“பிரமாதம்” என்பது சரியா?
சில சிறப்புகளைக் குறிப்பிட “பிரமாதம்” என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
“கல்யாணச் சமையல் சாதம்! காய்கறிகளும் பிரமாதம்! இது கௌரவப் பிரசாதம்! இதுவே எனக்குப் போதும்!” என்று ஒரு பாடலில் கூட “பிரமாதம்” எனும் சொல் சிறப்பைக் கூறுகிறது.
“ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்?” என்கிற பாடல் பிரமாதம் என்கிறார்கள்...
“இது என்ன பிரமாதம்? இந்த உதவியைக் கூட உனக்குச் செய்ய மாட்டேனா?” என்று சிலர் பேசுவதைக் கேட்டிருக்கலாம்...
“ஏதோ சின்ன தவறு நடந்து விட்டது. இதைப் பிரமாதப்படுத்துகிறாயே...!” என்று வருந்துபவர்களும் உண்டு...
இங்கு பிரமாதம் என்றால் பெரியது அல்லது சிறப்பானது அல்லது அளவுக்கு மிஞ்சியது என்பது போன்ற பொருளில் பயன்படுத்தப்படும் பிரமாதம் எனும் இந்தச் சமற்கிருதச் சொல்லுக்கு உண்மையான பொருள் தெரியுமா?
இந்த சமற்கிருதச் சொல்லுக்குத் தவறு, பெருந்தவறு என்று பொருள்.
சமற்கிருதத்தில் தவறு என்பது கூட தமிழில் சிறப்பாகி விட்டது பாருங்கள்!
- தேனி. பொன்.கணேஷ்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.