பிறவியிலேயே கெட்டவங்களா இருக்கறவங்களத் திருத்தவே முடியாது. நாய் வால நிமித்த முடியுமான்னு சொல்வாங்க. அது மாதிரி சில பேரு மத்தவங்களுக்கு எதாவது கெடுதல் செஞ்சிக்கிட்டே இருப்பாங்க. அவங்க கூட நண்பனா இருக்கறவங்களுக்கும் கெடுதல் செய்வாங்க. என்னடா இப்படிப் பண்ணிட்டியேன்னு கேட்டாக்க நான் என்ன செய்யறது... என்னோட பிறவிக் குணம் அப்படிச் செய்யச் சொல்லுதுன்னு சொல்லுவாங்க. இத விளக்கற மாதிரி ஒரு கத எங்க பக்கம் வழக்கத்துல வழங்கி வருது.
ஒரு பெரிய காடு. அந்தக் காட்ட ரெண்டாப் பிரிச்சி பெரிய ஆறு ஓடுச்சு. அந்த ஆத்தங்கரை ஓரமா ஒரு தேளு வாழ்ந்துக்கிட்டு இருந்துச்சு. ஆத்துல ஒரு பெரிய ஆமை ஒண்ணு இருந்துச்சு. அந்த ஆமை வெயில்ல காயிறதுக்காக ஒவ்வாரு நாளும் கரைக்கு வரும்.
கரைக்கு வந்து கொஞ்ச நேரம் வெயில்ல கிடந்துட்டு அப்பறமா ஆத்துக்குள்ளாறப் போயிரும். இத கல்லு இடுக்குக்குள்ளாற இருந்து தெனமும் தேளு பார்க்கும்.
எப்படியாவது இந்த ஆமையோட நட்பு வச்சிக்கணும்னு நெனச்சது தேளு. அதனால ஒரு நாளு ஆமை வர்றதப் பாத்துட்டு, மெதுவா ஆமைக்கிட்டப் போயி, ‘‘ஆமையாரே ஆமையாரே நல்லா இருக்கீங்களா...? அப்படீன்னு கேட்டது.
எங்கடா குரல் வருதுன்னு சுத்துமுத்தும் பாத்தது ஆமை. அப்ப தேளு, ‘‘ஆமையாரே ஒங்கப் பக்கத்துலதான் இருக்கேன். செவப்பா கொடுக்கத் தூக்கிக்கிட்டு நிக்கற... நாந்தாந் தேளு... இந்தக் கரையிலதான் நான் இருக்கேன். தெனந்தோறும் நான் ஒங்களப் பாத்துக்கிட்டே இருக்கேன். எனக்கு நண்பன்னு சொல்லிக்க யாருமில்ல. ஒங்ககூட நட்பு வச்சிக்கறதுக்காகத்தான் இப்ப வந்தேன்... என்னய நண்பனா ஏத்துக்கங்க’’ அப்படீன்னு கேட்டது.
அதக்கேட்ட ஆமை, ‘‘சரி ஒன்னய என் நண்பனா ஏத்துக்கறேன்... ஒரு நிபந்தனை... என்னான்னா நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏம்பக்கத்துல வந்துறக் கூடாது... இதுக்கு நீ சம்மதிச்சியன்னா ஒன்னய நண்பனா ஏத்துக்கறேன்னு’’ சொன்னது.
அதக் கேட்ட தேளு அதுக்கு ஒத்துக்கிருச்சு. தெனமும் அந்தத் தேளு ஆமைக்கிட்ட வந்து பல விஷயங்களப் பேசிக்கிட்டே இருக்கும். அப்பறம் போயிரும். இப்படியே பல நாளு போச்சு.
ஒருநாளு இந்தத் தேளுக்கு ஒரு ஆசை வந்துச்சு... ஆத்துக்கு அந்தப் பக்கம் என்ன இருக்குன்னே நமக்குத் தெரியாதே... அந்தப் பக்கமும் இங்க மாதிரியே இருக்குமா...?அப்படீன்னு கற்பனை பண்ணிக்கிட்டே இருந்துச்சு. அப்பதைக்கு அங்க ஆமை வந்துச்சு.
ஆமையப் பாத்த தேளு, ‘‘நண்பா எனக்கு ஒரு ஆசை அதை நெறவேத்துரியா...?’’ அப்படீன்னு கேட்டது.
ஆமை, ‘‘ஒனக்கு அப்படி என்ன ஆசை... சொல்லு. முடிஞ்சா நெறவேத்துறேன்னு’’ சொன்னது.
‘‘இல்ல... ஆத்துக்கு அந்தப் பக்கம் என்ன இருக்குதுன்னு நான் பாக்கணும். ரொம்ப நாளா இந்த ஆசை எனக்கு இருக்குது. அத எப்படி நெறவேத்திக்கப் போறேன்னு நெனச்சேன். என்னோட நண்பனா இருக்கற ஓம்வழியில இதை நெறவேத்திக்கிறலாம்னு நெனக்கிறேன்னு’’ சொன்னது தேளு.
இதைக் கேட்ட ஆமை, ‘‘பிறகு யோசிச்சிச் சொல்றேன்னு’’ சொல்லிட்டுப் போயிருச்சு. இப்படியே ஒவ்வொரு நாளும் தேளு கேக்கும். ஆமை யோசிச்சிச் சொல்றேன்னு சொல்லிட்டுப் போயிரும்.
இப்படியே பாத்துக்கிட்டு இருந்த தேளு ஒரு நாளு எப்படியாவது ஆத்துக்கு அந்தப் பக்கம் போயே ஆகணும்னு நெனச்சிக்கிட்டு ஆமை வர்ற வரைக்கும் காத்துக்கிட்டே இருந்துச்சு.
ஆமை வந்தவுடனே, ‘‘நண்பா என்னோட சின்ன ஆசையக்கூட நீ நிறைவேத்த மாட்டேங்குற... அதனால இனி நான் இருக்கறதுல பிரயோசனமில்ல... இந்த ஓடுற ஆத்துல குதிச்சு ஒன்னோட கண்ணு முன்னாலேயே சாகப்போறன்னு...’’ சொல்லிட்டு தேளு ஆத்த நோக்கி வேகமா ஓடுச்சு.
அதப் பாத்த ஆமைக்குத் தேளு மேல இரக்கம் வந்துருச்சு... ‘‘நண்பா ஒன்னயக் கூட்டிக்கிட்டுப் போயிருவேன். ஆனா ஒன்னோட கொடுக்கப் பாத்தாத்தான் எனக்குப் பயமா இருக்குது. நீ கொடுக்க வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டியே... என்ன செய்யறது...’’ அப்படீன்னு ஆமை கேட்டுச்சு.
அதுக்குத் தேளு, ‘‘நண்பா... ஒன்னயப் போயிக் கொட்டுவனா... சத்தியமாக் கொட்ட மாட்டேன்... நாஞ்சொல்றத நம்பு... என்னயக் கூட்டிக்கிட்டுப் போயிக் காட்டிட்டு வந்துருன்னு’’ ஒத்தக்கால்ல நின்னுக்கிட்டுக் கேட்டுக்கிட்டே இருந்தது.
ஆமை, ‘‘சரி... நானு ஒன்னய என்னோட முதுகுல ஏத்திக்கிட்டுப் போயி ஆத்தோட அந்தப் பக்கத்தக் காட்டுறேன்... நீயி ஒன்னோட கொடுக்க வச்சிக்கிட்டுப் பேசாம இருக்கணும்னு’’ சொல்லிட்டு தேள முதுகுல ஏத்திக்கிட்டு ஆத்துக்குள்ளாற ஆமை எறங்குச்சு.
தேளுக்குச் சந்தோஷம் பிடிபடல... அது மனசுக்குள்ளாற அப்படியொரு சந்தோஷம்.. ஆமைகிட்ட, ‘‘நண்பா இதுமாதிரி நான் ஒருநாளுகூட பாத்தது இல்ல... ஒன்னோட இந்த ஒதவிய நான் மறக்கவே மாட்டேன்... எனக்கு ரொம்ப சந்தோஷம்னு’’ சொன்னது.
ஆமையும் மெதுவா நீந்திப் போயிக்கிட்டே இருந்துச்சு... ஆத்து நடுவுல ஆமை போயிக்கிட்டு இருந்தப்ப இந்தத் தேளு அங்கிட்டும் இங்குட்டுமா ஓடிக்கிட்டே இருந்துச்சு.
ஆமை ஒடனே புரிஞ்சிக்கிருச்சு... இந்தத் தேளு என்னமோ பண்ணப் போவுது. நாம எச்சரிக்கையா இருக்கணும்னு நெனச்சிக்கிட்டு, ‘‘நண்பா கொடுக்கத் தூக்கிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஓடறியே... ஏன்?’’ எனக் கேட்டது.
அதுக்குத் தேளு, ‘‘நண்பா மன்னிச்சிரு சந்தோஷத்துல எனக்குத் தலைகாலு புரியல... எதையாவது கொட்டணும் போல இருக்குது... நான் சும்மா இருந்தாலும் என்னோட கொடுக்கு சும்மா இருக்காது போல இருக்கு... இந்தக் கொடுக்க சும்மா வச்சிக்கிடவே என்னால முடியல. அதனால ஒன்னய ஒருதடவ லேசக் கொட்டிக்கிறேன்... தப்பா எடுத்துக்காத... என்னால என்னயவே கட்டுப்படுத்திக்க முடியல... சீக்கிரமா சொல்லுனு’’படபடப்பாக் கேட்டது.
‘‘ஆகாகா... இந்தத் தேளு தன்னோட புத்தியக் காட்டத் தொடங்கிருச்சே... இவங்கூட நட்பாப் பழகுனது தப்பாப் போயிருச்சேன்னு’’ நெனச்சிக்கிட்டு, தேளப் பாத்து, ‘‘நண்பா நீ நல்லா மகிழ்ச்சியக் கொண்டாடு... ஒன்ன மாதிரி ஆளுக கூட பழக்கம் வச்சிக்கிட்டது தப்புன்னு இப்பத்தான் தெரியுது... இந்த நடு ஆத்துக்குள்ளறயே ஒன்னோட மகிழ்ச்சியக் கொண்டாடுன்னு’’ சொல்லிட்டு ஆத்துக்குள்ளாற அப்படியே மூழ்கிருச்சு.
கொடுக்கத் தூக்கிக்கிட்டு கொட்டுறதுக்கு நின்ன தேளு இத எதிர்பார்க்கல... அப்படியே தண்ணியில மூழ்கி செத்துப் போயிருச்சு... நம்மல நம்புன நண்பனுக்குத் துரோகம் பண்ண நெனச்சமே... அதுக்கு இந்தத் தண்டனை சரிதான்னு’’ நெனச்சிக்கிட்டே அந்தத் தேளு இறந்து போயிருச்சு... நல்லவங்ககூடத்தான் நட்பு வச்சிக்கிடணும்... கெட்டவங்க கூட நட்பு வச்சிக்கக் கூடாது... அவங்க நல்லவங்க மாதிரி இருந்து கெடுதல் செஞ்சிருவாங்க... இந்தக் கதை இன்னக்கி வரைக்கும் இந்த வட்டாரத்துல வழக்கத்துல இருக்குது.