நம்மல்ல சிலபேரு இருக்காங்க... சுத்தம் சுத்தம்னு எப்பப் பாத்தாலும் எதைத் தொட்டாலும் சுத்தம்னு பேசிக்கிட்டும் எதையாவது செஞ்சிக்கிட்டும் இருப்பாங்க. அடுத்தவங்க சாப்பிட்ட தட்டுலயோ, டம்ளருலேயோ அவங்க சாப்பிட மாட்டாங்க. எல்லாத்திலயும் சுத்தம் பாக்குற இவங்க தங்களுக்குன்னு தனியா தட்டு டம்ளர் அப்படி இப்படின்னு எல்லாத்தையும் சுத்தம் பாத்துக்கிட்டுத் தனித்தனியா எல்லாத்தையும் வச்சிக்குவாங்க. இப்படித்தான் ஒரு ஊருல சுத்தம் பாக்குறவன் ஒருத்தன் இருந்தான். அவன் எதுல பாத்தாலும் சுத்தம் பாக்குறவனா இருந்தான். அவனோட அப்பனும் ஆத்தாளும் எவ்வளவோ அவங்கிட்ட சொல்லிப் பாத்தாங்க அவன் கேக்குற மாதிரி இல்ல. அடுத்தவங்க எச்சில் பட்டா அன்னிக்கு முழுவதும் பட்டினியாக் கிடப்பான். இவனத் திருத்தணும்னா இவனுக்கு ஒரு கலியாணத்தைப் பண்ணி வச்சிடணும்னு அவனோட அப்பனும் ஆத்தாளும் பொண்ணுப் பாத்து அவனுக்குக் கட்டி வச்சாங்க..
பொண்ணு அழகா லட்சணமா இருந்ததால அந்தப் பயலும் ஒத்துக்கிட்டான். கலியாணம் முடிச்சது. இவன் தன்னோட புதுப் பொண்டாட்டியோட மாமனாரு வீட்டுக்கு விருந்துக்குப் போனான். மருமகனோட குணத்தைத் தெரிஞ்சிக்கிட்ட அவனோட மாமனாரும் மாமியாரும் ரொம்ப ரொம்ப சுத்த பத்தமா வந்து மருமகன நல்லாக் கவனிச்சிக்கிட்டாங்க. அவனும் மாமனாரு வீட்டுல தங்கி இருந்து நல்லாச் சாப்புட்டான். அப்படி இருக்கறபோது மாமியாகாரி மருமகனுக்குப் புடிக்குமேன்னு மொச்சக் கொட்டையும் ஆட்டுக்காலும் போட்டுக் கொழம்பு வச்சி மகளையும் மருமகனையும் ஒண்ணா ஒக்கார வச்சி சாப்பாடு போட்டா..
அவன் நல்லா விரும்பிச் சாப்புட்டுக்கிட்டு இருக்கறப்போ அவனோட பொண்டாட்டி ஒரு மொச்சக் கொட்டைய எடுத்துத் தோலப் பிதுக்கினா. அந்த மொச்சக்கொட்ட அப்படியே வழுவிக்கிட்டுப் போயி புருஷங்காரனோட இலையில விழுந்திருச்சு. தன்னோட பொண்டாட்டியோட எச்சிபட்ட மொச்சக்கொட்ட தன்னோட சோத்துல விழுந்ததால அவனுக்குப் பொல்லாத கோபம் வந்துருச்சு. ஒடனே அவன் சாப்புடாம கோபமா எந்திரிச்சு கையக் கழுவிட்டுப் பொண்டாட்டியப் போட்டு ரெண்டு மிதிமிதிச்சான். அதப்பாத்த அவனோட மாமியாரும் மாமனாரும் மாப்புளே வேற தட்டுலயாவது ஒங்களுக்குச் சோறுபோட்டுக் கொண்டாரம் சாப்புடுங்க... ஏதோ தெரியாத்தனமா நடந்து போச்சுன்னு எவ்வளவோ கெஞ்சினாங்க. அவனோட பொண்டாட்டியும் கையில கால்ல விழுந்து கெஞ்சினா... அவன் கோபந் தணியல. ஐயோ என்னோட விரதம் கெட்டுப்போச்சு... பாவம் வந்து சேந்துருச்சு நான் காசிக்குப் போயி கங்கையில குளிச்சிட்டு வந்தாத்தான் இந்தக் கருமந் தொலையும். அதனால நான் காசிக்குப் போயிட்டு வந்து என்னோட பாவத்தைத் தொலைச்சிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு கட்டுன வேட்டியோட கெளம்பிட்டான். மாமியார், மாமனார், பொண்டாட்டின்னு யாரு பேச்சையும் கேக்காம திரும்பிக்கூடப் பாக்காமக் காசிக்குப் போயிட்டான்..
இப்ப மாதிரி அப்பல்லாம் பஸ்சுப் போக்குவரத்தெல்லாம் அப்பக் கிடையாது. அதனால அவன் கால்நடையாவே நடந்து காசிக்குப் புறப்பட்டுப் போனான். அவன் வீட்டவிட்டுட்டுக் கோபமாக் கௌம்புனதால பொண்டாட்டி கட்டிக் கொடுத்த கட்டுச் சோறக் கூட வேணாம்னு சொல்லிட்டு வீராப்போட வந்துட்டான். இப்ப அவனுக்குப் பசி வயித்தக் கிள்ளுச்சி..
அப்பப்பாத்து அவன் ஒரு குக்கிராமத்துல நடந்துக்கிட்டு இருந்தான். அந்தக் கிராமத்துல ஒரு கடைகண்ணிகூட இல்ல. இருட்ட வேறத் தொடங்கிருச்சி. என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டே அவன் நடந்தான். அவனால பசியால ரொம்ப தூரம் நடக்க முடியல. ரொம்பவும் சோந்து போயிட்டான். ரெம்பச் சிரமப்பட்டு பாதை ஓரமா இருந்த ஒரு வீட்டுத் திண்ணையில போயி ஒக்காந்தான். நடந்து வந்த அசதியினால அப்படியே சாஞ்சுக்கிட்டே தூங்கிட்டான். எவ்வளவு நேரம் தூங்கினானோ அவனுக்கே தெரியல. அந்த வீட்டுக்காரரு வந்து எழுப்பின பின்னாலதான் அவனுக்கே ரொம்ப நேரம் தான் தூங்கிட்டதத் தெரிஞ்சிக்கிட்டான்..
அவன எழுப்பின அந்த வீட்டுக்காரரு எங்கருந்து வாரீங்க... எங்க போறீங்க... எதுக்காகப் போறீங்க...ன்னு விசாரிச்சாரு... அவனும் தான் காசிக்குப் போறதாச் சொன்னான். அந்த வீட்டுக்காரருக்கு ரெம்பச் சந்தோஷமாப் போயிருச்சி. அந்தக் காலத்துல எல்லாம் காசிக்குப் போறாங்கன்னு சொன்னா அது ரொம்பப் புண்ணியமானதுன்னு நெனச்சி காசிக்குப் போறவங்கள நல்லா உபசரிப்பாங்க..
அந்த வீட்டுக்காரரும் அவனுக்கு வேண்டியதக் கொடுக்கலாம்னு நெனச்சுக்கிட்டு, ‘‘சரி நீங்க எங்க வீட்டுல சாப்புடுங்க, நீங்க சாப்புட்டா எங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்...’’ அப்படீன்னு சொன்னாரு. அவனுக்கும் சாப்புடலாம்னு ஒரு எண்ணம் வந்துச்சு. இருந்தாலும் அவனுக்கு அடுத்தவங்க வீட்டுல எச்சிலோட சாப்பாடு போட்டாங்கான்னா என்ன செய்யறதுன்னு யோசன செஞ்சான்..
அவனோட யோசனையப் பாத்த வீட்டுக்காரரு எங்க அவன் சாப்பிடாமப் போயிருவானோன்னு பயந்து போயி,‘‘ஐயா நீங்க எங்க வீட்டுல சாப்புட்டுத்தான் ஆகணும். நாங்க சுத்தபத்தமானவங்க நீங்க யோசிக்காதீங்க... நீங்க எப்படிக் கேக்குறீங்களோ அப்படியே நாங்க ஒங்களுக்குச் சாப்பாடு போடுவோம்ன்னு’’ சொன்னாரு. அவனுக்கும் பசிய அடக்க முடியல. ஆனாலும் அவனால எச்சி படாமச் சாப்பிடணுமேன்னு மனசுக்குள்ள யோசிச்சு யோசிச்சு மறுகி ஒரு முடிவுக்கு வந்தான். அந்த வீட்டுக்காரருக்கிட்ட சாப்புடுறதாச் சொன்னான். அதோடு மட்டுமில்லாம அவனால பசி பொறுக்க முடியாததால சாப்புட ஒத்துக்கிட்டான்..
அந்த வீட்டுக்காரருக்கு ரொம்பச் சந்தோஷமாப் போயிருச்சு. ராத்திரியில இலை கிடைக்காததால அந்த வீட்டுக்காரரு மங்குத் தட்டுல சாப்பாட்டக் கொண்டுக்கிட்டு வந்தாரு. அதப் பாத்த காசிக்குப் போறவன், ‘‘ஐயையோ என்னய்யா இது, என்னோட விரதத்தையே கெடுக்கப் பாத்துட்டியே... இந்தத் தட்டுல எத்தன பேரு சாப்பிட்டு எச்சி பண்ணியிருப்பாங்களோ...? அதுல எனக்குச் சாப்பாடு கொண்டுக்கிட்டு வர்றீயே... இது அடுக்குமாய்யா...ன்னு’’ கத்தினான்..
அந்த வீட்டுக்காரருக்கு ரொம்ப சங்கடமாப் போயிருச்சு. சரி எதுலதான் சாப்பாடு போடுறதுன்னு அவருக்குப் புரியல. அப்ப அவன் சொன்னான், ‘‘புது மண் சட்டி இருந்தா அதுல சோத்தப் போட்டுக் கொண்டுக்கிட்டு வாய்யா... அதுலதான் சாப்புடுவேன்... இல்லாட்டி ஒன்னோட வீட்டுல கை நனைக்க மாட்டேன்னு’’ சொன்னான். அந்த வீட்டுக்காரருக்கு ரொம்பச் சங்கடமாப் போச்சு. அவரு மண்சட்டிய எடுக்கறதுக்காக வீட்டுக்குள்ள போனாரு. இவன் சிரிச்சுக்கிட்டான். இந்தப் புது மண்சட்டியில யாரும் எச்சி பண்ணி சாப்புட்டு இருக்க முடியாது. நாந்தான் மொத மொதல்ல சாப்புடுறவனா இருக்கணும்... அந்தச் சட்டியில சாப்புட்ட ஒடனே அத ஒடச்சிப்போட்டுட்டா பின்னால யாராவது வந்து இந்த மண் சட்டியில சாப்புட மாட்டாங்கள்ன்னு நெனச்சிக்கிட்டான்..
வீட்டுக்காரரு வீட்டுக்குள்ளாற தேடுனாரு எறவானத்துல ஒரு புதுசா மண்சட்டி இருந்துச்சு... அத எடுத்துக்கிட்டு வந்து நல்லாக் கழுவி சாப்பாட்டப் போட்டாரு. அவனும் நல்லாச் சாப்புட்டான். வயிறு முட்ட சாப்புட்டுப்புட்டு கையக் கழுவிட்டு அந்தச் சட்டியப் போட்டு ஒடைக்கிறதுக்காகப் போனான். அதப் பாத்த அந்த வீட்டுக்காரரு அவன் பின்னாலேயே ஓடி வந்தாரு. அவரு ஓடி வந்ததப் பாத்த அவன், ‘‘எதுக்கு ஓடி வர்ரீகன்னு’’ கேட்டான். அதுக்கு அந்த வீட்டுக்காரரு அவனப் பாத்து, ‘‘ ஐயா அந்தச் சட்டிய என்ன பண்ணப் போறீங்கன்னு’’ கேட்டாரு. அதுக்கு அவன், ‘‘அதத் தூக்கிப் போட்டு ஒடச்சிறப் போறேன்னு’’ சொன்னான்..
அந்த வீட்டுக்காரரு பதறிப் போயி, ‘‘ஐயா அப்படி ஏதும் செஞ்சிறாதீக... ஒங்களுக்குப் புண்ணியமாப் போயிரும்... அத இப்படிக் கொடுங்கன்னு’’ சொல்லி அந்தச் சட்டிய வாங்கினாரு. அவனுக்கு ஒண்ணும் புரியல. அவரப் பாத்து, ‘‘இந்தச் சட்டிய ஏன் வாங்குறீங்கன்னு’’ கேட்டான்..
அதுக்கு அந்த வீட்டுக்காரரு, ‘‘அது இல்லீங்க... இந்தச் சட்டி ஒண்ணுதான் எங்க அப்பா ஞாபகமா எனக்கிட்ட இருக்குது... அதயும் ஒடச்சிட்டீங்கன்னா நான் என்ன செய்யறதுன்னு...’’ சொன்னாரு..
அவனுக்கு ஒண்ணும் புரியல. புரியாமலேயே, ‘‘இந்தச் சட்டி எப்படி ஒங்க அப்பாவ ஞாபகப்படுத்துது... அதக் கொஞ்சம் வெவரமாச் சொல்லுங்கன்னு’’ அவரக் கட்டாயப்படுத்துனான். வீட்டுக்காரரு மென்னு முழுங்கிக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சாரு. ‘‘அது ஒண்ணுமில்லங்க... எங்க அப்பா கடசிக் காலத்துல ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போக முடியாம இந்தத் திண்ணயிலதான் கிடந்தாரு. அப்ப இந்தச் சட்டியிலதான் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போவாரு. அவரு சாகற வரைக்கும் இந்தச் சட்டியிலதான் எல்லாத்தையும் அள்ளிக் கொட்டுனோம்... அந்தச் சட்டிய அவரு செத்ததுக்கப்புறமா அவரோட ஞாபகமா வச்சிருக்கோம்... நீங்க மண் சட்டியிலதான் சாப்புடுவேன்னு சொல்லிட்டதால வேற வழியில்லாம அந்தச் சட்டியக் கழுவிக்கிட்டு வந்து அதுல ஒங்களுக்குச் சோத்தப் போட்டுச் சாப்புடக் கொடுத்தேன்... அத நீங்க ஒடக்கிறதுக்குப் போனதுமே என்னோட மனசு கெடந்து ரெம்ப அடிச்சிக்கிருச்சு. அதனாலதான் ஒங்க பின்னாலேயே ஓடிவந்து அதப் பத்திரமா வாங்குனேன்னு’’ சொன்னாரு..
அதக் கேட்டவுடனேயே அவனுக்கு அருவருப்பா கொமட்டிக்கிட்டு வந்துருச்சி. சேச்சே போயும் போயும் இப்படிக் கேவலங்கெட்டவன் போட்ட சாப்பாட்டச் சாப்புட்டமேன்னு நெனச்சி வாந்தியெடுத்தான். அந்த வீட்டுக்காரனுக்கிட்ட, ‘‘அடப் பாவி இந்தப் பாவத்தப் போக்கணுமின்னா ரெண்டு தடவ கங்கையில குளிச்சே ஆகணும்... இனிமே இந்த இடத்துல ஒரு நிமிஷங்கூட தங்க மாட்டேன்னு’’ சொல்லிட்டு ராத்தியோட ராத்தியா அந்த ஊரவிட்டுக் கௌம்பிப் போனான்.
இனிமே யாரு வீட்டுலயும் சாப்புடக் கூடாது. அப்படியே சாப்புட்டாலும் மண்சட்டியில சாப்புடக் கூடாது. ரெம்பக் கட்டாயப்படுத்துனா எலையிலதான் சாப்புடணும். அதுலயும் வாழையிலையிலதான் சாப்புடணும்னு முடிவு செஞ்சிக்கிட்டு காசிக்கு நடந்து போனான். ஏற்கனவே அவ பொண்டாட்டியோட எச்சி பட்டதால ஒருக்கா கங்கையில குளிக்கணும். இப்ப இந்த வீட்டுக்காரனால இன்னொரு தடவை குளிக்கணும். ஆகமொத்தத்துல ரெண்டுதடவ முங்கிக் குளிச்சாத்தான் இந்தப் பாவமெல்லாம் போகும்னு நெனச்சிக்கிட்டே வேகவேகமா நடந்தான்..
இப்படியே நடந்து மறுநாளு ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தான். அந்த ஊருல தங்கி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு மறுநாளு பயணப்படலாம்னு நெனச்சிக்கிட்டு அந்த ஊருல போயி ஒரு வீட்டுத் திண்ணையில உக்கார்ந்தான். அப்ப அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரு வெளிய வந்து பாத்தாரு. காசிக்குப் போறவனப் பாத்து, ‘‘ஐயா யாரு நீங்க? எங்க போறீங்கன்னு’’ கேட்டாரு..
அவனும் தான் போற விவரத்தச் சொன்னான். ஒடனே அந்த வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷப்பட்டான். காசிக்குப் போறவனப் பாத்து, ‘‘ஐயா நானும் காசிக்குப் போகலாம்னு நெனச்சிக்கிட்டே இருக்கேன்... ஆனா என்னால போகத்தான் முடியல. ஒங்களுக்குக் கொடுத்து வச்சிருக்கு... நல்லாப் போயிட்டு வாங்க... இன்னக்கி நீங்க எங்க வீட்டுலதான் சாப்புடணும். நீங்க சாப்புட்டா எனக்குப் புண்ணியம்’’ அப்படீன்னான்..
அதுக்குக் காசிக்குப் போறவன், ‘‘ஐயா நான் இன்னிக்கு ராத்திரி ஒங்க வீட்டுல சாப்புடுறேன். ஆனா நான் வாழையிலையிலதான் சாப்புடுவேன். அப்பத்தான் என்னோட விரதம் பூர்த்தியாகும். நீங்க வாழையிலையில சாப்பாடு போடுறதா இருந்தா நான் இங்க சாப்புடுறேன்னு’’ கண்டிச்சுச் சொன்னான்..
அந்த வீட்டுக்காரனுக்கு ரொம்ப சந்தோஷம். இருந்தாலும் கொஞ்சம் வருத்தம். ஏன்னா அந்த ஊரு ரொம்ப ரொம்ப வறண்ட பிரதேசமா இருந்தது. டவுனுக்குள்ள போனாத்தான் இலை கிடைக்கும். அவரால அப்போதைக்கு டவுனுக்குள்ள போயி இலைய வாங்கி வரமுடியாது. சரி வீட்டுல இருக்கற இலைய வச்சி சாப்பாடு போட்டுருவோம்னு நெனச்சி நல்லா விருந்தா மனைவிக்கிட்ட செய்யச் சொன்னாரு..
நல்ல விருந்தா ஆக்கி வீட்டுல இருந்த காஞ்சி போன வாழை இலைய நல்லாக் கழுவிக்கிட்டு வந்து அவனக் கூப்பிட்டு ராத்திரிச் சாப்பாட்டப் போட்டாரு. அவனும் நல்லாச் சாப்புட்டான். வாய்க்கு ருசியா இருந்ததால இலைய வழிச்சிச் சாப்புட்டான். சாப்பிட்ட பிறகு இலைய எடுத்துக்கிட்டுக் குப்பையில போடப் போனான். உடனே அந்த வீட்டுக்காரரு பின்னாலயே ஓடிவந்து, ‘‘ஐயா இலையப் போட்டுறாதீங்க... அத ஏங்கிட்ட கொடுங்கன்னு’’ சொல்லி வாங்குனாரு..
காசிக்குப் போறவனுக்கு ஒண்ணும் புரியல. அவன் வீட்டுக்காரரப் பாத்து, ‘‘ஆமா எதுக்கு இந்த இலைய வாங்குறீங்கன்னு’’ கேட்டான், அதுக்கு அந்த வீட்டுக்காரரு, ‘‘ஐயா இந்தப் பக்கம் வாழை இலை கிடைக்கிறது பெரிசு. அப்படியே கிடைச்சாலும் விலையும் கூட. அதனால நாங்க என்ன செய்வோம்னா வர்ற விருந்தாளிங்களுக்கு இந்த இலையில சாப்பாட்டப் போட்டுட்டு, அவரு சாப்புட்ட பின்னால அந்த இலையக் கழுவி வெயில்ல காயவச்சிப் பத்திரமா எடுத்து வைப்போம். ஒங்கள மாதிரி யாராவது வந்தா திரும்பவும் அந்த இலைய எடுத்துக் கழுவிட்டுச் சாப்பாடு போடுவோம். அதுக்குத்தான் இந்த இலைய ஒங்கக் கிட்ட இருந்து வங்கினேன்னு’’ சொல்லிட்டு இலையக் கழுவி எடுத்துக்கிட்டுப் போனாரு..
இவனுக்கு வயித்தப் பொறட்டிக்கிட்டு வந்துருச்சு. அட நாசாமப் போறவனே என்னோட விரதத்தையே கெடுத்துட்டியேன்னு வாந்தியெடுத்தான். அவனுக்கு மனசுல ஒரு எண்ணம் ஓடுச்சு. இத்தனுண்டு எச்சி மொச்ச விழுந்ததுக்குக் காசிக்குப் போயி குளிச்சிப் பாவத்தப் போக்குறதுக்கு வந்தோம்னா இப்ப நடந்ததுக்கெல்லாம் எப்படி கங்கயைில போயிக் குளிக்கிறது... அப்படிக் குளிச்சாலும் பாவம் போகுமா...? காசிக்குப் போனாலும் கருமம் போகாதே... கட்டின பொண்டாட்டியோட எச்சி இத விட மோசமில்லை. ஏம் பொண்டாட்டியக் கொற சொல்லிட்டு வந்ததுக்கு எவனெவனோட எச்சியிலருந்து எல்லாத்தையும் சாப்புட வேண்டியதாயிருச்சு. நம்ம மேலதான் தப்பு. அவ மேல எந்தத் தப்பும் இல்லை... சே... நாமதான் பெரிய தப்புப் பண்ணிட்டோம்னு நெனச்சிக்கிட்டு காசிக்குப் போகாமா வேகவேகமா தன்னோட வீட்டுக்குத் திரும்பி வந்தான்..
போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடங்கற கதையில வீட்டுக்கு வந்த தன்னோட புருஷனப் பாத்த பொண்டாட்டி அவனக் கட்டிப் புடுச்சி அழுதா... அவனும் நடந்தது எதப் பத்தியும் சொல்லாம தன்னோட நிலைமைய நெனச்சுப் பாத்துகிட்டு பேசாமா இருந்துட்டான். எதையும் யாருக்கிட்டயும் அவன் சொல்லல. அன்னையில இருந்து எச்சின்னு சொல்லாமா அவம்பாட்டுக்கு பொண்டாட்டி போட்டதைச் சாப்புட்டான். இந்தக் கதைய இன்னக்கி வரைக்கும் இந்தப் பக்கம் சொல்லிச் சொல்லி எல்லாரும் சிரிப்பாக...