேக்குறேன். ஆனா இந்தப் பையன விட்டுறாதீங்க”ன்னு சொல்லிட்டு முன்ன எப்படி வலையில இருந்ததோ அதுமாதிரி வலைக்குள்ளாறப் போயி மாட்டிக்கிருச்சு. இனி முதலையினால வெளியில வரமுடியாதுண்ணு நெனச்சி நரி அநதப் பையனப் பாத்து, “தம்பி கெட்டவங்களுக்கெல்லாம் எப்பவும் உதவி செய்யாதே. கெட்டவங்க எப்பவும் நன்றியோட நடக்கமாட்டாங்க. நன்றிய மறந்துடுவாங்க. இனிமே யோசிச்சி யாருக்கு உதவி செய்றதுனாலும் உதவி செய்யி. தப்பிச்சுப் போயிடு”ன்னு சொல்லிட்டு காட்டுக்குள்ளாற ஓடிப் போயிருச்சு.
அந்தச் சிறுவனும் நரிக்கு நன்றி சொல்லிட்டு ஓட்ட ஓட்டமா தன்னோட கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தான். அப்படிப் போனவன் அங்க இருந்தவங்கக்கிட்ட நடந்ததை எல்லாத்தையும் சொல்லி ஆட்களக் கூட்டுக்கிட்டு வந்து வலைக்குள்ளாறக் கிடந்த முதலையைக் கொன்னுட்டான். நன்றி கெட்ட முதலையும் செத்துப் போயிடுச்சு.
கெட்டவங்க அவங்களுக்குத் தகுந்த மாதிரிதான் நியாயம் பேசுவாங்க. அவங்க ஒருக்காலும் தன்னலத்தை விட்டுக் கொடுக்கமாட்டாங்க. நன்றியுணர்வும் அவங்கக்கிட்ட இருக்காது. இதைச் சொல்லுறதுக்காக இந்தக் கதையச் சொல்லுவாங்க.