உலகின் அதி வேக விசையுந்துகள்
அழகான வடிவமைப்பு, அதிகமான வசதிகள் என்று எத்தனையோ விசையுந்துகள் (Motor Bike) வந்து கொண்டிருந்தாலும், சாலையில் அதிக வேகமாகச் சீறிச் செல்லும் விசையுந்துகளில் தாம் வலம் வர வேண்டும் என்கிற எண்ணமே இன்றைய இளைஞர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. உலகம் முழுவதுமிருக்கும் இளைஞர்களிடம் பரவியிருக்கும் இந்த எண்ணத்தை அறிந்து கொண்ட விசையுந்து நிறுவனங்கள் தங்கள் விசையுந்துகளை அதிவேகத்திலானதாக வடிவமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த அதிவேக விசையுந்துகளில் முதல் பத்து இடங்களைப் பெற்ற விசையுந்துகள் இவைகள்தான்.
1. டோட்கி டொமாக்வாக் (Dodge Tomahawk)
டோட்கி டொமாக்வாக் எனப்படும் இந்த விசையுந்துதான் உலகின் அதிவேகமான முதல் விசையுந்தாகும். இது மணிக்கு 560 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறனுடையது. 10 உருளைகள் (Cylinder) 90 டிகிரி வி - வடிவிலான அமைப்பில் 500 குதிரை சக்தித் திறன் கொண்ட இயந்திரம் (Engine) பொருத்தப்பட்ட இந்த விசையுந்துவின் முன்புறம் இரு சக்கரங்களும், பின்புறம் இரு சக்கரங்களும் என்று மொத்தம் நான்கு சக்கரங்கள் இருக்கின்றன. முன்புறமிருக்கும் இரு சக்கரங்களும் தனித்தனியாக இயக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க டாலர்கள் 555,000 எனும் மதிப்பிலான விலையில் உருவாக்கப்பட்ட இந்த விசையுந்து, மிகக் குறைவாக மொத்தம் 10 எனும் எண்ணிக்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டன.
2. சுசிகி கயபூசா (Suzuki Hayabusa)
சுசுகி கயபூசா எனும் பெயரிலான விசையுந்து உலகின் அதிவேகமான விசையுந்துகளின் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. மணிக்கு 397 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த விசையுந்துவின் இயந்திரம் 4 தாக்கு (Stroke), 4 உருளைகள், திரவக் குளிர்ச்சி, 16 போக்கிகள் (Valves) கொண்டு, 197 குதிரைசக்தித் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
3. எம்டிடி டர்பைன் சூப்பர்பைக் ஒய்2கே (MTT Turbine Superbike Y2K)
எம்டிடி டர்பைன் சூப்பர்பைக் ஒய்2கே எனும் பெயரிலான விசையுந்து உலகின் அதிவேக விசையுந்துகளின் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறது. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தால் “மிகவும் சக்தி வாய்ந்த விசையுந்து” என்று அங்கீகரிக்கப்பட்ட இதன் வேகம் மணிக்கு 365 கிலோ மீட்டர் என்பதாக இருக்கிறது. இதன் இயந்திரம் ரோல்ஸ் ராய்ஸ் 250 - சி 20 சுழல்விசைத் தண்டு (Turbo Shaft) கொண்டு 320 குதிரை சக்தித் திறனில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
4. ஹோண்டா சிபிஆர் 1000 எக்ஸெக்ஸ் பிளாக்பேர்டு (Honda CBR1100XX Blackbird)
ஹோண்டா சிபிஆர் 1000 எக்ஸெக்ஸ் பிளாக்பேர்டு எனும் பெயரிலான விசையுந்து உலகின் அதிவேக விசையுந்துகளின் பட்டியலில் நான்காமிடத்தில் இருக்கிறது. மணிக்கு 310 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த விசையுந்து நான்கு உருளைகள் திரவக் குளிர்ச்சி கொண்ட இயந்திரத்துடன் 153 குதிரைசக்தித் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிற விசையுந்துகளுடன் ஒப்பிடும் போது, இது மென்மையாக இருப்பதால் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்த விசையுந்துவிற்கு வரவேற்பில்லை. எனவே இது அங்கு விற்பனையிலும் இல்லை.
5. யமஹா ஒய் இசட் எப் ஆர்1 (Yamaha YZF R1)
யமஹா ஒய் இசட் எப் ஆர்1 எனும் பெயரிலான விசையுந்து உலகின் அதிவேக விசையுந்துகளின் பட்டியலில் ஐந்தாமிடத்தில் இருக்கிறது. மணிக்கு 297 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த விசையுந்தின் இயந்திரம் இணையான 4 உருளைகள், 20 போக்கிகள், திரவக் குளிர்ச்சி கொண்டதாக, 128.2 குதிரைசக்தித் திறனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
6. எம்வி அகஸ்டா எப்4 1000 ஆர் (MV Agusta F4 1000 R)
எம்வி அகஸ்டா எப்4 1000 ஆர் எனும் பெயரிலான விசையுந்து உலகின் அதிவேக விசையுந்துகளின் பட்டியலில் ஆறாமிடத்தில் இருக்கிறது. மணிக்கு 299 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த விசையுந்தின் சிறப்புச் சக்கரங்கள் அமைப்பின் மூலம் வேகத்தைக் கூட்டிக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடிகிறது. திரவக்குளிர்ச்சி, 4 உருளைகள் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த இயந்திரம் 174 குதிரைசக்தித் திறன் கொண்டது.
7. ஹவசாகி நின்சா இசட் எக்ஸ் - 14 ஆர் (Kawasaki Ninja ZX-14R)
ஹவசாகி நின்சா இசட் எக்ஸ் - 14 ஆர் எனும் பெயரிலான விசையுந்து உலகின் அதிவேக விசையுந்துகளின் பட்டியலில் ஏழாமிடத்தில் இருக்கிறது. மணிக்கு 299 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த விசையுந்துவின் இயந்திரம் 4 தாக்கு (Stroke), 4 உருளைகள், திரவக் குளிர்ச்சி கொண்டு, 146 குதிரைசக்தித் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
8. அப்ரில்லா ஆர்எஸ்வி 1000ஆர் மில்லி (Aprilia RSV 1000R Mille)
அப்ரில்லா ஆர்எஸ்வி 1000ஆர் மில்லி எனும் பெயரிலான விசையுந்து உலகின் அதிவேக விசையுந்துகளின் பட்டியலில் எட்டாமிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய நிறுவனத் தயாரிப்பான இந்த விசையுந்து மணிக்கு 281 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. 960 சிசி 60 டிகிரி வி- இரட்டை இயந்திரமான இதன் திறன் 141.13 குதிரைசக்தித் திறனுடையதாக இருக்கிறது.
9. பிஎம்டபிள்யூ கே 1200 எஸ் (BMW K 1200 S)
பிஎம்டபிள்யூ கே 1200 எஸ் எனும் பெயரிலான விசையுந்து உலகின் அதிவேக விசையுந்துகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. மணிக்கு 278 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதான இதன் இயந்திரம் 16 போக்கிகள், 4 உருளைகள், திரவக்குளிர்ச்சி கொண்டதாகவும், 164.94 குதிரைசக்தித் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.
10. டுகாட்டி 1098 எஸ் (Ducati 1098s)
டுகாட்டி 1098 எஸ் எனும் பெயரிலான விசையுந்து உலகின் அதிவேக விசையுந்துகளின் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. மணிக்கு 271 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதான இதன் இயந்திரம் எல் வடிவிலான இரட்டை உருளை, ஒரு உருளைக்கு 4 போக்கிகள், திரவக்குளிர்ச்சி போன்றவைகளைக் கொண்டு 160 குதிரைசக்தித் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.