எல்லாத்துக்கும் எதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும். அதுலயும் எல்லாக் காரியமும் விதிப்படிதான் நடக்கும். விதி மிஞ்ச ஆளு இல்லன்னும் சொல்வாங்க. நாம நெனக்கிறது ஒண்ணாவும் நடக்கறது வேறயாவும் இருக்கும். எதெது எப்படி நடக்கும்னு விதிதான் தீர்மானிக்குது. இந்த விதியப் பத்தி புதுக்கோட்டை மாவட்டத்து மக்களுக்கிட்ட இன்றைக்கும் ஒரு கத வழங்கி வருது.
வீட்டுக் கூரைய மேயிறவரு ஒருத்தரு இருந்தாரு. அவரு தெனந்தோறும் ஊருக்குள்ளாற எந்தக் கூரைவீடாவது ஒழுகுச்சுன்னாலோ அல்லது புதுசா கூரை மேயனும்னாலோ வேலைக்குப் போயிருவாரு. தெனந்தோறும் வேலை பாத்துட்டு வந்தாத்தான் அவருக்குச் சாப்பாடு கிடைக்கும். இல்லைன்னா அவரும் அவரு வீட்டுல உள்ளவங்களும் அன்றைக்குப் பட்டினிதான்.
அவருக்கிட்ட ஒரு பழக்கம் இருந்துச்சு. தெனமும் வேலைக்குப் போறபோது ஊருக்கு வெளியில இருக்கற கோயில்ல போயி சாமியக் கும்புட்டுட்டுத்தான் வேலைக்குப் போவாரு. ஒருநாளு பக்கத்தூருக்காரவுங்க ஒழுகற வீட்டை மொகட்டைச் சரி பண்ணித் தரணும்னு சொல்லி அவர வரச் சொன்னாங்க. அவரும் சாமியக் கும்புட்டுட்டு பக்கத்து ஊருக்கு நடந்து போனாரு.
அப்படிப் போறபோது வழியில ஒரு காடு இருந்துச்சு. அதத் தாண்டித்தான் பக்கத்து ஊருக்குப் போக முடியும். அவரு நடந்து போறபோது கால்ல ஏதோ தட்டிவிட்டுக் கீழ விழுந்தாரு. எந்திருச்சுப் பாத்தா கீழ பதிஞ்சிருந்த ஒரு பானை அவரு கண்ணுக்குத் தென்பட்டது. அவரு மண்ணைத் தோண்டுட்டு அந்தப் பானைய வெளியில எடுத்தாரு.
அந்தப் பானை நெறையத் தங்கக் காசா இருந்துச்சு. அடடா நம்ம வேண்டுதலைக் கேட்டு சாமியே நமக்குத் தங்கப் புதையலக் குடுத்துட்டாருன்னு சந்தோஷப்பட்ட அந்த கூரைமேயறவரு, கொஞ்சூண்டு காச அள்ளிப் பானைக்குள்ளாறப் போட்டுட்டு அத ஒரு எடத்துலப் பொதைச்சு வச்சிட்டு அடையாளத்துக்குக் கொஞ்சம் செடிகொடியோட சருகள்ளிப் போட்டு பாக்கி இருந்த காச எல்லாத்தையும் சின்ன மூட்டையாக் கட்டி எடுத்துக்கிட்டு பக்கத்தூருக்குக் கூரை மேயப் போயிட்டாரு.
அந்த வீட்டுல போயி வீட்டுக்குள்ளாற விட்டத்துல அந்தச் சின்ன மூட்டையக் கட்டித் தொங்க விட்டுட்டு வீட்டு மேல ஏறி மொகட்டச் சரி செய்யத் தொடங்குனாரு. அவரு மொகட்டுல இருக்கறபோது அந்த வீட்டுக்கார அம்மா வீட்டுக்குள்ளாற விட்டத்துல கட்டியிருந்த மூட்டையப் பாத்துட்டு, ‘‘ஏய்யா கூரை மேயறவரே இது என்ன மூட்டை தொங்குது…?’’ அப்படீன்னு கேட்டாங்க.
அதுக்கு அந்தக் கூரை மேயறவரு, ‘‘அதுவா அது ஒண்ணுமில்லிங்கம்மா, கொஞ்சம் தொவரம்பருப்பு வாங்கிட்டுப் போறேன். அதத்தான் இப்படி மூட்டையாக் கட்டித் தொங்க விட்டுருக்கேன். போறபோது எடுத்துக்கிட்டுப் போயிடுறேன்னு’’ சொல்லிப்புட்டு அவரு பாட்டுக்கு வேலையப் பாக்க ஆரம்பிச்சாரு.
அந்த வீட்டுக்கார அம்மாவுக்குச் சந்தேகம். தொவரம்பருப்புன்னா ஏன் அத விட்டத்துல கட்டித் தொங்க விடணும்னு நெனச்சிக்கிட்டு அந்த மூட்டையில என்னதான் இருக்குதுன்னு பாப்போம்னுட்டு உரலத் தள்ளிப் போட்டு அதுல ஏறி அந்த மூட்டைய அவுத்துப் பாத்துச்சு.
அதுல சின்னச் சின்னதா தங்கக் காசு இருந்ததப் பாத்துட்டு, ‘‘அடப் பாவி நீ எங்கிட்டயே பொய்யி சொல்றியா...ன்னு’’ நெனச்சிக்கிட்டு வீட்டுல இருந்த தொவரம்பருப்ப அதே அளவுக்கு அள்ளி அந்த மூட்டையில கொட்டிக் கட்டி வச்சிப்புட்டு தங்கக் காசுகளத் தெரியாம எடுத்துக்கிட்டுப் போயிப் பத்திரப்படுத்திருச்சு.
கூரை மேயறவன் மொகட்ட மேஞ்சிட்டுக் கீழ எறங்கி வந்து கூலிய வாங்கிக்கிட்டு மூட்டையையும் எடுத்துக்கிட்டு தன்னோட ஊருக்குக் கௌம்பிப் போனான். போனவன் அவன் பொதச்சு வச்சிருந்த கொஞ்சூண்டு தங்கக் காசத் தோண்டி வேறொரு துணியில முடிஞ்சிக்கிட்ட்டான்.
வேக வேகமாப் போயி வீட்டுக்குள்ளாற வச்சி மூட்டையப் பிரிச்சிப் பாத்தான். அதுல தங்கக் காசுக்குப் பதிலா தொவரம்பருப்பு இருந்ததப் பாத்துட்டு அவனுக்கு ரெம்ப அதிர்ச்சியாப் போச்சு. இனி அந்த அம்மாக்கிட்டப் போயிக் கேட்டா அது கொடுக்கவா போகுது. நாம அந்த அம்மாக்கிட்ட தொவரம்பருப்புன்னுதான் சொன்னோம். இனி அது தங்கக் காசுன்னு சொன்னா ரெம்ப விவகாரமாப் போயிரும்னு நெனச்சிக்கிட்டு துணியில முடிஞ்சி வச்சிருந்த கொஞ்சூண்டு காசமட்டும் எடுத்து வச்சிக்கிட்டான்.
‘‘எத்தனதான் எண்ணயத் தேச்சிக்கிட்டு மண்ணுல உருண்டாலும் ஒடம்புல ஒட்டுறதுதான் ஒட்டும்னு தெரியாமயா பெரியவங்க சொல்லியிருக்காங்க... நமக்குக் கெடைக்க வேண்டியத ஆண்டவன் கொடுத்துட்டான். அந்த அம்மாவுக்குக் கெடைக்க வேண்டியத நம்ம மூலமா ஆண்டவன் கொடுத்துட்டான்னு’’ நெனச்சிக்கிட்டு அவன் அமைதியானான். யாருக்கு எப்ப எது கிடைக்கணும்னு விதி இருக்கோ அதுதான் கிடைக்கும். நாம கவலைப்பட்டு ஒண்ணும் நடக்கப் போறது இல்ல. எல்லாத்துக்கும் விதிதான் காரணங்கறதுக்காக இந்தக் கதைய இன்றைக்கும் சொல்லிக்கிட்டே இருக்காங்க.