ஒரு ஊருல ஒரு பசுமாடு இருந்தது. அந்தப் பசுமாடு அழகான கன்னுக்குட்டி ஒண்ணு போட்டுச்சு. இந்தப் பசுமாடு பக்கத்துல போயி மேஞ்சிட்டு வந்து பாலக் கொடுத்துட்டு இருக்கும். பக்கத்துல மேச்சல் இல்லாமப் போனதால பசுமாடு கன்னுக்குட்டிய கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ளாறப் போயி மேஞ்சிட்டு வரலாம்னு நெனச்சது. ஆனா கன்னுக்குட்டிய காட்டுக்குள்ளாறக் கூட்டிக்கிட்டுப் போனா ஏதாவது ஆபத்து வந்துச்சினா என்ன பண்றதுன்னு அந்தப் பசுமாட்டுக்குக் குழப்பமா இருந்துச்சு.
அதனால அந்தப் பசு ஒரு முடிவுக்கு வந்துச்சு. காட்ட ஒட்டுன ஒரு பாதுகாப்பான இடத்துல கன்னுக்குட்டிய நிறுத்தி வச்சிட்டு பசு மட்டும் காட்டுக்குள்ளாறப் போயி மேயப் போச்சு. அப்ப கன்னுக்குட்டியப் பாத்து, “நீ பத்திரமா இரு. நான் போயி மேஞ்சிட்டு வந்து ஒனக்குப் பாலு கொடுக்கிறேன். என்னோட கழுத்துல கட்டியிருக்கற மணிச் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். அப்படிக் கேட்டுச்சுன்னா நான் பக்கத்துல இருக்கேன்னு அர்த்தம். கேக்கலன்னா எனக்கு ஏதோ ஆபத்துன்னு தெரிஞ்சிக்கோ... அம்மா போயி மேஞ்சிட்டு சீக்கிரமா வந்தறேன்... நீ பயப்படாம இங்கேயே இரு” அப்படீன்னு சொல்லிட்டு காட்டுக்குள்ளாறப் போயி மேயப்போயிருச்சு.
அதே காட்டுக்குள்ளாற சிங்கம் ஒண்ணு குட்டி போட்டுட்டு குட்டியப் பத்திரமா இருக்கச் சொல்லிட்டு வேட்டையாடப் போயிரும். அப்படிப் போன போது இந்தச் சிங்கக் குட்டி காட்டுக்கு வெளியில என்னதான் இருக்கு அத அம்மா வர்றதுக்குள்ளாறப் போயிப் பாத்துட்டு வந்துருவோம்னுட்டு காட்டுக்கு வெளியே வந்துச்சு.
அப்ப அந்தப்பக்கமா தன்ன மாதிரியே துள்ளி விளையாண்டுக்கிட்டுத் திரிஞ்ச கன்னுக்குட்டியப் பாத்துச்சு. அந்தச் சிங்கக் குட்டிக்கு கன்னுக்குட்டிய ரொம்பப் புடுச்சிப்போச்சு. கன்னுக்குட்டியோட சேந்து சிங்கக் குட்டியும் வெளையாண்டுச்சு. இப்படியே தெனமும் சிங்கக் குட்டியும் கன்னுக்குட்டியும் சேர்ந்து வெளையாண்டுட்டு அப்பறமாப் போயிருங்க. இப்படியே கொஞ்ச நாளுப் போயிருச்சு.
ஒரு நாளு பசுமாடு நல்லா மேஞ்சிட்டுத் திரும்ப வர்றபோது திடீர்னு குட்டிபோட்ட சிங்கம் பசு மாட்டை மறிச்சிக்கிருச்சு. பசுமாடு சிங்கத்தப் பாத்துக் கெஞ்சிக் கேட்டது, “சிங்கராசா சிங்கராசா... நான் இப்பத்தான் கன்னுபோட்டேன்... எம்பிள்ள சின்னப்பிள்ள... நான்தான் அதுக்கு எல்லாம்... என்னய விட்டுரு... ஒனக்குப் புண்ணியமாப் போயிரும்” அப்படீன்னு கெஞ்சிக் கேட்டுச்சு.
அதுக்குச் சிங்கம், “இன்னக்கி எதுவும் எனக்குக் கிடைக்கல. நான் பட்டினியா இருக்கறேன்... என்னோட புள்ளையும் பட்டினியாக் கிடக்கும்... ஒன்ன இப்ப விட்டுட்டா, இன்னக்கி நானும் எம்புள்ளையும் பட்டினியாத்தான் கெடக்கணும். ஒன்ன விடமுடியாது”ன்னு சொல்லி பசுமேல பாஞ்சி அதக் கொன்னு தின்னுட்டு கொஞ்சத்தத் தன்னோட குட்டிக்கு எடுத்துக்கிட்டுப் போயி கொடுத்துச்சு.
அதத் தின்ன சிங்கக் குட்டி தன்னோட அம்மாவப் பாத்து, “ஏம்மா இன்னக்கி என்ன நீ கொண்டு வந்த கறி ரொம்ப நல்லா இருக்கு... இது என்ன கறிம்மா?” அப்படீன்னு கேட்டுச்சு. அதுக்குச் சிங்கம், “இது ஒரு பசுமாட்டோட கறி... ஒனக்கு நல்லாருக்கும்னுதான் கொண்டு வந்தேன்” அப்படீன்னது.
சிங்கக் குட்டியும் ஏதோ காட்டு மாட்டோட கறி போலருக்குன்னு சாப்புட்டு பேசாம இருந்துருச்சு.
மறுநாளு சிங்கம் குட்டிய விட்டுட்டு எற தேடப் பொறப்பட்டுச்சு. போறபோது தன்னோட புள்ளயப் பாத்து, “டேய் தம்பி இந்தாட ஒரு மணி. இந்த மணிய ஒனக்கு ஏதும் ஆபத்து வந்தா அடி, நான் அப்ப வந்து ஒன்னக் காப்பாத்துவேன்னு”சொல்லிக் கொடுத்துச்சு. அதுக்குச் சிங்கக் குட்டி ,”ஏம்மா இந்த மணிய யாரு ஒனக்குத் தந்தாங்க...ன்னு” கேட்டுச்சு. அதுக்கு, “நேத்து ஒரு மாட்டக் கொன்னு கறியக் கொண்டு வந்து ஒனக்குக் கொடுத்தேன்ல. அந்த மாட்டோட மணிதான் இது. அழகா இருந்ததுனால ஒனக்குக் கொடுக்கலாம்னு கொண்டு வந்தேன்னு” சொல்லிட்டு இரைதேட காட்டுக்குள்ளாறப் போயிருச்சு.
தன்னோட அம்மா போனவுடனே கன்னுக்குட்டியப் பாக்குறதுக்காக சிங்கக் குட்டி வந்தது. பாவம் அம்மா வர்லியேன்னு கன்னுக்குட்டி அழுதுகிட்டு இருந்துச்சு. கன்னுக்குட்டி அழுகுறதப் பாத்த சிங்கக் குட்டியும் அழுதுச்சு... அழுதுகிட்டே கன்னுக்குட்டிக்கிட்ட, “ஏன் அழுவறன்னு” கேட்டுச்சு. அதுக்குக் கன்னுக்குட்டி, “நேத்துலருந்து மேயப் போன எங்க அம்மாவக் காணோம்... எனக்குப் பயமா இருக்கு... எனக்கு எங்க அம்மாவ விட்டா யாருமே இல்ல... நான் என்ன செய்யறதுன்னே தெரியல... எங்க அம்மாவுக்கு என்னாச்சுன்னே தெரியலன்னு... சொல்லி” அழுதுச்சு.
அதப் பாத்த சிங்கக் குட்டி, “நீ அழாதே... நான் ஒனக்குத் தொணையா இருப்பேன்... இந்தா இந்த மணிய வச்சிக்கன்னு” சொல்லிக் குடுத்துச்சு. அந்த மணியப் பாத்த கன்னுக்குட்டி, “ஐயோ, இந்த மணி எங்க அம்மா கழுத்துல கட்டியிருந்த மணியாச்சே... இந்த மணி எப்படி ஒனக்குக் கிடைச்சது...” அப்படீன்னு கேட்டுச்சு.
“எங்க அம்மாதான் எனக்குக் கொண்டு வந்து கொடுத்துச்சு... அப்ப எங்க அம்மாதான் ஒங்க அம்மாவ கொன்னுருச்சு போலருக்கு... நீ எதுக்கும் கவலப் படாத... நான் ஒனக்குத் தொணையா இருப்பேன்” அப்படீன்னு சொல்லிட்டு காட்டுக்குள்ளாறப் போயி கொஞ்சம் புல்லப் புடுங்கியாந்து கன்னுக்குட்டிக்குக் கொடுத்துச் சாப்புடச் சொன்னது. கன்னுக்குட்டியும் அழுதுகிட்டே அதச் சாப்புட்டுச்சு.
சிங்கக் குட்டிக்கு இப்ப தர்மசங்கடமா ஆயிப்போச்சு... தன்னோட நண்பனோட கண்ணீருக்குத் தான் காரணமாயிட்டோமேன்னு அதுவும் சேர்ந்து அழுதுச்சு... பெறகு சிங்கக் குட்டி நாளைக்கு நானு இங்க வர்றேன்... நீ கவலப்படாம இருன்னு சொல்லிட்டு வேகவேகமாத் தன்னோட இருப்பிடத்துக்குப் போயி தன்னோட மணிய வேகவேகமா அடிச்சுச்சு.
இந்த மணிச் சத்தத்தக் கேட்டு தாய்ச் சிங்கம் அலறியடிச்சுக்கிட்டு வேகம் வேகமா வந்துச்சு... வேகமா வந்த சிங்கம் “எதுக்கு மணிய அடிச்சே... ஒன்ன யாரு வந்து தொந்தரவு செஞ்சாங்க... சொல்லு... அவங்கள உண்டு இல்லைன்னு பண்ணிப்புடறேன்னு” சொல்லிச்சு.
அதுக்குச் சிங்கக் குட்டி, “அம்மா அம்மா, நீ இல்லாத நேரத்துல ஒன்ன மாதிரியே இங்க ஒரு சிங்கம் வந்தது. என்னய அது சாப்புடறதுக்காக வெரட்டுச்சு. நான் ஓடிப் போயி ஒழிஞ்சிக்கிட்டேன். அந்தச் சிங்கம் கொஞ்ச நேரம் என்னத் தேடிப் பாத்துட்டு இந்தப் பக்கமா மெதுவாப் போயிருச்சு... அதனாலதான் பயந்து போயி மணியடிச்சு ஒன்னக் கூப்புட்டேன்னு” சொன்னது.
சிங்கத்துக்கு ஒடனே கோபம் வந்துருச்சு... “சரிசரி வாவா... அது எங்க இருந்தாலும் அதக் கண்டுபிடிச்சுக் கொன்னுடறேன்ன்னு...” சொல்லிட்டு சிங்கக் குட்டியோட எதிரிச் சிங்கத்தத் தேடிப் போச்சு. ரொம்ப தூரம் தாயக் கூட்டிக்கிட்டுப் போன சிங்கக்குட்டி ஒரு பாழுங்கிணத்தப் பாத்துச்சு. அதனோட கரையில நின்னுக்கிட்டு, “அம்மா இதுக்குள்ளாறதான் இந்தச் சிங்கம் இருக்கும்... இங்க இருந்துதான் அது கத்துச்சுன்னு” சொல்லிச்சு. அதக் கேட்ட சிங்க அந்தக் கெணத்துக்குள்ள எட்டிப் பாத்துச்சு. கெணத்துல கெடந்த தண்ணியில தாய்ச்சிங்கத்தோட நெழலு தெரிஞ்சவுடனேயே கோபத்துல அது மேல பாஞ்சது. சேறும் சகதியுமாக் கெடந்த அந்தக் கெணத்துக்குள்ளாறயே தாய்ச்சிங்கம் சிக்கிக்கிட்டு எறந்துபோச்சு. இப்பத்தான் இந்தக் குட்டிச் சிங்கத்துக்கு நிம்மதி மனசுல வந்துச்சு.
மறுநாளு சிங்கக் குட்டி கன்னுக்குட்டியத் தேடிப்போயி தன்னோட இருப்பிடத்துக்கே அழைச்சிக்கிட்டு வந்துருச்சு. ரெண்டுபேரும் ஒன்னாச் சேர்ந்து இருந்தாங்க. சிங்கக் குட்டி காட்டுக்குள்ளாறப் போயி வேட்டையாடிட்டு கொஞ்சம் புல்லப் புடுங்கிக்கிட்டு வரும். கன்னுக்குட்டி பக்கத்துல மேஞ்சிட்டு சிங்கக் குட்டிகொண்டுக்கிட்டு வரும் புல்லத்தின்னுட்டு இருக்கும். சிங்கக் குட்டி தனக்கிட்ட இருந்த மணிய கன்னுக்குட்டிக் கிட்டக்கக் கொடுத்து “ஒனக்கு ஏதாவது ஆபத்து வந்தாமட்டும் இந்த மணிய வேகமா அடி. நான் ஓடிவந்து ஒன்னக் காப்பத்திருவேன். நீ கவலப்படாதன்னு” சொல்லிட்டுப் போயிரும்.
இப்படியே சிங்கக் குட்டியும் கன்னுக்குட்டியும் ஒருத்தரவிட்டு ஒருத்தர் வெலகிப் போகாம நண்பர்களா இருந்து வந்தாங்க. அப்படி இருக்கற போது ஒருநாளு சிங்கக் குட்டி வேட்டைக்குப் போயிருச்சு. கன்னுக்குட்டி மட்டும் அங்கே இருந்த புல்ல மேஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அப்ப வேட்டையாடிக்கிட்டு வந்த நாலஞ்சு பேரு இந்த அழகான கன்னுக்குட்டியப் பாத்துட்டு அத வெரட்டி வேட்டையாடிக் கொனுட்டாங்க. வந்தவங்களுக்கு ரெம்பப் பசியெடுத்துச்சு.
ஒடனே அவங்க எல்லாரும் அந்தக் கன்னுக்குட்டிய உரிச்சி நெருப்புல வாட்டிச் சாப்புட்டுப் பசியப் போக்கிக்கிருவம்ன்னு முடிவு செஞ்சி கன்னுக்குட்டிய அறுத்து அத நெருப்புல வாட்டிக்கிட்டு இருந்தாங்க.
வந்தவனுகள்ள ஒருத்தன் மட்டும் அந்தக் கன்னுக்குட்டி கழுத்துல கிடந்த மணிய எடுத்து “அட அழகான மணியா இருக்கே... இதக் கொஞ்சம் அடிச்சுத்தான் பாப்பமேன்னு” மணிய வேகவேகமா அடிச்சான். அப்ப இந்த மணிச்சத்தத்தக் கேட்ட சிங்கக் குட்டி தன்னோட நண்பனுக்கு என்னவோ ஆபத்து ஏற்பட்டுப் போச்சுன்னு நெனச்சிக்கிட்டு வேகவேமா ஓடி வந்து பாத்துச்சு...
அப்ப வேட்டையாடுறவங்க நாலஞ்சுபேரு நின்னுக்கிட்டு கன்னுக்குட்டியோட கறிய வாட்டுறதப் பாத்துச்சு. ஒடனே இந்தச் சிங்கக் குட்டிக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்துருச்சு. அந்த ஆளுகமேல பாஞ்சு எல்லாரையும் கொன்னு போட்டுருச்சு சிங்கக் குட்டி. தன்னோட நண்பனான கன்னுக்குட்டிக்கு நேர்ந்த மரணத்தை நெனச்சி நெனச்சி அழுதுச்சு சிங்கக் குட்டி. அதனால தாங்கிக்கவே முடியல. ஒரு முடிவுக்கு வந்துருச்சு. என்னோட நண்பன் கன்னுக்குட்டி இல்லாத ஒலகத்துல நான் மட்டும் வாழ முடியுமா? இனி முடியாதுன்னு முடிவு பண்ணி கன்னுக்குட்டி வெந்துக்கிட்டுருந்த நெருப்புல தானும் குதிச்சு செத்துப்போச்சு.
இந்தக் கதய இந்த வட்டாரத்துல இன்னமும் சொல்லிச் சொல்லி மாஞ்சுபோயிருவாங்க... நட்புன்னா அது சிங்கக்குட்டி கன்னுக்குட்டி மாதிரி இருக்கணும்னு இன்னக்கி வரைக்கும் சொல்லுற சொலவட இந்த வட்டாரத்துல இருக்குது.