நமக்குத் தேசத் தந்தை, அறிவியலின் தந்தை பற்றித் தெரியும் பாவத்தின் தந்தை பற்றித் தெரியுமா? பாவத்தின் தந்தை குறித்த கதை ஒன்று இந்த வட்டாரத்தில் வழங்குகின்றது.
ஒரு ராஜாவுக்கு அரசவையில இருக்கின்ற போது திடீர்னு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அவர் பக்கத்தில் இருந்த தன்னோட அமைச்சரைப் பார்த்து, ‘‘அமைச்சரே பாவத்தின் தந்தை யார்?’’ ன்னு கேட்டார்.
அதைக் கேட்ட அமைச்சர் ஆடிப்போயிட்டார். மூத்த அமைச்சரான அவர் மற்ற அமைச்சர்களைப் பார்த்து, அரசர் கேட்ட கேள்விக்கு என்ன பதில்னு கேட்டார்.
அங்க இருந்த அமைச்சர்களுக்கு இதற்குப் பதில் தெரியலை. மௌனமா அமைதியா இருந்தாங்க. பதில் எதுவும் சொல்லலை. அரசருக்குக் கடுமையான கோபம்.
அவரு மூத்த அமைச்சரப் பார்த்து, ‘‘இங்க பாருங்க அமைச்சரே பாவத்தின் தந்தை யாரு?ன்னு எனக்குப் பதில் தேவை. அதை நாளைக்குள் நீங்க சொல்லிடணும். அப்படிச் சொன்னா உங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகத் தருவேன். அப்படீன்னு சொல்லிட்டு அவையை விட்டுட்டு வெளியப் போயிட்டாரு.
மூத்த அமைச்சருக்கு ஒண்ணும் புரியலை. மற்ற அமைச்சர்கள் எல்லாரும் மௌனமாத் தலையைக் குனிஞ்சவாறே போயிட்டாங்க.
மூத்த அமைச்சர் மனசுல குழப்பத்தோட வீட்டுக்கு வந்தாரு. அவரால வீட்டுல இருக்க முடியல. பேசாம இந்த வினாவுக்கு யாருக்கிட்டயாவது விடை தெரியுமான்னு கேட்போம். அப்படீன்னு விட்டை விட்டு வெளியில வந்து ஒவ்வொரு இடமா யாராவது இந்த கேள்விக்குப் பதில் சொல்லறவங்க இருக்காங்களான்னு பார்த்தாரு. யாரும் இல்லை.
தெருவுல அமைச்சர் வெகுநேரம் நின்னுகிட்டு இருந்தாரு. நேரம் போயிக்கிட்டே இருந்தது. அவருக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல. அப்போது தெருவழியா அந்த நகரத்துல இருந்த தாசி (விலைமகள்) ஒருத்தி வந்தாள். அவள் தெருவுல அமைச்சர் நிற்பதைப் பார்த்துட்டு, “ஐயா எதுக்காக இங்க நின்னுகிட்டு இருக்குறீங்க?”ன்னு கேட்டா.
அதுக்கு அவர், “பாவத்தின் தந்தை யாரு? அப்படீங்கற கேள்விக்குப் பதில் தெரியணும். யாராலயும் இந்தக் கேள்விக்குப் பதிலைச் சொல்ல முடியல. அதுதான் யோசிச்சிக்கிட்டு நிக்குறேன்” அப்படீன்னாரு.
அதக் கேட்ட தாசி, “நான் அந்தக் கேள்விக்குப் பதிலைச் சொல்றேன். நான் குடியிருக்கிற தெருவுல வந்து நின்னுங்க’’ன்னு சொன்னாள்.
அமைச்சருக்குத் தயக்கம். தாசி குடியிருக்கிற தெருவுல போயி நின்னா கேவலமாப் பார்ப்பாங்களே என்ன செய்யறதுன்னு யோசிச்சாரு. அவரோட தயக்கத்தைப் பார்த்த தாசி, ‘‘ஐயா நீங்க தயங்க வேண்டாம். நான் ஒங்களுக்கு ஐந்நூறு பொற்காசுகள் தர்றேன். ஒங்கள நான் குடியிருக்கிற தெருவுலதான நிக்கச் சொல்றேன். எதுக்கு இதுக்காக நீங்க தயங்குறீங்க”ன்னு கேட்டாள்.
அவள் கூறியதைக் கேட்ட அமைச்சர், “என்ன தெருவுலதான வந்து நிக்கச் சொல்றா, அதோட மட்டுமில்லாம ஐந்நூறு பொற்காசு வேற தர்றேன்னு சொல்றா. ஏற்கனவே அரசர் ஆயிரம் பொற்காசு தர்றேன்னு சொல்லிருக்காரு. மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு பொற்காசு கிடைக்கறத ஏன் விடணும்னு நெனச்சிக்கிட்டு அந்தத் தாசி குடியிருக்கிற தெருவுல போயி நின்னாரு.
அந்தத் தாசி பெரிய பணக்காரி. அவள அரசருக்கும் அந்த நகரத்தில இருக்குறவங்களுக்கும் நல்லாத் தெரியும். அமைச்சர் தான் குடியிருக்கிற தெருவுல நிக்கறதைப் பாத்த அந்தத் தாசி, ‘‘ஐயா என்னோட வீட்டு வாசல்ல வந்து நின்னா நான் ஒங்களோட கேள்விக்குப் பதிலைச் சொல்றேன்”னு சொன்னா.
அமைச்சர் யோசிச்சாரு. தாசியோட வீட்டு வாசல்ல போயி நின்னா நம்மலப் பத்தி இந்த மக்கள் என்ன நெனப்பாங்கன்னு மனசுக்குள்ள மறுகினாரு. அவரோட மனநிலையக் கவனிச்ச அந்தத் தாசி, “ஐயா நான் என்ன உங்க என்னோட வாசல்லதான நிக்கச் சொல்றேன். வேற ஒண்ணும் சொல்லலைல. நீங்க என்னோட வாசல்ல வந்து நின்னா ஒங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் தர்றேன். வாங்க”ன்னு சொன்னாள்.
அமைச்சருக்கு வியப்பு. நமக்குச் சும்மாவே ஆயிரம் பொற்காசுகள் கிடைக்குதே. அதையேன் வேண்டாம்னு சொல்லணும்னு நினைச்சிக்கிட்டு தாசி வீட்டு வாசல்ல போயி நின்னாரு.
அதைப் பார்த்த தாசி, “ஐயா நீங்க என்னோட படுக்கை அறைக்குள்ளாற வந்து நின்னா ஒங்களோட கேள்விக்குப் பதிலச் சொல்றேன்”னு சொன்னாள்.
அமைச்சர் தயங்கினாரு. அதைப் பார்த்த தாசி, “ஐயா படுக்கை அறைக்குள்ளாறதான வரச்சொன்னேன். வேற எதுவும் சொல்லலைல. நீங்க அப்படி வந்து நின்னா ஒங்களுக்கு ஆயிரத்தைந்நூறு பொற்காசுகள் தர்றேன். வாங்க”ன்னு சொன்னாள்.
அமைச்சரோட மனசுக்குள்ள மகிழ்ச்சி. அட அரசர் தர்ற ஆயிரத்தோட இதையும் சேர்த்தா மொத்தம் இரண்டாயிரத்து ஐந்நூறு பொற்காசுகள் கிடைக்குதேன்னு நினைச்சிக்கிட்டு தாசியோட படுக்கை அறைக்குள்ளாறப் போயி நின்னாரு.
அதைப் பார்த்த தாசி, “அமைச்சரே நீங்க இந்தப் படுக்கையில வந்து படுத்து என்னோட மடியில தலைய வச்சுப் படுத்தீங்கன்னா ஒங்களோட கேள்விக்குப் பதிலச் சொல்றேன்”னா, அதைக் கேட்ட அமைச்சருக்குத் தூக்கி வாரிப் போட்டது.
அமைச்சரோட நிலையைக் கவனித்த தாசி, “ஐயா என்னோட மடியிலதான் தலை வச்சிப் படுக்கச் சொன்னேன். வேற எதுவும் செய்யச் சொல்லலைல. நீங்க தலைவச்சிப் படுத்தீங்கன்னா ஒங்க கேள்விக்குரிய பதிலயும் சொல்வேன். ஒங்களுக்கு இரண்டாயிரம் பொற்காசுகளையும் தருவேன்”னு சொன்னாள்.
அதைக் கேட்ட அமைச்சருக்கு மனசுக்குள்ள மத்தாப்பு மாதிரி மகிழ்ச்சி. அரசர் தர்ற ஆயிரத்தோட இதையும் சேர்த்தா நமக்கு மூவாயிரம் பொற்காசுகள் கிடைக்குதேன்னு நினைச்சிக்கிட்டு தாசியோட மடியில தலைவச்சிப் படுத்தாரு.
அவரு படுத்த உடனே கேள்விக்குரிய பதிலைக் கேட்டாரு. அவரைப் பார்த்த தாசி, “ஐயா பாவத்தின் தந்தை பேராசை”தான்னு பதிலைச் சொன்னாள்.
அமைச்சர் அவளப்பாத்து, “அது எப்படி?”ன்னு கேட்டாரு.
அதுக்கு அவள், “ஐயா நான் ஒங்களுக்குப் பொற்காசுகளத் தர்றேன்னு சொன்ன உடனேயே எல்லாத்தையும் மறந்துட்டு என்னோட படுக்கையறைக்கே வந்துட்டீங்க. ஒங்கள இங்க வரவச்சது நான் தற்றேன்னு சொன்ன பொற்காசுகள்தான். அந்தக் காசுகள் மேல உங்களுக்கு ஏற்பட்ட பேராசையாலதான் நீங்க என்னோட மடியில தலைவச்சிப் படுத்தீங்க”ன்னு சொன்னாள்.
அதைக் கேட்ட அமைச்சருக்கு வெட்கமாப் போயிருச்சு.
நாம இந்த நாட்டோட அமைச்சருங்கறதை விட, இந்தத் தாசி கொடுக்கறேன்னு சொன்ன இரண்டாயிரம் பொற்காசுகளுக்காகத்தானே நாம இவ சொன்னதையெல்லாம் செஞ்சோம்னு நெனச்சிக்கிட்டு இந்த உண்மைய தனக்கு மனசுல பதியும்படி சொன்ன தாசிக்கு நன்றியச் சொல்லிட்டு வந்தாரு.
பேராசைதான் நம்மை தவறான பாதையில போக வைக்குது. அதனால பாவம் சேருது. ஆகப் பாவத்தின் தந்தை பேராசை. பேராசைப் படக்கூடாது என்பதை இந்தக் கதை நமக்குச் சொல்லுது. இந்தக் கதை இப்பவும் இந்த வட்டாரத்துல வழங்கி வருது.