எது நடந்தாலும் அது இறைவனுடைய அருளாலதான் நடக்குது. ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இறைவன் ஒவ்வொரு செயலையும் நடத்துகிறான். இறைவன் ஏற்கனவே நடத்திட எண்ணிய செயலைச் செய்வதற்காகத்தான் நாம் இந்த உலகில் பிறப்பெடுத்துள்ளோம். இது உலக நியதி. நம்மால் எதுவும் நிகழாது. இறைவன் திட்டமிட்டபடியே எல்லாச் செயலும் நடந்து கொண்டு உள்ளது. இதனை விளக்குவதற்காக இவ்வட்டாரத்தில் ஒரு கதை வழங்கி வருகின்றது.
மேலோகத்தில் எமதர்மராசா தன்னோட எம தூதரை அழைத்து, ‘‘தூதனே இன்றைக்குப் பிடித்து வரக்கூடிய உயிர்களைப் பிடித்து வந்துவிட்டீர்களா? இறைவன் நமக்கு ஒதுக்கிய பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும். செய்யத் தவறினால் இறைவனது கோபத்திற்கு ஆளாவோம். ம்… சொல்லுங்கள்’’ என்று ஒவ்வொருவராக விசாரித்துக் கொண்டிருந்தார்.
எமதூதுவர்கள் ஒவ்வொருவராக வந்து எமதர்மரிடம் தாங்கள் கொண்டு வந்த உயிர்களைப் பற்றிக் கூறிவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு எமதூதுவன் மட்டும் தயங்கித் தயங்கி எமதர்மனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த எமதர்மன், ‘‘என்ன தூதுவரே என்ன தயக்கம்… தாங்களிடம் ஒப்படைத்த பணியைச் செய்தீரா? தற்போதுதான் குழந்தை பெற்ற தாயின் உயிரை எடுத்துவரப் பணித்தேனே செய்து முடித்தீரா?’’ என்று உக்கிரத்துடன் கேட்டார். அவரின் கேள்விக்குத் தூதன், ‘‘ஐயா எமதர்மராசாவே தாங்கள் கூறிய பணியை என்னால் செய்து முடிக்க முடியவில்லை. தற்போதுதான் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே தந்தையை இழந்த அந்தக் குழந்தை அதன் தாயின் உயிரையும் பறித்துவிட்டால் அந்தக் குழந்தை யாருமற்ற அநாதையாகி விடுமே என்று எண்ணி எனக்கு மனம் பதறிவிட்டது. அதனால் அந்தத் தாயின் உயிரை என்னால் பற்றிக் கொண்டு வரமுடியவில்லை. மன்னித்து விடுங்கள்’’ என்று கூறினான்.
அதனைக் கேட்ட எமதர்மராசாவிற்குக் கடுங்கோபம் உண்டாயிற்று. ‘‘என்னது உயிரைப் பறித்து வரமுடியவில்லையா? மனிதர்களுக்குத்தான் ஆசாபாசங்கள். நம்மைப் போன்றவர்களுக்குக் கிடையாது. இறைவன் என்ன ஆணையிட்டுள்ளாரோ அதனை நிறைவேற்றுவது நமது கடமை. இது புரியாமல் நீர் கடமையைச் செய்யாமல் வந்துவிட்டீரே. அதனால் உனக்குச் சாபம் தருகிறேன். நீ கடமை தவறியதால் பூலோகம் சென்று மனிதனாக இருந்து இறைவனின் செயல்பாடுகள் குறித்த ரகசியத்தை அறிந்து கொண்டுவா. அப்போதுதான் உனக்கு இறைவன் நடத்தும் நாடகங்கள் புரியும்’’ என்று சாபமிட்டார்.
அதனைக் கேட்ட எமதூதன், ‘‘ஐயா கருணைக் கடவுளே! நான் செய்தது தவறுதான். எப்போது நான் இங்கு திரும்ப வரமுடியும். எனது சாபவிமோசனத்தையும் கூறிவிடுங்கள் பிரபுவே’’ என்று மன்றாடி வேண்டினான்.
எமதர்மராசன், ‘‘தூதனே நீ தேவ ரகசியத்தைத் தெரிந்து கொண்டபின்னர் தானகவே எம்முடன் வந்து இணைந்துவிடுவாய். இது உறுதி’’ என்றார்.
அதற்கு எம தூதன், ‘‘நான் எப்படி தேவ ரசசியத்தை அறிந்து கொண்டேன் என்பதை அறிவது?’’ என்று கேட்டான்.
எமதர்மராசனோ, ‘‘தூதனே நீ மனிதர்கள் அஞ்சக் கூடிய கருப்பு நிறத்தில் பூலோகத்தில் பிறப்பாய். உனது உருவம் நீ தேவ ரகசியத்தை அறிய அறியச் சிறிது சிறிதாகப் பொன்னிறமாக மாறும் உனது உடல் பொன்னிறமாக முற்றிலும் மாறிவிட்டால் நீ தேவரகசியத்தைத் தெரிந்து கொண்டாய் என்று பொருள். ஆனால் நீ யாரென்ற ரகசியத்தைக் கூறிவிடாதே. நீ எமலோகம் திரும்பும்போது தெரிவித்தால் போதும். போய்வா’’ என்று அத்தூதனை விடுவித்தார்.
எமதூதன் எமதர்மனின் சாபப்படி பூலோகத்தில் கன்னங்கரேல் என்ற உருவத்துடன் வந்து விழுந்தான். அவனைப் பார்த்தாலே அனைவரும் அருவருத்து ஒதுக்கினார்கள். அப்போது அங்கு ஒரு தையல் கடைக்காரன் நடந்து வந்தான். அவனது கண்களில் கன்னங்கரேல் எனக் கிடந்த எமதூதனாகிய உருவம் தென்பட்டது. அவன் அந்த உருவத்தைத் தன்னோடு அழைத்து வந்தான்.
அவனோடு வந்த அந்த எமதூதன் தையல்காரனைப் பார்த்து, ‘‘எல்லோரும் என்னைக் கண்டு வெறுத்து ஒதுக்கும்போது, நீ மட்டும் ஏன் என்னை உன்னுடன் அழைத்துச் செல்கிறாய்?’’ என்று கேட்டான். அதற்கு அந்தத் தையல்காரன், ‘‘எனக்கு வேலைக்கு ஆள் தேவை. அதனால் நீ எங்கூட வந்து எனக்குக் கூடமாட ஒத்தாசையா இரு’’ அப்படீன்னு சொல்லி அழைச்சிக்கிட்டுப் போனான்.
தையல்காரன் தன்னோட வீட்டுக்குப் போயி தன்னோட மனைவியைப் பாத்து, ‘‘அம்மா ஏங்கூட ஒருத்தரு வந்துருக்காரு அவருக்கும் எனக்கும் சாப்பாடு போடுன்னு’’ சொன்னான். அவளும் தையல்காரனைத் திட்டிக் கொண்டே சாப்பாடு போட்டாள். அதைப் பார்த்த எமதூதன் மலங்க மலங்கத் தையல்காரனைப் பார்த்தான். அதைப் பார்த்த தையல்காரன் ‘‘தம்பி நீ எதைப் பத்தியும் கவலைப்படாதே. இவ எப்பவும் இப்படித்தான் பேசுவா. நீ எங்க வீட்டுல சாப்பிட்டுக்கிட்டு இங்கயே தங்கிக்கிட்டு இருந்துருன்னு’’ சொன்னான்.
எமதூதனும் சரின்னுட்டு தையல்காரன் வீட்டுலேயே தங்கிக்கிட்டான். தையல்காரன் அவனுக்கும் தையல் வேலையைக் கத்துக்கொடுத்தான். பத்து வருஷம் ஓடிப்போயிருச்சு. ஒருநாள் தையல்காரனோட எமதூதனும் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வந்தான். தையல்காரன் தன்னோட மனைவியைப் பார்த்து, ‘‘அம்மா எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாட்டப் போடுன்னு’’ சொன்னான்.
அதுக்கு அவ இதப் பாருய்யா. இன்னைக்குக் கொஞ்சந்தான் சாப்பாடு இருக்கு. வேணுமின்னா நீ மட்டும் சாப்பிட்டுப் போ. ஒனக்குப் போடுறதே தெண்டம். அதுல ஓங்கூட இன்னொருத்தனையும் கூட்டிக்கிட்டு அலையிற அவனுக்கும் சாப்பாடு போடச் சொல்ற. அவனுக்கெல்லாம் சாப்பாடு இல்லை. யாராவது ஒருத்தருக்குத்தான் சாப்பாடு இருக்குன்னு’’ கடுமையாச் சத்தம் போட்டா.
அதைக் கேட்ட தையல்காரன், ‘‘பராவாயில்லை. எனக்குச் சாப்பாடு வேண்டாம். நம்ம கடையில வேலை பாக்குறவனுக்கு மட்டும் சாப்பாட்டைப் போடுன்னு’’ சொல்லிட்டுக் கடைக்கு அந்த வேலைக்காரன வரச்சொல்லிட்டுப் போயிட்டான்.
அதப் பாத்த தையல்காரன் பொண்டாட்டி எமதூதனப் பாத்து, ‘‘தம்பி சாப்பிட வாப்பான்னு’’ கூப்பிட்டா.
அதைக் கேட்ட எமதூதன் அவ அன்பாக் கூப்பிட்டதைப் பாத்து லேசாச் சிரிச்சான்.
அவனோட உடம்பு கொஞ்சமாப் பொன்னிறமா மாறுச்சு.
பிறகு அவன் சாப்பிட்டுட்டுக் கடைக்குப் போனான். அங்க போயி கடையில துணிகளைத் தைச்சிக்கிட்டு இருந்தான். அப்பப் பாத்து ஒரு காருல பெரிய பணக்காரன் ஒருத்தன் வந்து இறங்கி தையக்காரனப் பார்த்து, ‘‘ஐயா எனக்கு இருபது வருஷம் தாங்குற மாதிரி சபாரி சட்டை தைச்சுக் கொடு. நான் அஞ்சு நாள் கழிச்சி வந்து வாங்கிக்கறேன்னு’’ சொல்லி அளவெல்லாம் கொடுத்துட்டுப் போயிட்டான்.
அதைக் கேட்ட எமதூதன் பணக்காரன் போனபிறகு சிரிச்சான். அவனது உடம்பு பொன்னிறமா கொஞ்சம் மாறுச்சு.
தையல்காரன் எமதூதனைப் பாத்து, ‘‘அப்பா சீக்கிரம் அஞ்சு நாளைக்குள்ளாற இந்தத் துணிய வச்சி அழகா அந்த ஆளுக்கு சபாரி சட்டை தச்சு வச்சிரு. அவரு வந்த உடனே கொடுக்கணும்னு’’ சொன்னான்.
அதைக் கேட்ட எமதூதன் மறுபடியும் கொஞ்சம் சிரிச்சான். அப்பவும் அவனோட உடம்பு பொன்னிறமா மாறுச்சு.
தையக்காரன் சபாரி தைக்கச் சொன்னதைக் கேட்காம நாலு நாள் எமதூதன் சும்மாவே இருந்தான். அஞ்சாம் நாள் காலையில பணக்காரன் கொடுத்த துணிய எடுத்து ஒரு தலையணைஉறையும் பெரிய மெத்தை உறையும் தைச்சு வச்சிருந்தான். அதைப் பாத்த தையல்கடைக்காரன், ‘‘என்னப்பா இப்படிப் பண்ணிட்ட அவன் சபாரி தைச்சுக் கொடுக்கச் சொன்னான். நீ என்னடான்னா தலையணை உறையும் மெத்தை உறையும் தைச்சு வச்சிருக்கே. இப்ப அந்தப் பணக்காரன் வந்து கேட்டா நான் எப்படி சபாரி சட்டையக் கொடுக்கிறதுன்னு’’ கேட்டான்.
அவன் கேட்டுக்கிட்டு இருக்கறபோதே காரு ஒண்ணு தையல்கடை முன்னால வந்து நின்னது. அதிலிருந்து பணக்காரனோட டிரைவர் இறங்கி ஓடி வந்து, ‘‘ஐயா சபாரி எல்லாம் தைச்சிடாதீங்க. ஒரு தலையணை உறையும் மெத்தை உறையும் தைச்சுத் தாங்க. எங்க ஐயா இறந்துட்டாருன்னு’’ சொன்னான்.
அதைக்கேட்ட எமதூதன் தான் தைச்சு வச்சிருந்த உறைகளை எடுத்துக் கொடுத்தான்.
அதைப் பாத்த தையக்கடைகாரனுக்குப் பெரிய ஆச்சரியமாப் போச்சு. இருந்தாலும், அதை வெளியில காட்டிக்காம இருந்தான்.
அப்படியே வருஷமும் ஓடிப்போயிருச்சு பதினைந்து வருஷம் ஆயிருச்சு. அப்ப அந்தத் தையக்கடைக்கு ஒரு பணக்காரவீட்டுப் பெண்மணி தன்னோட இரண்டு பையன்களை அழைச்சிக்கிட்டு வந்தா.
அதுல ஒரு பையனுக்கு கையி நொண்டியா இருந்துச்சு. அங்க வந்த பெண் தையக்கடைக்காரனப் பாத்து, ‘‘ஐயா எம்பையனுக்கு சரியா அளவெடுத்து நல்லா சட்டை தச்சுக் கொடுங்க’’ அப்படீன்னு சொன்னா.
அதைப் பாத்த எமதூதன் ஆச்சரியத்தோடு அந்தப் பையனப் பாத்தான். அவனுக்கு நல்லா நினைவு வந்துருச்சு. எமதர்மன் எடுக்கச் சொன்ன தாயோட உயிர எடுக்காம குழந்தை அனாதையா ஆயிரும்னு நெனச்சி வந்தானே அந்தக் குழந்தைதான் ஒரு பணக்கார வீட்டுப் பையனா இப்ப வந்து நிக்கிறான்னு கண்டுபிடிச்சிட்டான்.
அளவு கொடுத்துட்டு அந்தப் பெண் போன பிறகு அந்த எமதூதன் சிரிச்சான். அவனோட உடம்பு முழுவதும் பொன்னிறமா மாறிடுச்சு.
அதைப் பாத்த எமதூதன் தான் மேலோகம் செல்ல வேண்டிய நேரம் வந்துருச்சுன்னு நெனச்சிக்கிட்டு மேலோகம் போறதுக்காகக் கிளம்பினான்.
அவனோட தெய்வீகமான தோற்றத்தைக் கண்ட தையல்காரன், அவனப் பாத்து, ‘‘ஐயா நீ யாரு? எப்படி இந்தமாதிரி பொன்னிறமா மாறுன. நீ என்ன தெய்வலோகத்தச் சேர்ந்தவனா? எனக்கு ஒண்ணும் புரியல. நீயாருங்கறத எனக்குச் சொல்லு’’ அப்படீன்னு கேட்டான்.
அவனப் பாத்து எமதூதன், ‘‘ஐயா நான்தான் எமதூதன். எமனோட சாபத்தால பூமியில மனுசனா வந்து விழுந்தேன். தேவ ரகசியத்தைத் தெரிஞ்சிக்கிறதுக்காக இப்படிப் பதினஞ்சு வருஷமா ஒங்ககூட இருந்தேன். இப்ப நான் தேவ ரகசியத்தைத் தெரிஞ்சிக்கிட்டேன். அதனால என்னோட உடம்பு தங்க நிறமா மாறிடுச்சு. நாங் கிளம்புறேன். நீ என்னை ஆதரிச்சதற்கு ரெம்ப நன்றின்னு’’ சொல்லிட்டுக் கிளம்பப் போனான்.
அப்ப அந்த எமதூதனப் பார்த்து, ‘‘ஐயா அந்தத் தேவ ரகசியத்தை எப்படித் தெரிஞ்சிக்கிட்டன்னு எனக்குச் சொல்லிட்டுப் போங்கன்னு’’ கேட்டான்.
அதைக்கேட்ட எமதூதன், ‘‘முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா...? அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது.
பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வாவா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார்.
அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும், ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்" என்று தெரிந்து கொண்டேன்.
இது போய்விட்டு அது வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன். இதுதான் முதல் தேவரகசியம்.
மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டு, நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னானே... "எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று, அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை. அவன் இறந்த அந்த நேரத்தில் துணியைக் கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்" இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம், இருநூறு வருஷம் கொட்டகை போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம். நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை... அதுவே தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும், மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா? அதுதான் இரண்டாவது ரகசியம்...
மனிதர்களிடமே பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால் எப்படி வாழ்வது என்று தெரியாததினால் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள். பத்து வருடம் கழித்து ஒரு பணக்காரப் பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா...? அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...? அதுதான் நான் இதற்கு அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை. நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்த குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்வதற்கு, இதற்குக் கொஞ்சம் தளர்வாகத் தைக்கவேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான். இது எனக்குத் தெரிந்த போது, இரண்டாவது முறை சிரித்தேன். ஒரு எமதூதன் ஆகிய எனக்கேப் பச்சாதாபம் இருக்கிறபோது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்குத் தெரிந்தபோது மூன்றாவது தேவ ரகசியம் புரிந்தது. கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான் என்று நான் புரிந்து கொண்டேன்.
அதாவது ஏழையாக இருப்பதும், பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது. இரண்டாவது, எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார். மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும், அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. மூன்றாவது எந்த நேரத்திலும் சாவு வரலாம். இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அஞ்ஞானம்தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம். இவைதான் அந்த மூன்று தேவ ரகசியங்கள். இந்தத் தேவ ரகசியங்களை அறிந்து கொள்ளாமல் ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்க நேர்ந்ததால்தான் நான் பூமியில் வந்து வாழ நேர்ந்தது. இப்போது இறைவனுடைய திருவுளத்தைப் புரிந்துணர்ந்து கொண்டேன். நான் வருகிறேன். நீ நலமோடும் வளமோடும் இருப்பாயாக’’ என்று வாழ்த்திவிட்டு அவன் மேலுலகம் சென்றான்.
இறைவன் யாருக்கு எப்போது எதைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அதை உடனடியாகக் கொடுத்துடுவான்.