பேயக் கண்டு சில பேரு ஓடுவாங்க... ஆனா சில பேரக் கண்டு பேயே ஓடும். பேயப் பத்தின பல கதைகள் எல்லா ஊருலயும் இருக்குது. ஆனா இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கக் கூடிய கதை கொஞ்சம் வித்தியாசமானது. எல்லாரையும் ஏமாத்தலாம். ஆனா எல்லாக் காலத்துலயும் ஏமாத்திக்கிட்டே இருக்க முடியாது. இதுக்கு விளக்கமா ஒரு கத இன்னக்கி வரைக்கும் உலவிக்கிட்டு இருக்குது.
ஒரு பெரிய வீடு இருந்துச்சு. அந்த வீட்டுல அப்பா அம்மா இருந்தாங்க. அவங்களுக்கு ரெண்டு பயலுங்க. அப்பா கடுமையான உழைப்பாளி. அவருக்கு நேருக்கு மாறா அவரோட பையனுக இருந்தாங்க. எப்பப் பாத்தாலும் நல்லாச் சாப்புடறது. தூங்குறதுமா இருந்தானுங்க. அவங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவனுக கேக்கல. நல்லாச் சாப்புடறது. அப்படியே எங்கயாவது போயி பொழுதப் போக்கிட்டு வந்து திரும்பவும் தூங்கறது. இப்படியே இருந்துக்கிட்டு இந்தானுக.
ஒருநாளு திடீர்னு அவனுகளோட அப்பாவும் அம்மாவும் இறந்து போயிட்டாங்க. அவனுகளுக்கு ஒண்ணும் புரியல. என்ன செய்யிறதுன்னும் தெரியல. வீட்டுல இருந்த சொத்துப் பத்தெல்லாம் வித்துத் தின்னானுங்க. எல்லாத்தையும் வித்து அழிச்ச பின்னால அவனுகளுக்குச் சாப்புடறதுக்கு ஒண்ணுமே கெடைக்கல. விக்கிறதுக்கும் ஒண்ணுமில்ல. அவனுக குடியிருக்கற வீட்டத் தவிர வேற எதுவும் இல்ல.
அவனுக ஒரு முடிவுக்கு வந்தானுக. இவ்வளவு பெரிய வீட்டை வித்துட்டு அதுல வர்ற காச வச்சிக்கிட்டுச் சாப்புடலாம்னு நெனச்சானுக. ஏன்னா அவனுகளால வேற வேலை செஞ்சி பொழைக்கவும் முடியாது. அதனால ஒருநா ராத்திரியில அவனுகளாப் பேசிக்கிட்டு இருந்தாங்க.
அந்த வீட்டுல ரெண்டு பேயிங்க இருந்துச்சுங்க. இந்தப் பயலுங்க பேசறதக் கேட்டுட்டு, ‘‘ஆகா இந்த வீட்டுல நாம ரெம்ப நாளாக் குடியிருக்கறோம். இதை வித்துட்டா நாம எங்க போறதுன்னு’’ அதுகளுக்குள்ளாற பேசிக்கிட்டதுக.
அதுக்கு மொதப் பேயி, ‘‘அவனுகளுக்கு நாம பாதுகாத்து வச்சிருக்கற புதையல்ல இருந்து கொஞ்சத்த எடுத்துக் குடுத்து எதாவது தொழிலு செஞ்சி பொழைச்சுக்கச் சொல்லுவோம். அப்ப அவனுக இந்த வீட்ட விக்க மாட்டானுக. நாம இங்க சொகமா இருந்துக்கலாம்னு’’ சொன்னது. ரெண்டாவது பேயி சரின்னது. அதுக ரெண்டும் அவனுககிட்டப் போனதுக.
அந்தப் பேயிகளப் பாத்த இந்தப் பயலுக வெலவெலத்துப் போயிட்டானுக. இருந்தாலும் அத வெளிக்காட்டிக்காம, ‘‘நீங்க யாரு? எதுக்காக இந்த இராத்திரி நேரத்துல எங்கக்கிட்ட வந்தீங்கன்னு’’ மூத்தவன் கொஞ்சம் சத்தமாக் கேட்டான்.
அவனோட சத்தத் கேட்ட பேயிக பயந்து போயி, ‘‘நாங்க ஒங்க வீட்டுல ரெம்ப நாளா இருக்கற பேயிங்க... நீங்க ரெண்டு பேரும் இப்ப பேசிக்கிட்டதக் கேட்டோம். நீங்க இந்த வீட்ட வித்துடாதீங்க... எங்க பாட்டம்பூட்டங் காலத்துல இருந்து இங்ஙனதான் இருக்கோம். நீங்க இந்த வீட்ட வித்துட்டா... நாங்க வேற எங்கயும் போக முடியாது’’ அப்படீன்னு சொன்னதுங்க.
அதக் கேட்ட அந்தப் பயகள்ள கொஞ்சம் வெவரமானவன இருந்த சின்னவன், ‘‘சரி நாங்க வீட்ட விக்கல... ஆனா நாங்க பொழைக்கிறதுக்கு இந்த வீட்ட வித்தாத்தான் எதுவும் கிடைக்கும். அதவச்சி நாங்க பொழைச்சிக்குவோம்னு’’ சொன்னான்.
அதக் கேட்ட மூத்த பேயி, ‘‘நாங்க ஒங்களுக்குக் கொஞ்சம் தங்கக் காசு தர்றோம். அத வெளியில கொண்டுபோயி வித்துட்டு ஏதாவது தொழிலச் செஞ்சி பொழச்சிக்கோங்க... இந்த வீட்ட வித்துறாதீங்கன்னு’’ சொல்லிட்டுக் கொஞ்சம் தங்கக் காச எடுத்துக் கொடுத்துச்சுங்க...
அவனுகளும் அத வாங்கிக்கிட்டு வீட்ட விக்கலன்னு அந்தப் பேயிங்கக்கிட்டச் சொல்லிட்டானுங்க. அந்தப் பேயிங்க கொடுத்தத் தங்கக் காச வித்து ஒரு கடய வச்சானுங்க... இவனுகளுக்குப் போதுமான அனுபவம் இல்லாததனால இவனுககிட்ட பொருள வாங்குனவங்க காசக் கொடுக்காம ஏமாத்திட்டானுங்க. கட நட்டத்துல ஓட ஆரம்பிச்சி கடசியில சுத்தமாப் படுத்திருச்சு.
இவனுங்க சரி இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டு கடய வித்துட்டு அந்தக் காச வச்சி கொஞ்ச நாளு ஓட்டுனானுங்க... அந்தக் காசும் கரைஞ்சி போயிருச்சு. இனிமே என்ன செய்யிறதுன்னு நெனச்சிக்கிட்டு இருக்கயில அவனுகளுக்கு அந்தப் பேயிகளுக்கிட்டயே போயி கேட்டா என்னன்னு தோணுச்சி.
அவனுக அந்தப் பேயிக்கிட்ட போயி, ‘‘எங்க தொழிலு நட்டத்துல போயிருச்சு. நாங்க என்ன செய்யிறது... எங்களுக்கு ஏதாவது இருந்தாக் கொடுங்கன்னு’’ கேட்டானுக.
அந்தப் பேயிகளும் அவனுக மேல இரக்கப்பட்டுத் தங்கக் காசுகள அள்ளி அவனுங்கக் கிட்ட கொடுத்துச்சுக. அவனுங்க அத வாங்கிக்கிட்டுப் போயி எந்தத் தொழிலும் தொடங்காம சொகமா வித்துச் சாப்புட்டானுக.
அந்தக் காசு இருக்கற வரைக்கும் எந்த வேலைக்கும் போகாம எந்தத் தொழிலும் செய்யாம இருந்துக்கிட்டே திங்கவும் தூங்கவுமா இருந்து காசக் கரைச்சாங்க. பேயிக கொடுத்த காசு எல்லாம் தீந்து போனவுடனே மறுபடியும் அந்தப் பேயிங்கக் கிட்டப் போயி கேட்டானுங்க.
அந்தப் பேயிகளும் சரி போனாப் போகுதுன்னு நெனச்சிக்கிட்டு அவனுகளுக்குத் தங்கக்கிட்ட இருந்த தங்கக் காசுகள்ள கொஞ்சத்த எடுத்துக் கொடுத்துச்சுக. அவனுகளும் அத வாங்கிட்டுப் போயி ரெம்ப சொகுசா இருந்தானுங்க... கொஞ்ச நாளுள அத்தன தங்கக் காசுகளும் தீந்து போச்சு. அவனுக அந்தப் பேயிக்கிட்டப் போயி மறுபடி கேக்க அதுகளும் கொடுத்துக்கிட்டே இருந்துச்சுக.
இவனுக ஒழைக்காமலேயே அந்தப் பேயிகள ஏமாத்தி ஏமாத்தி காசுகள வாங்கித் தின்னுக்கிட்டு இருந்தானுக. ஒரு கட்டத்துல அந்தப் பேயிகளுக்கு அவனுகளப் பத்தித் தெரிஞ்சி போச்சு. இனிமே அவனுகளுக்கு எந்த ஒதவியும் செய்யக் கூடாதுன்னு முடிவு பண்ணிருச்சுக.
அந்தப் பேயிக கொடுத்த காசு செலவழிஞ்ச ஒடனே அந்தப் பயலுக அந்தப் பேயிகக்கிட்ட வந்து ஏதாவது ஒதவி செய்யிங்கன்னு கேட்டானுக அதுக இல்லன்னு சொல்லிட்டதுக. அதக் கேட்ட அந்தப் பயலுக, ‘‘அப்ப நாங்க இந்த வீட்ட விக்கப் போறம்... நீங்க வேற எடம் பாத்துக்கிட வேண்டியதுதான்னு’’ சொன்னானுங்க.
அதுக்கு அந்தப் பேயிகளும், ‘‘பரவாயில்ல... நாங்க வேற எடம் பாத்துக்கிடுறோம். நீங்க இந்த வீட்ட வித்துடுங்கன்னு’’ சொல்லிட்டுப் போயிருச்சுங்க.
அவனுகளுக்கு ஒண்ணும் ஓடல. பட்டினியா அந்த வீட்டுலயே கெடந்தானுங்க என்ன செய்யிறதுன்னு யோசிச்சி இந்த வீட்ட வித்துடலாம்னு முடிவு பண்ணினானுங்க. அப்பப் பாத்துப் பெருமழை அடிச்சிப் பேஞ்சிச்சு. இடி மின்னல்னு ஒண்ணும் செய்ய முடியல. அப்ப பெரிய இடி இடிச்சு அவனுக இருந்த வீட்டுல விழுந்துச்சு.
அந்த இடி விழுந்ததுல அந்த வீடு இடிஞ்சு போச்சு. அவனுக ரெண்டுபேரும் எப்படியோ தப்பிச்சு வெளியில வந்துட்டானுங்க... மழையில நனஞ்சிக்கிட்டே இருந்தானுங்க. அப்பத்தான் அவனுக ஒழைக்காம நாம அந்தப் பேயிகள ஏமாத்திக்கிட்டே இருந்துட்டோம்... அதுகள ஏமாத்துனதுக்கும் ஒழைக்காம இருந்ததுக்கும் நமக்கு இந்தத் தண்டனை கெடச்சிருக்குன்னு நெனச்சிக்கிட்டு மனசு நொந்து போனானுங்க...
ஒழைக்காத சோம்பேறிகளுக்கு பேயி என்ன... கடவுள்கூட ஒதவ மாட்டாரு... சோம்பேறியா இருக்கறவனுக கடைசியில இப்படித் தெருவுலதான் நிக்கணும்னு இன்னக்கி வரைக்கும் இந்தப் பகுதியில இந்தக் கதையச் சொல்லிக்கிட்டே இருக்கறாங்க.