மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வழியாக, 1987 ஆம் ஆண்டில் வெளியாகியிருக்கும் சி. கோவிந்தராசன் அவர்களது ‘கல்வெட்டுக் கலைச்சொல் அகர முதலி’ யில் இடம் பெற்றிருக்கும் பண்டைய இசைக் கருவிகள் மற்றும் அதன் பயன்பாட்டுத் தகவல்கள்.
கங்கில் - (கலை)
இசைக்கருவிகளுள் நீண்ட குழலாக உலோகத்தால் அமைக்கப் பெறும் “காளம்” என்ற குழற் கருவியின் ஓருறுப்பு “சிவபாத சேகரனென்றும். ஸ்ரீராஜனென்றும் திருநாமம் வாங்கி கங்கில் ஒன்றும் குழல் இரண்டும் மோதிரம் ஐஞ்சும் உடைய பொன்னின் காளங்கள்” (தெ.கல்.தொ.2.கல்.91.) (க.க.சொ.அகரமுதலி, ப.94.)
கரடிகை - (கலை)
கரடி கத்தினாற் போன்றதாக ஒலி தரும் இசைக்கருவி. தோற்கருவியாகிய இது.
“கரடி கத்தினாற் போலும் ஓசையுடைத்தாதலாற் கரடிகை என்று பெயராயிற்று என்பர் அடியார்க்கு நல்லார்.”
“அடுத்தன தட்டழி மத்தளி கரடிகை தாளம் காககளம் ஏற்றி” (பார்த்திப சேகரபுரச் செப்பேடு)
காகளம் - (கலை)
வட்டமாக அகன்ற வாயுடன் குவிந்து நீண்டு குழலாக இருக்கும் குழலிசைக்கருவி எக்காளம் என்று பெயர் பெறும்.
“அக நாழிகைச் சென்னடைக்கு அடுத்தன தட்டழி, மத்தளி, கரடிகை, தாளம், காகளம் ஏற்றி” (பார்த்திப சேகரபுரச் செப்பேடுகள், கி.பி.9.நுாற்.) (க.க.சொ.அகரமுதலி, ப.196.)
காளம் - (கலை)
குழற்கருவி, எக்காளம், குழல் வடிவில் நீண்டு முன்வாய் அகன்றிருக்கும் தோற்றத்தில் அமைக்கப் பெறுவது. இதன் பகுதிகள் கங்கில், குழல், மோதிரம் என்பனவாகும். கங்கிலையும், குழலையும் இணைக்கும் திருகுச்சுரையே மோதிரம் என்று பெயர் பெறும். இத்தகைய காளம் தஞ்சை இராசராசேச்சுரத்தில் சிவபாதசேகரன் காளம், ஸ்ரீராஜராஜன் காளம் என்ற பெயர்களால் இராசராசனால் பொன்னால் செய்யப்பெற்று கொடுக்கப்பட்டிருந்தன. இராசராசன் இரட்டைக் குழலமைப்பில் செய்தளித்துள்ளமை சிறப்புடையதாகும்.
“சிவபாத சேகரமென்றும், ஸ்ரீராஜராஜனென்றும் திருநாமம் வாங்கி, கங்கில் ஒன்றும் குழல் இரண்டும் மோதிரம் ஐஞ்சும் உடைய பொன்னின் காளங்கள்” (தெ.கல்.தொ.2.கல்.1.) (க.க.சொ.அகரமுதலி, ப.132.)
கொட்டி மத்தளம் - (கலை)
தஞ்சைப் பெரிய கோயிலில், முதல் இராசராசன் திருப்பதியம் பாடுதற்கு அமைத்த நாற்பத்தெண்மர் தேவாரம் பாடும் போதும், காந்தர்விகள், காந்தர்வர்கள் எனப்பட்ட தமிழிசைப் பாடகர்கள் பாடும் போதும், பின்னணி வாத்தியங்களுள் ஒன்றாக வாசிக்கப்பட்ட மத்தளம். இம்மத்தளத்துடன் சுத்த மத்தளமும் வாசிப்பதில் தனித்தன்மை பெற்ற வழியினர் “பார சைவர்” எனப்படுவோராவர்.
1. “திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் போது கொட்டி மத்தளம் வாசிக்கும் குணப்புகழ் மருதனான சிகாசிவன்.
2. தமிழ் பாடும் போது “கொட்டி மத்தளம் ஒன்றுக்கு காந்தர்வ தாசனுக்குப் பங்கு ஒன்று.” (தெ.கல்.தொ.2.கல்.65,66.) (க.க.சொ.அகரமுதலி, ப.156.)
சகடை கொட்டிகள் - (சம)
தம்பட்டம் அடிப்பவர்கள். கோயில் விழாக்களில் தம்பட்டம் (பறை) அடிப்பவர்கள் உவச்சர்க்கு உட்பட்டவராவர். இவர்கள் உவச்சு என்ற பெயரால் காணியாட்சி பெறுவர்.
“உவச்சுக்கு உட்படும் மேற்படி சகடை கொட்டிகளில் சாத்தன் அம்பலத்துக்கு தன்னேற்றம் ஆள் பதினோறாவர்க்குப் பேரால் பங்கு அரை.” (தெ.கல்.தொ.2.கல்.66.) (க.க.சொ.அகரமுதலி, ப.168.)
சல்லரி - (சம)
கிராம தேவதைகளின் விழாக்களில் ஒலிக்கச் செய்யும் உலோகத்தாலான பெருஞ்சிலம்பி. (க.க.சொ.அகரமுதலி, ப.478.)
செகண்டி - (சமு) செயகண்டி
உலோகத்தாலான தட்டும் இசைக்கருவி. கோயில்களில் பூசைக் காலத்து, காணியுடைய உவச்சர் இக்கருவியினைத் தட்டுவது வழக்கு.
“செகண்டிகை - இவ்வூரில் அரயணிச் சிங்க உவைச்சன் கொட்டுவதாக வைத்தோம்.” (தெ.கல்.தொ.12, பகு.1,கல்.114.) (க.க.சொ.அகரமுதலி, ப.202.)
தட்டழி - (சம)
ஒரு முகத்தோற்பளை. தம்பட்டம். வரி வகையுள் இதுவுமொன்று. சோழராட்சியில் கிராமசபை கூடுவதற்குரிய நாளினைத் தட்டழி கொட்டி ஊரவர்க்கு அறிவிப்பர்.
“காமரசவல்லி சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி மக்களோம். இவ்வாட்டை தனுநாயற்ற வியாழக்கிழமை பெற்ற கார்த்திகை நான்று தட்டழி கொட்டி பெருங்குறி சாற்றி மண்டபத்தே கூட்டி.” (தெ.கல்.தொ.19,கல்.231, உத்தம சோழன் யாண்டு.9.) (க.க.சொ.அகரமுதலி, ப.217.)
தட்டழி கொட்டிகள் - (சம)
தட்டழி என்ற பெயரமைந்த தப்பட்டை எனும் தோற்கருவியினை இசைப்பவர்கள். இவர்கள் உவச்சு என்னும் கோயில் பணிக்கு உட்பட்டவராவர்.
“திருவோணம் பெரு விழாவாக ஏழு நாளும் நிசதி நுாறு விளக்கும் பதினாறாள் தட்டழி கொட்டிகளையும் கொண்டு செய்வித்து ஸ்நபன மாட்டு வித்து” (கம்பவர்மன் கல்வெட்டு, தெ.கல்.தொ.7,கல்.421.) (க.க.சொ.அகரமுதலி, ப.217.)
தாரணி படகம் - (கலை)
உவச்சர் மாலையணிந்து கொட்டும் தம்பட்டம். பலர் வரிசையாக நின்று அடிக்கும் தம்பட்டம். திருவாவடுதுறைக் கோயிலில் திருவிழாக் காலங்களில் இந்நிகழ்ச்சி நிகழ்ந்துள்ளது.
“உவச்சர்கட்கு, தாரணிபடகத்துக்குக் கால் - நிலம்” (தெ.கல்.தொ.19,கல்.69.) (க.க.சொ.அகரமுதலி, ப.237.)
தாளம் - (கலை)
வெண்கல உலோகத்தால் வட்ட வடிவில் இணையாகச் செய்யப்பெற்று, ஒன்றை ஒன்று தட்டுவதால் இசை தரும் கருவி. கஞ்சக் கருவிகளுள் ஒன்று.
திமிலை - (கலை)
பம்மை என்னும் தோற்கருவி. (இசைக்கருவி) திருக்கோயில்களில் திருப்பலிக்கு உவச்சு கொட்டுகிற போது இசைக்கப்படும் கருவிகளுள் ஒன்றாம்.
“இவ்வாண்டு முதல் காளம் இரண்டுக்கும் சங்கு ஒன்றுக்கும், திமிலை ஒன்றுக்குமாக ஆள் நாலுக்கு நிலம் இரு வேலி” (புதுக்.கல்.85)
திருப்பலி கொட்டுதல் - (சம)
கோயிலில் பூசை நிகழும் பொழுது உவச்சர் செகண்டி, காளம் முதலிய இசைக்கருவிகளை இசைத்தல் - நாள் கூலியோ காணியாட்சியோ இப்பணிக்குச் செய்யப் பெறுவது “உவச்சு” என்னும் பெயரால் வழங்கப் பெறும். திருப்பலி என்பது ஸ்ரீபலி என்று வடமொழியில் கூறப்பட்டுள்ளது.
“இத்தேவர்க்கு திருப்பணி மூன்று தேச காலமும் செகண்டிகை உட்பட ஐஞ்சான் கொண்டு திருப்பலி கொட்டுவதற்கு வைத்த நிலம். இவ்வூரில் உவச்சர்க்குரியது.” (தெ.கல்.தொ.12.கல்.114.) (க.க.சொ.அகரமுதலி, பக் 251.)
திருப்பள்ளியெழுச்சி கொட்டுதல் - (சம)
வைகறைப் பொழுதில், திருக்கோயில்களில் இறைவனைத் துயில் எழுப்புவதாக இசைக்கருவிகளைக் கொட்டுதல்.
“திருப்பழங்கோளூர் மகாதேவர்க்கு - ஆயிரங்குழி கொண்டு ஆறாள் மூன்று ஸங்கயும் திருப்பள்ளி எழுச்சி கொட்டுவதாகவும்.” (தெ.கல்.தொ.19. கல்.169.) (க.க.சொ.அகரமுதலி, ப.251.)
சங்கியை சங்கய் என்று திரிந்துளது. சங்கியை - எண்ணிக்கை.
திருப்பறையறைவு - (சம)
திருக்கோயில்களில் நிகழும் திருவிழா நிகழ்ச்சிகளை நாளும் பறையறைவித்து ஊரவர்க்கு அறியச் செய்யும் செயல்.
“ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார் ஆட்டைப் பெரிய திருவிழாவுக்குத் திருக்கொடியேற்று நான்று திருப்பறையறைவு கேட்பிக்கும் கடிகையார்” (தெ.கல்.தொ.2 2.கல்.26.) (க.க.சொ.அகரமுதலி, ப.252.)
பஞ்சமா சத்தம் - (கலை)
ஐந்து வகையான உயர்ந்த ஓசைக்கருவிகள். இவை விருதுப் பறைகளாகும். திருக்கோயில்களில் நிகழும் வழிபாட்டின் போதும் இவ்விசைக்கருவிகளை இசைப்பது வழக்காகும். செண்டை, திமிலை, செகண்டி, கைத்தாளம், காளம் என்றும், தத்தளி, மத்தளி, கரடிகை, தாளம், காஹளம் என்றும் கூறுவர். (க.க.சொ.அகரமுதலி, ப.319.)
பாடவியம் - (கலை)
கானம் பாடுவார்க்குப் பின்னிச்சையாக இசைக்கப்படும் வாத்தியங்களுள் ஒன்று.
“பாடவியம், ஒன்றுக்கு அரையன் வாத்யமாராயனுக்குப் பங்கு ஒன்று.” (தெ.கல்.தொ.2.கல்.66.) (க.க.சொ.அகரமுதலி, ப.352.)
மத்தளி - (கலை)
மத்தளத்தின் உறுப்புக்களமைந்த இரு முகத்தோற்கருவி.
“அடுத்தன தட்டழி மத்தளி கரடிகை தாளம் காகளம் ஏற்றி எட்டுப் பணி - அறமரு சாதிகாக்கும் பரிசினாற் காப்பது.” (பார்த்திப சேகரபுரச் செப்பேடுகள்.) (க.க.சொ.அகரமுதலி, ப.402.)
முண்டதாரி - (கலை)
சுருதிக் கருவியை, பாடல் ஆசிரியனுக்கு அருகிருந்து இசைப்பவன்.
“கானபாடி மூவர்க்கு முண்டதாரி அணுக்கனுக்கு ப்பங்கு ஒன்று.” (த.பெ. கோ.கல்.தெ.கல்.தொ.2.கல்.66.) (க.க.சொ.அகரமுதலி, ப.419.)
மொரலியம் - (கலை) (மோர்வியம்)
துளையிட்டு இசைக்கும் இசைக் கருவிகளுள் ஒன்று. முகவீணை என்றும் கூறுவர். (க.க.சொ.அகரமுதலி, ப.432.)