உலகம் நல்லவங்களையும் கெட்டவங்களையும் கொண்டு அமைந்துள்ளது. இதில் நல்லவங்க உள்ளதால் உலகம் இன்றும் இருக்கின்றது. கெட்டவங்க எப்போதும் சுயநலத்தோடு இருப்பாங்க. அவங்க எப்போது பார்த்தாலும் தங்களைப் பற்றியே நினைச்சிக்கிட்டு இருப்பாங்க. மற்றவங்களை கடுகளவுகூட நம்ப மாட்டாங்க. இப்படி இருக்கக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக ஒருகதை இப்பகுதியில் வழங்கி வருகின்றது.
ஒரு ஊருல ஒருத்தன் இருந்தான். அவனுக்குப் பகீரதன் போல தவம் இருந்து இறைவனைப் பார்த்து வரம் வாங்கிக்கிட்டு வரணும்னு நினைத்தான். அதனால அவன் காட்டுக்குள்ளாறப் போயி ஒத்தைக் கால்ல நின்னு தவம் இருக்கத் தொடங்கினான்.
ஒரு நாளாச்சு. ரெண்டு நாளாச்சு. மூனாவது நாளு. திடீர்னு அவன் முன்னால ஈஸ்வரனே வந்து நின்னுட்டாரு. அவனுக்கு வந்தது யாருன்னு தெரியல. வந்த ஈஸ்வரன், ‘‘மகனே உனக்கு என்ன வேண்டும்? கேள். நீ கேட்பதைத் தருகிறேன். எதற்காக நீ தவம் இருக்கின்றாய்?’’ அப்படீன்னு கேட்டாரு.
அவனுக்கு ஒன்னும் புரியல. என்னடா இது திடீர்னு ஒரு ஆளு கடவுள் வேஷம் போட்டுக்கிட்டு வந்து முன்னால நிக்கிறான். ஆயிரம் வருஷம் தவம் இருந்தாத்தானே கடவுளு வருவாருன்னு சொல்வாங்க. இப்ப மூனுநாளுக்குள்ளேயே கடவுள்னு சொல்லிக்கிட்டு ஒருத்தரு வந்து நிக்கிறாரு. இது உண்மையில்ல. இதுல ஏதோ சூது இருக்குன்னு நெனச்சிக்கிட்டு, ஈஸ்வரனப் பார்த்து, ‘‘ஐயா ஒன்னையக் கும்புடுறேன். நீ கடவுள் இல்லே. நான் கடவுளை நினைச்சு, கடவுளைப் பாக்குறதுக்காகத் தவம் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். தயவு செஞ்சு என்னோட தவத்தைக் கெடுத்துப்புடாதே. பேசமாப் போயிருன்னு’’ சொன்னான்.
ஆனாலும் கடவுள் அவன விடல. ‘‘மகனே! நான் சொல்றதக் கேளு. இந்தப் பக்கமா போயிக்கிட்டு இருந்தேன். நீ ஒத்தக் கால்ல நின்னு தவம் செய்யிறதப் பாத்துட்டு, ஒன்ன ரொம்ப காலம் காக்க வைக்கக் கூடாதுங்கறதுக்காக நான் இப்ப வந்துட்டேன். ஒனக்கு வரம் கொடுக்காம என்னால போக முடியல. ஒனக்கு வேண்டியதைக் கேளு நான் தந்துட்டுப் போயிடறேன்னு’’ சொன்னாரு.
இதைக் கேட்ட அந்த ஆளுக்குச் சிரிப்பு வந்துட்டுது. ‘‘ஐயா என்னத் தொந்தரவு படுத்தாதே. நான் கடவுளப் பார்க்கணும். உன்னையப் பார்த்தா கடவுளாத் தெரியல. நாடகம் நடிச்சிட்டு வேஷத்தக் கலைக்காமல் அப்படியே ஓடி வந்துருக்கற மாதிரித் தெரியுது. பேசமாப் போயிருன்னு எனக்கு வரமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’’ என்று சொன்னான்.
கடவுளுக்குச் சிரிப்பு வந்துருச்சு. அட என்னடா இது. இவன் நம்மள எவ்வளவு சொல்லியும் நம்ப மாட்டங்கறன். முட்டாப்பயலா இருக்கான். பாவம் இவனுக்கு ஏதாவது கொடுப்போம்னு நெனச்சார். அவனப் பார்த்து, ‘‘மகனே! என்னைய நீ நம்ப மாட்டங்கற. பராவாயில்லை. நான் யாருக்காவது காட்சி கொடுத்துட்டா அவங்களுக்கு எதாவது கொடுக்காமப் போகமாட்டேன். நீ வரம் வேண்டாம்னு சொன்னாலும் நான் கொடுக்காமப் போகமாட்டேன். ஒனக்கு என்ன வேணும்னு கேளு நான் தர்ரேன்னு’’ வற்புறுத்திக் கேட்டாரு.
அப்பவும் அந்த ஆளு கடவுள் சொல்றத நம்பாம, ‘‘என்னய்யா என்னோட தவத்தக் கலைக்கப் பாக்குறே. எனக்கு வரமும் வேணாம். ஒண்ணும் வேணாம். இங்க நின்னுக்கிட்டு இருக்காதே. பேசாமப் போயிரு”ன்னு கோபமாக் கத்துனான்.
ஆனாலும் இறைவன் அவனப் பாத்துச் சிரிச்சிக்கிட்டு இந்தக் காலத்துலயும் இப்படி ஒருத்தன் இருக்கானேன்னு வருத்தப்படாரு. இருந்தாலும் அவனுக்கு வரங்கொடுக்காமப் போகக்கூடாதுன்னு நெனச்சிக்கிட்டு, அவங்கிட்ட மூணு தேங்காயக் கொடுத்து, ‘‘மகனே! இந்தத் தேங்காய் சக்தி வாய்ந்ததேங்காய். நீ என்ன நெனச்சிக்கிட்டு இதை ஒடைக்கிறியோ அது ஒடனே நடக்கும். ஒனக்கு என்ன தேவையோ அதை நினைச்சிக்கிட்டு இதுல ஒன்ன ஒடைச்சிரு. இந்த மூணு தேங்காய்களையும் வைத்துக்கொள்’’ என்று கூறி அவற்றை அவனிடம் கொடுத்துவிட்டுக் கடவுள் போய்விட்டார்.
மூணு தேங்காய்களையும் வாங்கியவனுக்கு ஒண்ணும் புரியல. சரி கொடுக்கிறார், வாங்கிக் கொள்வோம் என்று வாங்கிக் கொண்டான். பிறகு மூணு தேங்காய்களையும் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போனான். வீட்டுக்குப் போன ஒடனே ஒரு அறைக்குள்ள போயி கதவ நல்லாச் சாத்தித் தாப்பாப் போட்டுக்கிட்டு மூணு தேங்காய்களையும் தன்னோட முன்னால வச்சிக்கிட்டான். அப்படித் தேங்காயை வச்சவனுக்கு வந்தது கடவுளா? இல்லை வேஷம் போட்டுக்கிட்டு வந்தவனா என்ற சந்தேகம் வலுத்துருச்சு.
சரி சோதனை செஞ்சு பாப்போம்னு நெனச்சிக்கிட்டே இருந்தான். ஒண்ணும் அவனுக்குத் தோணலை. எப்படி வந்தவன் கடவுள்தான்னு உறுதியா நம்புறதுன்னு குழம்பிக்கிட்டே இருந்தான். திடீர்னு அவனுக்கு ஒரு யோசனை வந்தது. நம்ம மூக்கு சின்னமா இருக்கு. அதைப் பெரிசா ஆக்க நெனப்போம் அப்படி மூக்குப் பெரிசாயிடுச்சின்னா வந்தது கடவுள்தான்னு உறுதியாத் தெரிஞ்சுடும்னு முடிவுபண்ணிக்கிட்டான்.
பிறகு கண்ணை மூடிக்கிட்டுத் தேங்காய எடுத்து எனக்கு மூக்குப் பெரிசா ஆகணும்னு நெனச்சுக்கிட்டு ஒடைச்சான். தேங்காய் ஒடைஞ்சது. ஒடனே அவனோட மூக்கு கிடுகிடுன்னு வளந்து வீட்டுச் சுவத்தைப் போயி தொட்டது.
அதப் பாத்தவன் மிரண்டு போயிட்டான். ஆஹா வந்தது கடவுள்தான். இது தெரியாமப் போயிருச்சே. இப்ப மூக்குவேற இப்படித் தெரியாத்தனமா பெரிசாயிடுச்சே. எல்லாரு மத்தியிலயும் எப்படிப் போறது. அசிங்கமாப் போயிருச்சேன்னு ரொம்ப வருத்தப்பட்டான்.
அப்ப அவன் கண்ணுல கடவுள் கொடுத்த தேங்காய் கண்ணுல பட்டுச்சு. அவன் ரெண்டாவது தேங்காய எடுத்து கொஞ்சங்கூட நிதானமில்லாம வேகமா ஒடச்சி என்னோட மூக்கு சின்னதாப் போயிடணும்னு நெனச்சான். அப்படி நெனச்சிக்கிட்டே தேங்காய ஒடச்சதுனாலே அவனோட மூக்கு ரெம்பச் சின்னதா ஆகி உள்ளுக்குள்ள ஓடிப் போயிருச்சு. இப்ப மூக்கு இருந்த இடத்துல ரெண்டு துவாரம் மட்டும் இருந்தது. அப்படியே தன்னோட முகத்தைக் கண்ணாடியில பாத்தான். கர்ணகடூரமா இருந்தது. அவன் முகத்தை அவனாலேயேப் பார்க்கச் சகிக்கவில்லை.
அவனுக்கு ரொம்ப மனசு கஷ்டமாப் போயிருச்சு. அடடா நம்ம மூக்கு இப்படி ரொம்பரொம்பச் சின்னமாப் போயிடுச்சேன்னு கவலைப்பட்டவன், இப்ப என்ன செய்யிறதுன்னு யோசிச்சுக்கிட்டே இன்னொரு தேங்காயப் பாத்தான். சரி அதையும் ஒடச்சாத்தான் நம்ம மூக்கச் சரிபண்ண முடியும்னு முடிவு பண்ணிக்கிட்டான்.
மூணாவது தேங்காய எடுத்து என்னோட மூக்கு எப்போதும்போல இருக்கணும்னு நெனச்சிக்கிட்டே ஒடச்சான். தேங்காய் ஒடஞ்ச உடனே அவனோட மூக்கு எப்போதும் போல ஆயிடுச்சு. அதைக் கண்ணாடியில பார்த்த ஒடனேதான் அவனுக்கு உயிரே வந்துச்சு.
அப்புறந்தான் அவன் வந்தது ஆண்டவன். நாம அவநம்பிக்கை பட்டதாலயும், நம்மளோட சுயநலத்தாலயும் கிடைச்ச வாய்ப்பத் தவறவிட்டுட்டோமே. ஐயோ நல்ல வாய்ப்பு இப்படிப் போச்சேன்னு ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டான்.
சுயநலத்தோட அவநம்பிக்கையோட எதையும் நெனைக்கிறதோ மத்தவங்களப் பாக்குறதோ தவறு. அப்படிப் பார்த்தா நம்மை நாடி வர்ற நல்ல வாய்ப்புகளும் இப்படி வீணாத்தான் போயிடும். மனிதன் சுயநலமில்லாம இருக்கணுங்கறத இந்தக் கதை நமக்குத் தெளிவாச் சொல்லுது.