உலகத்தில் மிகவும் உயர்ந்தது எதுன்னு கேட்டா அனைவரும் கண்ணை மூடிக்கிட்டுச் சொல்வாங்க தாயின் அன்புதான் உயர்ந்தது என்று. இந்தப் பூமிய விட உயர்ந்தவர் நம்மைப் பெற்ற தாய். அதனால்தான் இறைவன் உயிர்களைப் படைத்துவிட்டு தனக்குப் பதிலாகத் தாயை, அந்த உயிரைக் காப்பதற்காக பக்கத்திலேயே வைத்தார் என்பர். இந்த உலகத்தில் தன்னலமில்லாதது, பிறருக்காக வாழ்வது எல்லாமே தாயின் அன்புதான். இந்தத் தாயின் அன்பிற்கு ஈடு இணை இந்த உலகத்திலேயே இல்லை என்று சொல்லலாம். இதனை விளக்கும் வகையில் ஒரு கதை வழக்கத்தில வழங்கி வருகின்றது.
ஊருல பெரிய பண்ணையாரு ஒருத்தரு இருந்தாரு. அவருக்கு எல்லாம் இருந்தது. ஆனால், குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அவர்கள் வேண்டாத தெய்வமில்லை. போகாத கோவில் இல்லை. அவர்களது வேண்டுதலுக்கு மனம் இரங்கிய இறைவன் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அருள் செய்தார்.
அவர்களும் அந்தக் குழந்தையை நன்றாக வளர்த்தார்கள். குழந்தைக்கு ஒண்ணரை வயது ஆனது. அந்த ஊரில் ஒரு வழக்கம் ஒன்று இருந்தது. எந்த வீட்டுக்கும் தண்ணீர் தேவையென்றால் அந்த வீட்டில் உள்ள பெண்கள்தான் குளத்திற்குச் சென்று எடுத்து வரவேண்டும். அப்படி ஒரு வழக்கம். அதனால் பண்ணையாரோட மனைவி குழந்தையைத் தொட்டில்ல போட்டுத் தூங்க வச்சிட்டு தண்ணி எடுப்பதற்காக குடத்தை எடுத்துக்கிட்டு குளத்துக்குப் போனா.
குளம் பண்ணையார் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்துல இருந்தது. அதனால வேக வேமாக போயி பண்ணையார் மனைவி தண்ணி தூக்கப் போனா. அவ குளத்துல தண்ணி எடுத்துக்கிட்டு வீட்டுக்குவந்து பாத்தா அவளோட குழந்தை பாம்பு கடிச்சி நுரைத்தள்ளி தொட்டில்ல இறந்து போயிக்கிடந்தது.
இறந்து கிடந்த மகனைப் பார்த்த பண்ணையார் மனைவி குய்யோ முறையோ என்று கீழே விழுந்து புரண்டு புரண்டு அழுதாள். அவள் இறைவனைப் பார்த்து இந்த வயசிலேயே என்னோட மகன எப்படி எமன் கொண்டு போனான். தெய்வமே உன்னோட அருளாளதான ஏம்புள்ள பொறந்தான். இப்படி அற்ப ஆயுசுல பாம்பு கடிச்சி இறந்து போனானே! நான் என்ன செய்யிறது’’ அப்படீன்னு பொலம்பிக்கிட்டே தலைவிரி கோலமாக் கால்போன போக்குல ஓடுனா.
அந்த ஊரு எல்லையில ஒரு கிணறு இருந்தது. அதுக்கிட்ட வந்து அழுதா. அப்ப அந்தக் கிணறு சொன்னது, ‘‘அம்மா அழாதே. ஒம்பிள்ளையோட உயிரை எமன் கொண்டுக்கிட்டுப் போயிட்டான். நான் வறண்டு போயி இருக்கேன். நீ உன்னோட கண்ணீரால என்னைய நிரப்புனா எமன் போன வழியச் சொல்றேன். அந்த வழியில போயி நீ எமனுக்கிட்ட இருந்து ஒன்னோட பிள்ளைய மீட்டுக்கிட்டு வரலாம்னு’’ சொன்னது.
அதக் கேட்ட பண்ணையாரோட மனைவி தன்னோட கண்ணீரால அந்தக் கிணத்தை நிரப்பினா. கண்ணீர் வழிந்து அந்தக் கிணறு நிரம்புன ஒடனே அந்தக் கிணறு இங்க இருந்து நீ நேராப் போ அங்க ஒரு கள்ளியஞ்செடி ஒண்ணு இருக்கும். அதுக்கிட்ட நீ போயிக் கேட்டா அது உனக்கு வழி சொல்லும். போன்னு’’ சொன்ன ஒடனே பண்ணையாரோட மனைவி வேகவேகமா ஓடுனா.
கொஞ்சதூரம் போனவுடனே அந்தக் கிணறு சொன்ன கள்ளியஞ்செடி வந்தது. அதுக்கிட்டப் போயி, ‘‘ஏ கள்ளியஞ்செடியே எம்பிள்ளையோட உசிர எமன் கொண்டுக்கிட்டுப் போயிட்டான். எனக்கு இருக்குறது ஒத்தப்பிள்ளை. அதனோட உசிர மீட்கணும். நீதான் எனக்கு உதவி செய்யணும்னு’’ அழுதுக்கிட்டே கள்ளிக்கிட்ட கேட்டா.
அவ அழுததப் பாத்த கள்ளி, ‘‘அம்மா அழாதே, நீ உன்னோட குழந்தையை எப்படிக் கட்டிப்புடுச்சி முத்தங் கொடுப்பியோ அதேமாதிரி என்னையக் கட்டிப்பிடிச்சி முத்தங் கொடு நான் எமன் போன வழியச் சொல்றேன்னு சொன்னது.
பண்ணையாரு மனைவி எதைப் பத்தியும் கவலைப் படாம சட்டுன்னு கள்ளியஞ்செடியக் கட்டிப்புடுச்சி குழந்தைக்குக் கொடுக்குற மாதிரி முத்தமுங் கொடுத்தா. அவளோட ஒடம்பு முகம் எல்லாம் முள்ளுக் குத்தி இரத்தம் வழிஞ்சது.
கள்ளிச்செடி பண்ணையாரு மனைவியப் பாத்து, ‘‘அம்மா அழாதே, நீ இடதுபக்கமாப் போனியின்னா எமன் போன பக்கம் நீ போயி ஒன்னோட குழந்தை உசிர மீட்டுடலாம். அங்க ஒரு கழுகு இருக்கும் அந்தக் கழுகு ஒனக்கு உதவி செய்யும். கவலைப்படாம போயிட்டுவா’’ அப்படீன்னு சொன்னது.
பண்ணையாரு மனைவி அந்தக் கள்ளிச்செடிக்கு நன்றி சொல்லிட்டு, அழுதுகிட்டே இடது பக்கமாப் போனா. கொஞ்ச தூரம் இடது பக்கம் போன ஒடனே ஒரு பெரிய மலைக்கழுகு ஒண்ணு அங்க இருந்த மரத்துல ஒக்காந்து இருந்துச்சு. கண்ணீருங் கம்பலையுமா வந்த பண்ணையாரோட மனைவியைப் பாத்து, ‘‘அம்மா அழாதே! நீ ஏன் இப்படி அழுதுகிட்டேப் போறே! என்னன்னு சொன்னா என்னாலான ஒதவிய நான் செய்வேன்”னு சொன்னது.
கழுகு சொன்னதைக் கேட்ட பண்ணையாரு மனைவி, ‘‘ஏங் குழந்தையின் உயிர எமன் புடிச்சிக்கிட்டுப் போயிட்டான். அந்த எமன் கிட்ட இருந்து என்னோட குழந்தையோட உசிர மீட்கணும். அதுக்காகத்தான் போயிக்கிட்டு இருக்கேன்”னு சொன்னா
அதக் கேட்ட கழுகு, ‘‘அம்மா எனக்கு ரெண்டு கண்ணும் தெரியாது. ஒன்னோட ரெண்டு கண்ணையும் தந்தியின்னா நான் எமன் இருக்குற எடத்த சொல்லுவேன். நீ தர்ரியா?’’ அப்படீன்னு கேட்டது.
அதுக்கு அந்தப் பண்ணையாரோட மனைவி சரி தர்றேன். நீ எமன் போன வழியச் சொல்லு”ன்னு சொல்லிட்டுத் தன்னோட கண்கள் ரெண்டையும் தோண்டி எடுத்து அந்தக் கழுகுக்கிட்ட கொடுத்தா.
கண்களை வாங்கிக்கிட்ட கழுகு, ‘‘அம்மா இங்க இருந்து பதினஞ்சாவது அடி தூரத்துல எமன் இருக்கான் அங்க போயி ஓங் குழந்தையோட உயிரை மீட்டுக்க”ன்னு சொன்னது.
பண்ணையாரு மனைவி அந்தக் கழுகுக்கு நன்றி சொல்லிட்டு, கண்கள்ள ரத்தம் ஒழுக ஒழுக, மெதுவா ஒவ்வொரு அடியா வச்சி நடந்து போனா. பதினஞ்சாவது அடிவந்த ஒடனே ஒரு குரல் கேட்டது, ‘‘ஏம்மா நீ எங்க வந்த. இந்த இடத்துக்கு யாரும் சாமானியமா வரமுடியாதே? நீ ஏன் வந்த. வந்த காரணத்தைச் சொல்லு’’ அப்படீன்னு சொன்னாரு.
எமன் கூறியதைக் கேட்ட பண்ணையாரு மனைவி, ‘‘ஐயா தர்மதுரை என்னோட குழந்தையின் உயிரை எடுத்துக்கிட்டு வந்துட்டீங்க. ஏங குழந்தையைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. அந்தக் குழந்தை தெய்வத்தோட அருளாள பிறந்தது. அதத் திருப்பிக் கொடுங்க”ன்னு கேட்டா.
அவளோட நிலைமையைப் பாத்து இரக்கப்பட்ட எமன், ‘‘அம்மா கவலைப்படாதே, இதோ இங்க ஒரு மலர்த்தோட்டம் இருக்கு. இந்த மலர்களெல்லாம் நான் பிடிச்சிக் கொண்டு வந்த கொழந்தைங்க. இந்தத் தோட்டத்துக்குள்ளாறப் போயி பத்து நிமிஷத்துக்குள்ளாற ஒன்னோட குழந்தையக் கண்டுபிடிச்சிக் கூட்டிக்கிட்டுப் போயிடு. அப்படி நீ கண்டுபிடிக்க முடியலைன்னா ஒன்னோட குழந்தையை எந்தக் காலத்துலயும் பாக்க முடியாது”ன்னு சொல்லிட்டாரு.
பண்ணையாரு மனைவி சரின்னு எமங்கிட்ட சொல்லிட்டு கைகளால தட்டுத்தட்டா தடவிக்கிட்டே போயி ஆறாவது வரிசையில ஏழாவதா இருந்த ஒரு மலரைப் போயித் தொட்டா. அவ தொட்ட ஒடனே அந்த மலர் குழந்தையா மாறி அம்மான்னு கத்திக்கிட்டே ஓடிவந்து அவளக் கட்டிப் பிடிச்சிக்கிருச்சு.
அதப் பாத்த எமன், ‘‘என்னடா இது நாம சொன்ன கொஞ்ச நேரத்துலயே அவ குழந்தையக் கண்டுபிடிச்சிட்டா? எப்படிக் கண்டுபிடிச்சா?”ன்னு ஆச்சரியப்பட்டார்.
பண்ணையாரோட மனைவிய அழைச்சி, ‘‘ஏம்மா இந்த மலர்த்தோட்டத்துக்குள்ள லட்சக்கணக்கான மலர்கள் இருக்கு. இதுல எப்படி ஒன்னோட குழந்தையை மட்டும் கண்டுபிடிச்சே?”ன்னு கேட்டாரு.
அதுக்கு அந்தப் பண்ணையாரோட மனைவி, ‘‘ஐயா, என்னோட குழந்தையோட வாசனை எனக்குத் தெரியும். அந்த வாசனையே என்னைய அதுக்கிட்ட கொண்டு போயிருச்சு. அதனாலதான் நான் என்னோட குழந்தையை ஒடனே கண்டுபிடிச்சேன். தாய்க்குத்தான் தெரியும் தன்னோட குழந்தையைப் பத்தி’’ அப்படீன்னு சொன்னா
அவளோட தியாக உள்ளத்தைப் பார்த்த அந்த எமன், அவளுக்கு இழந்த பார்வையையும் எந்தவிதமான காயமில்லாத உடலையும் கொடுத்துட்டு மறஞ்சிட்டாரு. பண்ணையாரு மனைவி தன்னோட குழந்தையை அழைச்சிக்கிட்டு தன்னோட வீட்டுக்குப் போயி மகிழ்ச்சியா வாழ்ந்து வந்தா.
தாயோட அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்தக் கதை உள்ளது. தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை என்பதற்கு இந்தக் கதையை உதாரணமாச் சொல்லலாம்.