நாம் பிறருக்கு எப்போதும் எதையேனும் கொடுத்து உதவி செய்து வாழ்தல் வேண்டும். அதுதான் உண்மையான வாழ்க்கை. அவ்வாறு இல்லாமல் தன்னலத்துடன் வாழ்வது அர்த்தமற்ற வாழ்க்கையாகும். அவ்வாழ்க்கை இனிமையானதாக இருந்தாலும் அது வெறுமையான வாழ்வாகவே முடியும். பிறருக்குக் கொடுத்து வாழ்வது இறைவனுக்குக் கொடுப்பதற்குச் சமமாகும்.
இறைவன் மக்கள் வடிவில் இருக்கின்றார். இறைவனுக்கு நீ எதையாவது கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றாயா? அப்படியானால் நீ உதவிக்காக ஏங்கும் மக்களுக்கு கொடுத்துவிடு. அது இறைவனைச் சென்று சேர்ந்து விடும். இதை விளக்குவதற்காக ஒரு கதை இப்பகுதியில் வழங்கி வருகின்றது.
ஒரு ஊருல பெரிய பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டார். ஆனால் கடவுளுக்கு என்றால் என்னவேண்டுமென்றாலும் செய்வார். யோசிக்கவே மாட்டார். இதனால் அவரை எல்லோரும் கஞ்சப் பயல் என்றும் உலோபி என்றும் ஏசினர். அவர் பணக்காரர் என்பதால் மறைமுகமாகவே எல்லாரும் அவரைத் திட்டினர். நேரடியாக அவரை எதிர்த்துப் பேசமாட்டார்கள்.
அவரைக் கண்டால், “ஐயா வணக்கமுங்க” என்று கூழைக் கும்பிடு போட்டுவிட்டுச் செல்வர். அவருடைய பண்ணையில் வேலை செய்பவர்களுக்குக்கூட எதையும் தராளமாகச் செய்யவே மாட்டார். அவர்களை நன்கு வேலை வாங்கிக் கொண்டு கூலியைக் குறைத்தேக் கொடுப்பார். பண்ணையாட்களும் எதுவும் பேசாமல் குறைந்த கூலியை வாங்கிக் கொண்டு செல்வர்.
இப்படி இருக்கின்றபோது அவர் தனது வயலில் செவ்வாழைக் கன்றை நட்டுப் பண்ணையாட்கள் மூலம் நன்கு பராமரித்து வந்தார். அவர் அந்தச் செவ்வாழை குலைதள்ளிப் பழுத்தால் முதல் வாழைத்தாரை மலையில் இருக்கும் முருகனுக்குப் படைப்பதாக வேண்டிக் கொண்டார்.
அவரது வேண்டுதலோ இல்லை பண்ணையாட்களின் நல்ல பராமரிப்பினாலோ செவ்வாழை மரங்கள் நன்கு தார்விட்டன. அவ்வாழைத் தார்களில் பெரிய பெரிய செவ்வாழைப் பழங்கள் நன்றாக இருந்தன. பார்ப்பவர்கள் தங்களுக்கு ஒரே ஒரு வாழைப்பழமாவது பண்ணையார் கொடுக்கமாட்டாரா என்று ஏங்கிப் பார்த்துக் கொண்டேச் சென்றனர்.
பண்ணையில் வேலைபார்க்கும் ஒருவரின் மகன் சிறுவன். அவன் தன் அப்பாவுடன் வந்து பண்ணையில் வேலை பார்த்துச் செல்வான். அவனும் அந்த வாழைத்தாரைப் பார்த்து, “அப்பா நாமதானே இந்த செவ்வாழையைப் பராமரித்து வந்தோம். நமக்குப் பண்ணையார் ஏதாவது பழம் எதுவும் கொடுப்பாராப்பா” என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பண்ணையாள், “அடப் போடா போக்கத்த பயலே, நம்ம பண்ணையாரு எச்சிக் கையால கூட காக்கையா வெரட்ட மாட்டாரு. அவரு நமக்குச் செவ்வாழைப் பழத்தை எப்படிடா கொடுப்பாரு. பேசாமப் போடா”ன்னு சொன்னார்.
அன்றைக்குப் பார்த்துப் பண்ணையார் வயலுக்கு வந்து அந்த வாழைத்தாரைப் பார்த்து விட்டுப் பண்ணையாளைப் பார்த்து, “டேய் இங்க பாரு இந்தப் பெரிய தாரை வெட்டி நாளைக்குக் காலையில நீயும் ஓம் மகனும் மலைமேல இருக்கற கோயிலுக்குக் கொண்டுக்கிட்டு வரணும். நாளைக்கு முருகனுக்குக் காணிக்கையா இந்தத்தாரைக் கொடுக்கப்போறேன். இந்தப் பெரிய தாருலதான் முழுசா அம்பது வாழைப்பழம் இருக்கு. இந்தத் தாரை வெட்டிக் கொண்டுக்கிட்டு நீயும் ஓம்மவனும் வந்துருங்க” என்று கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மறுநாள் பண்ணையாளும் அவரது மகனும் அந்தச் செவ்வாழைத்தாரை வெட்டி எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வேகவேகமாகச் சென்றனர். அப்பாவின் தலையில் இருந்த வாழைப் பழத்தைப் பார்த்த மகனுக்கு நாவில் எச்சில் ஊறியது. எப்படியாவது இதில் இருந்து ஒரு பழத்தையாவது நாம பிய்த்துத் தின்றுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தனது அப்பாவின் பின்னால் சென்றான்.
இருவரும் மலையில் கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அப்பொழுதுபார்த்து பண்ணையாளுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. அவன் தனது மகனை வாழைப்பழத்தைப் பார்த்துக்கொள், பக்கத்திலுள்ள குளத்துல தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.
தனது அப்பா அந்தப் பக்கம் போனவுடன் அவனுக்கு நாவில் எச்சில் ஊறியது அம்பது பழத்தில் ஒரு பழத்தை எடுத்துத் தின்றால் யாருக்குத் தெரியப் போவுது என்று நினைத்துக் கொண்டு ஒரு பழத்தைப் பிய்த்து வேகவேகமாத் தின்றுவிட்டான்.
தண்ணீர் குடித்துவிட்டு வந்த பண்ணையாள் மீண்டும் வாழைத்தாரைத் தூக்கிக் கொண்டு கோயிலில் கொண்டு போய்க் கொடுத்தான். அங்கு அவனுக்கு முன்பே வந்திருந்த பண்ணையார் வாழைத்தாரை சாமிக்கு முன்னர் வைத்துப் படைத்து வணங்கினார். அப்படி வணங்கியபோது அவரது பார்வை வாழைத்தாரில் ஒரு பழம் குறைவதைக் கண்டுபிடித்து விட்டார்.
பண்ணையாளைப் பார்த்து, “என்னடா பயலே அம்பது பழத்துல ஒரு பழம் குறையுது? யாருடா தின்னது? உண்மையச் சொல்றியா? இல்ல முதுகுத் தோல உறிக்கட்டுமா?”ன்னு கேட்டாரு. அதைக் கேட்ட பண்ணையாள் பதறியடிச்சிக்கிட்டு, “ஐயா நான் எதுவும் திங்கலையா... அப்படியேக் கொண்டுக்கிட்டு வந்தேன்யா…” என்று கூறிவிட்டுப் பக்கத்தில் இருந்த தனது மகனைப் பார்த்து, “ஏன்டா நீ இதுக பழத்தை எடுத்துச் சாப்பிட்டியா? உண்மையச் சொல்றா? இல்லை ஒன்னக் கொன்னேபுடுவேன்”னு கோபத்துடன் கேட்டான்.
அதைக் கண்ட பண்ணையாளின் மகன் அழுதுகொண்டே, “ஆமாப்பா எனக்கு ரெம்பப் பசிச்சது. பசி பொறுக்க முடியலை. அதனால ஒரே ஒரு பழத்தை எடுத்துத் தின்னுட்டேம்பா. தெரியாமச் செஞ்சிட்டேம்பா”ன்னு உண்மைய ஒத்துக்கிட்டு பண்ணையாரிடமும் தனது அப்பாவிடமும் மன்னிப்புக் கேட்டான்.
பண்ணையாருக்குக் கடுமையான கோபம் வந்துருச்சு, “ஏண்டா அறிவுகெட்டவனே. சாமிக்குன்னு வச்சிருந்த வாழைத்தாரிலிருந்து எப்படிடா நீ பழத்தை எடுத்துத் திங்கலாம். எவ்வளவு திமிரு ஒனக்கு? ஒன்ன என்ன செய்யிறம்பாரு”ன்னு சொல்லிக்கிட்டே அவனைப் போட்டு நல்லா அடிச்சித் தொவச்சாரு.
பண்ணையாளின் மகனும் அடியை வாங்கிக் கொண்டு அழுதுகொண்டே இருந்தான். பண்ணையாள் எவ்வளவோ தடுத்தும் கூட அவர் அந்தச் சிறுவனை உதைஉதை என்று உதைத்து எடுத்துவிட்டார். அவனும் அடிபொறுக்க முடியாமல் கோவில் வாசலிலேயே சுருண்டு படுத்துவிட்டான்.
பண்ணையாரு அடடா என்னோட நேத்திக்கடன் இப்படி ஒண்ணுக்கும் ஒதவாமப் போயிருச்சேன்னு வருத்தப்பட்டுக்கிட்டே தன்னோட வீட்டுக்குப் போனாரு.
பண்ணையாளும் தன்னோட மகனைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போனான். பண்ணையாரு கோவில் வாசல்ல தன்னோட மகனை அடிச்சது பண்ணையாளின் மனதை ரணமாக்கிவிட்டது. மகனைச் சமாதானப்படுத்தி சாப்பிடவச்சித் தூங்கவச்சான்.
பண்ணையாரும் சாப்பிட்டுவிட்டு தூங்குனாரு. அப்ப அவரோட கனவுல முருகன் வந்து, “டேய் அற்பனே நீ எனக்கு எத்தனை பழம் கொடுத்தாய்? அம்பது பழமா கொண்டு வந்து கொடுத்தாய். நீ எனக்குக் கொடுத்தது ஒரே ஒரு பழந்தாண்டா? பண்ணையாளோட மகனாடா சாப்பிட்டான். நாந்தான்டா அந்தப் பழத்தைச் சாப்பிட்டேன். அவன் சாப்பிட்டது நான் சாப்பிட்டது மாதிரிடா. இது புரியமா அவனப் போயி அடிச்சியே? புண்ணியம்னு நெனச்சிக்கிட்டு பாவத்தைச் செய்திட்டியேடா. ஏழைங்களுக்குச் செய்யிறது அப்படியே என்னை வந்து சேருதுடா. இது தெரியமா அந்தச் சின்னப் பையனை அடிச்சிப் பாவத்தைச் சேத்திட்டியேடா? போயி அவனுக்கிட்ட மன்னிப்புக் கேளுடா. அப்பத்தான்டா நான் ஒன்ன மன்னிப்பேன்”னு சொல்லிட்டு மறைஞ்சிட்டாரு.
படுக்கையில இருந்து மிரண்டு போயி எழுந்த பண்ணையாரு தன்னோட தவற உணர்ந்து அழுதாறு. மறுநாளு பண்ணையாளோட வீட்டுக்குப் போயி பண்ணையாளுக்கிட்டயும் அவனோட மகங்கிட்டயும் மன்னிப்புக் கேட்டுட்டு அவனுக்குச் செவ்வாழைப் பழங்களையும் கொடுத்திட்டு வந்தாரு. அந்த நிகழ்ச்சிக்கு அப்பறம் அந்தப் பண்ணையாரு ஆளே மாறிட்டாரு. ஏழைங்களுக்குக் கொடுத்தா இறைவனுக்குப் போயிச் சேருங்கறது இப்பத்தான நமக்குத் தெரியுது. முருகன் என்னோட கண்ணைத் திறந்துட்டான்னு நெனச்சிக்கிட்டு அன்னையில இருந்து எல்லாருக்கும் ஒதவி செய்ய ஆரம்பிச்சாரு. அவரும் மகிழ்ச்சியா இருந்தாரு. ஊருக்குள்ள இருந்தவங்களும் மகிழ்ச்சியா இருந்தாங்க.
துன்பப்படுறவங்களுக்குக் கொடுக்கறதுதான் இறைவனுக்குப் போயிச் சேருது. இதை உணர்த்துவதாக இந்தக் கதை இந்தப் பகுதியில இன்றைக்கும் வழக்கத்துல வழங்கி வருது.