இந்த உலகத்தில் இருக்கறவங்க அத்தனை பேரும் தான் கணக்குப் போட்டா தப்பாது. என்னோட கணக்குச் சரியா இருக்கும்னு அடிச்சிச் சொல்வாங்க. ஆனா யாரு கணக்குத் தவறுனாலும் தவறும், ஆண்டவன் கணக்கு மட்டும் தவறாது. நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குதுன்னு சொல்வாங்க. ஆண்டவன் யாருக்கு எப்ப எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுன்னு தெளிவா ஒரு கணக்கு வச்சிருக்காரு. அவரு போட்ட கணக்குத் தப்பாது. இது பற்றிய ஒரு கதை இந்த வட்டாரத்துல வழங்கி வருது.
ஒரு ஊரில் பெரும் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் நல்லவர். தன்னுடைய செல்வத்தைக் கொண்டு பசி என்று வருவோர்க்கெல்லாம் நாள்தோறும் அறுசுவை உணவு படைத்தார். அங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் மக்கள் வந்து உணவு உண்டு பசியாறிச் சென்றனர்.
நிறையப் பேருக்குச் சமைக்க வேண்டியிருந்ததால் அவருக்குச் சொந்தமான திறந்தவெளியை அவர் பயன்படுத்தி அனைவருக்கும் உணவினை அளித்து வந்தார்.
அந்த ஊரில் மட்டுமல்லாமல் அனைத்து ஊர்களிலும் அவரைப் பற்றி மக்கள் புகழ்ந்து பேசினர். அவர் வழங்கிய உணவை உண்டு அவரை வாழ்த்திச் சென்றனர். அவரது புகழ் எங்கும் பரவியது.
இப்படி இருக்கறபோது, ஒருநாள் அவரு சமையற்காரங்களை வச்சி சமைச்சிக்கிட்டு இருந்தாரு. அப்பப் பாத்து ஒரு பருந்து உசுருள்ள ஒரு நாகப் பாம்பைக் கவ்விக்கிட்டு மேல பறந்தது. அப்ப அந்தப் பாம்பு வலி பொறுக்க முடியாம விஷத்தைக் கக்கியது. அந்த விஷம் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாருலயும் சாப்பாட்டுலயும் விழுந்துருச்சு.
விஷம் விழுந்ததை யாரும் கவனிக்கல. சாப்பிட வந்தவங்களுக்கெல்லாம் சாப்பாட்டப் பரிமாறினாங்க. எல்லாரும் சாப்பிட்டாங்க. ஆனா சாப்பிட்ட உடனேயே எல்லாரும் மயங்கி விழுந்து செத்துப் போயிட்டாங்க. பணக்காரரு ரெம்ப வருத்தப்பட்டாரு. ஆண்டவனே! இப்படி நடந்துருச்சேன்னு ஆண்டவங்கிட்ட கண்ணீர் மல்க வேண்டிக்கிட்டு அழுதாரு.
ஊருல உள்ளவங்க எல்லாரும் வந்து, ‘‘ஐயா கவலைப் படாதீங்க. நீங்க நல்லதுதான் செய்துக்கிட்டு வந்தீங்க. ஒங்க மேல எந்தவிதமான தவறும் இல்லை. இது ஏதோ விதியோட வேலை. இதுனால ஒங்களுக்கு எந்த ஒரு தீங்கும் வராது. நீங்க எப்பவும் போல அனைவருக்கும் அன்னதானம் செய்ங்க’’ அப்படீன்னு சொன்ன உடனே அந்தப் பணக்காரரும் மனசத் தேத்திக்கிட்டு மீண்டும் தன்னோட அன்னதானப் பணியைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினாரு.
இது இப்படி இருக்கயில எமலோகத்துல ஒரு குழப்பம் வந்தது. எமனுக்கு இந்தப் பாவத்தை யாரு கணக்குல வரவு வைக்கிறதுன்னு புரியல. எமன் ஒடனே சித்திரபுத்திரனக் கூட்டிக்கிட்டு சிவபெருமான்கிட்டப் போனாரு. எமனப் பாத்த சிவன், ‘‘என்ன எமனாரே என்னைத் தேடி வந்த காரணம் என்ன?’’ அப்படீன்னு கேட்டாரு.
அதுக்கு எமன் நடந்தைதைச் சொல்லி, ‘‘ஐயனே இவ்வளவு பேரு இறந்ததுக்கு யாரு காரணம். இந்தக் பாவத்தை யாரு கணக்குல வைக்கிறது? அன்னதானம் செய்த பணக்காரரு மேலயா? அல்லது சமைச்ச சமையல்காரங்க மேலயா? அல்லது சோத்தப் பரிமாறினவங்க மேலேயோ? எனக்கு இத யாரு பேருல கணக்கு வைக்கிறதுன்னு தெரியல. அதனால மத்த கணக்கெல்லாம் அப்படி அப்படியே நிக்குது. அதனால தாங்கள் தான் இதுக்கு வழிகாட்டணும்”னு சொன்னார்.
அதைக் கேட்ட சிவபெருமான், ‘‘எமனே! கொஞ்சம் பொறு யாருபேருல இந்தப் பாவக் கணக்கைச் சேக்குறதுன்னு கொஞ்ச நாள்ல நானே ஒனக்குச் சொல்லிடறேன். அதனால கவலைப்படாம போ”ன்னு சொல்லி அனுப்புனாரு.
கொஞ்ச நாள் சென்றது. ஒருநாள் நாலஞ்சு சாமியாருக அன்னதானம் செய்யிற அந்தப் பணக்காரரோட ஊருக்கு வந்தாங்க. அவங்க வாரம் ஒரு முறைதான் சாப்பிடுவாங்க. அவங்க அந்த ஊருக்கு வந்த நாள் ஏழாவது நாள். விரதம் விட்டுச் சாப்பிடுகின்ற நாள்.
அந்தச் சாமியாருங்க நால்வரும் நன்றாகக் குளித்துவிட்டு பசியோட அந்த ஊருல சோறு கிடைக்குமான்னு பாத்துக்கிட்டே வந்தாங்க. அப்ப அந்த ஊருல ஒரு மரத்தடியில ஒரு கிழவி ஒருத்தி ஒக்காந்துக்கிட்டு இருந்தா. அந்தச் கிழவியப் பாத்த அந்த சாமியாருங்க, ‘‘அம்மா, நாங்க வாரம் ஒருமுறை சாப்பிடுற வழக்கம் உள்ளவங்க. இன்றுதான் நாங்க சாப்பிடுற நாள். இந்த ஊருல எங்க சாப்பாடு கிடைக்கும்? சொல்லு”ன்னு கேட்டாங்க.
அதைக் கேட்ட அந்தக் கிழவி, ‘‘ஐயா அதோ பாருங்க ஒரு பெரிய கொட்டகை தெரியுது அங்க போங்க நல்ல அறுசுவையோ ஒரு பெரிய பணக்காரரு சபாப்பாடு போடுறாரு. போயிச் சாப்பிடுங்க. அதோடு மட்டுமில்லாம கொஞ்ச நாளுக்கு முன்னால அவரு போட்ட சாப்பாட்ட சாப்பிட்டு ஆயிரக் கணக்குல செத்துப் போயிட்டாங்க. ஆனா இப்ப எல்லாரும் போயிச் சாப்பிடுறாங்க. நீங்க போயிச் சாப்பிடுங்க”ன்னு சொல்லி அனுப்பினாள்.
சாமியாருங்க ரொம்ப நன்றின்னு சொல்லிட்டு அங்க போயி சாப்பிடப் போயிட்டாங்க. அப்ப இதைப் பாத்த ஆண்டவனான சிவன், எமனக் கூப்பிட்டு நீ முன்னால ஒரு பாவக் கணக்கப் பத்தி சொன்னியில்ல. அந்தக் கணக்க இந்தக் கிழவியின் பாவக் கணக்குல சேத்துரு”ன்னாரு.
அதக் கேட்ட எமன் ஆடிப் போயிட்டாரு.
‘‘சுவாமி அது எப்படி அந்தக் கிழவியோட பாவக் கணக்குல சேக்குறது?”ன்னு கேட்டாரு.
அதுக்கு ஈசன், ‘‘எமனே உதவி செய்யறவங்களுக்கு உபத்திரவம் செய்யக் கூடாது. நல்லது செய்யிறவங்களுக்கு உதவி செய்யலைன்னாலும் உபத்திரவம் செய்யக் கூடாது. இல்லாதது பொல்லாததுன்னு எதை வேணுமனாலும் சும்மா சொல்லக் கூடாது. அடுத்தவங்களப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொன்னா மத்தவங்களோட பாவக் கணக்கு அடுத்தவங்களப் பத்தி பொறணி பேசுனவங்களோட கணக்குள சேந்துரும். அதுமாதிரிதான். இதுவும்”னு சொன்னாரு. ஆண்டவனோட கணக்கக் கேட்ட எமனுக்கு ஆஹா இப்படியான்னு நெனச்சிக்கிட்டு இந்தப் பாவக் கணக்கினை அந்தக் கிழவி பேருல எழுதி வச்சிட்டு கணக்க முடிச்சாரு.
நாம ஒரு கணக்குப் போட்டா, அத மாத்தி ஆண்டவன் ஒருகணக்கைப் போடுறான். நாம போட்ட கணக்குத் தவறிடுது. ஆனா ஆண்டவன் போடுற கணக்கு தவறவே தவறாது. யாருக்கு என்ன கொடுக்கணுமோ அதத் தெளிவாக் கொடுத்துருவான். இக்கதை இன்னமும் இந்த வட்டாரத்துல வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.