ஊருக்குள்ள சில பேரு ஏமாத்தியே பிழைச்சிக்கிட்டு இருப்பாங்க. ஏமாத்துறவங்க எப்படியாவது அடுத்தவங்கள ஏமாத்திக்கிட்டே இருப்பாங்க. ஏமாறுறவங்க ஒண்ணும் புரியாம ஏமாந்துகிட்டே இருப்பாங்க. இப்படி ஏமாத்துறவங்கள குள்ளநரித்தனம், நரித்தனம் பண்றான்னு சொல்வாங்க. இந்த நரிய வச்சும் ஒரு கத இந்தப் பக்கத்துல வழக்குல வழங்கி வர்றது...
ஒரு விவசாயி கஷ்டப்பட்டு வயல்ல உழுது வெள்ளரி வெதையப் போட்டு பாடுபட்டு அதப் பாதுகாத்துக்கிட்டு வந்தான். வெள்ளரியும் நல்லாக் கொடியோடிப் பூவும் பிஞ்சுமா இருந்துச்சு. விவசாயிக்கு நல்ல மகிழ்ச்சி. அடடா நாம பாடுபட்டதுக்கு நல்ல பலன் கிடைக்கப்போகுதுன்னு. தெனமும் அவன் வயலுக்கு வந்து அதப் பாத்துப்புட்டுப் போவான்.
வெள்ளரிப் பிஞ்சு காயாச்சு. நல்ல நல்ல காய்களா வெள்ளரிக்கொடியில காய்ச்சிருந்தது. விவசாயி அதப் பிடுங்கி நல்ல விலைக்கு வித்தான். வெள்ளரிக் கொடியில நெறயக் காயிக இருந்ததால அவன் ராத்திரியில வந்து காவக்காத்துக்கிட்டு இருப்பான். பகல்ல வயல்ல கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்குப் போயிருவான்.
இப்படியே இருந்தான் விவசாயி. ஒரு நாளு அந்தப் பக்கம் ஒரு நரி வந்தது. வெள்ளரித் தோட்டத்தப் பாத்துச்சு. விவசாயி இல்லாத நேரம் பாத்து மெதுவா அந்த நரி தோட்டத்துக்குள்ளாறப் போயிருச்சு. அங்க பாத்தா வெள்ளரிப் பழம் ஒரு பக்கம், காயிக ஒரு பக்கம்னு நல்லா கொடியில கெடந்துச்சு.
இந்த நரிக்கு இந்த வெள்ளரிப் பழத்தைத் திங்கனும்னு ஆசை. அதனால ராத்திரி நேரத்துல மெதுவா வந்து விவசாயி அசந்து தூங்குறபோது வெள்ளரிப் பழத்தத் தின்னுட்டு அப்படியே வெளிய இருந்து வச்சிட்டு குண்டிய ஒரு வெள்ளரிக்காயில தொடச்சிப்புட்டு வந்துரும்.
இப்படியே ரெம்ப நாளு நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரு நா விவசாயி காயி பழங்களப் புடுங்கயில இதப் பாத்துட்டான். இப்படி தோட்டத்துக்குள்ளாற வந்து யாரு செய்யிறதுன்னு அவனுக்குப் புரியல. இதக் கண்டுபிடிக்கணும்னு நெனச்சுக்கிட்டு அவன் ராத்திரி முழுக்கத் தூங்காம இருந்தான்.
அப்ப இந்த நரி மெதுவா தோட்டத்துக்குள்ளாற வந்து பாத்தது. விவசாயி தூங்குற மாதிரி நடிச்சான். இந்த நரி விவசாயி நல்லாத் தூங்குறான்னு நெனச்சிக்கிட்டு முன்னாடி செஞ்சமாதிரியே பழத்தத் தின்னுட்டு வெளியயும் இருந்துட்டு குண்டிய ஒரு வெள்ளரிக்காயில தொடச்சிப்புட்டு ஓடிடுச்சு. இதப் பாத்துக்கிட்டே இருந்த விவசாயி அட ஒரு நரி வந்து இப்படி செஞ்சிட்டுப் போகுது. அத எதாவது பண்ணணும்னு நெனச்சிக்கிட்டு மறுநாளு கொல்லம்பட்டறைக்குப் போயி பதமான கத்தியா நாலஞ்சு வாங்கிக்கிட்டு வந்து நாலஞ்சு வெள்ளரிக்காயில பதிச்சு வச்சிட்டுப் போயி ராத்திரியில தூங்குற மாதிரிப் படுத்துக்கிட்டான்.
விவசாயி நெனச்சது மாதிரியே நரி தோட்டத்துக்குள்ளாற வந்தது. தோட்டத்துக்குள்ளாற வந்துட்டு வெள்ளரிப் பழத்தைத் தின்னுட்டு வெளிய போயிட்டுக் குண்டிய வெள்ளரிக்காயில தொடச்சிச்சு. விவசாயி மறச்சி வச்சிருந்த கத்தி நரியோட குண்டியப் பதம் பாத்துருச்சு. நல்லா சதக்குன்னு மாங்காயப் பிளக்கற மாதிரி நரியோட குண்டிய கத்தி நறுக்கிடுச்சு. ரத்தம் வடிய வடிய நரி தப்பிச்சோம் பிழைச்சோம்னு தன்னோட இருப்பிடத்துக்குப் போயிருச்சு.
நரியால எங்கயும் நகர முடியல. கத்தி குண்டிய நறுக்குனதால ஒரு எடத்துலயே மொடங்கிடுச்சு. நரி அந்தக் காயத்துக்கு மருந்து வச்சிக் கட்டாததால சலம் புடுச்சிக்கிடுச்சு. நரி மெதுவா மெதுவா ஊருக்குள்ளாறப் போயி ஊருக்கு வெளியில இருந்த சட்டிபான செய்யிறவனோட குடிசைக்குப் போயி அவனுக்குத் தெரியாம ஒரு சின்ன மண் கலயத்தைக் களவாண்டுக்கிட்டு ஓடியாந்துருச்சு.
கலயத்தைக் களவாண்டுக்கிட்டு ஓடியாந்த நரி சீழ் வச்ச தன்னோ குண்டியில இருக்கற புண்ண முள்ளாள கீறி சலத்த அந்தக் கலயத்துல புடுச்சிச்சு. கலய ரெம்புன ஒடனே அத ஒரு துணியால மூடி வேடுகட்டி தலையில தூக்கி வச்சிக்கிட்டு மொகத்த மூடிக்கிட்டு ஊருக்குள்ளாறப் போயி ‘‘நெய்யி வேணுமா நெய்யின்னு’’ வித்துக்கிட்டுப் போச்சு.
ஊருல இருந்த ஒரு ஆளு, ‘‘ஆமா எனக்கு நெய்யி வேணும் என்ன வெல சொல்றன்னு’’ கேட்டாரு. அதுக்கு அந்த நரி இது சுத்தமான நெய்யி... இதுக்கு ஒரு ரூபா கொடுங்கன்னு’’ சொன்னது. அதுக்கு அந்தாளு இந்த நரி ஏமாந்த நரி நாம கேட்ட வெலக்கு இந்த கலயத்தோட நெய்யத் தருதுன்னு நெனச்சிக்கிட்டு ஒரு ரூபாயக் கொடுத்துட்டு நரிக்கிட்ட இருந்து அந்தக் கலயத்த வாங்கிட்டுப் போனாரு.
பணத்த வாங்குன நரி சந்தோஷமா இந்த ஆளு நல்லா ஏமாந்துட்டான்னு வேகவேகமா அங்க இருந்து மெதுவாப் போச்சு. கலயத்த வாங்கிக்கிட்டு வீட்டுக்குள்ளாறப் போன அந்த ஆளு துணியால கட்டியிருந்த வேட்டைப் பிரிச்சி மோந்து பாத்தான். ஒரே சல(சீழ்) நாத்தம். அவனுக்கு வாந்தி வந்துருச்சு. அவன் பொண்டாட்டி அவன நல்லாத் திட்டினா. கலயத்த வாங்குன ஆளு ஆகாக இந்த நரி நம்மள ஏமாத்திருச்சு அந்த நரியப் புடுச்சி நல்லா ரெண்டு போடுபோட்டு காச வாங்குனாத்தான் நமக்கு நிம்மதின்னு நெனச்சிக்கிட்டு அந்தக் கலயத்தையும் கத்தியையும் எடுத்துக்கிட்டு மாவேகம் மழைவேகமாப் போனான்.
அந்த நரி மனிசன நல்லா ஏமாத்திப்புட்டோம்னு நெனச்சிப் பாடிக்கிட்டு சந்தோஷமாப் போயிக்கிட்டு இருந்துச்சு. சலத்தை நெய்யின்னு வாங்குனவன் கோபந் தலைக்கு ஏற அந்த நரிய வெரட்டுனான். நரியும் ஆகா இவன் கத்திய எடுத்துக்கிட்டுள்ள நம்மள வெரட்டுறான். நம்மளக் கொல்லப் போறானேன்னு நெனச்சிக்கிட்டு ரெம்ப வேகமா ஓடுச்சு.
வேகமா ஓடிப்போயி தப்படிக்கிறவன் வீட்டுக்குள்ளாற நுழையப் போச்சு அவன் அந்த நரிய வெரட்டுனான். அவங்கிட்டருந்து தப்பிச்ச நரி அவனோட தப்பத் தூக்கிக்கிட்டு ஓடுச்சு. அதப்பாத்த அந்த தப்புக்காரன் நரிய வெட்டுறதுக்கு அரிவாளத் தூக்கிக்கிட்டு வெரட்டுனான்.
நரி திரும்பிப் பாத்தது. ஒரு பக்கம் ஏமாந்தவனும் இன்னொரு பக்கம் தப்புக்காரனும் வெரட்டுறதைப் பாத்துட்டு தப்பத் தூக்கி எறிஞ்சிட்டுத் தலைதெறிக்க ஓடுச்சு. தப்புக்காரன் கீழ கெடந்த தப்பத் தூக்கிக்கிட்டுத் திரும்பப் போயிட்டான். அவனுக்கு முன்னால வேகமா நரியத் தொரத்துன ஏமாந்தவன் தன்னோட கையில இருந்த கத்திய சுழற்றி நரியக் குறிவச்சு எறிஞ்சான்.
கத்தி நரியோட வால அடியுறுக வெட்டிருச்சு. ரத்தம் வழிய வழிய அந்தக் கத்தியையும் நரி தூக்கிக்கிட்டு வேகமா ஓடி காட்டுகுள்ளாறப் போயிருச்சு. ஏமாந்தவன் அந்தக் கலயத்தைப் போட்டு ஒடைச்சிட்டு நரியத் தேடுனான். காட்டுக்குள்ளாற அவனால நரியக் கண்டுபிடிக்க முடியல வெகுநேரம் தேடிட்டு அவன் வீட்டுக்குத் திரும்பிப் போயிட்டான்.
சலத்த நெய்யின்னு நெனச்சி வாங்கி ஏமாந்தவன் போன பின்னாடி பொதருக்குள்ளருந்து வெளியில வந்த நரி காயத்துக்கு நல்ல மருந்தாப் பாத்துக் கட்டிக்கிட்டு வாலுப் போயி கத்தி வந்தது டும்டும்டும். வாலுப் போயிக் கத்தி வந்தது டும்டும்டும்னு சொல்லிக்கிட்டே தன்னோ இருப்பிடத்துக்குப் போயிருச்சு. அதுலருந்து நரி தான் இருந்த காட்ட விட்டு வெளிய வர்றதே இல்ல. வெளியே போன மனுசங்க தன்னக் கொன்னுடுவாங்கன்னு காட்டுக்குள்ளேயே நரி தங்கிடுச்சு.
மத்தவங்கள ஏமாத்துற நரிக்கதையச் சொல்லிச் சொல்லி ஏமாறவும் கூடாது. ஏமாற்றவும் கூடாதுங்கறதுக்கு இந்தக் கதைய இன்னக்கி வரைக்கும் புதுக்கோட்டை வட்டாரத்துல மக்கள் சொல்லிக்கிட்டு இருக்கறாங்க.