ஒரு ஊருல ஒரு ஏழைப் பார்ப்பான் இருந்தாரு. அவருக்கு ரெண்டு பொண்ணுங்க. அவருக்கு மூத்த பொண்ணு மேல அதிகமான பாசம். அந்தப் பிள்ளைக்கு மட்டும் ரொம்பச் செல்லங்குடுத்து வளர்த்தாரு. சின்ன மகளை அவரு கண்டுக்கவே மாட்டாரு. ஆனாலும், அந்தச் சின்ன மகள் அப்பா மேல பாசமா இருந்தா. ரெண்டு பிள்ளைங்களும் கலியாண வயசத் தொட்டாங்க. அப்ப அந்த ஏழைப் பார்ப்பான் என்ன செஞ்சாருன்னா பெரிய மகள கடன ஒடனப் பட்டு கொஞ்சம் வசதியான எடத்துல கலியாணத்தப் பண்ணி வச்சாரு. சின்ன மகளப் பார்த்து ஒனக்கு நாயோ நரியோதான் மாப்புளயா வரப்போகுது. அதுகள்ள ஏதாவது ஒண்ணுக்கு ஒன்னக் கட்டி வைக்கப் போறேன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு.
இதைக் கேட்ட அந்தப் பிள்ள பேசாம இருந்துச்சு. இப்படியே இருக்கறப்போ ஒரு நாளு எப்பவும் போல அந்தப் பிள்ளையப் பார்த்து அவங்க அப்பா “ஒன்னக் கட்டிக்க எந்த மாப்பிள்ளையும் வரமாட்டேங்குறான். ஒன்ன அப்படியே நாய்க்கோ நரிக்கோதான் கட்டிக் கொடுக்கப்போறேன்... இல்லாட்டி ஒரு பாழுங்கெணத்துலதான் ஒன்னத் தள்ளணும்னு” சொன்னான்.
அந்தநேரம் பாத்து அந்தப் பக்கம் வந்த ஒரு பெரிய நரி நேரா அந்தப் பிள்ளையோட அப்பங்கிட்ட வந்து, “நீ ஒம்பொண்ண பாழுங்கிணத்துல தள்ளுறத விட எனக்குக் கட்டிக்கொடுத்துரு” அப்படீன்னு சொன்னது.
அவனும் இதுதான் சரியான சமயம்னு நெனச்சிக்கிட்டு, அந்தப் பிள்ளை கையப் புடிச்சி அந்த நரிக்கிட்ட கொடுத்து “இன்னியிலிருந்து இவன்தான் ஒன்னோட வீட்டுக்காரன்... இந்த நரியோட நீ குடும்பத்த நடத்து” அப்படீன்னு சொல்லி வெரட்டிவிட்டுட்டான்.
அவளும் தன்னோட விதி இப்படி ஆயிடுச்சேன்னு நொந்து போயி அழுதுகிட்டே அந்த நரிப் பின்னால போனா. அவளப் பார்த்த நரி, “நீ அழுவாதே ஒன்ன நானு ராசாத்தி மாதிரி பாத்துக்கறேன். அழுகாம வா” அப்படீன்னு கூட்டிக்கிட்டுப் போயி ஒரு பெரிய குகையக் காட்டி “இதுதான் நாம தங்கப் போற வீடுன்னு” சொன்னது. அதப் பாத்துட்டு அந்தப் புள்ள ரொம்பப் பயப்பட்டுது.
அந்தப் பொண்ணு பயப்படறதப் பாத்த நரி, “நீ பயப்படாத இனி ராத்திரி நேரம் வரப்போவுது. நாம் போயி நாம ரெண்டுபேரும் சாப்புடறதுக்கு ஏற்பாடு பண்றேன். பயப்படாம இந்த எடத்துல இரு. கொஞ்ச நேரத்துல நான் வந்துடறேன்”னு சொல்லிட்டு நரி வேகமா காட்டுக்குள்ளாற போயிருச்சு.
குகைக்குள்ளாற தனியா மாட்டிக்கிட்ட அந்தப் பொண்ணு தன்னோட அப்பாவை நெனச்சு நெனச்சு அழுதா. கொஞ்சங்கூட தன் மேல பாசமில்லாம அப்பா இப்படிக் கொண்டுக்கிட்டு வந்து நரிய மாப்பிள்ளையாக்கிக் கட்டிக் கொடுத்துட்டாரே... எல்லாம் கடவுளு என்னோட தலையில என்ன எழுதியிருக்காரோ அதுதான் நடக்கும்”னு ஆண்டவன நெனச்சிக்கிட்டு அப்படியே தூங்கிப் போயிட்டா.
கொஞ்ச நேரம் கழிச்சி அவ முழிச்சிப்பாத்தா. ஒரே இருட்டு. அப்ப ஒரு அழகான இளைஞன் ஒரு பெட்டிய எடுத்துக்கிட்டு விளக்கையும் எடுத்துக்கிட்டு அந்தக் குகைக்கு வந்தான். இந்தப் புள்ளைக்கு ஒன்னும் புரியல. என்னடா நரியக் காணமேன்னு வழிய வழியப் பாத்துக்கிட்டு இருந்துச்சு.
கிட்டக்க வந்த அந்தப் பய “நீ பயப்படாத நாந்தான் ஒன்னோட வீட்டுக்காரன்”னு சொன்னான். அதுக்கு அந்தப் பொண்ணு “எங்கப்பா ஒரு நரி மாப்பிள்ளைக்குத் தானே என்னக் கட்டிக் கொடுத்தாரு... மனுசனுக்குக் கட்டிக் கொடுக்கலியேன்னு” கேட்டா. அதுக்கு அந்தப் பையன், “நான் பகலானா நரியா மாறிடுவேன். இராத்திரியானா இந்த மாதிரி மனுசனா மாறிடுவேன்”னுட்டுச் சொல்லிட்டு ஒரு டிரங்குப் பெட்டியக் கொடுத்து இதத் தெறந்து பாருன்னான்.
அவளும் அதத் திறந்து பாத்தா. அதுக்குள்ளாற ஏழு சித்திரக் குள்ளனுக இருந்தானுக. அவளப் பாத்துட்டு அந்த ஏழு குள்ளனுகளும் பயந்து போயிட்டானுக. அந்தக் குள்ளனுகளப் பாத்து அந்தப் பிள்ள, “நீங்க பயப்படாதீங்க நான் ஒங்கள ஒண்ணுஞ் செய்யமாட்டேன்னா”. அவளோட நரி மாப்பிள்ள அவளப் பாத்து ”ஒனக்கு சாப்புட என்ன வேணுமோ இந்தக் குள்ளங்ககிட்டக் கேளு. இந்தக் குள்ளனுக கொண்டாந்து கொடுப்பானுக” அப்படீன்னான்.
அவளுக்கு அந்தக் குள்ளனுகளா எல்லாங் கொண்டாரப் போறனுகன்னு ஆச்சரியம். வாய்க்கு ருசியா அந்தப் பிள்ள சாப்பிட்டதே இல்ல. அந்தப் பிள்ள தனக்குப் பிடிச்ச சாப்பாட்டை எல்லாம் அந்தக் குள்ளனுககிட்ட கொண்டு வரச் சொல்லிச்சி. அவ சொன்னதைக் கேட்ட சித்திரக் குள்ளனுக பெட்டியிலிருந்து தாவிக் குதித்து வெளியில் வந்தனர். வந்தவுடன் கையை மேலே உயர்த்திப் பிடித்தனர். அவர்கள் கையில் அவள் கேட்ட சாப்பாட்டு வகைகள் தட்டுக்களில் வந்தன. அவ்வாறு வந்த சாப்பாட்டை எடுத்துக்கிட்டுப் போயி குள்ளனுக அந்தப் பொண்ணுகிட்ட கொடுத்துச்சுக.
அதச் சாப்பிட்ட அவ ரொம்ப சந்தோஷப்பட்டா. தனக்கு ஆண்டவன் நல்ல மாப்பிள்ளையாப் பாத்துக் கொடுத்துருக்காருன்னு நெனச்சி ஆண்டவனுக்கு நன்றி சொன்னா. அந்தப் பொண்ணு தன்னோட வீட்டுக்காரனுகிட்ட சொல்லி வீடுவாசல்னு தனக்குச் சொந்தமாக் கட்டிக்கிடுச்சு. ஆனா அந்த நரி மட்டும் ராத்திரியில மனிசனாவும் பகல்ல நரியாவும் மாறிக்கிடுச்சு. பகல்ல அந்த நரி காட்டுக்குள்ளாறப் போயிட்டு ராத்திரிக்கு தன்னோட வீட்டுக்காரியப் பாக்குறதுக்கு வந்துரும். இப்படியே நாளும் பொழுதும் போச்சு.
ஒரு நாளு அந்தப் பொண்ணோட அப்பங்காரன் தன்னோட மகளுகளப் பாக்குறதுக்குப் பொறப்பட்டு வந்தான். வசதியான வீட்டுல கட்டிக்கொடுத்த மூத்த மகள மொதல்ல பாத்துட்டு வருவோம்னு நெனச்சிக்கிட்டு அவ வீட்டுக்குப் போனான்.
அங்க போனவுடனே பெரிய மாளிகையா இருக்கும்னு நெனச்ச வீடு குடிசையா இருந்துச்சு. ஏழைப் பாப்பனோட மூத்த மக போன நேரமோ என்னமோ அவளோட புருஷங் குடும்பம் நொடிச்சுப் போச்சு. தன்னோட அப்பங்காரனப் பாத்துட்டு மூத்தமக அழுதா. அப்பங்காரனும் மகளக் கட்டிப்பிடிச்சு அழுதான். அப்பறம் மருமகன் வந்து மாமனாரப் பாத்து, “ஒன்னோட மூத்தமக இங்க வந்து குடும்பம் நடத்துன லெட்சணத்துல என்னோட வசதியெல்லாம் போச்சு. அவள நீயி ஒழுங்கா வளத்திருந்தியினா இப்படி ஆயிருக்குமா...?”அப்படீன்னு சொல்லி வருத்தப்பட்டான்.
மூத்த மகளுக்கும் மருமகனுக்கு ஆறுதலச் சொல்லிப்புட்டு அவங்க கொடுத்த சாப்பாட்டச் சாப்புட்டுட்டு அங்கேருந்து கெளம்பி சின்னமக வீட்டுக்குப் போனான். அவனுக்கு உள்ளூற வருத்தம். சின்னப்புள்ளையப் போயி இப்படி நரி மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்து வகை மோசமா அவளோட வாழ்க்கையக் கெடுத்துட்டமேன்னு வருத்தப்பட்டுக்கிட்டே சின்னமகளத் தேடிக் காட்டுப் பக்கமாப் போனான். காட்டுக்குள்ளாறப் போனா அங்க பெரிய மாடிவீடு இருந்துச்சு.
அந்த வீட்டப்ப பாத்துட்டு அந்த ஏழைப்பார்ப்பனுக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சு... என்னடா இது நடுக்காட்டுக்குள்ளாற அழகான வீட்டை யாரு கட்டியிருப்பாங்கன்னு அவனுக்குக் கொளப்பமாப் போச்சி. நம்ம சின்ன மகள அந்த நரி அடிச்சிக் கொன்னுருச்சோன்னு நெனச்சான். அவன் ரெம்ப தூரம் நடந்து வந்த களைப்புல அவனுக்கு நா வறட்சி ஏற்பட்டு மயக்கமா வந்துச்சு. அப்படியே அவன் அந்த வீட்டு வாசல்ல மயங்கி விழுந்துட்டான்.
அவன் விழுந்ததை வீட்டுக்குள்ளாற இருந்து பார்த்த நரியோட வீட்டுக்காரி யாரு இந்தப் பக்கமா வரப்போறா...? இங்க வந்தது யாரா இருக்கும்னு நெனச்சிக்கிட்டு வேகவேகமா வந்து கீழே கெடக்கறவனப் பொறட்டிப் போட்டுப் பார்த்தா. அவளுக்கு ஆச்சரியமாப் போச்சு... ஆகா நம்ம அப்பாவா இங்க வந்து மயங்கிக் கிடக்கறாருன்னு பதடப்பட்ட அந்தப் பொண்ணு தண்ணிய எடுத்துக்கிட்டு வந்து மொத்துல தெளிச்சு அவருக்கு மயக்கத்த தெளிய வச்சிச்சு.
மயக்கம் தெளிஞ்சி எழுந்த அந்த ஏழைப்பார்ப்பான் தன்னோட சின்ன மகளக் கண்டு வெக்கப்பட்டுக்கிட்டு அழுதாரு. அவ தன்னோட அப்பனப் பாத்துட்டு, “நீ என்னய நல்ல மாப்புள்ளக்கித்தாம்பா கட்டிக் கொடுத்துருக்கே... நான் நல்லாத்தான் இருக்கேன்... நீ அழுவாதே”ன்னு சொல்லி அந்த ஏழைப்பார்ப்பான வீட்டுக்குள்ளாறக் கூட்டிபோனா...வீட்டுக்குள்ளாற வந்தவன் தன்னோட சின்ன மகளைப் பாத்துட்டு, “எங்கத்தா ஒன்னோட நரி மாப்புள”ன்னு கேட்டான். அதுக்கு சின்ன மக, “அவுக வெளியில போயிருக்காக. இப்ப வந்துருவாக நீங்க சாப்புடுங்கன்னு” சொல்லிட்டு வீட்டுக்குள்ளாறப் போனா.
இந்த ஏழைப் பார்ப்பானுக்கு வீட்டைப் பார்க்கப் பார்க்க மனசுக்குள்ளாற பழைய பொறாமை வந்துருச்சு. “அட இந்தக் கழுதைக்கு வந்த வாழ்வப் பார்ரா”ன்னு மனசுக்குள்ளேயே பொறுமினான். வீட்டுக்குள்ள போன மக நரி கொடுத்த டிரங்குப் பொட்டியத் தொறந்து குள்ளனுககிட்ட நல்ல நல்ல சாப்பாடா கொண்டுட்டு வாங்கன்னு சொன்னா. அடுத்த நிமிஷம் அவகேட்டதெல்லாம் வந்துருச்சு.
பழையபடி அவ குள்ளனுகள பொட்டியில வச்சி மூடி வச்சிட்டு சாப்பட்டையெல்லாம் எடுத்துக்கிட்டு அப்பங்கிட்ட வந்து அவனுக்குப் பரிமாறினா. அதுவரைக்கும் நல்ல சாப்பாட்டையே கண்ணுல காணாத அந்த ஏழைப்பார்ப்பான் காஞ்சமாடு கம்புல விழுந்த மாதிரி அள்ளி அள்ளிச் சாப்புட்டான். வயிறு முட்டச் சாப்புட்டான். அப்பாவுக்கு வேணுங்கற அளவுக்கு சின்னமக நல்லா சாப்பாடு போட்டா. அந்த நேரத்துல வெளியில போயிருந்த நரி வீட்டுக்கு வந்துருச்சு.
தன்னோட மாமனாரப் பார்த்தவுடனே, “நல்லாருக்கீகளான்னு” கேட்டுட்டு அது பாட்டுக்குப் போயிருச்சு. நரியோட உபசரிப்பப் பாத்த அந்த ஏழைப்பார்ப்பான் ரொம்ப சந்தோஷப்பட்டான். இருந்தாலும், அவன் மனசுக்குள்ளாற பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிஞ்சிச்சு. அவனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். என்னடா அடுப்பு மூட்டல. உலை வைக்கல. எதுவும் செய்யல. ஆனா வகைவகையா சாப்பாடு மட்டும் நம்ம மக கொண்டு வந்துட்டாளேன்னு ஆச்சரியப்பட்டுப் போனான். அவனுக்கு அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கணும்னு ஆசை.
அவனுக்கு மகளக் கேக்கறதுக்கு பயம். நரிய வச்சு ஏதாச்சும் செஞ்சுட்டா என்ன செய்யறதுன்னு பேசாம இருந்துட்டான். மெதுவாத் தெரிஞ்சுக்குவம்னு கவனிக்க ஆரம்பிச்சான். இராத்திரியாச்சு அதே மாதிரி சாப்பாடு வகைவகையா வந்துச்சு நல்லாச் சாப்பிட்டான். பகல்ல இருந்த நரி. ராத்திரியில காணோம். அவன் தன்னோட மகளப் பாத்து,
“நரிமாப்புள எங்க போயிட்டாருன்னு” கேட்டான். அதுக்கு அவ, “அவரு காட்டுக்குள்ளாற போயிட்டாரு. நீங்க பேசாமப் படுத்துத் தூங்குங்க”ன்னு சொல்லிட்டு அவ படுக்கப் போயிட்டா.
அந்த ஏழைப்பாப்பானுக்கு ஒண்ணுமே புரியல. பெரியமக கஷ்டப்படுறது அவனுக்குக் கவலையா இருந்துச்சு. சின்னமகள நெனச்சு அவன் ரொம்பப் பொறாமைப்பட்டான். வீட்டுல மக சமையல் வேலை செய்யல. வேலை செய்யவும் ஆளு இல்ல. ஆனா வகைவகையா சாப்பாடு எப்படி வந்துச்சுன்னு நெனச்சுக்கிட்டே தூங்கிட்டான். இப்படியே ரெண்டு மூணுநாளு போச்சு.
எப்படியாவது இந்த ரகசியத்த கண்டுபிடிக்கணும்னு ஒரு நாளு சின்ன மகளுக்குத் தெரியாமா அவள வேவு பாத்தான். அப்பத்தான் ஒரு டிரங்குப் பெட்டிய அவ தொறக்கறதும் அதுக்குள்ளாற குள்ளனுக இருக்கறதும் அவனுக சாப்பாடக் கொண்டாறதும் அவனுக்குத் தெரிய வந்தது. அவன் மனசுக்குள்ளாறக் கணக்குப் போட்டான். எப்படியாவது அந்தப் பெட்டியத் தூக்கிக்கிட்டுப் போயிட்டம்னா நாம வாழ்க்கை முழுசும் சந்தோஷமா இருக்கலாம்னு நெனச்சான்.
அதனால அவன் அன்னிக்கு ராத்திரி முழுக்கத் தூங்காம இருந்தான். ராத்திரி சின்ன மக தூங்குன ஒடனே மெதுவாப் போயி அந்தப் பொட்டியத் தூக்கிக்கிட்டு ஓடிட்டான்.
காடுமேடெல்லாம் கடுமையான ஓட்டம். யாரும் ஓடிவந்து தன்னப் புடிச்சிரக் கூடாதுன்னு ஓடினான். பொழுது பளப்பளன்னு விடிஞ்ச போது ஒரு மரத்தடியில வந்து நின்னான். அவனுக்குப் பசியெடுத்துச்சு. அவன் யாரும் தன்னப் பாக்கக் கூடாதுன்னு பயந்து பயந்துக்கிட்டு மறைவா இருக்கற எடமா அவன் தேடுனான்.
அப்படிப் பாத்தபோது அங்க ஒரு பாழடைஞ்சு போன கெணறு ஒண்ணு இருந்துச்சு. அந்தக் கெணத்துக்குள்ளாற எறங்கறதுக்கு படியும் இருந்துச்சு. அவன் மெதுவா அந்தக் கெணத்துக்குள்ளாற எறங்கி அந்தப் பொட்டிய இறக்கி அதத் திறந்தான். திறந்தவுடனே அதுல இருந்து சித்திரக் குள்ளனுக ஏழுபேரு வேகவேமா வந்தானுக. அவனுகளப் பாத்தவுடனே அந்த ஏழைப் பாப்பானுக்கு சந்தோஷமாப் போயிருச்சு. அவனுகளப் பாத்து ,”டேய் குள்ளனுகளா எனக்குச் சாப்பாட்டக் கொண்டாங்க... நல்ல சாப்பாடாக் கொண்டாறணும். இல்லேன்னா ஒங்களத் தொலைச்சுக் கட்டிப்புடுவேன்னு” சொன்னான்.
இதைக் கேட்டவுடனே அந்தக் குள்ளனுக ஏழுபேரும் கக்கப்புக்கன்னு சிரிச்சானுக. இந்த ஏழைப் பார்ப்பானுக்கு ஒண்ணும் புரியல. அவன் குள்ளனுகளப் பாத்துட்டு, “ஏன்டா சிரிக்கறீங்க... சாப்பாட்டுக் கொண்டுக்கிட்டு வாங்கடா”ன்னு அதட்டுப் போட்டான். ஆனா அந்தக் குள்ளனுக ஒண்ணும் பேசாம மேல கையத் தூக்கினானுக. அவங்க கையில பெரிய ஒலக்கை வந்துருச்சு. அந்த ஒலக்கையால அவனுக அந்த ஏழைப் பாப்பான பறந்து பறந்து அடிச்சானுக.
அந்த ஏழைப் பாப்பானால ஒண்ணுஞ் செய்ய முடியல. அடி பொறுக்க முடியாம, “ஏன்டா என்ன அடிக்கறீங்கன்னு” கேட்டான். அதுக்கு அந்தக் குள்ளனுக, “நாங்க நல்லவங்க சொன்னாத்தான் கேப்போம். நீ அயோக்கியன். மத்தவங்கள ஏமாத்தி இந்தப் பொட்டிய திருடிக்கிட்டு வந்துட்ட. நாங்க நல்லவங்களுக்குத்தான் ஒதவுவோம்... ஒன்ன இப்படியே விட்டுட்டா எல்லாரையும் நீ ஏமாத்தி கஷ்டப்படுத்துவ. நீ நன்றி கெட்டவன்”னு சொல்லி கைகாலு எல்லாத்தையும் கட்டி அந்தப் பாழுங்கெணத்துக்குள்ளாற தள்ளிவிட்டானுக. அப்பறமா அந்தக் குள்ளனுக பொட்டிய எடுத்துக்கிட்டு வானத்துல பறந்து போயி மறுபடியும் அந்த சின்னமகளுக்கிட்டயே போயிட்டானுக.
நடந்ததெல்லாத்தையும் அவளுக்கிட்ட சொன்ன குள்ளனுக, “ஒங்கப்பா நல்லவன் இல்ல... அதனாலதான் அவனுக்கு இந்தத் தண்டனை கொடுத்தோம்... நீ கவலப் படாம இரு”ன்னு சொன்னானுக.
அவனுகளப் பாத்த சின்ன மக,”நீங்க என்னோட புருஷன் நரியா பகல்ல மாறுறத மாத்திப்புடுங்க. ஒங்களுக்கு நல்லதாப் போயிரும்னு” கெஞ்சினா. ஒடனே அந்தக் குள்ளனுக, “நீ கவலப் படாத... ஓன்னோட நரிமாப்புள இப்ப வருவான். நாங்க தர்ர மந்திரத் தண்ணிய எடுத்து அந்த நரி மேல தெளிச்சுவிட்டுரு... அவன் மனுஷனா மாறிடுவான். அப்பறம் நரியா மாறவே மாட்டான்னு” சொல்லிட்டு அவளுக்கு மந்திரத் தண்ணிய எடுத்துக் கொடுத்தாங்க.
அந்த மந்திரத் தண்ணிய வாங்கிய அந்தப் பொண்ணு தன்னோட நரிமாப்புள வந்தவுடனே சாமிய நெனச்சிக்கிட்டு அவன் மேல தண்ணியத் தெளிச்சா. மந்திரத் தண்ணி பட்டவுடனேயே நரி உருவத்துல இருந்தவன் அழகான ராச குமாரன் மாதிரி மாறிட்டான். அவன் தன்னோட பொண்டாட்டியோட அறிவப் பாத்து ரொம்ப சந்தோஷப்பட்டான். அவங்க ரெண்டுபேரும் சித்திரக் குள்ளனுகளும் சந்தோஷமா வாழ்ந்தாங்க.