நாட்டுப்புறத்துல ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். அவ்வாறு காரணம் இருக்கும் எல்லாத்துக்கும் பொருத்தமான கதையும் இருக்கும். பாம்புக்கு நாக்கு இருக்கின்றது. அது ஏன் பிளவு பட்டிருக்கின்றது. இந்தக் கேள்விக்குப் புதுக்கோட்டை வட்டாரத்தில் ஒரு கதை வழக்கத்தில் வழங்கி வருகின்றது.
காசியப முனிவர் என்ற பெரிய முனிவர் இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள். ஒருவரது பெயர் திதி. இன்னொருவரது பெயர் அதிதி. இதில் திதி ரொம்ப நல்லவள். அவள் தன்னுடைய கடைமைகளைச் செவ்வனே செய்து கொண்டு வந்தாள். எப்போதும், எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் நடந்து கொள்வாள்.
அவள் யாரையும் இழிவாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசமாட்டாள். எளியவராக இருந்தாலும் மரியாதையுடன் நடத்துவாள். மிகவும் பொறுமையானவள். ஆனால் அதிதி இதற்கு முற்றிலும் மாறானவள்.
எல்லோரிடமும் எரிந்து எரிந்து விழுவாள். யாரையும் மரியாதையாக நடத்தமாட்டாள். பொறாமைக்காரி. யார் வந்தாலும் அவர்களுடன் வம்பு சண்டை. அதனால் அவளை யாருக்கும் பிடிக்காது. அவளைக் கண்டாலே யாராக இருந்தாலும் விலகிச் சென்று விடுவார்கள். ஆனால் திதியைக் கண்டால் அன்பாகப் பேசிவிட்டேச் செல்வர்.
இதனைக் கண்ட அதிதி திதியைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொள்வாள். அவளிடம் சரியாக நடந்து கொள்ளமாட்டாள். அவளிடம் மரியாதைக் குறைவாகவே நடப்பாள். ஆனால் இதையெல்லாம் திதி பொருட்படுத்தாமல் அதிதியிடம் அன்பாக நடந்து கொள்வாள். காசியப முனிவரோ இருவரிடமும் சமமான அன்பினைக் காட்டுவார்.
இவ்வாறு இருக்கும்போது திதியும், அதிதியும் கருவுற்றனர். முனிவர் மகிழ்ச்சி அடைந்தார். இருவரையும் நன்கு கவனித்தார். சரியான காலத்தில் திதி தேவர்களைப் பெற்றறெடுத்தாள். அவர்கள் அழகானவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் விளங்கினர். ஆனால் குறித்த காலத்திற்குள் அதிதி குழந்தை பெறவில்லை. இருந்தாலும் உரிய காலத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அவள் பொறுத்துக் கொண்டாள்.
காலம் கனிந்தபின் அதிதி குழந்தை பெற்றாள். ஆனால் அவள் பெற்றவை அனைத்தும் பாம்புகளாக இருந்தன. அவற்றைக் கண்ட அதிதி அதிர்ச்சியடைந்தாள். தனது கணவனைப் பார்த்து, ‘‘எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு பாம்புகள் குழந்தைகளாகப் பிறந்தன. இதைவிட எனக்குக் குழந்தைகள் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்’’ என்று பலவாறு கூறி அழுது புலம்பினாள்.
அதைக் கண்ட காசிப முனிவர், ‘‘நீ அழாதே! ஏனென்றால் அவரவர் எண்ணப்படியே எல்லாம் நடக்கும். உனது எண்ணங்களே இவ்வாறு பாம்புக் குழந்தைகள் பிறக்கக் காரணம். இவற்றை மனதில் வைத்துக் கொண்டு இனிமேலாவது அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்’’ என்று கூறி அவளைத் தேற்றினாள்.
இருந்தாலும் அதிதியின் மனம் அமைதியுறவில்லை. அவள் கலங்கினாள். அதைக் கண்ட அவளது குழந்தைகளான பாம்புகள், ‘‘அம்மா தாங்கள் கவலைப் படாதீர்கள். நாங்களும் பலசாலிகள் தான். எதற்காக நீங்கள் கவலைப்படுகிறீர்கள்? எங்களைக் கண்டவுடன் அனைவரும் பயந்து போய் ஓடுகின்றனரே. இது எங்களுக்கு எவ்வளவு பெருமை. அதனால் நீங்கள் மகிழ்ச்சியடையுங்ள்’’ என்று ஆறுதல் கூறின.
திதியையும் அவளது குழந்தைகளையும் எவ்வாறு அதிதிக்குப் பிடிக்காதோ அதைப்போன்று பாம்புகளுக்கும் பிடிக்காது. அதிலும் திதியின் குழந்தையான கருடன் பாம்புகளுக்குப் பரம எதிரியாக இருந்தான். அவனிடம் இருந்து தப்பிப்பதே அந்தப் பாம்புகளுக்குப் பெரும்பாடாக இருந்தது.
தன் தாயையும் சகோதரர்களையும் பாம்புகள் இழிவாகக் கருதி அவமரியாதையாக நடத்தியதால் கருடனுக்குப் பாம்புகள் மீது கோபங் கோபமாக வந்தது. அதனால் பாம்புகளைக் கண்டால் சகோதரர்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது சீறியது. அதனைக் கண்ட திதி கருடனிடம், ‘‘மகனே அவர்களும் உன் சகோதரர்கள். அதனால் அவர்களிடம் அன்பாக நடந்துகொள். அவர்கள் எது செய்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்’’ என்றார்.
அதனைக் கேட்ட கருடனோ, “அம்மா நான் பொறுமையாகத்தான் இருக்கின்றேன். நானாக அவர்களைத் துன்புறுத்தமாட்டேன். அவர்கள் எனக்குத் துன்பத்தைக் கொடுத்தால் நான் என்ன செய்வேன். முடிந்தவரை பொறுமையாக இருந்துவிட்டு என்னால் முடியாத நிலையில் தான் அவர்களை விரட்டுகின்றேன். என்னால் அவர்களுக்குத் துன்பம் வராது. அவர்களாக வந்தால் என்னால் இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாது’’ என்று கூறினான்.
அன்றிலிருந்து கருடன் பாம்புகள் தவறு செய்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு அவர்களிடமிருந்து விலகி விலகிச் சென்றான். இதனைக் கண்ட பாம்புகள் தங்களைக் கண்டு கருடன் பயந்துவிட்டான் என்று நினைத்துக் கொண்டு தங்களுக்குள் கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தன.
காலங்கள் உருண்டோடியது. கருடன் திருமாலின் வாகனமானான். இவ்வாறு இருக்கும்போது தேவர்களும் அரக்கர்களும் சேர்ந்து அமுதம் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். பாற்கடலைக் கடைந்தவுடன் அமுதக் குடம் கிடைத்தது. அதனை எடுப்பதற்குத் தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஒவ்வொருவரும் அமுதக் குடம் எனக்குத்தான், எனக்குத்தான் என்று போட்டி போட்டனர்.
அதனைக் கண்ட திருமால் குடத்தைக் கருடனிடம் கொடுத்துப் பத்திரமாகப் பாதுகாக்குமாறு கூறிவிட்டார். திருமாலிடம் அமுதக் குடத்தைப் பெற்ற கருடன் அதனை எடுத்துக் கொண்டு வேகமாக வானத்தில் பறந்தார். அவ்வாறு பறந்து வந்து யாரும் அணுக முடியாதவாறு ஒரு ஆற்றங்கரையில் தர்ப்பைப் புல் வளர்ந்திருந்த இடத்தில் அப்புல்களை வளைத்துப் போட்டு அதன்மேல் வைத்துப் பாதுகாத்தார்.
அமுதக் குடத்தை எடுத்துக் கொண்டு பறந்து வந்த கருடனை ஆற்றங்கரையில் இருந்த பாம்புகள் பார்த்து விட்டன. அப்பாம்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமுதக் குடத்தைக் கருடனிடம் இருந்து பறிக்க நினைத்தன. அதற்காக கருடன் சோர்வடையும் வரைக் காத்திருந்தனர். ஆனால் கருடன் களைப்படையவோ சோர்வோ அடையவில்லை. கண்ணுங் கருத்துமாகக் கருடன் தனது கடமையைச் செய்து கொண்டிருந்தார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பாம்புகள் கருடனை எதிர்த்துப் போராடி எப்படியாவது அமுதக் குடத்தைப் பெற்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தன. கருடனைச் சுற்றி வளைத்தன. இந்த எதிர்பாராத தாக்குதலைக் கண்டு கருடன் அஞ்சவில்லை. தனது சகோதரர்களான பாம்புகளைப் பார்த்து, ‘‘சகோதரர்களே இது திருமால் என்னிடம் கொடுத்துப் பாதுகாக்கச் சொன்ன அமுதக் குடம். அதனால் இதனை அபகரிக்க நினைக்காதீர்கள். கடவுளுக்குக் கட்டுப்பட்டு நடங்கள். கடவுளின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக நான் இருக்கின்றேன்’’ என்று பலவாறு எடுத்துக் கூறியது.
ஆனால் அதனைக் கேட்காத பாம்புகள் ஒன்று கூடி கருடனைக் கொன்று அமுதத்தைக் கைப்பற்றுவதற்காக வந்தன. கருடன் கோபமுடன் பாம்புகளைப் பார்த்தது. பாம்புகள் கருடனின் கோபப்பார்வைக்கு அஞ்சவில்லை. எப்படியாவது அமுதக் குடத்தைக் கைப்பற்றி விடுவது என்று நெருங்கி வந்தன.
கருடன் அனைத்துப் பாம்புகளையும் தன்னுடைய அலகால் கொத்திக் கொத்தித் தூக்கிப் போட்டுவிட்டு அமுதக் குடத்தைத் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்தது. பாம்புகளால் பறக்க முடியவில்லை. கொஞ்ச தூரம் ஓடிச் சென்று பின்னர் திரும்பி அமுதக் குடம் இருந்த இடத்திற்கே வந்துவிட்டன.
அமுதக் குடம் இருந்த இடத்தில் அமுதம் தர்ப்பைப் புல்லில் சிந்திக் கிடந்தது. அதனைப் பார்த்த அனைத்துப் பாம்புகளும் தங்களது நாவால் நக்கி அந்த அமுதத்தைக் குடித்தன. அவ்வாறு நாவால் நக்குகின்றபோது அவற்றின் நாக்கைத் தர்ப்பைப் புல் அறுத்துவிட்டது. பாம்பின் நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டுப் போய்விட்டன.
இதுதான் பாம்பின் நாக்குப் பிளவுபட்டதற்கான காரணம். அமுதக் கலசத்தைப் பறிக்கப் பார்த்த பாம்புகளைக் கண்டால் கருடனுக்குக் கடுங்கோபம் வந்து அவைகளைத் துரத்தும். அன்றிலிருந்து கருடனுக்குப் பகை பாம்பு என்ற சொலவடையும் வழக்கத்தில் வந்துவிட்டது. இக்கதை இந்த வட்டாரத்தில் வழக்கத்தில் இருந்து வருகின்றது.