எல்லாரும் எல்லாத் தொழிலையும் கத்துக்கிட்டு வந்தவங்க இல்லை. சந்தர்ப்ப வசத்தால சிலபேரு வேற வழியில்லாம சில தொழிலச் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. நாளு ஆக ஆக அந்தத் தொழிலே நிரந்தரமாகவும் ஆயிரும். அதோடு மட்டுமல்லாம சிலபேரு எதேச்சையா எதாவது சொல்ல அது அப்படியே நடந்துரும். அது ஊருக்குள்ளாறப் பரவி அவரு பெரியாள ஆயிருவாரு. இப்படித்தான் ஒரு ஊருல ஒருத்தன் எந்த வேலைக்கும் போகாம வீட்டுல பொண்டாட்டி ஆக்கிப் போடறதத் தின்னுப்புட்டு சும்மா தூங்கிக்கிட்டே இருந்தான்.
இதப் பாத்த பொண்டாட்டிகாரிக்குக் கோபமான கோபம். இந்தாளு எப்பப் பாத்தாலும் தின்னுட்டே ஒரு வேலையும் செய்யாம படுத்துக்கிட்டுக் கிடக்கிறானேன்னு. அவளும் அவனக் கன்னாப் பின்னான்னு திட்டிப் பாத்தாள். ஆனாலும் அவன் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு பேசாமத் திங்கவும் தூங்கவுமா இருந்தான்.
பொறுத்துப் பொறுத்துப் பாத்த பொண்டாட்டிகாரி அவனுக்குத் தூக்குச் சட்டியில சோத்தப் போட்டுக் கொடுத்து எங்கயாவது போயி எதையாவது கத்துக்கிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்புனா. இனிமேலும் வீட்டுல சும்மா இருந்தா நம்ம பொண்டாட்டி அடிச்சே கொன்னுருவான்னு நெனச்சிக்கிட்டு புருஷங்காரனும் பொண்டாட்டிகிட்ட சோத்த வாங்கிக்கிட்டு பேசாம கால் போன போக்கில நடந்தான்.
அவனுக்கு எங்க போறதுன்னு தெரியல. வீட்டுக்கும் போறதுக்கும் பயம். எதையாவது எப்படி கத்துக்குறது. யாருக்கிட்ட போயி கத்துக்குறதுன்னு அவன் தெகச்சுப் போயிட்டான். இருந்தாலும் அவன் நடந்துகிட்டே இருந்தான். அப்படி நடந்து நடந்தே ஒரு பெரிய காட்டுக்குள்ளாற போயிட்டான். ஒரு பெரிய கள்ளி மரத்துக்குக் கீழே துண்ட விரிச்சுப் போட்டு கொஞ்ச நேரம் பேசாமப் படுத்தான். அப்பறமா பொண்டாட்டி கொடுத்துவிட்ட சாப்பாட்டச் சாப்புட்டான்.
பொழுதும் ஆயிருச்சு. எதையாவது ஓலையில எழுதிக்கிட்டுப் போனாத்தான் ராத்தி்ரிக்குச் சாப்பாடு போடுவா. இல்லையின்னா பட்டினியாப் போட்டே கொன்னுருவான்னு நெனச்சிக்கிட்டே இருந்தவன் பார்வையில கொஞ்சதூரத்துல ஒரு நரி பரபரன்னு மண்ணத் தோண்டிக்கிட்டுருந்ததப் பாத்தான். ஒடனே எழுத்தாணிய எடுத்து ஓலையில ‘‘நரி ஒன்று மண்ணைப் பரபரன்னு தோண்டிக்கிட்டே இருந்ததைக் கண்டேன்’’ அப்படீன்னு எழுதிக்கிட்டான்.
அப்பறமா அந்தக் கள்ளி மரத்துல இருந்து ஒரு கரட்டான் திடீருன்னு கீழே விழுந்து எந்துருச்சு வேகவேகமா ஓட ஆரம்பிச்சது. அதப் பாத்த அவன் ஓலையில ‘‘கரட்டான் ஒன்று வேக வேகமா ஓடக்கண்டேன்’’ அப்படின்னு எழுதிக்கிட்டான். அப்பறமா கள்ளி மரத்தை அன்னாந்து பாத்தான். அங்க ஒரு ஆந்தை ஒக்காந்துக்கிட்டு அவனயே குறுகுறுன்னு பாத்துக்கிட்டு இருந்துச்சு. ஒடனே அவன், ‘‘ஆந்தையொன்று குறுகுறு என்று பார்க்கக் கண்டேன்’’ அப்படீன்னு ஓலையில எழுதிக்கிட்டான்.
அப்பறம் பொழுது போகவே எழுந்து வீட்டைப் பாத்து நடந்தான். வீட்டுக்கு வர்ரபோது இருட்டிருச்சு. இருட்டுல புருஷங்காரன் வந்ததைப் பாத்துட்டு அவனுக்கிட்ட ‘‘என்ன எதையாவது படிச்சிட்டு வந்தீங்களா?’’ அப்படீன்னு கேட்டாள். அவனும் ‘‘ஆமாமா படிச்சிட்டு வந்தேன்... எனக்கு மொதல்ல சாப்பாட்டப் போடு... பெறகு தூங்கப்போறபோது நான் கத்துக்கிட்டதச் சொல்றேன்னு’’ சொல்லிப்புட்டு பையக் கொண்டுபோயி வீட்டுக்குள்ளாற வச்சிட்டு கையக்காலக் கழுவிக்கிட்டு வந்து பொண்டாட்டிகிட்ட சோத்தப் போடச் சொன்னான்.
அவளும் பாவம் இந்தாளு பசி பொறுக்க மாட்டானேன்னு நெனச்சிக்கிட்டு அவனுக்குச் சோத்தப் போட்டா. புருஷனும் பொண்டாட்டியும் சாப்புட்டுப்புட்டு படுக்கப் போனாங்க. அப்ப நடுச்சாமமா ஆயிருச்சு. படுக்கற போது பொண்டாட்டிகாரி புருஷங்காரனுக்கிட்ட ஏங்க இன்னக்கி என்னத்தப் படிச்சிக்கிட்டு வந்தீங்க சொல்லுங்கன்னு கேட்டா.
அவனும் ஓலைய எடுத்து அதுல எழுதியிருந்தத வாசிச்சிக்காட்டினான். அவன் மெதுவாச் சொன்னதால அவளுக்குக் காதுல சரியா விழல. அவ சத்தமாத்தான் சொல்லுங்களேன்னு சொன்னவுடன் அவனும், ‘‘நரி மண்ண பரக்குப் பரக்குண்ணு தோண்டுதுன்னு’’ சத்தமாச் சொன்னான்.
அந்தச் சமயம் பார்த்துப் பக்கத்துவீட்டுச் சுவத்துல கன்னமிட்டுக்கிட்டு இருந்த களவானிப் பயலுக இதக் கேட்டுட்டு ‘‘ஆகாகா இந்தவீட்டுக்காரன் பெரிய ஜோஸியக்காரன் போலருக்குது. பாருங்கடா நாம மண்ண நோண்டுறத நேருல பாத்ததுமாதிரி சொல்றான். நரின்னு அவஞ் சொன்னது நம்மளத்தாண்டா. வாங்கடா பேசாமப் போயிருவோம்னு’’ சுவத்து மண்ணத் தோண்டுறத விட்டுப்போட்டு ஓடப்பாத்தானுக. அப்ப ஒருத்தன், டேய் இதுக்கெல்லாம் பயந்துகிட்டு ஓடாதீங்கடா... அவன் வீட்டுக் கூரைய லேசா நீக்கிக்கிட்டுப் பாருங்கடா அவன் சொல்லறது உண்மையான்னு தெரிஞ்சிடும்னு’’ சொன்னான்.
மத்த களவானிப் பயலுகளும் அட, ஆமாடா யாராவது ரெண்டுபேரு போயிப் பாருங்கடான்னு சொல்லி அவனுகள அந்த வீட்டுக் கூரையத் தூக்கிக்கிட்டுப் பாக்க அனுப்புனாங்க. அங்க போன களவானிப்பயலுக கூரையத் தூக்கிக்கிட்டுப் பாத்தானுக. இருட்டுக்குள்ளாற எதுவும் தெரியாததால குறுகுறுன்னு பாத்தானுக. அப்பப் பாத்து புருஷங்காரன், ‘‘ஆந்தை ஒன்று குறுகுறு என்று பார்க்கக் கண்டேன்’’ அப்படீன்னு சொன்னான்.
கூரையத் தூக்கிக்கிட்டுப் பாத்த களவானிப் பயலுகளுக்கு தூக்கி வாரிப் போட்டுருச்சு... ‘‘அடேயப்பா இந்தாளு பெரிய ஜோஸியக்காரந்தான் நாம பாத்தத அப்படியே சொல்லிபுட்டானய்யான்னு’ மெதுவா அங்கருந்து ஓடப்பாத்தானுக.
அப்படி ஓடப் போறபோது அவனுக காலுல கீழ கெடந்த பெரிய நீளமான மரக்கட்டை தட்டிவிட விழுந்து எந்துருச்சானுக. அப்பப்பாத்து புருஷங்காரன், ‘‘கரட்டான் ஒண்ணு கீழவிழுந்து வேகவேகமா ஓடக்கண்டேன்னு’’ சொன்னான். இதக் கேட்ட ஒடனே அந்தக் களவானிப் பயலுக, ‘‘இந்த ஆளு பெரிய ஆளுத்தான் போலருக்குதுன்னு’ நெனச்சிக்கிட்டு பேசாமப் போயிட்டானுக.
அப்படிப் போனவனுக விடிகாலையில வந்து அவனோட காலுல விழுந்து, ‘‘ஐயா ஒங்களக் கும்புடுறோம். தயவு செஞ்சு நாங்க நேத்து ராத்திரி களவு செய்யக் கன்னமிட்டதை யாருக்கிட்டயும் சொல்லிப்புடாதீகன்னு சொல்லி கொஞ்சப் பணத்தையும் கொடுத்துட்டுப் போனனுக.
பொண்டாட்டிகாரிக்கு ரெம்பச் சந்தோஷமாப் போயிருச்சு. ஆகாகா நம்ம புருஷன் இப்படிப்பட்ட பெரிய ஜோஸியக்காரன இருக்கறானேன்னு சந்தோஷப்பட்டா. இப்படி இருக்கயில ஒரு நா அந்த ஊரு வண்ணானுடைய கழுதை காணாமாப் போயிருச்சு. வண்ணானும் வண்ணாத்தியும் அழுது பொலம்பிக்கிட்டு இருந்தாக.
அதப்பாத்த ஜோஸியக்காரனோட பொண்டாட்டி, ‘‘ஏங் கவலப்படுறிய... ஏம்புருஷன் நல்லா ஜோஸியம் பாப்பாரு. அவருகிட்ட ஒங்க கழுத எங்க இருக்குண்ணு கேளுங்க. அவரு ஒடனே சொல்லிருவாருன்னு’’ சொன்னவுடனேயே அந்த வண்ணானும் அவனோட மனைவியும் எழுந்திருச்சி வந்து தங்களோட குறையச் சொல்லி கழுதையக் கண்டுபிடுச்சித் தரணும்னு கேட்டுக்கிட்டாங்க.
அதக்கேட்ட புருஷங்காரனுக்கு ஒன்னும் பேசமுடியல. அவனால எதுவும் பேச முடியாமப் போயிருச்சு. என்னடா இது பெருந்தொல்லையாப் போயிருச்சேன்னு பேசாம யோசனை செஞ்சிக்கிட்டு இருந்தான். அதப்பாத்த அவனோட பொண்டாட்டி தன்னோட கணவன் நிச்சயமா எங்க வீ்ட்டுக்காரரு ஒங்களோட கழுதையைக் கண்டுபிடிச்சிக் கொடுத்துருவாரு. கவலைப்படாமப் போயிட்டு நாலைக்கு வாங்கன்னு’ சொல்லி அனுப்பி வச்சா.
அவனுக்கு ஒண்ணுமே புரியல. மறுபடியும் அவன் பொண்டாட்டி சோத்தக் கட்டிக் கொடுத்து போயி ஜோஸியத்தைப் பாத்து அந்தக் கழுதையைக் கண்டுபிடிங்கன்னு சொல்லி அனுப்புனா. தன்னோட தலைவிதியை நொந்துக்கிட்டே புருஷங்காரன் நடந்தான். அப்படி நடந்து நடந்து ஊரோட எல்லைக்கு வந்துட்டான்.
எப்படி அந்தக் கழுதையைக் கண்டுபிடிக்கிறதுன்னு யோசிச்சிக்கிட்டே அங்க இருந்த ஒரு மரத்தடியில ஒக்காந்தான். அப்பப் பாத்து ஒரு கழுதை கத்துற சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தக் கேட்ட அவன் எந்திருச்சுப் போயிப் பாத்தான். அங்க ரெண்டு கழுதைங்க மேஞ்சிக்கிட்டு இருந்துச்சுங்க. இது அந்த வண்ணானோட கழுதைங்களா இருக்கணும்னு நெனச்சி அதுகள ஓட்டிக்கிட்டுப்போயி ஊருக்குள்ளாற இருக்கற ஒரு இடிஞ்சிபோன வீட்டுக்குள்ளாற விட்டுட்டான். அந்தக் கழுதைங்க அங்ஙனயே படுத்துக்கிருச்சுக.
அப்பறமா வீட்டுக்கு வந்தவன் தன்னோட மனைவியைக் கூப்பிட்டு அந்த வண்ணானை வரச் சொன்னான். அதே சமயத்துல வண்ணானும் அவன் வீட்டுக்குச் சொல்லி வச்சாப்புல வந்தான். அவனப் பாத்த புருஷங்காரன், ‘‘ஒன்னோட கழுதைங்க இந்த ஊருக்குள்ளாற இருக்கற பாழடைஞ்ச வீ்ட்டுக்குள்ளாற நிக்குதுங்க. ஒடனே போயிப் புடிச்சுக்க’’ அப்படீன்னு சொன்னான்.
அதெப்படி நாம அதுக்குள்ளாற எல்லாந்தானே தேடுனோம் அப்பக் காணமே? அந்த வீட்டுக்குள்ளாற யாரும் போனதில்லை. பேயி இருக்குதுன்னு சொல்லுவாங்க... இவரு சொல்றது மாதிரி போயித்தான் பாப்பம்னு நெனச்சிக்கிட்டு வேகவேகமாப் போயிப் பாத்தான். ஜோசியக்காரன் சொன்ன மாதிரியே கழுதைங்க அந்த எடத்துல படுத்துக் கிடந்ததுங்க.
அவனும் இவரு பெரிய ஜோசியக்காரருதான்னு நெனச்சி சந்தோஷப்பட்டான். நேரா ஜோசியக்காரனுக்கிட்ட வந்து அவனப் புகழ்ந்துட்டுக் கொஞ்சம் பணத்தையும் காணிக்கையாக் கொடுத்துட்டுப் போனான். இவன் ஜோசியம் பாக்குறது ஊருல எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சு.
ஊரே இவனப்பத்தித்தான் பேசுச்சு. வர்ரவன் போறவன் எல்லாருக்கிட்டயும் வண்ணானும் அவனோட பொண்டாட்டியும் ஜோசியக்காரனோட பெருமையை எடுத்துச் சொல்லிக்கிட்டே இருந்தாங்க.
இப்படி இருக்கற சமயத்துல அந்த நாட்டு ராஜாவோட அரண்மனையில ராணியோட தங்கப் பதக்கஞ் சங்கிலி காணாமப் போயிருச்சு. ராஜா எங்க தேடியும் கண்டு பிடிக்க முடியல. யாரு எடுத்தாங்கண்ணும் தெரியல. என்ன செய்யறதுன்னு பினாவிக்கிட்டு இருந்தாரு.
அப்பத்தான் இந்த ஜோசியக்காரன் காணாமப் போன பொருளையெல்லாம் கண்டுபிடிச்சிக் கொடுக்கறதாவும் அவன் சொன்னா சொன்னபடி எல்லாம் நடக்கிறதாகவும் ராஜா கேள்விப்பட்டாரு. ஒடனே இந்தச் ஜோசியக்காரனப் போயி ஆளுவிட்டுக் கூப்புட்டாரு.
இவனுக்குப் பயமாப் போயிருச்சு. ஆகாகா நம்மல வசமா சிக்கவச்சிப்புட்டாங்களே. இப்ப நான் என்ன செய்யிறது. அப்படீன்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டுப் பயந்து நடுங்கிக் கிட்டே போனான். ராஜா அவனப் பாத்து, ‘‘ஏய் ஜோசியக்காரா, ராணியோட தங்கப்பதக்கஞ் சங்கிலி காணாமாப் போயிருச்சு. அத இன்னும் ரெண்டு நாள்ல கண்டுபுடுச்சுக் கொடுக்கலன்னா ஒன்னோட கண்ணயும் மூக்கையும் வெட்டிப் போட்டுருவேன்னு’’ சொல்லி அனுப்புனாரு.
அந்தச் ஜோசியக்காரன் அரண்மனையிலிருந்து பொறப்புட்டு கண்ணுப்போச்சு மூக்குப் போச்சுன்னு பொலம்பிக்கிட்டே வந்தான். வீட்டுக்கு வந்தவன் பொண்டாட்டிக்கிட்ட நடந்ததச் சொன்னான். அவ நமக்கு ராஜா நெறைய வெகுமதியெல்லாம் தருவாரு. நீங்க சீக்கிரமா ஒங்க ஜோசியத்த வச்சிக் கண்டுபிடிங்கன்னா. இவனுக்கு ஒண்ணும் புரியல. சரி என்ன செய்யறதுன்னு நெனச்சிக்கிட்டு அந்த ஊருக் கொளத்தங் கரைப் பக்கமாப் போயி நடந்துட்டு வரலாமேன்னு போனான்.
அங்க போயி அந்தக் கொளத்துப் படிக்கட்டுல ஒக்காந்துக்கிட்டு, ‘‘ஐயோ ஏங் கண்ணுப்போச்சு... மூக்குப்போச்சே...ன்னு’’ பொலம்ப ஆரம்பிச்சிட்டான். அப்பப் பாத்து அந்தக் கொளத்துல தண்ணி எடுக்கறதுக்காக ரெண்டு பொம்பளைங்க கொடத்த எடுத்துக்கிட்டு வந்தாங்க. அவளுக ரெண்டு பேரும் ராஜா வீட்டுல சமைய வேலை பாக்குறவங்க. ஒருத்தி ராணிக்குச் சாப்பாட்டக் கொண்டு போயி கொடுக்குறவ. அவளுகள்ள ஒருத்தி பேரு கண்ணாயி. இன்னொருத்தி பேரு மூக்காயி. ஆகா இந்த ஜோசியக்காரன் தங்களத்தான் இப்படி குறிப்பாச் சொல்றாம் போலருக்குன்னு அவங்க ரெண்டு பேரும் நெனச்சிக்கிட்டு கொடத்தக் கழுவிக்கிட்டே தங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டாங்க. ‘‘அடீ கண்ணாயி நாம ரெண்டுபேரும் ராணியோட நகையக் களவாண்டு அதை சமையக்கட்டுக்குள்ளாற இருக்கற அரிசி மூட்டைக்குள்ளாறள்ள போட்டு வச்சிருக்கோம். இந்தச் ஜோசியக்காரன் அதக் கண்டுபிடுச்சிட்டான்டி. பத்தாததுக்கு நம்ம பேர வேற சொல்றாண்டி. நாம இப்ப என்னடி செய்யறதுன்னு?’’ மூக்காயியப் பாத்துக் கேட்டா.
அதுக்கு மூக்காயி, ‘‘அடி ஆமாடி நாம வசமாக் கையும் களவுமா மாட்டிக்கிட்டோம். இருந்தாலும் நமக்குத் தெரியாதுன்னு சொல்லிப்புடுவோம். இந்த விஷயம் ஒனக்கும் எனக்கும் மட்டும்தானே தெரியும். யாருக்கிட்டயும் சொல்லிக்காமா இந்த ஊர விட்டுப் போயிருவோம்னு’’ சொல்லிக்கிட்டே தண்ணியத் தூக்கிக்கிட்டுப் போனாங்க. படித்தொறையில ஒக்காந்திருந்த அந்த ஜோசியக்காரனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிபோச்சு. ஒடனே அவன் வேகவேகமா ஓடிப்போயி ராஜாக்கிட்ட ராணியோட நகையத் களவாண்டவங்க அரண்மனையில வேலை பாக்குற ரெண்டு சமையக்காரிங்க. அவங்க நகையத் திருடிப்புட்டு அதை அப்படியே அரிசி மூட்டைக்குள்ளாற போட்டு வச்சிருக்காங்க. ஒடனே போயி சமையக்கட்டுல இருக்கற அரிசி மூட்டைக்குள்ளாறப் பாக்கச் சொல்லுங்க நகை கெடச்சுரும்’’ அப்படிடீன்னு சொன்னான்.
ராஜாவும் அவன் சொன்ன மாதிரியே தேடிப்பாக்கச் சொன்னான். நகை கெடச்சிடுச்சு. அங்க வேலைபாத்த கண்ணாயியும் மூக்காயியயும் புடுச்சிக் கொண்டுக்கிட்டு வாங்கடான்னு ஆள அனுப்பினாரு ராஜா. ஆளுகபோயி ஊரவிட்டு ஓட இருந்த அந்தப் பொம்பளைங்களப் புடுச்சிக் கொண்டுக்கிட்டு வந்தாங்க. ராஜாகிட்ட அவங்க அழுது பொலம்புனாங்க. எங்கள மன்னிச்சி விட்டுருங்கன்னு கதறுனாங்க.
அவங்க கதறுன கதறலப் பாத்த ராஜா சரி போனாப் போகுதுன்னு அவளுகளோட மூக்க மட்டும் அறுத்துவிட்டுட்டாரு. ஜோசியக்காரனக் கூப்புட்டு நெறைய பொன்னும் பொருளும் கொடுத்தாரு. அதோட மட்டுமல்லாம அவன அரண்மனைச் ஜோசியக்காரன ஆக்கனும்னு நெனச்சாரு.
இதக் கேள்விப்பட்ட ஜோசியக்காரன் இனிமேலும் இந்த ஊருல இருந்தா நம்ம கதி அதோ கதிதான். அதுலவேற அரண்மனை ஜோசியக்காரன்னா நம்மள தெனந்தோறும் கொன்னு எடுத்தப்புடுவாங்க. நமக்கு ஒண்ணுந் தெரியாது. எத்தன நாளுதான் இப்படி குத்து மதிப்பாவே ஜோசியஞ் சொல்லிக் காலத்த ஓட்டறது. ராஜா நம்மளக் கூப்புட்டு பதவியக் கொடுக்கறதுக்குள்ளாற நாம இந்த ஊர விட்டே போயிரணும்னு நெனச்சிக்கிட்டு அதப் பொண்டாட்டிக்கி்டயும் சொல்லி அவளயும் கூட்டிக்கிட்டு ஊரவிட்டே போயிட்டான்