எல்லா ஊருகள்லேயும் சாமிகளப் பத்தி நெறைய கதைகள் இருக்கும். ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். அதுலயும் எங்க ஊருப் பிள்ளையாரு, அனுமாரு சாமிகளப் பத்தி ரெம்பச் சுவையான கதை ஒண்ணு மக்களிடத்தில வழங்கி வருது.
எல்லாத் தெய்வங்களும் கண்டு பயப்படுற தெய்வம் ஒண்ணு இருக்கு. எது தெரியுமா? அந்தத் தெய்வந்தான் சனி பகவான். அவரு தன்னோட சக்தி என்னன்னு தெரிஞ்சிக்கணும்னு நெனச்சாரு. தன்னக் கேள்விப்பட்டவுடனேயே எல்லாரும் ஒரு மாதிரியா மூஞ்சியச் சுளிக்கிறாங்களே. அப்ப நம்மகிட்ட எந்த சக்தியும் இல்லயான்னு நெனப்பு அவருகிட்ட வந்துருச்சு.
சரி இத நாம சோதிச்சுப் பாத்துருவோம்னு நெனச்சிக்கிட்டு ஒரு நாளு தன்னோட இருப்பிடத்தில இருந்து பொறப்பட்டு ஒவ்வொரு இடமாப் போனாரு. எல்லாரும் அவரப்பாத்துப் பயந்துகிட்டு அவர வணங்கிப் போனாங்க. அவரு சிவலோகத்துக்குப் போனாரு. சிவபெருமான் அவரைப் பாத்து, ”என்ன இப்படி இந்தப் பக்கமா வந்திருக்கீங்க... என்ன விசயம்னு?” கேட்டாரு.
அதுக்குச் சனிபகவான் “எல்லாப் பயலும் அவனவன் சண்ட போட்டுக்கிற போது என்னையத் தேவையில்லாம வம்புக்கு இழுக்கிறான். சனியனே! சனியனாட்டம்னு திட்டுறான். மனுசங்ககிட்டக் கூட எம்மேல இருக்குற பயமில்லாமப் போயிருச்சு... அதனால என்னோட சக்தியத் தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்... என்னய எல்லாரும் மதிக்கறாப்புல செய்யணும். அதனால நானு ஒங்களக் கொஞ்சம் புடிச்சிக்கிருறேன்... நான் ஒங்களப் புடிச்சிக்கிட்டா... ஒலகத்துல எல்லாரும் என்னயப் பாத்துக் கும்புடுவாங்க... அதனால நான் ஒங்களப் புடிக்கப் போறேன்’’னு சொல்லிட்டு அவரப் புடிக்கப் போனாரு.
இதப் பாத்த ஈசுவரன் சிவலோகத்துல இருந்து வேக வேகமா ஓடுனாரு. சனி பகவானும் ஈசுவரனப் புடிக்கிறதுக்காகப் பின்னாலயே ஓடுனாரு. ஈசுவரன் திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டு ஓடிக்கிட்டே இருந்தாரு. சனி பகவானும் விடாமத் தொரத்திக்கிட்டே இருந்தாரு. ஈசுவரனால ஓட முடியல. அதனால அவரு சுத்துமுத்தும் பாத்துப்புட்டு பக்கத்துல இருந்த அரளிச் செடியப் பாத்தாரு.
அந்த அரளிச் செடியில அப்பத்தான் பூப்பூக்க ஆரம்பிச்சிருந்தது. அதப் பாத்த ஈசுவரன் அந்த அரளிச் செடிப் பூவுக்குள்ளாறப் போயி ஒழிஞ்சிக்கிட்டாரு. ரொம்பத் தாமதமா அந்த எடத்துக்கு வந்த சனிபகவான் ஈசனைக் காணோமேன்னு அங்கயும் இங்கயும் தேடித் திரிஞ்சாரு. எங்க தேடியும் காணோம்னுட்டு சரி இங்கதான் எங்கயாவது இருப்பாருன்னு நெனச்சிக்கிட்டு அங்கனயே ஒக்காந்துட்டாரு.
ரொம்ப நேரமாச்சு. அரளிப் பூவுக்குள்ளாற இருந்த ஈசுவரன் சரி இனி சனி பகவான் வரமாட்டாரு... நாம வெளியில வந்து சிவலோகத்துக்குப் போயிருவோம்னு நெனச்சிக்கிட்டு மெதுவா அரளிப்பூவ விட்டுட்டு வெளியில வந்தாரு.
அதப் பாத்த சனிபகவான், “மகேசா எனக்குப் பயந்துக்கிட்டா இந்த அரளிப்பூவுக்குள்ளாறப் போயி ஒழிஞ்சிக்கிட்டீங்க... என்னப் பாத்து அப்படியொரு பயமா... ரொம்ப நேரமா பூக்குள்ளாறயே இருந்திட்டீங்களே!”ன்னு கேட்டாரு.
அதக் கேட்ட ஈசன், “சனி பகவானே... ஈசுவரனான என்னையையே ஓட வச்சிட்டீங்களே... என்னயவே கதிகலங்க வச்சதனால இனி உங்கள எல்லாரும் சனீஸ்வரன்னு கூப்புடுவாங்க... இனிமே நீங்க கவலப்படாதீங்க... உங்களயும் மதிப்பாங்கன்னு” சொன்னாரு.
சனிபகவானுக்கு ரொம்பச் சந்தோஷம். ஆஹா, ஈசுவரனே நம்மலப் பாத்துப் பயந்து போயிட்டாரு. இருந்தாலும் இன்னும் ரெண்டு மூணுபேரையாவது சோதிச்சுப் பாக்கணும்னு நெனச்சிக்கிட்டு ஈசன வணங்கிட்டு அவரையே இதப்பத்திக் கேட்டாரு.
ஈசனும், “உன்னோட ஆசைய நிறைவேத்திக்க அனுமாரையும், பிள்ளையாரையும் போயிப் பாத்து அவங்களப் புடி. அப்ப உன்னோட சக்தி உனக்கே தெரியும்னு” சொல்லி அனுப்பிச்சாரு.
சனிபகவான் சனீஸ்வரனா மாறின ஒடனே நேரா அனுமாரு இருக்கற இடத்தை நோக்கிப் போனாரு. ரொம்ப தூரம் போன உடனேயே அனுமாரச் சனீசுவரன் கண்டுபிடிச்சிட்டாரு. அனுமாரக் கண்ட சனீசுவரன் அவரப் பாத்து, “நானு யாரு தெரியுமா? நான் இப்ப வெறும் சனி பகவான் இல்ல. ஈசனையே புடிச்ச சனீசுவரன் வந்துருக்கேன். நீ என்னயப் பாத்துட்டுப் பேசாம இருக்கலாமா..? என்ன வணங்கனுமில்ல...”ன்னு கேட்டாரு.
அதுக்கு அனுமாரு, “சனீசுவரா நான் ராமநாமத்திலேயே மூழ்கிப் போனதால நீ வந்ததக் கவனிக்கல... மன்னிச்சிடு... உன்னை வணங்குறேன்... நீ எதுக்கு வந்தே...? அதச் சொல்லு...” அப்படீன்னாரு.
அதுக்குச் சனீசுவரன், “நானு ஒன்னயப் புடிக்க வந்துருக்கேன்... புடிச்சிக்கவா...” அப்படீன்னு கேட்டாரு. அதக் கேட்ட அனுமாரு, “நல்லாப் புடிச்சிக்கோ... ஏன் என்னயப் புடிக்கிறே... என்னோட மடியிலேயே வந்து ஒக்காரு... ஒன்னய யாரு வேணாம்னு சொன்னாங்க” அப்படீன்னு சொன்னாரு.
அதக் கேட்ட சனிபகவான், “அட அனுமாரு பயப்படுவாருன்னு நெனச்சா அவரு மடியில வந்து என்னய ஒக்காரச் சொல்ராரு... பரவாயில்லையே, நம்மளையும் மதிச்சு மடியில ஒக்காரச் சொன்னா அனுமாருக்கிட்ட நம்மளோட சங்கதியக் காட்டிர வேண்டியதுதான்னு” நெனச்சிக்கிட்டு வேகவேகமாப் போயி அனுமாரு மடியில ஒக்காந்துக்கிட்டாரு.
கொஞ்சநேரம் மடியில இருக்க வச்ச அனுமாரு தன்னோட கதாயுதத்த எடுத்து சனிபகவான் மேல வச்சாரு... அதனோட கனத்தைத் தாங்கமாட்டாத சனிபகவான், “இதென்ன, இதையெல்லாம் என்னோட தலையில கொண்டாந்து வக்கிற... அத எடுத்துத் தூரப்போடு” அப்படீன்னு சொன்னாரு.
அதுக்கு அனுமாரு, “என்னோட மடியிலதான ஒக்காந்துருக்க... இந்தக் கதாயுதத்தைத் தாங்குனாத்தான் நீ என்னோட மடியில ஒக்காரலாம்... இல்லைன்னா ஒக்கார முடியாதுன்னு” சொன்னாரு. அதக் கேட்ட சனிபகவான். ‘‘இதென்னடா பெரிய தொல்லையாப் போச்சு... நாம இவன் மடியில ஒக்காந்தா செத்தே போயிருவோம்... போல இருக்கே... இவனோட நாம சண்ட போட முடியாது... நாம இப்படியே தப்பிச்சுப் போயிருவோம்னு நெனச்சிக்கிட்டு, அனுமாருகிட்ட, “அனுமாரே அனுமாரே தயவு செஞ்சி ஏந்தலையில இருக்கற கதாயுதத்தை எடுத்துரு... என்னாலே அதோட கனத்தைத் தாங்க முடியல... மூச்சு முட்டுது... ஒன்னக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்... இனிமே ஒன்னய வந்து புடிக்க மாட்டேன்... என்னயக் காப்பாத்துன்னு...” கெஞ்சுனாரு.
சனிபகவானோட கதறலக் கேட்ட அனுமாரு, “சரி சரி ஒன்னய விட்டர்றேன்... நீ என்ன பண்றன்னா இனிமே என்னய மட்டுமில்ல என்னயக் கும்புடுறவங்களையும் வந்து புடிக்கக் கூடாது... அவங்கள நீ ஒண்ணுஞ் செய்யப்படாது...” அப்படீன்னு சொன்னாரு. அதக் கேட்ட சனிபகவான், “இனிமே நீ இருக்கற பக்கமும் ஒன்னக் கும்புடுறவங்க பக்கமும் நான் போகவே மாட்டேன்”ன்னு சொல்லிப்புட்டு தப்பிச்சேன் பொழச்சேன்னு ஒடுனாரு.
அப்படியே ஓடிப்போயிக்கிட்டே இருக்கறபோது அவருக்குப் பிள்ளையாரப் பத்தின ஞாபகம் வந்துச்சு. அந்த வேகத்தோடயே போயி புள்ளையாரப் புடிக்கலாம்னு அவரப் பாக்குறதுக்குச் சனிபகவான் போனாரு. அப்படிப் போறபோது பிள்ளையாரு அரசமரத்தடியில ஆத்தங்கரையில ஒக்காந்து இருந்தாரு.
அவரப் பாத்த சனிபகவான் ஒரு கும்புடப் போட்டுட்டு, ”பிள்ளையாரே பிள்ளையாரே நான் எதுக்கு வந்துருக்கேன் தெரியுமா? ஒன்னயப் புடிக்கிறதுக்காக வந்துருக்கேன். புடிக்கலாமா” அப்படீன்னு கேட்டாரு. அதக் கேட்ட புள்ளையாரு, “நாளைக்குக் காலையில வா, அப்ப வந்து என்னைப் புடிச்சுக்கோன்னு” சொன்னவுடனேயே சனிபகவானுக்கு சந்தோஷமாப் போயிருச்சு... அட நம்மளப் பாத்தவுடனேயே ஆளு பயந்து போயிட்டாரேன்னு நெனச்சிக்கிட்டு மறுநாளு வர்றதாச் சொல்லிட்டுப் போயிட்டாரு.
புள்ளையாரு சொன்னமாதிரி மறுநாளு காலையில வந்தாரு சனிபகவான். அவரப் பாத்த புள்ளையாரு, “என்ன என்னயப் புடிக்க வந்தியா... என்னோட முதுகுப் பக்கத்தைப் போயிப்பாரு... பாத்துட்டு வந்து புடின்னு” சொல்லிப்புட்டு பேசாம ஒக்காந்துக்கிட்டாரு.
சனிபகவானும் புள்ளையாரு முதுகுப் பக்கம் வந்து பாத்தாரு, அதுல, “இன்று போய் நாளைவா” அப்படீன்னு எழுதியிருந்துச்சு... அதப் பாத்துட்டு, “இன்று போய் நாளைவா”ன்னு எழுதியிருக்கு... அப்ப நானு ஒங்கள எப்பப் புடிக்கிறதுன்னு புள்ளையாருக்கிட்ட கேட்டாரு.
“அதான் நீயே சொல்லிட்டியில்ல... அப்பறம் எதுக்கு நிக்கற... இன்று போய் நாளைவான்னு” சொல்லிட்டுப் பேசாம இருந்துட்டாரு. அவரு சொன்னதக் கேட்ட சனிபகவான், சரி அவரு சொன்னமாதிரியே நாளைக்கு வருவோம்னு நெனச்சிக்கிட்டு போயிட்டு மறுநாளு வந்தாரு. மறுநாளும் புள்ளையாரு மொதநாளு சொன்ன மாதிரியே சொன்னாரு... இப்படியே தெனந்தோறும் நடந்து வெகுநாளாயிருச்சு... ஒவ்வொரு நாளும் சனிபகவான் ஏமாந்துகிட்டே இருந்தாரு...
அப்பறமா சனிபகவானுக்கு சலிச்சிப் போயிருச்சு... ஆகா நம்மள அறிவால இந்தப் புள்ளயாரு செயிச்சிட்டாரேன்னு நெனச்சிக்கிட்டு, புள்ளையாருக்கிட்டப் போயி, “புள்ளையாரப்பா எனக்குத்தான் அறிவில்லாமப் போச்சி... ஈசன் என்னோட மனசத் தேத்தணுங்கறதுக்காகத்தான் நாடகமாடி அரளிப்பூவுக்குள்ளாறப் போயி ஒழிஞ்சிக்கிட்டாரு... நானும் அவரப் புடிச்சிட்டதா நெனச்சிப் பெருமப்பட்டுக்கிட்டேன். அந்தப் பெருமை வெறும் வெத்துவேட்டுன்னு ஒங்களோட அறிவுப்பூர்வமான செயலால தெரிஞ்சிகிட்டேன்... இனிமே நானும் தர்ம நாயப்படி நடந்துக்கறேன்... ஒங்களக் கும்புடுறவங்க பக்கம் இனித் திரும்பிக் கூடப் பாக்கமாட்டேன்... என்னய மன்னிச்சிருங்கன்னு” சொல்லிட்டுப் போயிட்டாரு. அதுலேருந்து அனுமாரக் கும்புடரவங்களையும் புள்ளையாரக் கும்புடுறவங்களையும் சனிபகவான் புடிக்கறதே இல்லை... அப்படிப்பட்ட கோயிலு இன்னமும் எங்களோட வட்டாரமான மேலைச்சிவபுரியில இருக்கு...