ஒரு ஊருல ஒரு அப்பா அம்மா இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு பையன் இருந்தான். அவன் யாருக்கும் அடங்காம இருந்தான். அப்பா அம்மா பேச்சைக் கேக்காம இருந்தான். பொய்யி நெறையப் பேசுவான். தங்களோட மகன் இப்படி இருக்கறானேன்னு ரொம்பக் கவலைப் பட்டாங்க அவங்க. இந்தப் பய தெனந்தோறும் எங்கயாவது போயி வம்பிழுத்துக்கிட்டு வந்து நிப்பான். இவனால் இவங்களுக்கு ரெம்பத் தொந்தராவப் போச்சு. அவங்களும் சொல்லிச் சொல்லிப் பாத்தாங்க. அந்தக் கவலையிலயே அவங்களுக்கு முடியாமப் போயிருச்சு.
ஒரு நா அவங்க இந்த ஒலகத்த விட்டே போயிட்டாங்க. இவன் அனாதையாயிட்டான். அவனோட அப்பா அம்மா இல்லாத நிலையிலும் அவன் திருந்தல. அவன் எதப்பத்தியும் கவலப் படல. அவனால அந்த ஊருல உள்ளவங்களுக்குப் பெரிய தொந்தரவா இருந்துச்சு. அவன என்ன பண்றதுன்னு அவங்களுக்கு ஒண்ணுமே புரியல.
ஒரு நா அந்த ஊருக்காரவுக எல்லாரும் ஒண்ணு கூடுனாங்க. ஒவ்வொரு நாளும் இந்தப் பயலோட சேட்டை அதிகமாப் போச்சு... அவன என்ன செய்யிறது. அவன இந்த ஊரவிட்டே விரட்டணும். ஏதாவது யோசனை சொல்லுங்க. அப்படீன்னு ஒவ்வொருத்தரும் பேசுனாங்க.
ஆளுக்கு ஒரு யோசனையாச் சொன்னாங்க. அதெல்லாம் ஒத்துவர்ற மாதிரி தெரியல. ஊருத் தலைவரு ஒரு யோசனை சொன்னாரு. இவன நம்ம ஊருக்கு வெளியில ஓடுற ஆத்துல கையக் காலக் கட்டிப் போட்டுருவோம். தண்ணியோட தண்ணியா இவன் ஒழிஞ்சி போகட்டும்ன்னு யோசனை சொன்னாரு.
அவரு சொல்றது நல்லதா இருந்ததால அதை அத்தனை பேரும் ஏத்துக்கிட்டாங்க. அவங்க எல்லாருமாச் சேந்து அந்தப் பயலப் புடிச்சு கையக் காலக் கட்டி ஆத்துக்குள்ளாறக் கொண்டுபோயிப் போட்டுட்டு வந்துட்டாங்க. ஆத்துத் தண்ணியில அடிச்சிக்கிட்டுப் போன அந்தப் பய, “ஒரு ஆளு சோறு திம்பேன், பத்தாளு வேலை பாப்பேன். என்னய யாராவது காப்பாத்துங்க... ஒரு ஆளு சோறு திம்பேன்... பத்தாளு வேலைபாப்பேன்...” அப்படீன்னு சொல்லிக்கிட்டே மிதந்துக்கிட்டுப் போனான்.
ஆறு பல ஊரத்தாண்டி போயிக்கிட்டிருந்துச்சு. அத்துல இந்தப் பய போயிக்கிட்டு இருந்தான். அந்த ஆறு வயக்காட்டு வழியப் போயிக்கிட்டிருந்துச்சு. அப்ப ஆத்துப்பக்கம் வந்த ஒரு வெவசாயி அவன் சொல்றதக் கேட்டுட்டு அடாடா ஒரு ஆளு சாப்பாட்டச் சாப்புட்டு பத்தாளு வேலையப் பாப்பானாம்ல... பராவாயில்லையே... நாம இவனக் காப்பாத்தி வேலைக்கு வச்சிக்கிட்டா நமக்கு லாபமில்லன்னு நினைச்சி அவனக் காப்பாத்தித் தன்னோட வாழைத் தோட்டத்துக்கு அழைச்சி வந்தான் அந்த வெவசாயி.
தன்னோட தோட்டத்துக்குப் போனவுடனே அவனுக்குச் சோத்தப் போட்டுச் சாப்புடச் சொல்லிட்டு, “ஏம்பா ஒம்பேரு என்னப்பா” அப்படீன்னு கேட்டாரு. அவனும், “என்னோட பேரு தோலு இருக்கச் சொள முழுங்கி” அப்படீன்னு சொன்னான்.
வாழத்தோட்டக்காரனுக்கு ஆச்சரியமாப் போச்சு. அந்தப் பயலப் பார்த்துத் தோட்டக்காரன், “ஏம்பா ஒனக்கு அப்பா அம்மா யாருமில்லயா?”ன்னு கேட்டாரு. அவன், “நானு யாருமில்லாத அனாதைங்க. நீங்க தர்ற சோத்தத் தின்னுட்டு இங்க உள்ள வேலையப் பாத்துக்குறேன்” அப்படீன்னு சொன்னான்.
அதுக்குத் தோட்டக்காரன், “அப்பா தோலு இருக்கச் சொளமுழுங்கி... நீ கவலப்படாத... நானு ஒன்ன நல்லாப் பாத்துக்கறேன். நீயி இந்த வாழை மரங்களுக்குத் தண்ணியப் பாச்சிட்டுப் பத்திரமாப் பாத்துக்க...” அப்படீன்னு சொன்னான். அந்தப் பயலும் சரின்னு சொல்லிட்டு அங்கயே வேலைபாத்துக்கிட்டு இருந்தான்.
வாழை மரமெல்லாம் நல்லாப் பழுத்துத் தொங்கிச்சி... தோட்டக்காரன் தோலுருக்கச் சொளமுழுங்கியப் பாத்து, “டேய் தம்பி நான் வீட்டுக்குப் போயி ஒனக்குச் சோறு வாங்கிட்டு வர்றேன்... யாரும் களவாண்டு போகாமா வாழைத் தோட்டத்தைப் பத்திரமாப் பாத்துக்க...” அப்படீன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டான்.
இந்தப் பயலால பழுத்த பழங்களைப் பாத்துக்கிட்டுச் சும்மா இருக்க முடியல. பழத்தைத் திங்கணும்போல அவனுக்கு இருந்துச்சு. அவன் ஒடனே எல்லாப் பழத்தையும் தின்னுட்டு தோலுக்குள்ளாற களிமண்ண அமுக்கி வச்சிட்டுப் பேசாம நல்லவன் மாதிரி ஒக்காந்து இருந்தான்.
கொஞ்ச நேரம் கழிச்சி வந்த தோட்டக்காரன் அவனுக்குச் சாப்பாட்டக் கொடுத்துட்டு வாழைப் பழத்தைச் சாப்பிட்டுப் பாப்போம்னு போயிப் ஒரு பழத்தைப் பிச்சிச் சாப்பிடப்போனான். ஒரே சவதியா இருந்துச்சு. அப்படியே எல்லாப் பழத்தையும் பிச்சிப் பிச்சிப் பாத்தான் எல்லாப் பழங்களும் களிமண்ணா இருந்துச்சு... தோட்டத்துக்காரனுக்குக் கோபங்கோபமா வந்துச்சு.
கோபத்தோடபோயி அந்தப் பயல நலு அறைவிட்டு, “ஏண்டா இப்படிப் பண்ணினே... ஒன்னய எப்படிப் பாத்துக்கிட்டேன். இப்படிப் பண்ணிட்டியே...” அப்படீன்னு அவனப் பார்த்துக் கேட்டான். அதுக்கு அந்தப் பய, “நான்தான் அப்போதே சொல்லிட்டனே... எம்பேரத் தோலு இருக்கச் சொள முழுங்கி அப்படீன்னு... தோலு மட்டும் இருக்குல்ல சொளய, பழத்தை நாஞ்சாப்புட்டுட்டேன்... நாந்தான் உண்மையச் சொல்லிட்டேன்... அப்பறம் ஏன் நீங்க என்ன அடிக்கறீங்க” அப்படீன்னு திரும்பக் கேட்டான்.
அந்தத் தோட்டக்காரனுக்கு ஒண்ணும் புரியல. இந்தப் பயல எங்கிருந்து வந்தானோ அங்கேயே விட்டுடணும் அப்படீனு நெனச்சி ஒடனே அவனப் புடுச்சு காலக் கையக் கட்டி ஆத்துலயே விட்டுட்டான்.
அந்தப் பயலும் எதற்கும் கவலைப்படாமல் “ஒரு ஆளு சோறு திம்பேன். பத்தாளு வேலைபாப்பேன்... ஒரு ஆளு சோறுதிம்பேன் பத்தாளு வேலை பார்ப்பேன்...”அப்படீன்னு சொல்லிக்கிட்டே ஆத்தோட போயிககிட்டே இருந்தான். வெகுதூரம் அவன் ஆத்தோடவே போயிக்கிட்டிருந்தான். அப்பப் பாத்து நெல்லு வயலுக்குச் சொந்தக்காரன் ஒருவன் வந்து அவனக் காப்பாத்தி கூட்டிக்கிட்டுப் போனான்.
அப்படிக் கூட்டீக்கிட்டுப் போனவன். அந்தப் பயலுக்கிட்ட ஓம்பேரு என்னன்னு! கேட்டான். அதுக்கு, “ஏம்பேரு போரச் சுத்திப் பொறிப் பொறுக்கி” அப்படீன்னு சொன்னான். அந்த நெல்லு வயலுக்காரன் ரொம்ப சந்தோஷப்பட்டான். வேற எதையும் கேட்டா அவன் ஓடிப் போயிருவான். அப்படீன்னு நெனச்சிக்கிட்டு வேற எதைப் பத்தியும் கேக்கலை.
அவன வேலைக்கு வச்சிக்கிட்டான். இந்தப் பயலும் நல்லா வேலை பாத்தான். கொஞ்சநாளு அங்க வேலைபாத்தான். நெல் விளஞ்சு அறுவடை செய்யப்பட்டது. வைக்கோற்போரில் நெல்லைப் போட்டு மூடி போரா மேஞ்சு வச்சாங்க... அந்த வைக்கப்போரப் பத்திரமாப் பாத்துக்கச் சொல்லிட்டு வீட்டுக்குப் போயி சாப்பாடு வாங்கிட்டு வந்துர்றேன்னுட்டுப் போனான். கொஞ்சம் நேரமாச்சு. வயல்காரன் வரத் தாமதமாப் போச்சு. இவன் தீப்பெட்டிய எடுத்து வைக்கோற் போரில் தீயைப் பற்றவைத்துவிட்டு பொறிந்து விழுகின்ற நெற்பொறியைத் தின்றுகொண்டிருந்தான். திரும்பி வந்த வயல்காரன், தன்னோட வைக்கோற்போர் தீப்பற்றி எரிவதைப் பார்த்து அந்தப் பயலப் பார்த்து, “என்னடா இப்படிப் பண்ணிட்டேன்னு” கோபமாக் கேட்டான்.
அதுக்கு அந்தப் பய, “நான் பொய்சொல்லயே... உண்மையத்தான சொன்னேன். ஏம்பேரு போரச் சுத்திப் பொறிப்பொறுக்கின்னு... பொறி திங்கற ஆசை வந்துச்சு அதனால போருல தீய வச்சி நெல்லுப் பொறியப் சுத்திச் சுத்தி வந்து பொறுக்கித் தின்னுக்கிட்டுருக்கேன்... இந்தாங்க ஒங்களுக்கும் தர்றேன்... நீங்களும் தின்னுங்கன்னு” கொடுத்தான்.
வயக்காரனுக்குக் கோபமான கோபம் அவன நல்லா ஒதைச்சு கையையும் காலையும் கட்டி மறுபடியும் ஆத்துக்குள்ளாற விட்டுட்டான். அந்தப் பயலும் மறுபடியும், “ஒரு ஆளு சோறுதிம்பேன். பத்தாளு வேலைபாப்பேன்”னு சொல்லிக்கிட்டே ஆத்துத் தண்ணியில போயிக்கிட்டிருந்தான்.
அப்படிப் போயிக்கிட்டு இருந்தப்ப... ரெண்டு மூணு ஊரு தள்ளி உள்ள ஊருக்கு வெளியில ஆத்துல போயிக்கிட்டிருந்தபோது... அங்க ஊராளுக துணியத் தொவச்சிக்கிட்டு இருந்த ஒருத்தன் அந்தப் பய சொல்லறதக் கேட்டு, “அட ஒருஆளு சாப்பாட்டத் தானே சாப்புடப் போறான்... ஆனா பத்தாளு செய்யற வேலையச் செய்யிறான்ல... அவனக் காப்பாத்திக் கொண்டுவந்தா பத்தாளு செய்யிற வேலைய செய்வான்... நமக்கும் காசு கெடைச்சதுமாதிரி இருக்குமே” அப்படீன்னு நெனச்சு அவன் பொண்டாட்டியும் சொன்னதால ஆத்துல நீந்திப் போயிக் காப்பாத்துனான்.
அவனப் பார்த்துப் பரிதாபப்பட்ட துணி வெளுக்கிறவன் அவனுக்குச் சோத்தப் போட்டுச் சாப்பிடச் சொன்னான். நல்லாச் சாப்பிட்ட அந்தப் பய அந்த துணிவெளுக்கிறவன் சொன்ன வேலையெல்லாம் நல்லா மாங்கு மாங்குன்னு செஞ்சான். அவனுக்கு அந்தப் பயல ரொம்பப் புடிச்சுப்போச்சு. அவன் பொண்டாட்டிக்கும் அவன் வேலை செய்யறதப் பாத்துட்டு தன்னோட புள்ள மாதிரி அவனப் பாத்துக்கிட்டா.
அந்தப் பயக்கிட்ட துணிவெளுக்கிறவன்,”ஏப்பா ஒன்னோட பேரு என்னப்பா?” அப்படீன்னு கேட்டான். அதுக்கு அந்தப் பய, ”என்னோட பேரு வந்தான்” என்று சொன்னான்.
துணிவெளுக்கிறவன் பொண்டாட்டி அவங்கிட்ட வந்து,”ஏம்பா ஓம்பேரு என்னப்பா..?”ன்னு கேட்டா. அவன் அவளிடம், “போனான்” என்று சொன்னான். இப்படிக் கொஞ்ச நாளு அந்தப் பய அங்கேயே வேலை செஞ்சிக்கிட்டு இருந்தான். ஒருநாளு அந்த ஊருல உள்ளவங்களோட பட்டுச் சேலை, பட்டு வேட்டி, எல்லாத்தையும் வாங்கி தொவைக்கிறதுக்காக துணி வெளுக்கிறவனும் அவன் பொண்டாட்டியும் அந்தப் பயலக் கூட்டிக்கிட்டு ஆத்துக்கு வந்தாங்க.
மூணுபேருஞ் சேர்ந்து தொவைச்சாங்க... துணியெல்லாம் அலசிக் காயப்போட்டாங்க... அன்னக்கிப் பாத்து வீட்டுல சமைக்கல... அந்தப் பய, “துணிக காஞ்ச உடனே நான் எடுத்துக்கிட்டு வந்துடறேன்... நீங்க ரெண்டுபேரும் வீட்டுக்குப் போங்கன்னு” சொன்னான். “சரிப்பா பத்திரமா எல்லாத்தையும் கொண்டுவந்து சேரு... நாங்கபோயி சமைச்சு வைக்கிறோம்னு சொல்லிட்டு, துணிவெளுக்கிறவனும் அவன் பொண்டாட்டியும் வீட்டுக்குப் போயிட்டாங்க.
துணியெல்லாம் காஞ்ச உடனே அந்தப் பய மூட்டயக் கட்டிக்கிட்டு அந்த இடத்தவிட்டு ஓடிப்போயிட்டான். நேரம் ஆக ஆக அந்தப் பயலக் காணோம்னு சொல்லிட்டு துணிவெளுக்கிறவன் மட்டும் ஆத்துக்கு வந்து தேடிப் பாத்த்தான். அவனக் காணோம்... பக்கத்துல உள்ளவங்ககிட்டப் போயி விசாரிச்சான்... அவங்க “அவன் அப்பயே போயிட்டான்”னு சொன்னாங்க. சரி அவன் வேற வழியா வீட்டுக்குத்தான் போயிட்டாம் போலன்னு நெனச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்து தன்னோட பொண்டாட்டிக்கிட்டக் கேட்டான்.
அவன் இங்க வரலியேன்னு அவ சொன்னா... அப்பத்தான் அந்தப் பய துணிகளக் களவாண்டுக்கிட்டு ஓடிப்போயிட்டான்னு அவங்களுக்குத் தெரிஞ்சிச்சி. புருஷங்காரன் ஒருபக்கட்டுப் போயி, “டே வந்தான்... வந்தான்” அப்படீன்னு கத்திக் கூப்புட்டான். பொண்டாட்டிகாரி, “டேய் போனான்... போனான்”னு கத்தினாள். இப்படி புருஷன் வந்தான்னும், பொண்டாட்டி போனான்னும் கத்துனாங்க. புருஷங்கானுக்குக் கோபம் வந்திருச்சு, “ஏண்டி நான் அவன வரச்சொல்றேன் நீ போகச் சொல்ற, உனக்கு என்ன திமிரான்னு” போட்டு அடிச்சான். அவ அடிபொறுக்க மாட்டாம “ஐயோ அடிக்காதீக... ஐயோ... போனான்... போனான்னு” கத்துனா. புருஷங்காரனுக்கு, “என்னடி நா வந்தான்னா நீ போனான்னு சொல்ற... வீட்டுக்கு வந்தான் வந்தானான்னு கேட்டு அடிஅடின்னு அடிச்சான். அவ,”ஐயோ போனான்... போனான்...”னு சொல்லி அழுதா. அப்பறந்தான் அவங்க ரெண்டு பேரும் அந்தப் பய தங்கள நல்லா ஏமாத்திப்புட்டான்னு உணந்தாங்க... உணர்ந்து என்ன பண்ண... ஏமாந்தது ஏமாந்ததுதான...!
இன்னக்கி வரைக்கும் இந்தப் பக்கத்துல இந்தக் கதயச் சொல்லிச் சொல்லி இன்னமும் சிரிப்பாங்க...