கல்யாண நாளில் மணமகளுக்கும் மணமகனுக்கும் பால் பழம் கொடுக்கிறார்களே.. ஏனென்று தெரியுமா?
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டுப் புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமேப் புதிதாக இருக்கும். கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறானப் புரிதல் வரும். அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏறபடலாம்.
அந்த நேரங்களில் பெண் பசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல் கணவன் வீட்டார் உனக்குத் தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளைக் கொட்டி விடாதே எனக் குறிக்க பால் தரப்படுகிறது.
வாழைப்பழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தைச் சார்ந்து கன்றைத் தருகிறதோ, அது போல் கணவனை சார்ந்து வம்ச விருத்தியை நீ தரவேண்டும் என குறிக்க பழம் தருகின்றனர்.
அது சரி, மணமகனுக்கு ஏன் தருகிறார்கள்?
மணமகனே, பாலில் எப்படித் தயிரும் நெய்யும் உள்ளதோ, அது போல் இந்தப் பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது. பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலைக் கெட வைத்துவிடாதே எனக் குறிக்கப் பால் கொடுக்கின்றனர்.
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாகப் பிரித்து நடுவரோ அது போல் இந்தப் பெண்ணை உங்கள் குடும்பத் தோட்டத்தில் நட்டுள்ளோம். அதை பட்டுப்போக விடாமல் பக்குவமாகக் கவனித்து, அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தத்தான் பழம் கொடுக்கிறார்கள்.
திருமணத்தில் பால், பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் என்று இனிமேலும் சொல்வீர்களா...?