மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். இது உண்மைதான். ஏனெனில் ஒருவனுக்கு நல்ல மனைவி அமைந்து விட்டால் அவன் வாழ்க்கை மலர்ச் சோலையாக மாறிவிடும். வாழ்க்கையில் எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும், அவனுடைய இல்லத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவே வராது. இதனை இவ்வட்டாரத்தில் வழங்கும் ஒரு கதை நமக்குத் தெளிவுறுத்துகின்றது.
ஒரு ஊரில் தச்சர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த ஊரில் இருக்கின்ற எல்லா விவசாயிகளுக்கும் வேண்டிய விவசாயக் கருவிகளை செஞ்சு கொடுத்தாரு. அவருக்கு நல்ல வருமானம் கிடைச்சது. வீட்டுல எப்பவும் மீனும் கறியும் சாப்பாடு. வாழ்க்கை நல்லாப் போயிக்கிட்டு இருந்தது.
அப்படிப் போயிக்கிட்டு இருந்த வாழ்க்கையில திடீர்னு ஒரு பெரிய தடங்கல் ஏற்பட்டது. அந்த ஊர்ல மழையே பெய்யலை. அதனால விவசாயம் யாரும் செய்யலை. தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்ததால விவசாயிங்க அத்தனை பேரும் வேறு வேறு வேலைக்குச் சென்று விட்டார்கள். சிலர் நிலங்களை விற்றுவிட்டு வெளியூருக்குச் சென்றனர்.
இதனால் தச்சருக்கு வேலையில்லாமல் போய்விட்டது. வீட்டில் வறுமை வாட்டியது. மனமொடிந்து போன தச்சர் செய்வதறியாது தவித்தார்.
அவரது முகவாட்டத்தைக் கண்ட அவரது மனைவி அவரைப் பார்த்து, ‘‘ஏங்க கவலைப்படாதீங்க. இப்படியேவா காலம் போயிரும். நாம மட்டுமா கஷ்டப்படறோம். எல்லாரும்தானே கஷ்டப்படறாங்க. இந்த வேலை இல்லைன்னா என்ன? வேற வேலையப் பார்ப்போம்”னு’ சொன்னா.
அதைக் கேட்ட தச்சன், ‘‘ நீ சொல்றது சரிதான். ஆனால் நான் எந்த வேலையச் செய்ய முடியும்? நீயே சொல்லு’’ என்றான்.
அதற்கு அவன் மனைவி, ‘‘இங்க பாருங்க பக்கத்துல இருக்கற காட்டுக்குள்ளாற போயி பட்டுப்போன மரங்கள வெட்டி அந்த விறகக் கொண்டு வந்து நகரத்துல வித்தா நெறையப் பணம் கிடைக்கும். நம்மளோட கஷ்டமும் போயிரும்ல. நாளையில இருந்து அந்த வேலையைச் செய்யிங்க’’ அப்படீன்னு சொன்னா.
மனைவி சொல்றதுல நியாயம் இருக்கறத உணர்ந்த அந்த தச்சன் மறுநாள் ஒரு கோடரியை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி எடுத்துக்கிட்டு வந்து பக்கத்துல இருக்கிற நகரத்துல கொண்டு போயி வித்துட்டு வந்தான். வீட்டுல கொஞ்சம் வறுமை போச்சுது.
அவனோட மனைவி கொஞ்ச நாள் கழிச்சி, ‘‘ஏங்க நீங்க ஏன் விறகு வெட்டப் போறீங்க? என்னிடமிருக்கிற நகைய வித்து விறகுக் கடை வச்சா என்ன? நாஞ்சொல்றதச் செய்ங்க இனி விறகு வெட்டப் போகாம மத்தவங்க கொண்டுக்கிட்டு வர்ற விறக வாங்கி வித்துருங்க’’ அப்படீன்னு சொன்னா.
அதுவுஞ்சரிதான் என்று நினைத்த தச்சன். மனைவி சொன்னதக் கேட்டு அதுபடி விறகுக் கடை வச்சான். கடையில நல்லா வியாபாரம் போச்சு. கையில கொஞ்சம் காசும் சேந்தது. வீட்டுல வறுமை போயிருச்சு. மறுபடியும் வீட்டுல நல்ல சாப்பாடு நல்ல துணிமணி கட்டத் தொடங்கினாங்க.
வாழ்க்கை சொகமாப் போகத் தொடங்கியபோது, அடுத்துப் பெரிய இடியா அவன் வாழ்க்கையில இறங்குச்சு.
ஒருநாள் விறகுகளை வித்துட்டு பணத்தையெல்லாம் எடுத்துக்கிட்டு கொடுக்குறவங்களுக்குக் கொடுத்துட்டு கடையப் பூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்தான். வீட்டுல வந்து சாப்பிட்டுட்டு மனைவி குழந்தைகளோட தூங்குனான். நடுச்சாமம் வந்தது. அப்ப அவனோட விறகுக் கடை எப்படியோ தீப்பிடிச்சி எரிஞ்சது.
அதைப் பாத்துட்டு எல்லாரும் கத்துனாங்க. அவனும் அவன் மனைவியும் ஓடிப் போயிப் பாத்தாங்க. அந்த ஊர்க்காரங்களும் அவனும் சேர்ந்து கஷ்டப்பட்டு அந்தத் தீய அணைச்சாங்க. ஆனா அந்தத் தச்சனுடைய முதல் எல்லாம் போயிருச்சு. இனி எதை வச்சிப் பொழைக்கிறதுன்னு கன்னத்துல கையவச்சிக்கிட்டு விசனத்தோட அழுதான்.
அதைப் பாத்த அவனோட மனைவி அவனருகில் வந்து, ‘‘ஏங்க இப்ப அழறீங்க. எதுக்குக் கண்ணீர் விடணும். நீங்க ஒண்ணும் கவலைப் படவேண்டாம். என்ன விறகு எல்லாம் எரிஞ்சு கரியாப் போயிடுச்சேன்னுதான வருத்தப்படறீங்க. கவலையவிடுங்க. நாளையில இருந்து எரிஞ்சுபோன விறகோட கரியெல்லாம் எடுத்துக் குவிச்சு வைத்து அடுப்புக்கரி வியாபாரம் பாருங்க. விறகவிட நெறையப் பணம் கிடைக்கும். கவலைப் படாமா எழுந்து வாங்க’’ அப்படீன்னு சொன்னாள்.
அதைக் கேட்ட தச்சன், அட ஆமா நல்ல யோசனையால்ல இருக்கு எதுக்கு நாம கவலைப்படணும். எல்லாம் நன்மைக்குத்தான் என்று நினைத்து மனைவி சொன்னதைப் போல மறுநாள்ல அடுப்புக் கரி வியாபாரம் பண்ணினான்.
அவனோட முதல் எல்லாம் திரும்பவும் அவனுக்குக் கிடைச்சது. மறுபடியும் விறகுக் கடை வச்சான். வியாபாரம் நல்லாப் பெருகிச்சு. மனைவி மக்களோட சொகமா வாழ்ந்தான். எல்லாம் மனைவி அமையற விதத்துலதான் ஒருவனோட வாழ்க்கையே அமையுது. மனைவி நல்லவளா அமைஞ்சிட்டா வாழ்க்கையில துன்பங்கறது வராதுன்னு இந்தப்பக்கத்துல வழக்கில இந்தக் கதை வழங்கிவருது.