ஒரு சமயம் கடவுள் எல்லா உயிர்களையும் படைச்சுட்டு அந்தந்த உயிர்களுக்குரிய வரத்தையும் வழங்கிக்கிட்டு இருந்தாரு. கடவுளாள படைக்கப்பட்ட உயிர்கள் அத்தனையும் வரிசையில நின்னு தங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேட்டு வாங்கிக்கிட்டு வந்ததுக. ஒவ்வொன்னும் அததுகளுக்குத் தேவையான வரத்தைக் கேட்டு வாங்கிக்கிட்டு வந்துச்சுங்க. இறைவனுக்கிட்ட எறும்புங்க எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து போயி வரம் வாங்குறதுக்காக நின்னதுங்க. கடவுளும் “ஒங்களுக்கு என்ன வரம் வேணும்?” அப்படீன்னு கேட்டார்.
அதுக்கு எறும்புக, “சாமி எங்களுக்கு எதக் கேக்கணும்னு தெரியாது. அதனால நீங்களாப் பார்த்து எதாவது ஒரு வரத்தக் கொடுங்க. நீங்க கொடுக்குற வரத்த வச்சிக்கிட்டு நாங்க பொழச்சிக்கிறோம்” அப்படீன்னு சொன்னதுங்க.
கடவுளு யோசிச்சிப் பாத்துட்டு, “ஒங்களுக்கு வாயில விஷத்தக் கொடுக்குறேன். ஒங்கள யாராவது தேவையில்லாம தொந்தரவு பண்ணுனா நீங்க கடிங்க. ஒங்க விஷம் அவங்களோட ஒடம்புக்குள்ளாறப் போயி அவங்க இறந்துடுவாங்க... போயிட்டு வாங்க”ன்னு சொல்லி அனுப்புனாரு.
எறும்புக எல்லாம் ரொம்பச் சந்தோஷமா ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டமா வந்துச்சுங்க. வழியில ஒரு நல்லபாம்பு இதைப் பார்த்துச்சு. என்னடா, எறும்புக எல்லாம் ஆடிப்பாடிக்கிட்டு வருதுகளே. என்ன விசயம்னு தெரியலியேன்னு யோசிச்சு.
இதுக்குக் காரணம் என்னன்னு இந்த எறும்புகக் கிட்டயே கேட்டுருவோம்னு நெனச்சு, “என்ன எறும்புத் தம்பிகளா! எங்க போயிட்டு வர்றீங்க... ரொம்பச் சந்தோஷமா இருக்கீக போலருக்கு? என்ன விசயம்?” அப்படீன்னு கேட்டுச்சு.
அதுக்கு எறும்புக, “அண்ணே, எங்களுக்குக் கடவுளு நல்ல வரமாக் கொடுத்துருக்காரு... அந்தச் சந்தோஷத்துலதான் ஆடிப்பாடிக்கிட்டுப் போயிக்கிட்டு இருக்கோம்” அப்படீன்னதுங்க.
நல்லபாம்பும் அதோடவிடாம, “ஆமா அப்படி என்னதான் வரங்கொடுத்தாரு? எல்லாருக்கும் கொடுத்த மாதிரிதானேன்னு” கேட்டுச்சு.
எறும்புக, “அண்ணே எங்களுக்கு வாயில விசத்த வச்சிட்டாரு கடவுளு. அதுமட்டுமில்லேண்ணே! எங்களுக்கு யாராவது தொந்தரவு கொடுத்தாங்கன்னு வையிங்க... நாங்க கடிச்ச ஒடனே அவங்க செத்துடுவாங்களாம்... இதுமாதிரி யாருக்குமே கடவுளு வரங்கொடுக்கலே... எங்களுக்கு மட்டுந்தான் இந்த வரத்தை கொடுத்துருக்காரு...”அப்படீன்னு பெருமையோட சொன்னதுங்க.
நல்ல பாம்பு அதிர்ச்சியாயிடிச்சு... அடேயப்பா! இந்த எறும்புக சும்மா இருக்காது. அதுகபக்கத்துல தெரியாத்தனமாப் போனாக் கூடக் தொந்தரவு பண்றாங்கன்னு நெனச்சிக் கூட்டங்கூட்டமா வந்து கடிக்குங்க... இதுகபாட்டுக்கு எல்லாரையும் போயிக் கடிச்சுச்சுன்னா இந்த ஒலகந் தாங்காதே! என்ன செய்யிறதுன்னு யோசிச்சி, அந்த எறும்புகளத் திசை திருப்பணுமேன்னு நெனச்சு எறும்புகளப் பாத்து, “தம்பிகளா ஒங்கள கடவுளு நல்லா ஏமாத்திப்புட்டாரு... நீங்களும் அதக் கேட்டுக்கிட்டு வந்துட்டிங்க” என்று சொன்னவுடனே, எறும்புகளுக்கு ஒண்ணுமே புரியல.
இந்த நல்ல பாம்பு என்ன சொல்லுது. இது நல்ல பாம்பு அதனால நமக்கு நல்லதத்தான் சொல்லும் அப்படின்னு அந்த எறும்புக எல்லாம் மனசுக்குள்ளாற நெனச்சுக்கிட்டு பாம்பப் பாத்து, “அது எப்படி எங்கள ஆண்டவன் ஏமாத்திப்புட்டதாகச் சொல்றண்ணே?”ன்னு கேட்டதுக.
அதுக்கு அந்தப் பாம்பு, “அடப் போங்கடா வெவரங்கெட்டவணுகளா! மனுசன் ஒங்களவிடப் பெரியவன், அவனக் கடிச்சா சாவானா? அதத் தெளிவா அவருக்கிட்ட கேட்டிகளா...?”அப்படீன்னது.
அந்த எறும்புக, “அட ஆமா... இத மறந்துட்டமே... இப்ப என்னண்ணே பண்றது?”ன்னு பாம்புக்கிட்ட யோசனை கேட்டதுங்க. அந்தப் பாம்பு, “இங்க பாருங்கப்பா நீங்க ஒடனே போயி கடவுளப் பாத்து, நாங்க கடிச்ச உடனே மனுசன் சாகணும்னு வரத்த வாங்குங்க அப்பத்தான் மனிசனுக்கிட்ட இருந்த நீங்க தப்பிக்கலாம். இல்லன்னா முடியாது. ஒடனே போங்க”ன்னு சொல்லி எல்லா எறும்புகளயும் கடவுளுக்கிட்டத் திரும்பப் போகச் சொன்னது.
எறும்புகளும் பாம்பு சொன்னதத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே கடவுளுகிட்டப் போயி கடவுளே கடவுளேன்னு சத்தம்போட்டதுங்க. கடவுளு அப்பத்தான் எல்லா உயிர்களுக்கும் வரத்தக் கொடுத்து முடிச்சுட்டு இனிப்போயி சத்த எளப்பாறலாம்னு நெனச்சி எழுந்திருக்கப் போனாரு.
கூட்டமா வந்த எறும்புக கத்துன ஒடனே... அப்படியே ஒக்காந்துட்டு, “ஒங்களுக்கு என்ன வேணும்?” அப்படீன்னு கேட்டாரு. அதுக்கு எறும்புக, “கடவுளே எங்கள நல்லா ஏமாத்திப்புட்டீங்க... மனுசனக் கடிச்சா சாவானான்னு நீங்க சொல்லல...” அப்படீன்னு சத்தம்போட்டுச் சொன்னதுங்க.
இதுகளோட தொந்தரவு பொறுக்க முடியாத கடவுளு அந்த எறும்புகளப் பாத்து, “இப்ப ஒங்களுக்கு ஒடனே என்ன வேணும்னு சொல்லுங்க, நான் அந்த வரத்தத் தந்துட்டுப் போறேன்... சும்மா கத்தாதீங்க” அப்படீன்னு சொன்னாரு.
ஒடனே அந்த எறும்புக, ”நாங்க மனுசனக் கடிச்சவுடனே சாகணும்... இந்த வரத்தத் தாங்க”ன்னு சொல்லி கத்துச்சுங்க. எறும்புகளோட தொல்லை தாங்க முடியாம கடவுளும் “நீங்க கேட்டபடியே எல்லாம் நடக்கும். இப்ப சந்தோஷந்தானே... சரி போயிட்டு வாங்க”ன்னு சொல்லி அனுப்பிவிட்டாரு.
இந்த எறும்புகளுக்குச் சந்தோஷத்துல தலைகாலு புரியல. அந்த எறும்புக எல்லாம் ஒண்ணுகூடி, ”கடவுளு நமக்குத் தந்த வரத்தச் சோதிச்சுப் பாக்கணும். இங்க யாராவது மனுசன் வாரானான்னு பாருங்கன்னு” சொல்லி மனுசனத் தேடிப் போனதுங்க. அதுங்க எதிர்பார்த்த மாதிரியே ஒருத்தன் அந்தப் பக்கமா வந்துக்கிட்டு இருந்தான்.
இந்த எறும்புக கடவுளு கொடுத்த வரத்த சோதிக்க நெனச்சு எல்லாம் சேர்ந்து அந்த மனுசனக் கடிச்சதுங்க. அந்த மனுசன் அந்த எறும்புகளோட கடி தாங்க முடியாம அந்த எறும்புகள பட்டுப்பட்டுன்னு அடிச்சான். எல்லா எறும்புகளும் செத்துச் செத்து விழுந்துச்சுக.
எறும்புகளுக்கு ஒண்ணும் புரியலே... “அட என்னடா.. நாம கடிச்சா மனிசன் சாவான்னு பாத்தா நாமல்ல சாகறோம். திரும்பவும் கடவுளப் போயிக் கேட்டு வரத்த மாத்திக்கிட்டு வருவோம்னு “ எல்லா எறும்புகளும் கடவுளத் தேடிப்போயி நின்னு கத்துச்சுக. கடவுளு வந்து “ஏன் கத்துறீங்கன்னு” கேட்டாரு.
எறும்புக, “சாமி, நாங்க கடிச்சா மனிசன் சாகலையே. நாங்கதானே சாகறோம்...? அது எப்படி...? நீங்க வரத்த மாத்தித் தாங்க” அப்படீன்னு கேட்டதுக. ஆனா கடவுளு, “நீங்க கேட்டதைத்தான் தந்திருக்கேன். வரத்தத் திரும்பத் திரும்ப மாத்த முடியாது. நீங்க நாங்க மனுசனக் கடிச்சவுடனே சாகணும் அப்படீன்னு கேட்டீங்க... ஒங்க வரத்தின்படி நீங்க மனுசனக் கடிச்சவுடனே நீங்க சாகுறீங்க. நீங்க கேட்டதுதான் சரியா நடக்குதே... இந்த வரத்தத்தானே நீங்க கேட்டீங்க... கேட்டதக் கொடுத்துட்டேன் இனிமே வராதீங்க” அப்படீன்னு கோபமாச் சொல்லிட்டுப் போயிட்டாரு.
எறும்புகளால ஒண்ணும் பேசமுடியல... அந்த எறும்புக அன்னைக்கு கடவுளுக்கிட்ட வாங்கன வரத்தின் படியே கடிச்சவுடனேயே சாகுதுங்க. இதுதான் வரம் வாங்கப் போயி சாபத்தை வாங்கிக்கிட்டு வந்த கதை. எதையும் சந்தேகப்பட்டா இப்படித்தான் முடியும். இந்தக் கதை இன்னக்கும் புதுக்கோட்டை வட்டாரத்துல வழக்கத்துல இருந்து வருது.