மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை 1987 ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கும் சி. கோவிந்தராசன் அவர்களது, “கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி (கி.பி.7 முதல் 12 ஆம் நுாற்றாண்டு வரை) எனும் நூலில் அளவை குறித்தப் பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
அஞ்ஞாழிக்கால் - (வ) (ஐந்து நாழிக்கால்.)
ஐந்து நாழி அளவு கொண்ட மரக்கால். (க.க.சொ.அகரமுதலி, ப.10.)
அண்ணாவன் உழக்கு - (அ)
குலோத்துங்க சோழன் ஆட்சியில் திருவண்ணாமலைக் கோயிலில் நெய்யளக்க இருந்த உழக்களவையின் பெயர்.
அண்ணா என்பது திருவண்ணாமலையின் பெயராதலின் அங்குள்ள இறைவன் அண்ணாவன் எனக் குறிக்கப் பெற்றார் (மேலது. ப.15.)
அரமனை சோடி - (அ)
அரண்மனைக்குச் செலுத்தும் வரி. (க.க.சொ.அகரமுதலி, ப.465.)
அரியென்ன வல்லா நாழி - (பொ)
காஞ்சிபுரம் திருவத்தியூர் அருளாளப் பெருமாள் கோயிலிருந்த நெய், பால் அளக்கும் முகவை. “அரியென்ன வல்லான் நாழி” என்பது இதன் திருத்தமான வடிவம்.
அரிவாட்பதக்கு - (அ)
அரிவாள் செய்யும் கருமானிடம் பெறும் சிறு வரி. இவ்வரி தானியமாகப் பதக்கு என்னும் அளவு பெறப்பபடும்.
அருமொழி தேவ நாழி - (பொ)
திருவெண்ணெய் நல்லுார் சிவன் கோயிலில் இரந்த பால் அளக்கும் நாழிக்குரிய பெயர். (அருள்மொழி தேவன் - முதல் இராசராசன்.)
அருமொழி நங்கை மரக்கால் - (பொ)
அருமொழி நங்கை என்பது வீரராசேந்திர சோழன் மனைவியின் பெயர். இவ்வம்மையார் பெயரால் சின்ன காஞ்சீபுரம் அருளாளப் பெருமாள் கோயிலில் வழங்கி வந்த மரக்காலின் பெயர்.
“கோயிலில் சிலவளக்கும் அருமொழி நங்கை மரக்காலால் திருக்கோட்டை நாளொன்றுக்கு நெல்லு முப்பதின் கலமாக” (அருளாளப் பெருமாள் கோயில் சாசனம்.) (தெ.கல்.தொ.111. 11. பக்.187.)
அலகு நிலைப்படி - (வா)
தராசில் சரியாக எடையிட்ட கணக்குப்படி (அலகு - சிறிய பொருள்களை எடையிடும் தராசு. அலகு வேறு. துலாக்கோல் வேறு.
“அலகு நிலைப்படி சயஎ பலமும்” (முதல் இராசராசன், கி.பி. 995. (தொல் துறை அறிக்கை எண். 199 - 1901.) (க.க.சொ.அகரமுதலி, ப.21.)
அளவுகோல் அருள்நிதி - (பொ)
தென்பாண்டி நாட்டில் சீவல்லப பாண்டியன் ஆட்சியில் வழக்கிலிருந்த நிலமளக்கும் கோல். ப.28.
- (பொ) ஆறு நாழி கொண்ட மரக்கால். இம்மரக்கால் முதல் பராந்தகன் அறுநாழிக்கால் ஆட்சியில் தொண்டை மண்டலத்தில் நெல்லாகப் பெறும் அரசிறைக்கு உரியதாக இருந்த மரக்காலாகும். அதே காலத்தில் மக்கள் புழக்கத்தில் தொண்டை மண்டலத்தில் வழக்கிலிருந்த மரக்கால் எண்ணாழிக் காலாகும். இதனால் அரசு குறைந்த அளவுடைய மரக்காலால் இறை பெற்ற தன்மை புலனாகின்றது.
1. “மனையிற் கோட்டத்துத் திருவூறல்ப் புறத்துப் போந்தைப் பாக்கத்து ஸபையோம் - யாங்கள் கொண்டு கடவ நெல் எண்ணாழிக்கல் காலால் எண்ணுாற்றுக் காடி.(முதல் பராந்தகன்)
2. “திருவூறல்புறத்துக் கயத்துார் ஊரோம் திருவூறல் மஹா தேவர்க்கு ஆண்டு வரை அறுநாழிக் காலாளக்கக் கடவ புரவு நெல் முந்நுாற்றுக்காடி.” (முதல் பராந்தகன், தெ.கல்.தொ.5.கல்.1371, 1375.) (க.க.சொ.அகரமுதலி, ப.29.)
அளவை
1. நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகத்தளத்தல், எண்ணியளத்தல் என எழு வகைப்படும். பின்னும் அளவை, எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல், தெறித்தல் என ஐவகைப்படும். பின்னும் காட்சி, அநுமானம், அருத்தாபத்தி, ஆகமம், உவமானம், அபாவம், சம்பவம், ஐதிகம் என (8) விதம்.
2. (பொன்னிறைப்பெயர்) சிறு புழை வழி வருஞ் சூரிய கிரணத்திலே நுண்ணிதாகக் காணப்படுகின்றவர்களுக்குத் திரிசரேணுவென்று பெயர். திரிசரேணு (8) கொண்டது ஈர். ஈர் (3) கொண்டது மன் கடுகு. மன்கடுகு (3) கொண்டது வெண்கடுகு. வெண்கடுகு (6) கொண்டது நடுத்தரயவம். நடுத்தரயவம் (3) கொண்டது குன்றி. குன்றி (5) கொண்டது மாடம். அதற்குக் க்ருஷம் என்றும், அ மென்றும், பெயர். மாடம் (6) கொண்டது பொன். பொன் (4) கொண்டது பலம். (அதற்கு நிட்கமென்று பெயர்) பலம் (10) கொண்டது தரணம். (வெள்ளி நிறைப்பெயர்) குன்றி (2) கொண்டது வெள்ளி மாடம். வெள்ளி மாடம் (16) கொண்டது வெள்ளித்தரணம் (அதற்குப் புராணமென்றும் பெயர்) வெள்ளித்தரணம் (10) கொண்டது பலம். (அதற்குச் சதமாமென்று பெயர்) செம்பினிறைப்பெயர். பொன்னிறையிற் காட்டிய பலத்தில் நாலிலொரு பங்கான தாம்பிரத்திற்குக் காருடிக மென்றும், காரூடா பணமென்றும் பெயராம். (விவகார \ சாரசங்கிரகம்.)
3. குன்றி, மாடம், கருடம், பதார்த்தம், பிரத்தம் இவை ஒன்றினொன்று பதின் மடங்கதிகம். குன்றி (10) கொண்டது மாடம். மாடம் (10) கொண்டது கருடம். கருடம் (10) கொண்டது பதார்த்தம். பதார்த்தம் (10) கொண்டது பிரத்தம். பிரத்தம் (5) கொண்டது ஆடகம். ஆடகம் (8) கொண்டது அருமணம். அருமணம் (20) கொண்டது காரிகை. இவை நாடுகள் தோறும் வேறுபடும். ஐந்தங்குல ஆழமும் நான்கங்குல நீளமும் உள்ள பாத்திரம் முகத்தலளவையில் கால் பிரத்தம். (சுக்கிர நீதி)
4. நிலத்தின் அளவு - (5000) முழம் ஒரு குரோசம் என்று பிராசபதியினாலும், (4000) முழம் குரோசம் என்று மநுவினாலும் சொல்லப்பட்டன. பிரம்மாவின் கொள்கைப்படி (2 1 2) கோடி முழங்கள் அல்லது (2500) சதுர நிவர்த்தனங்கள் ஆதல் ஒரு குரோசத்தின் சதுர அளவாம். நடுவிரலின் நடுவிலுள்ள இரண்டு கணுக்களுள் நடுப்பாகம் நீளம் அங்குலம் என்று கூறப்படும். யவம் என்னும் தானியத்தின் நடுப்பாகம் (8) கொண்ட நீளமும் அதன் (5) கொண்ட அங்லமும் ஒரு அங்குலமாகும். அங்குலம் (24) கொண்டது ஒரு முழம். (4) முழம் கொண்டது ஒரு கோல். (5) முழம் கொண்டது இலகு. யவ தானியத்தின் நடுப்பாகம் (768) கொண்டது ஒரு கோல் என்பது பிரஜாபதியின் கருத்து. யவதானியத்தின் நடு அளவு (100) கொண்டது ஒரு கோல் என்பது மநுவின் கருத்து. இவ்வாறு (25) கோல்கள் கொண்டது நிவர்த்தனம். (625) கோல் கொண்டது பரிவர்த்தனம். பரிவர்த்தன அளவு விஷயத்தில் (25) கோல்கள் கொண்டது ஒரு புயமாகும். (4) புயங்களின் அளவுள்ளது உழவு நில பரிவர்த்தனம் என்று கூறப்படும். (சுக்கிரநீதி.) அ.சி, பக். 130 - 131.)
அளவைகள் - தமிழ் தமிழ் அகராதி
துாணி - நாலு மரக்கால் அளவு. (த.த.அ.ப.824.)
பதக்கு - இரண்டு குறுணி கொண்டது. (மே, ப.940.)
குறுணி - ஓரளவு. சிறியது. (மே, ப.498.)
முந்திரிகை - ஓரெண்.
மரக்கால் - கலத்தின் பன்னிரண்டிலொரு பங்கு. அது ஒரு குறுணி.முகந்து அளக்கும் கருவியில் ஒன்று. (மே, ப.1123.)
நாழி - ஒரு படி. (மே, ப.880.)
படி - ஓரளவு. நாழி. நிரையறிபடி, நுாறு பலங் கொண்ட நிறை. (த.த.அ.ப.932.)
அன்றாடு நடக்கும் நற்காசு - (அ)
நாட்டு முறையில் வழக்கிலிருக்கும் குற்றமற்ற பொற்காசு. (தெ.கல்.தொ.5.கல்.483.) (க.க.சொ.அகரமுதலி, ப.465.)
அன்றாடு கண்ட கோபாலன் வாசிபடா புதுமாடை - (பொ)
அன்றைய வழக்கிலுள்ள கண்ட கோபாலன் என்னும் பெயரமைந்த உரையும் நிறையும் குறையாத புதுப் பொற்காசு. (மாடை - பொற்கா.) (வாசி - குற்றம்.) (தெ.கல்.தொ.12.கல்.190.)
அனவரதனன் - (பொ)
திருநெல்வேலி சிவன் கோயிலில் சடையவர்மன் வீரபாண்டியன் ஆட்சியில் வழக்கிலிருந்த எண்ணெய் அளக்கும் நாழி. ப. 31.
ஆணியம் - (வ)
நாள் உதவித்தொகை. ஒரு நாள் கூலிக்காசு.
ஆழாக்கு - (பொ)
ஆழாக்கு. நாழியளவில் எட்டில் ஒர பகுதி. (முகத்தலளவை) (8 ஆழாக்கு - நாழி.) ப.43.
ஒரு நாழி - ஒரு படி.
இறையிறுக்கும் கோல் - (அ)
நிலத்தை அளந்து இறை அளவிடுதற்கமைந்த நில அளவுகோல்.
உலகளந்தான் நாழி - (பொ)
உலகளந்தான் என்னும் பெயருடன் திருவிடைக்கழி திருமால் கோயிலில் நெய் அளக்க இருந்த முகவையாகும்.
“இப்பசு ஆறுக்கும் மாதம் ஒன்றுக்கு உலகளந்தாந் நாழியால் அளக்கும் நெய் நாழி உரி.” (நாழி உரி - நாடுரி.) (தெ.கல்.தொ.12.கல்.147.)
உலகளந்தான் மரக்கால் - (பொ)
திருக்கோவலுார் திருவிடைக்கழி ஆழ்வார் கோயிலில் நெய் அளக்க இருந்த மரக்காலின் பெயர். (தெ.கல்.தொ.7:1,ப.143.) (க.க.சொ.அகரமுதலி, ப.72.)
எட்டுமாறி பொன் - (பொ)
எட்டு மாற்றமைந்த பொன்.
“சொக்கச்சியன் கல்லிடைப்பட்டி எட்டு மாறி பொன் இருபத்தைங்கழஞ்சு.” (தெ.கல்.தொ.12,ப.181.)
எடுத்தலளவு - (பொ)
எடுத்தலளவைக்குரிய கருவி (தராசு) தராசு செய்வாரிடம் பெறும் வரி.
எண்ணாழிக்கல் - (பொ)
எட்டு நாழி கொண்ட மரக்கால். இவ்வளவை.
“எட்டுபடி ஒரு மரக்கால்” என்பதனோடு ஒக்கும். முதல் பராந்தககன் காலத்தில் தொண்டை நாட்டில் மக்கள் வழக்கிலிருந்த மரக்கால். (தெ.கல்.தொ.5,கல்.1371.) (க.க.சொ.அகரமுதலி, ப.98.)
எண்ணாழிக்காலால் - (மொ)
எட்டு நாழி கொண்ட மரக்காலால் தமிழெழுத்துக்கள் உயிர் மெய் நெடிலாக வரும் போது, கி.பி ஒன்பதாம் நுாற்றாண்டில் பக்கக் கால்கள் குறிக்கப் பெறுதல் வழக்கென்பதை இத்தொடர் காட்டுவதாகும். (தெ.கல்.தொ.12,பகு.1.கல்.102.) (கம்பவர்மன் ஆட்சியாண்டு 11.) (க.க.சொ.அகரமுதலி, ப.89.)
ஐஞ்சிரண்டு வண்ணம் - (வ)
ஐந்த பங்கு நெல்லைக் குற்றி அரிசியாகக் கொள்வது இரண்டு பங்கு அரிசியாகும். இதுவே ஐந்துக்கு இரண்டு வண்ணம் என்பதாகும். ஐந்து மரக்கால் நெல்லாயின் குற்றித் தீட்டிய முழு அரிசி இரண்டு மரக்காலாகும்.
“திருவமுது மூன்று சந்திக்கும் அரிசி குறுணி நாநாழியாக குற்றுக் கூலி உள்பட ஐஞ்சிரண்டு வண்ணத்தால் நெல்லு முக்குறுணி அறுநாழியும்.” (தெ.கல்.தொ. VI I ,ப.222.) (க.க.சொ.அகரமுதலி, ப.86.)
ஐஞ்சு - (எண்ணளவை)
வழக்கும் போலியும் வரையாது வந்த சொல்.
ஐஞ்ஞாழி - (பொ)
நாழியளவு - இவ்வளவுக்குரிய மரக்கால் சோழராட்சியில் வழக்கிலிருந்தது. ப.86.
ஒரு குழி நிலம் - (வ)
ஒரு குழி அளவுள்ள நிலம். இதனை பன்னீரடி சதுரக்குழி என்றும், 144 சதுர அடி கொண்ட நிலப்பரப்பு என்றும் கூறுவர். இக்குழியென்னும் நிலப்பரப்பளவு 576 சதுர அடி வரையில் வெவ்வேறு வகையில் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகின்றது. ஆயினும் ஒரு குழி என்பது 33 அங்குல நீளமுள்ள தச்சு முழக் கோலால் அளந்த சதுரமான நில அளவு என்பது மனை நுால் கணக்கு.
இரண்டாயிரங்குழி ஒரு வேலி நிலம் எனவே இரண்டாயிரத்தில் ஒரு கூறு ஒரு குழியாகும்.
ஒரு மாநிலம் - (வ)
ஒரு வேலி நிலத்தில் 1/ 20 பங்கான அளவுடைய நிலம் 100 குழி பரப்புடைய நிலம். இவ்வளவை நிலங்களின் தரத்திற்கேற்ப மாறுபடுதலும் உண்டு.
“இந்நான்கெல்லையிலும் நடுவுபட்ட நிலம், பதினறு சாண்கோலால், நுாறு குழி கொண்டது ஒரு மாவாக நிலம் அரையே நான் மாவரை.” (தெ.கல்.தொ.8.கல்.316.முதல் இராசேந்திரன்.) (க.க.சொ.அகரமுதலி, ப.89.)
கசரை - (வா)
கஃசு அரை. ஒரு கஃசும் அரையும், ஒன்றரை கஃசு எடை பொருள். (நிறுத்தலளவை) (க.க.சொ.அகரமுதலி, ப.94.)
ஒன்பது மாற்றில் பொன் - (பொ)
ஒன்பது மாற்று உரைத்திறனமைந்த பொன். (க.க.சொ.அகரமுதலி, ப.91.)
கட்டுழக்கை - (சம)
ஊரில், அறுவடைக்களத்தில், கோயிலுக்கு உரிய அறக்கொடையாக, நெற்கட்டு ஒன்றில் மூன்று குடங்கை அளவு அள்ளிக் கொடுத்தல் கட்டுழக்கையாகும். இதனையே அரிமுக்கை என்றும் கல்வெட்டுக்கள் கூறும். (க.க.சொ.அகரமுதலி, ப.95.)
கடமைக்கால் - (அ)
வரிக்குரிய தானியங்களை அளந்து கொள்வதற்கு, அரசு நிர்ணயித்த அளவு மரக்கால்.
கடிகைக்கோல் - (அ)
ஊர்ச்சபையில் இருக்கும் நிலமளக்கும் கோல். (தடி) (தெ.கல்.தொ.IV.கல்.290.) (வேலுார் பாளயப் பட்டயம் - மூன்றாம் நந்திவர்மன்)
“இது அழித்தான் கடிகை எழா இருவரையும் கொன்ற பாவத்துப் படுவான்” (கடிகை - ஊர்ச்சபை) (தெ.கல்.தொ.3:1,ப.42.) (க.க.சொ.அகரமுதலி, ப.98.)
கலம் - (பொ)
பாத்திரம். 1.உண்ணும் பாத்திரம். 2. மரக்கலம். 3. ஒரு கலம் - முகத்தல் அளவு.
“ஸ்ரீராஜராஜதேவர் தம்பண்டாரங்களில் குடுத்த வெள்ளியின் திருப்பரிகலங்கள்” (தெ.கல்.தொ.2.கல். 91.)
“நாளொன்றிற்கு நெல்லு முப்பதின் கலமாக” (தெ.கல்.தொ.3,2 பக்.187.)
“அலைகடல் நடுவுட் பலகலம் செலுத்தி” (மரக்கலம்) (முதல் இராசேந்திரன் மெய்கீர்த்தி)
கலவரை - (வா)
ஒன்றரை கலம் அளவு (கலம் அரை - ஒன்றரை)
“நிசதி கலவரை அரிசி.” (திருவைகாவூர் கல்வெட்டு.) (க.க.சொ.அகரமுதலி, ப.111.)
கழஞ்சு - (வா)
பொன்னை எடையிடும் உயர்நிலை மதிப்பீட்டு அளவை. இதன் உள் எடைகள் மஞ்சாடி, குன்றி, மா என்று பெயர் பெறும். 20 மஞ்சாடி அல்லது 40 குன்றி மணி எடை ஒரு கழஞ்சாகும்.
“பொன் - நிறை முப்பதின் கழஞ்சும் ஆக முப்பத்தேழு கழஞ்சே முக்காலே மூன்று மஞ்சாடியும் குன்றி ஏழு மாவுக்கும் விலை காசு ஐம்பது.” (தெ.கல்.தொ.2 கல். 3.) (க.க.சொ.அகரமுதலி, ப.113.)
கழநிக்கோல் - (வ)
நிலமளக்கும் கோல். இக்கோல் பன்னிரண்டு சாண் நீளம் முதலாக முறையே, பதினான்கு. பதினாறு, பதினெட்டு சாண்களளவில், நிலங்களின் தரத்திற்கேற்ப நாடுகளில் வழக்கிலிருந்தன என்பதைச் சோழர் காலக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
கஃசு - பலம் என்னும் நிறுத்தலளைக்குட்பட்ட பின்ன அளவையாகும். தோலா என்பதனை ஒக்கும்.
“சர்க்கரை இருபதின் பலமும் கண்ட சர்க்கரை முக்கஃசும்” (தெ.கல்.தொ.3 2, பக்.187.)
“தொடிப்புழுதிகஃ சாவுணக்கின் ” (திருக்குறள் - உழவு - குறள் 7)
காசுக்கருதி - (பொ)
பொற் காசுகளில் முதல் தரமானது. நற்காசென்றும் பெயர் பெறும்.
“காசுக் கருதித் துளையிலும் உரையிலும் நிறையிலும் வழுவாதது தீப்போக்குச் செம்பொன்” (க.க.சொ.அகரமுதலி, ப.120.)
காசு - (பொ)
அணிகலன்களையும் நிலங்களையும் மதிப்பீடு செய்து விற்கவும், கொடுக்கவும் குறிக்கும் காசு பொற்காசாகும். வரி, இறை, ஆயம், அந்தராயம் ஆகிய அரசு பெறும் வரிக்காசுகள் செம்பு, பித்தளை ஆகிய வேறு உலோகங்களால் செய்யப் பெற்ற நாணயங்களாகவே அமைக்கப்பட்டிருந்தன.
“பண்டாரத்துப் பொன் கொடு செய்த திருப்பட்டிகை நிறை அறுபத்தேழு கழஞ்சேய் ஆறு மஞ்சாடிக்கு விலைகாசு தொண்ணுாற்று ஐந்து” (பொற்காசு) (தெ.கல்.தொ.2.) (தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுக்கள்) (க.க.சொ.அகரமுதலி, ப.119.)
காசு கல் - (வா)
பொன்னை எடை போடும் நிறை கல்.
காசு - சின்னம் - (பொ)
சோழ பாண்டியர் ஆட்சியில் உயர்ந்த முதல் மதிப்பு நாணயம் - காசு என்பதாகும். கடைசியாக கொள்ளப்பட்ட பின்ன மதிப்புச் சின்ன நாணயம் - சின்னம் என்பதாகும். உரூபா - பைசா போன்றதாகும். சோழ அரசில் நாட்டில் நடைமுறையில் இருந்த நாணய மதிப்பீட்டு முறை இதுவேயாகும்.
“ஒரு காசு தலையாக ஒரு சின்னங் கடையாகவும்” (தெ.கல்.தொ.8, கல்.148.) (க.க.சொ.அகரமுதலி, ப.120.)
காடி - (வா)
பல்லவர் காலத்தில் நாட்டில் சிறப்பாக வழக்கிலிருந்த நெல் அளவை. இது கல்நெல் என்பது போலாகும். 5 குறுணி அல்லது 40 நாழி 1 காடி பல்லவர் காலம் 3 காடி 1 கலம் சோழர் காலம்.
“புகழ்த்துணை விசெய்யரையன் முப்பதின் காடி நெல்லும் ஐங்கழஞ்சு பொன்னும் குடுத்து மீட்டு.” (தந்தி வர்ம பல்லவன் கி.பி. 789, எபி. தொகுதி. 8,எண். 29.)
“ஒய்மா நாட்டு ஆன்மூர் நாட்டு மணலி ஊரார் ராஜகேஸரியாலட்டக்கடவ பஞ்சவார நெல்லு ஆயிரக்காடி, பள்ளிப்பேறு தொண்ணுாற்று அறுகாடி முக்கால் யிவை காடி கலமாக்கிய நெல்லு முன்னுாற்று அறுபத்து ஐய்ங்கலனே எழுகுறுணி” 1096 365 3 காடி 1 கலம். (தெ.கல்.தொ.17.கல்.222.) (க.க.சொ.அகரமுதலி, ப.121.)
“இந்நெல் முதலால் பதின்கடியால் ஒரு நாடி நெல் பொலி ஊட்டுவதாக” (பரமேசுவரப் பல்லவன், கி்பி.673.) (தெ.கல்.தொ.8.கல்.331.) (க.க.சொ.அகரமுதலி, ப.120.)
காணம் - (பொ)
ஓரளவுடையதாக அமைந்த பொன் நாணயம். (க.க.சொ.அகரமுதலி, ப.471.)
சங்க காலம் முதற் கொண்டு தமிழகத்தில் வழக்கிலிருந்த பொன் நாணயம்.
“காணம் இலியென கையுதிர்க் கோடலும்” (மணிமேகலை - சாதுவன் வரலாறு)
காண நாழி - (பொ)
திருச்சிராப்பள்ளி மலைக் கோயிலில் நெய்யளக்க வழக்கிலிருந்த அளவின் பெயர்.
“காண நாழியால் நிசதி அட்டக்கடவ நெய் இரு நாழி” (தெ.கல்.தொ.14, கல்.10.)
காணம் படுவோம் - (வ)
காணப்பொன் தண்டப்படுவோம். (காணம் - பொற்காசு)
“நிலைப் பொலியூட்டாகத் திங்கடோறுமாக குடுப்போமானோம் முட்டுவதாயிற் தர்மாஸநத்து நிசதி நாலே கால் படுவோமானோம்.” (தெ.கல்.தொ.12, கல்.70.)
“காணம் இலியெனக் கையுதிர்க் கோடலும்”(மணிமேகலை காதை - 16, வரி - 10.)
காணி - (வே)
வாரிசு உரிமை நிலம். கோயில்களிலும், அறநிலையங்களிலும் பணி செய்வார்க்கு அரசோ, கிராமசபையோ நிலையாக வழி வழித் தொடர்ந்து ஊழியம் செய்து பரம்பரை உரிமையாக அனுபவிக்கக் கொடுக்கும் நிலம். இதனைக் காணியாட்சி என்றும் கூறப்பெறும். விருத்தி, காணி, போகம் முதலியன ஒரு பொருளாம்.
“இந்நாயனார்க்கு வில்லவராயர் செய்வித்த உலகமுண்டான் திருநந்தவனஞ் செய்யும் பேர்க்கு இவர் காணியாக கொண்டு விட்ட நிலம்.” (தெ.கல்.தொ.17 கல். 170.) (க.க.சொ.அகரமுதலி, ப.122.)
குசக்காணம் - (அ)
குயவர் ஆற்றுப்படுகையிலும், களிப்பிடத்தும் மண் அகழ்ந்தெடுப்பதற்கு அரசு காசாகப் பெறும் வரி.
குச மண்ணாலி - குச மண் நாழி, குயவன் மண்ணால் செய்த நாழி அளவைப்படி. (க.க.சொ.அகரமுதலி, ப.137.)
குத்தொகை - (வே)
திட்டமாகக் குறிப்பிட்ட தொகை. குத்து மதிப்பான தொகை. (தொ.17.கல்.562.) (க.க.சொ.அகரமுதலி, ப.473.)
குடிஞைக்கல் - (வ)
சோழராட்சியில் நாட்டு வழக்கில் வணிகத்துறைகளில் பொன் வெள்ளி எடையிடும் அளவைக்கல்.
“வெள்ளிக்கலசம் ஒன்று நிறை குடிஞைக்கல்லால் நுாற்று நாற்பத்தைங் கழஞ்சு.” (தெ.கல்.தொ.5.கல்.514. முதல் இராசராசன்.)
“கனப் பெருமக்கள் வசமேய் தேவர்க்கு குடுத்த பொன் துளை இவ்வூர்க்கல்லால் நாற்பத்திரு கழஞ்சரை.” (தெ.கல்.தொ.19.கல்.22.) (க.க.சொ.அகரமுதலி, ப.142.)
குழி - (வ)
நில அளவை. பன்னிரண்டடி சதுரப்பரப்புடைய நிலம் ஒரு குழியாகும். நுாறு குழி கொண்டது ஒரு மாநிலம். இக்குழி அளவை நாடுகள் தோறும் நிலத்தின் தரத்திற்கேற்ப மாறுபட்டுள்ளது.
“இந்நான்கெல்லைக்கு முட்பட்ட புன்செய் குழி - 300” (தெ.கல்.தொ.7.கல். 141.)
பதினாறு சாண் கோலால் நுாறு குழி கொண்டது ஒரு மாவாக நிலம் அரையேய் நான் மா” (முதல் இராசேந்திரன், தெ.கல்.தொ.8.கல்.316.) (க.க.சொ.அகரமுதலி, ப.147.)
நிலக்குறியீடுகள் - (மொ)
விக்கிரம சோழன் காலம்.
கி.பி. 1120 - 1150.
கீ - கீழ் - - கீழ்நிலம்.
கு - குழி - குழிநிலம். (க.க.சொ.அகரமுதலி, ப.305.)
குளகம் - (வா)
நாயக்கராட்சியில் கொண்கான நாட்டில் (தர்மபுரிப்பகுதி) வழக்கிலிருந்த தானியமளக்கும் அளவைகளில் பெரிய அளவையின் பெயர். (குளகம் - கல அளவை போன்றது)
குளிகை - (அ)
சிறிய திரண்ட வடிவிலமைந்த நாணயம். (குளிகைப்பணம்.) (க.க.சொ.அகரமுதலி, ப.473.)
குறுணி - (வ)
முகத்தளவையில் எட்டு நாழி கொண்டது ஒரு குறுணி அளவையாகும். (குறுணி - மரக்கால்)
“நெல்லு ஐங்குறுணி உரியும்” (தெ.கல்.தொ.3:2, கல்.187.) ( 8 நாழி 1 குறுணி. 12 - குறுணி - 1 கலம்) (க.க.சொ.அகரமுதலி, ப.150.)
கேரளாந்தக நாராய நாழி - (பொ)
பாண்டி நாட்டு திருச்சுழியல் சுந்தர பாண்டிய ஈசுவரத்தில் இருந்த நெய் அளக்கும் நாழி அளவை. (க.க.சொ.அகரமுதலி, ப.153.)
கொழுக்குத்து - (வே)
எல்லையைக் குறிப்பதற்கு பூமியில் நாட்டப்பட்டிருக்கும் குத்துக்கல். (காழ்மாசுக்கால்) (க.க.சொ.அகரமுதலி, ப.158.)
கோல் - (பொ)
துலாக்கோல். எடை மிகுந்த பொருள்களை நிறுக்கும் பெருந்தராசு. இக்கோல் அக்காலத்தில் அரசு அமைத்த மூலத் துலாக் கோலாக வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தது.
“இவ்வூர் வெள்ளிக்கோல் காஞ்சிபுரத்து நின்றானொடொக்கும் கோலால் எடுக்க போந்த நிறை செப்புத் தளிகை தொண்ணுாற்றுப் பலமும், ஸ்ரீ பலித்தாலம் நுாற்றுப் பலமும்” (முதல் இராசராசன், கி.பி.996, கல்வெட்டு அறிக்கை எண். 199/1901.)
கோட்டை - (வா) (நெல் அளவை)
ஒரு கலம் என்பது போன்ற அளவு. பாண்டி நாட்டில் ஒரு கோட்டை நெல்லளவு வழக்கிலுள்ளது.
சதிரம் - (வே)
சதுரம் நில அளவைகளுள் நெல் விளையும் நிலங்களைச் சதுரம் என்ற அளவிலும் அளந்துள்ளனர். ஒரு சதுரம் என்பது நான்கரை மா பரப்பளவுடையதாகவும் கூறப் பெற்றுள்ளது. இந்நிலம் ஒரு கண்ணிக்காலின் பாசனம் பெறுவதாகவும் இருக்கும்.
“திருக்குளத்துக்கும் திருமடை விளாகத்துக்கும் சதிரம் நான்மா வரைப்படி இட்ட ஐய்வேலியும்” (தெ.கல்.தொ.7.கல்.816.)
“கண்ணாறு சதுரம் கட்டி நன்செய் புன்செய் தோட்டக் கூறு திருத்திப் பயிர் செய்தும் ” (தெ.கல்.தொ.5.கல்.411.)
“இரவி குல சூளாமணிவதிக்கு கிழக்கு அறிஞ்சிரை வாய்க்காலுக்கு வடக்கு 5 ம் கண்ணாற்று 1 ம் சதிரத்து மேற்கடைய நிலம்.” (தெ.கல்.தொ. V.கல்.641.) (க.க.சொ.அகரமுதலி, ப.172.)
சலாகை - (அ)
சிறு நாணயம். சோழர் ஆட்சியிலும், பாண்டியர் ஆட்சியிலும், ஒரு காசின் கீழ் நாணயமாக வழக்கிலிருந்தது. இதன் ஒரு புறம் “இயக்கி” என்னும் பெண் தெய்வத்தின் வடிவம் அமர்ந்த பாங்கில் பொறிக்கப்பட்டிருக்கும். அதனால் இக்காசிற்கு “சிரி இயக்கி சலாகை” என்றும் பெயர்.
“இவர் பக்கல் நாங்கள் கைக்கொண்ட சிரியக்கி பழஞ்சலாகை அச்சு பத்தும் கைக்கொண்டு இவ்வமுது படி செலுத்துவோமாக.” (விக்கிரம சோழன், தெ.கல்.தொ.4,கல்.387.) (க.க.சொ.அகரமுதலி, ப.182.)
ஸண்டேசுவர தேவரிடை கொண்ட பொன் - (சம)
சிவன் கோயில்களில் அமைந்த திருச்சுற்று மாளிகைத் தெய்வங்களுள் முதன்மை பெற்றவர் சண்டேசுவரதேவர் திருமேனியாகும். கோயில் நிர்வாக அதிகாரிகள் சண்டேஸ்வரரைத் தலைமையாகக் கொண்டே வரவு செலவு செய்தல் மரபாகும். அம்முறையிலேயே பொன் கொள்ளப் பெற்றுள்ளது. (தெ.கல்.தொ.8, கல். 67.) (க.க.சொ.அகரமுதலி, ப.498.)
ஸம்ஹாரம் பண்ணிச் சதுரங் கட்டின பதினறு சாண்கோல் - (அ)
இப்பெயரமைந்த நிலமளக்கும் கோல், முதற் குலோத்துங்கன் ஆட்சியில், வட தொண்டை மண்டலத்தில் வழக்கிலிருந்த கோலாகும்.
“நான்கெல்லை அகத்துப்பட்ட நிலம் ஸம்ஹாரம் பண்ணிச் சதுரங் கட்டின பதிநறு சாண்கோலால் அளந்த நிலம்” (கத.கல்.தொ.7,கல்.542.) (க.க.சொ.அகரமுதலி, ப.213.)
சிகையான காசு - கூடி நின்று காசு. ஒரு தொகையாகத் தங்கி நின்ற காசு.
“கணக்கு கெட்டு இப்பெயரால் சிகையான காசு தண்ட” (வரி வசூலாகாமல் கணக்கு கெட்டு, கொடுக்க வேண்டியவன் பெயரால் தொகுதியாக நின்ற வரிக்காசினை வசூலிக்க.) (தெ.கல்.தொ.12,கல்.199.) (க.க.சொ.அகரமுதலி, ப.199.)
சிற்றம்பலத்துக் கோல் - (வ)
முதல் இராசராசன் ஆட்சியில் தொண்டை மண்டலத்தில் நில அளவைக்குரியதாக அரசு வழி அமைக்கப்பட்ட கோலின் பெயர். (உக்கல் கல்வெட்டு)
சுந்தர பாண்டியன் கோல் - (அ)
இது 24 அடி நீளமுடைய நிலமளக்கும் கோல். மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியில் நாட்டு வழக்கிலிருந்த நில அளவைக்கோல்.
செம்பியன் மாதேவியாலே அறு நாழி உப்பு - (சம) செம்பியன் மாதேவி என்ற பெயரால் திருமழபாடி கோயிலில் நாயக்கர் காலத்தளவும் வழக்கிலிருந்த மரக்கால். (தொ.5.கல்.627.) (க.க.சொ.அகரமுதலி, ப.480.)
செம்பியன் மாதேவி நாழி - (வா)
திருமழபாடி கோயிலில் உப்பளக்க இருந்த நாழி அளவை. இப்பெயரால் மரக்காலொன்றும் இருந்ததைக் கல்வெட்டு குறிக்கின்றது. (தெ.கல்.தொ.5,கல்.627,638.) (க.க.சொ.அகரமுதலி, ப.199.)
செல்வி ராஜகேசரி - (சம)
திருவல்லம் சிவன் கோயிலில் நெல்லளக்க இருந்த மரக்காலின் பெயர்.”
“காசொன்றுக்கு செல்வி ராஜகேஸரியால் நெல்லு நாற்கலமாக” (தெ.கல்.தொ.3:1,கல்.57.) (க.க.சொ.அகரமுதலி, ப.205.)
சொக்கச்சியன் கல் - (வா)
தொண்டை மண்டலத்தில் பொன்னை நிறுக்க நாட்டு வழக்கில் நிலவிய நிறைக்கல். (திருவாமாத்துார் கல்வெட்டு, தெ.கல்.தொ.12, கல்.181.)
சொக்கசீயன் என்பது கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவ அரசனுக்குரிய சிறப்புப் சிறப்புப் பெயராகும்.
சொக்கச்சியன் கோல் - (சம)
சொக்கச்சியன் என்ற பெயரால் தில்லை நடராசப் பெருமான் கோயிலில் நிலவளவைக்குரியதாக இருந்த அளவுகோல்.
“சொக்கச்சியன் கமுகு திருநந்தாவனம் நிலம் அறுபத்து மூன்றுமா முக்காணிக்கீழ் முக்காலும் சொக்கச்சீயன் கோலால் அளந்த இடத்து” (தெ.கல்.தொ.12,கல்.215.) (க.க.சொ.அகரமுதலி, ப.199.)
சோமநாதன் மரக்கால் - (சம)
விக்கிரம சோழன் ஆட்சியில் தென்பாண்டி நாட்டில் வழக்கிலிருந்த மரக்கால், ஆத்துார் சோமநாத ஈஸ்வரர் கோயிலிலும் இம்மரக்கால் இருந்துள்ளது.
“ஆட்டாண்டு தோறும் சோமநாதன் மரக்காலால் அளவக்கடவ நெல்லு எழுபதின் கலமும்” (தெ.கல்.தொ.14,கல்.191.)
சோழிய நாழி - (சம)
பாண்டி நாட்டுத் திருச்சுழியில் சுந்தர பாண்டிய ஈஸ்வரத்தில் இருந்த நெய் அளக்கும் அளவையின் பெயர்.
“நெய் சோழிய நாழியால், நெய் ஆழாக்கும் அட்டுவதாக.” (தெ.கல்.தொ.14,கல்.80.) (க.க.சொ.அகரமுதலி, ப.210.)
தந்ம கட்டளைக்கல் - (வ)
தர்ம கட்டளைக்கல். பொன்னை எடையிடும் நிறைகல். திருநாகேசுவரம் கோயிலில் முதல் இராசேந்திரன் ஆட்சியில் வழக்கிலிருந்த நிறை கல்லின் பெயர்.
“பொற் பூ ஏழினால் தந்ம கட்டளைக் கல்லால் பொந்பந்நிரு கழஞ்சே முக்கால்.” (தெ.கல்.தொ.6.கல்.33.) (க.க.சொ.அகரமுதலி, ப.222.)
தானமானம் - (சம)
அறஞ் செய்வதற்குரிய அளவு.
திரமம் - (வா)
ஒரு காசுக்குரிய பின்ன அளவைப் பொன் நாணயங்களுள் ஒன்று. இத்திரமம் கால், அரை, முக்கால் என்ற அளவையிலும் அதற்கு கீழடங்கிய சிறு மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்நாணயம் யவனர் தமிழகத்தோடு வாணிபம் நிகழ்த்திய வழி, தமிழக வழக்கில் நிலவிய பொன் நாணயமாக இருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன.
“பொலியூட்டாகக் கொண்ட பழங்காசு அரையே அரைக்காலுக்கு ஆட்டுப் பொலியுள் திரமம் முக்காலே மூன்றுமா.” (இராசாதிராச சோழன் - கி.பி.1054, தெ.கல்.தொ.8.கல்.36.)
“இப்பரிசு சம்மதத்து இத்திரமம் நுாறும் ஒடுக்குக் கொண்டோம், இவ்வாள்வாள் கண்டி மகளோம்” (பாண்டி நாடு) (தெ.கல்.தொ.14.கல்.198.)
“திரமம் இரண்டுக்கு நெல் அறுகலம்” (தெ.கல்.தொ.8.கல்.330.) (க.க.சொ.அகரமுதலி, ப.241.)
திருச்சூலக்கல் - (சம)
சிவன் கோயில்களுக்குரிய தேவ தான நிலங்களின் எல்லைகளின் நாட்டப் பெறும் திரிசூலம் பொறித்த எல்லைக்கல்.
“இந்நிலத்தில் நாற்பாலெல்லையிலும் திருச்சூலக் கல்லு நாட்டி ” (தெ.கல்.தொ.12.பகு.1,கல்.142.) (க.க.சொ.அகரமுதலி, ப.249.)
திருச்சூலத்தாபரம் - (சம) (திருச்சூலத்தாபனம்)
சிவன் கோயில்களுக்கு அளிக்கப் பெறும் தேவதான நிலங்களின் நான்கு எல்லைகளிலும் சிவபெருமானின் திரிசூல இரச்சினை பொறிக்கப்பட்ட கல்லை நிலையாக நாட்டுவித்தல்.
“இறையிலி திருநாமத்துக் காணியாகத் தந்தோம். இப்படிக்கு நாற்பாற்கெல்லைக்கும் திருச்சூல தாபரமும் பண்ணி கல்லிலும் வெட்டிக்கொள்க.” (முதற் குலோத்துங்கன், கி.பி. 1078, (தெ.கல்.தொ.7.கல்.780.) (க.க.சொ.அகரமுதலி, ப.246.)
திருவண்ணாமலை - (சம)
திருவண்ணாமலைக் கோயிலில் இருந்த மரக்கால்.
“ஆக நாள் ஒன்றினுக்கு திருவண்ணாமலை என்னும் மரக்காலால் நெல்லு ஐங்குறுணி.” (தெ.கல்.தொ.8.கல்.66.) (க.க.சொ.அகரமுதலி, ப.260.)
திருவாழிக்கல்லு - (சம)
திருமாலுக்குரிய சங்கு சக்கர வடிவினைத் தலைப்பு முகப்பில் பொறித்து வைணவக் கோயில்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலங்கட்குரிய எல்லைக் கற்களாக நிறுத்தும் குத்துக்கல்.
“நாலு மூலையிலு திருவாழிக்கல்லு நாட்டி ” (தெ.கல்.தொ.12.கல்.170, பகு.1.) (க.க.சொ.அகரமுதலி, ப.262.)
திருவுலகளந்தருளிநபடி பன்நீரடிக்கோல் - (அ)
முதற் குலோத்துங்கன் ஆட்சியில் சோழ நாட்டில் நிலவிய நிலமளக்கும் கோல். இந்நிலமளக்கும் கோல் 12 அடி நீளமுள்ளதாகும். இதன் சதுரம் - 1 குழியாகும். (க.க.சொ.அகரமுதலி, ப.265.)
திருவுலகளவின் படி - (அ)
ஆட்சிக்குட்பட்ட நிலங்களை அளந்த அளவின் படி கோயிலுக்கு நிவந்தமாக விடப்பட்ட நிலங்களை நாட்டளவுக் கோலால் அளந்த படி.
“விட்ட நிலம் திருவுலளவின் படி பந்நீரடிக் கோலால் குழி ஆயிரத்துக்கும்.” (தெ.கல்.தொ.7.கல்.432.) (க.க.சொ.அகரமுதலி, ப.266.)
திருவையாறன் - (சம) (நாழி)
முதல் இராசராசன் ஆட்சியில் திருவையாறுடையார் கோயிலில் கோயிலில் நெய் அளத்தற்கிருந்த நாழியின் பெயர்.
“சந்திராதித்தவற் திருவையாறனால் உழக்கேய் ஒரு பிடி அரை நெய்யால்”. (தெ.கல்.தொ.5.கல்.550.) (க.க.சொ.அகரமுதலி, ப.266.)
துாம்பு - (வா)
முகத்தலளவையுள் ஒன்று. பெரிய மரக்கால். பூண் கட்டிய மரக்கால். (பல்லவர் ஆட்சியில் தொண்டை மண்டலத்தில் நெல் அளவிற்குரியதாக அமைக்கப்பட்ட மரக்கால்.)
“பூண்டும்பினால் நிறைத்தளவு துா நெல் நாலாயிரக்காடியும்.”
“நிசதமரிசி முப்பத்தேழு காடி ஐந்துாம்புமாக” (முதற் பராந்தகன், தெ.கல்.தொ.8.கல்.529.) (க.க.சொ.அகரமுதலி, ப.272.)
“நாயனார் ஆடியருளத் தேன் ஒரு துாம்பு, பால் ஒரு துாம்பு, தயிர் ஒரு துாம்பு நெய் ஒரு துாம்பு.” (தெ.கல்.தொ.17.கல்.296.)
மதகு, ஆற்றிலோ, ஏரியிலோ கரைப்பகுதியின் அடியில் கட்டடமாகப் புழையமைத்து, அதன் வழியே பாசனத்திற்கு நீர் வரும் படி செய்யும் அமைப்பே துாம்பு எனப்படும்.
“இவ்வூர் பெருந்துாம்பி நின்றும் வடக்கு நோக்கிப் போன பெருங்காலுக்குக் கிழக்கு.” (தெ.கல்.தொ.3:1.கல்.34.) (க.க.சொ.அகரமுதலி,ப.273.)
தேவாசிரியன் கால் - (சம)
தேவாசிரியன் என்ற பெயரால் விளங்கிய மரக்கால். திருவாரூர்த் திருக்கோயிலில் வழக்கிலிருந்த மரக்கால். இம்மரக்கால் திருமுதுகுன்றமுடைய நாயனார் கோயிலிலும் இருந்ததனைக் கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.
“உடையார் திருமுதுகுன்றமுடைய நாயநாற்கு வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு தேவாசிரியன் காலால் அளக்கும் நெய்” (தெ.கல்.தொ.12.கல்.144.) (க.க.சொ.அகரமுதலி,ப.277.)
தேவாசிரியன் நாழி - (சம)
திருமுதுகுன்றம், திருவெண்ணை நல்லுார் ஆகிய கோயில்களில் நெய் அளக்கப் பயன்படுத்தப்பட்ட நாழிக்கமைந்த பெயர். (தேவாசிரியன் திருவாரூர்த் திருக்கோயிலில் உள்ள தெண்வீக மண்டபத்தின் பெயர்.)
“திருநுந்தாவிளக்கு ஒன்றுக்குத் தேவாசிரியநால் அளக்கும் நெய்” (தெ.கல்.தொ.12.பகு.1.கல்.123.)
“அருமொழி நங்கை நாழி” (திருவத்தியூர் அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டு.) (க.க.சொ.அகரமுதலி,ப.278.)
தோப்பரா பணம் - (அ)
கிஸ்தி பணம், அரசுக்குச் செலுத்தும் தீர்வைப்பணம். (க.க.சொ.அகரமுதலி, ப.483.)
தோரை - (வா)
ஒரு நெல்லளவு. நீட்டல் அளவை. கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ள திருமேனி படிமம் ஆகியவற்றை அளந்து கூறியுள்ள நீட்டலளவையின் ஒரு கூறு.
“பாதாதி கேசாந்தம் இருபதிற்று விரலே நாலு தோரை உசரத்து நாலு ஸ்ரீ ஹஸ்தம் உடையாராகக் கனமாக எழுந்தருளுவித்த சண்டேச்வர பிரசாத தேவர் திருமேனி ஒருவர்” (தெ.கல்.தொ.2:1.கல்.29.)
(க.க.சொ.அகரமுதலி,ப.283.)
தோரணக்கால் - (கலை)
உலோகத்தால் செய்தமைக்கப்படும் தெய்வத் திருமேனிகளின் பாத பீடத்தின் இரு பக்கமும் கால் கொண்டு பட்டை முகப்பாகவும், புடைப்பு நகாசு வேலைப் பாட்டுடனும் எழுந்து நிற்கும் கால்கள் தோரணக்கால்கள் என்று பெயர் பெறுவனவாகும். (க.க.சொ.அகரமுதலி,ப.283.)
நகரக்கல் - (வா)
வியாபாரிகள் வைத்திருக்கும் எடைக்கற்களுக்குச் சான்றாகச் சபையார் வைத்திருக்கும் சரியான எடைக்கற்கள். வணிகத்திற்கு உரியதாக அரசு தணிக்கை செய்து முத்திரையிட்டு வழங்கச் செய்த எடுத்தலளவைக்கல்.
“திருவாலந்துறை மகாதேவற்கு வைச்ச வெள்ளியிந் கலசம் நகரக் கல்லால் நுாற்று தொண்ணுாற்று முக்கழஞ்சரை” (தெ.கல்.தொ.5.கல்.67.) (க.க.சொ.அகரமுதலி,ப.285.)
நற்காசு - (அ)
உரையும் துளையும் எடையும் குறையாத பொற்காசு. குற்றமற்ற காசு.
“குற்றமற்ற அன்றாடு நற்காசு” (தெ.கல்.தொ.8.கல்.613.) (க.க.சொ.அகரமுதலி,ப.291.)
நாடுரி ஆழாக்கே செவிடு - (வா)
நாழியும் உரியும் ஆழாக்கும் செவிடும் ஆகிய அளவுள்ள தானியம். (முகத்தலளவைகள்)
“நெல்லு இருநாடுரியாழாக்கே நாற்செவிடும்” (தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு) (தெ.கல்.தொ.2 2.கல்.35.)
முகத்தலளவை முறையாகக் கூறப்பட்டுள்ளன. செவிடு, ஆழாக்கு, உரி, நாழி என்பனவாம்.
அவை 5 செவிடு.1 ஆழாக்கு. 2 ஆழாக்கு. 1 உழக்கு. 2 உழக்கு. 1 உரி. 2 உரி. 1 நாழி என்னும் அளவுகளுடையனவாகும். (க.க.சொ.அகரமுதலி,ப.294.)
நாராச நாழி - (வா)
கைப்பிடிக் கம்பியோடு கூடியதாக அமைக்கப்பட்ட நெய்யளக்கும் நாழியளவுள்ள அளவைப்படி. (திருவெள்ளறைக் கோயிலில் வழக்கிலிருந்தது.)
நாராயணன் என்றிட்ட அளவு கோல் - (அ)
சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியில் தொண்டை மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்தில் இப்பெயரால் நிலமளக்கும் கோல் நிறவப்பட்டுள்ளது. இதன் நீளம் பதினாறடியாகும்.
“தொண்டை மண்டலத்து புலியூர்க் கோட்டம் தட்டுக் கெடவாணராய தேவர் பேரால் அமைந்த நாராயணந் என்றிட்ட அளவுகோல் பதினாறடியும் வில்தடியும்”. (தெ.கல்.தொ.6.கல்.264.)
நாராய நாழி - (சம)
நிருபதுங்க பல்லவன் ஆட்சியில் திருத்தவத் துறைக் கோயிலில் இருந்த நாழியளவுக்குரிய அளவைப்படி. (தெ.கல்.தொ.12. பகு.1.கல்.61.)
நாராய நாழி ஸ்ரீ கண்டன் - (சம)
பாண்டி நாட்டுக் கீழ் மாத்துார் ஸ்ரீ கண்டேசுவரர் கோயிலில் நெய் அளக்கவிருந்த கைப்பிடிக் கம்பியாகும். நாராசத்தோடு இணைந்த ஸ்ரீ கண்டன் என்ற பெயருடைய நாழி அளவை.
நாராயம் - சிறுபழுவூர் திருவாலந்துறை சிவன் கோயிலில் முதல் பராந்தகன் காலத்தில் வழக்கிலிருந்த நெய் அளக்கும் அளவை. (நாழி)
“நொந்தா விளக்கு இரண்டு இரவும் பகலும் எரிய சந்திராதித்தவற் எரிய, நாராயத்தால் நிசதம் உரிய நெய்” (தெ.கல்.தொ.5.கல்.681.)
நாலுழக்கும் பிழையா நாழி - (வா)
நாலுழக்கு அளவில் குறையாத குற்றமற்ற நாழியளவைக் கருவி. நாலுழக்கு 1 நாழி என்ற அளவு பல்லவர் காலத்தில் தொண்டை நாட்டில் இருந்தது. (தெ.கல்.தொ.12.கல்.78.) (க.க.சொ.அகரமுதலி,ப.297.)
நாழி - ஒரு படி. உரி - அரைப்படி. நாடுரி - ஒன்றரைப்படி. (தெ.கல்.தொ.12.பகு.1.கல்.147.)
“போது உரிய தயிரமுதாக நிசதம் நாடுரி தயிரமுதும்” (புதுக்.கல்.92.) (க.க.சொ.அகரமுதலி,ப.294.)
நாழி உரி - (வா)
நாடுரி. நாழியும் உரியுமாக அளந்த முகத்தலளவை. நாழி உரி நாடுரி எனப் புணரும் எனத் தொல்காப்பியத்திற் புணர்ச்சி விதி கூறப்பட்டது.
“உலகளந்தான் நாழியால் அளக்கும் நெய் நாழிஉரி”
நிறுத்தலளவைகள் - (வா)
பல பொருள்களை நிறுப்பதற்கு, கஃசு, பலம், சேர் என்ற எடை அளவைகளும் பொன்னை எடையிட, மா, குன்றி, மஞ்சாடி, கழஞ்சு என்ற எடை அளவைகளும், பிற அளவைகளும் பல்லவர் காலம் முதலாக சோழர், பாண்டியர் ஆட்சியிலும், தமிழகத்தில் வழக்கிலிருந்துள்ளன என்பதைக் கல்வெட்டுச் செய்திகள் உணர்த்துகின்றன. (தெ.கல்.தொ.2.2.கல். 38.)
“அருளாளப் பெருமாள் புறப்பிட்டருளி ஏகாதசி திருமஞ்சனமும் பெருந்திருவமுதும் செய்தருளத் திருமஞ்சனத்துக்கு திருமுளை சார்த்த திருமுளைப்பாலிகை ஒன்றுக்கு அடிக்கீழிட்ட, நெல்லு உரியதாக முப்பத்தாறுக்கு நெல்லு பதக்கிரு நாழியும், அரிசி அறுநாழி உழக்கும், நந்தாவிளக்குக்கு நாளொன்றுக்கு எண்ணை உழக்காக நாளஞ்சுக்கு எண்ணை நாழி உழக்கும், நெய் மூவுழக்கும், நெல்லு ஐங்குறுணி உரியும், புடவை பதின் மூன்றும், தேன் நாழியும் - பால் முன்னாழியும் - தயிர் முன்னாழியும் - சந்தனம் முக்கஃசும் கற்பூரம் ஆறு மாவும், அகிலரைக்கழஞ்சும், கஸ்துாரி மஞ்சாடியும், திருச்சுண்ணத்திற்கு நாடன் மஞ்சள் நாற்பதின் பலமும் - பருப்பு பதக்கிரு நாழியும் - சீரகம் ஆழாக்கும், சர்க்கரை முப்பத்திருபலவரையும் - மிளகு ஆழாக்கும் - விறகு கட்டு மூன்றும் குசக்கலம் உருவுக்கு நெல்லுக்கலமும் - வெள்ளிலை பற்றொன்பதும் - ஆக இவையிற்றுக்கு நிமந்தமாகச் செல்வதாக.” (தெ.கல்.தொ.3:2.பக்.187.) (க.க.சொ.அகரமுதலி, ப.316.)
நிறை குறையாப் பழங்காசு - (வா)
எடையிலும், உரையிலும் குறையாத பழைய பொற்காசு. வரகுண பாண்டியன் ஆட்சியில் திருப்பத்துார்ப் பகுதியில் நாட்டு வழக்கில் இருந்த பொற்காசு. (தெ.கல்.தொ.14,கல்.15.) (க.க.சொ.அகரமுதலி, ப.309.)
நிறைச்சலளவு - (வ)
மரக்கால் போன்ற முகத்தலளவையில் தானியங்களை அளக்கும் போது நிரம்பிய அளவு கொஞ்சமும் குறைவு படாமல் அளப்பது.
“ஆட்டாண்டு தோறும் இக்கோயிலில் ஆடவல்லானென்னும் மரக்காலால் உள்ளூர்ப் பண்டாரத்தே நிறைச்சலளவாக இரண்டாயிரக்கல நெல்லு.” (தெ.கல்.தொ.2:1,கல்.20.) (க.க.சொ.அகரமுதலி, ப.307.)
நிறைமதி நாராயம் - (சம)
திருச்செந்துார் திருக்கோயிலில் வழக்கிலிருந்த நெல் அளக்கும் மரக்காலின் பெயர்.
“ஒரு காசுக்கு நிறைமதி நாராயத்தாற் பதின்கல நெல்லஃகமாக” (தெ.கல்.தொ.14,கல்.16.) (க.க.சொ.அகரமுதலி, ப.309.)
நெடுங்கொடி காசு - நெடிய கொடியின் இலச்சினை பொறிக்கப்பட்ட காசு. கி.பி 12 ஆம் நுாற்றாண்டில் சோழ மண்டலத்தில் மக்கள் வாழ்க்கைக்குரிய பொருளாதார உதவி நிதியாக இக்காசு வழங்கப்பட்டுள்ளது.
“இம்மண்டலத்துக்கு நெடுங்கொடி காசு சிகை இருபத்து நாலு கோடி சிகை இழித்தருளி” (சிகை - பெருந்தகை) (ஆக்கூர் கல்வெட்டு, தெ.கல்.தொ.12,கல்.129.) (க.க.சொ.அகரமுதலி, ப.304.)
நீட்டல் அளவை - திருமேனிகளின் நீட்டல் அளவைகள். (சோழர் கால அளவை.)
8 தோரை (நெல்லளவு) - 1 விரற்கடை.
12 விரற்கடை - 1 சாண்.
18 விரல் - 1 1 2 சாண்.
2 சாண் - 1 முழம். (க.க.சொ.அகரமுதலி, ப.341.)
பஞ்ச சலாகை - (பொ)
பொற்காசு. கி.பி 11, 12 ஆம் நுாற்றாண்டுகளில் பாண்டிய நாட்டில் வழக்கிலிருந்த பொற்காசு.
“விற்று குடுத்துக் கொண்ட பஞ்சசலாகை அச்சு ளஙய” (புதுக்.கல்.158.) (க.க.சொ.அகரமுதலி, ப.319.)
பஞ்ச வாரக்கால் - (அ)
பஞ்ச வார வாரியத்தார். பஞ்சவாரமாக மக்களிடம் தானியங்கள் அளந்து பெறுதற்கமைந்த மரக்கால். இம்மரக்கால் இறை பெறும் கடமைக்காலை விட குறைந்த கொள் கலமாக அமைக்கப்பட்ட மரக்காலாகும்.
“எங்களூர்ப் பஞ்சவாரக் காலாலே பரக்கூலி பட்டுக் கொண்டு வந்து ஸந்தராதித்தவற் அளந்து குடுப்போமானோம் சீறுார் ஊரோம்.”
“பஞ்சவாரக் காலோடொக்கும் நாழியால்” (முதல் இராசராசன் கி.பி.996, தெ.கல்.தொ.7,கல்.114.) (க.க.சொ.அகரமுதலி, ப.321.)
பட்டம் - (கலை) திருப்பட்டம். (கலை)
பொன்னின் திருப்பட்டம். பொன்னால் செய்யப் பெற்ற நெற்றிப்பட்டம். பருவ கால விளைவு.
“பொன் கொண்டு செய்து குடுத்த திருப்பட்டம் ஒன்று.” (தெ.கல்.தொ.2:1,கல்.1.) (க.க.சொ.அகரமுதலி, ப.322.)
பட்டிக்காசு - (அ)
பயிர் பாதுகாப்பிற்காக, உரிய காலங்களில் காவல் செய்யப் பெறும் காசுவரி. விளை பயிர்களை அழிவு செய்யும் கால் நடைகளை அடைக்கும் “பட்டி” என்னும் காப்பகத்திற்குரிய கட்டளைக் காசு.
“தறி இறை, வெட்டி, முட்டையாள், பட்டிக்காசு. காணிக்கை.” (தெ.கல்.தொ.8,கல்.379.) (க.க.சொ.அகரமுதலி, ப.323.)
பட்டி நிலம் - (வே)
பதினாறு சாண் கோலால் (12 அடி கோலால்) ஐம்பது குழி கொண்டது ஒரு மாவாக ஆயிரங்குழி கொண்டது ஒரு பட்டி நிலமாகும். (இக்கால அளவுப்படி அரைவேலிக்குரிய 10 மா நிலமாகும்.) பட்டி நில அளவில் பல தடிகள் அடங்கும். நாடுகளுக்கும் நிலத்தரத்திற்கும் ஏற்ப இவ்வளவு மாறுபட்டுள்ளதைக் கல்வெட்டுச் செய்திகள் புலப்படுத்துகின்றன. 12 அடி சதுரம் - 1 குழி.
“பதினறு சாண் கோலால் அஞ்பது குழி கொண்டது ஒரு மாவாக ஆயிரங்குழி கொண்டது ஒரு பட்டியாக விலை குடுத்துக் கொண்டனிலம்.”
“இரண்டு பட்டியிலும் பொந்த போகம் னெல்லு நானுாற்று எழுபத்து எழு காடி னானாழி.” (முதல் இராசராசன், கி.பி. 989, தெ.கல்.தொ.8,கல்.521. குடிமல்லம் கல்வெட்டு.) (க.க.சொ.அகரமுதலி, ப.324.)
படி - (வ) (முகத்தலளவை)
சோழர் காலத்தில் வழக்கில் படி அளவு முகத்தலளவை இருந்தமைக்குச் சான்றாக செந்தலை சுந்தரேசுவரர் கோயில் கல்வெட்டு சான்றாக உள்ளது.
“படிக்கண் சதுர் வேதி மங்கலத்து திருப்பெருந்துறை மஹாதேவர்க்கு - சந்திராதித்தவல் நிசதம் ஒரு படி எண்ணையால் மூன்று சந்தியும் விளக்கெரிப்பதற்கு” (கல்வெட்டுத்துறை ஆண்டு அறிக்கை - எண் - 6/1899.)
பழங்காசு - (பொ)
சோழ நாட்டில் நிருபதங்கவர்ம பல்லவன் ஆட்சியில் வழக்கிலிருந்த பொற்காசு. இக்காசு
“செம்பொன் சம்பிராணிப் பழங்காசினோடுரைப்பது”
“பழங்காசு நிறை இருபத்தைஞ்கழஞ்சு.” (தெ.கல்.தொ.5.கல்.572,620.) (க.க.சொ.அகரமுதலி, ப.345.)
பாதாதி கேசாந்தம் - அடி முதல் முடி வரை பாதம் ஆதியாக முடியுச்சி வரையில் சிலைகளை அளப்பதற்குக் கொள்ளும் அளவு முறை.
“பாதாதி கேஸாந்தம் இருபதிற்று விரல் உசரத்து இரண்டு கையுடையராகக் கனமாகச் செய்த தத்தாநமரே காண் என்ற மிலாடுடையார் ஒருவர்.” (தெ.கல்.தொ.2, 2, கல்.41.) (க.க.சொ.அகரமுதலி, ப.354.)
பாடிக்கல் - (அ)
ஊரில் பொன் எடையிடும் நிறை கல். வரகுண பாண்டியன் ஆட்சியில் திருச்சிராப்பள்ளி மலைக்கோயிலில் வழக்கிலிருந்த நிறை கல்.
“திருமலை படாரர்க்குக் குடுத்த பொன் பாடிக்கல்லால் நுாற்றிருபதின் கழஞ்சு” (தெ.கல்.தொ.14.கல்.10.) (க.க.சொ.அகரமுதலி, ப.352.)
பார்க்கோல் - (கலை)
நாடக அரங்கில், கட்டியங் கூறுவான் கைக்கொள்ளும் அரச விருதுச் சின்னம் பொறித்த கோல். (க.க.சொ.அகரமுதலி, ப.355.)
பிழையா நாழி - (பொ)
அளவில் குறையாத நாழி. (முகத்தலளவு)
“நாலுழக்கும் பிழைய நாழி” (தெ.கல். தொ.12.பகு. 1.கல்.78. விசயதுங்கவர்ம பல்லவன்.”)
இக்கல்வெட்டுச் செய்தியால் பல்லவர் காலத்தில் “4 - உழக்கு கொண்டது 1 - நாழி” என்ற முகத்தலளவை வழக்கிலிருந்தமை புலனாகின்றது. (க.க.சொ.அகரமுதலி, ப.368.)
பிரீதி மாணிக்கம் - (சம)
எண்ணெய் அளக்கும் முகத்தளவைக் கருவி பல்லவர் ஆட்சியில் தொண்டை மண்டலத்திலுள்ள திருவாலங்காடு திருக்கோயிலில் இருந்தது.
“பிரிதி மாணிக்கத்தால் நித்தமுட்டாமல் அளக்கக் கடவ எண்ணை ” (கல்வெட்டு அறிக்கை எண் - 461/1905.) (க.க.சொ.அகரமுதலி, ப.367.)
புதுச்சலாகை அச்சு - (அ)
பொன் நாணயம். வீரராசேந்திரன் ஆட்சியில் இந்நாணயம் புதிய அடையாளம் பெற்றதாக வெளியிடப் பெற்றதால் “புதுச் சலாகை அச்சு” என்று பெயர் பெற்றது. இந்நாணயத்தின் ஒரு புறம் ஸ்ரீஇயக்கி என்னும் பெண் தெய்வம் அமர்ந்த பாங்கில் உள்ளதைப் போன்றும், மறுபுறம் நாணய மதிப்பீட்டுக் குறிகள் பொறிக்கப் பட்டதாகவும் இருந்ததால், ஸ்ரீயியக்கி புதுச் சலாகை என்றும் பெயர் பெற்றுள்ளது. சலாகை (நாட்டில்) வழக்கிலுள்ள நாணயம்.
“இந்நாயனார் ஸ்ரீ பண்டாரத்திலே ஒடுக்கின சீயியக்கி புதுச் சலாகை அச்சு மூன்றும்.” (தெ.கல்.தொ.5.கல்.237.) (க.க.சொ.அகரமுதலி, ப.371.)
பெரும்படி - (வா)
பெரிய படி - (முகத்தல் அளவை)
1. திருநெல்வேலி திருக்கோயிலில் வழக்கிலிருந்த அளவை. (தெ.கல்.தொ.5.கல்.434.)
2. கண்ணோட்டமாக அனுபவத்தினைக் கொண்டு கூறும் மதிப்பீடு.
3. “இவ்விசைந்த பெருநான் கெல்லையிலு மகப்பட்ட நீர் நிலனும் புன்செயும்.” (பெரிய லெய்டன் செப்பேடுகள்.) (க.க.சொ.அகரமுதலி, ப.381.)
பொற்கால் - (அ)
பொன்னாலான மரக்கால். விசயதந்தி விக்கிரம வர்ம பல்லவன் ஆட்சியில் மாமல்லபுரத்தில் வழக்கிலிருந்த நெல் அளக்கும் பொன் மரக்கால்.
“பொற்காலால் ஆறாயிரத்து நானுாற்றுக் காடி இந்நெல் யாங்கள் கொண்டு,” (தெ.கல்.தொ.12.பகு.1,கல்.34.) (க.க.சொ.அகரமுதலி, ப.387.)
பொன் அளவை - (பொ)
சோழர், பாண்டியர் ஆட்சிக் காலங்களில் கோயில்களிலும், நாட்டிலும் பொன்னை எடையிடும் அளவை முறைகள்.
5 மா - 1 குன்றி.
2 - குன்றி - 1 மஞ்சாடி.
20 மஞ்சாடி - 1 கழஞ்சு.
1 / 10 மஞ்சாடி - 1 மா. (கி.பி. 10,11 - ஆம் நுாற்றாண்டு) (க.க.சொ.அகரமுதலி, ப.389.)
ஸ்ரீ பாதக்கோல் - (அ)
தொண்டை மண்டலத்தில் கி.பி 11 ஆம் நுாற்றாண்டில், சோழர் ஆட்சிக் காலத்தில், குடியாத்தம் என்ற ஊரில் வழக்கிலிருந்த நில அளவுக்கோல். (தெ.கல்.தொ.5.கல்.222.) (க.க.சொ.அகரமுதலி, ப.394.)
மஞ்சாடி - (பொ)
பொன் நிறுத்தலளவையிலொன்று. 2 குன்றி 1 மஞ்சாடி.
“திங்கள் பொன் குன்றியாக ஓராண்டைக்கு காசுக் கல்லால் பொன் ஆறு மஞ்சாடி.” (குன்றி - ஒரு குன்றி மணி எடை.) (தெ.கல்.தொ.17 கல். 222.) (க.க.சொ.அகரமுதலி, ப.398.)
மந்தைப்பணம் - (அ)
ஆட்டு மந்தைகளை நிறுத்தும் ஊர்ப் பொதுவிடத்திற்குப் பெறும் வரி. (தொ.7.கல்.109.) (க.க.சொ.அகரமுதலி, ப.488.)
மனைப்பணம் - (அ)
குடியிருப்பு மனைக்குரியதாகச் செலுத்தும் வரிப்பணம். மனைப் பகுதிப்பணம் என்பதும் இதுவே யாகும்.
மாகாணி - (வா)
பொன் எடையிடும் அளவையுள் ஒரு பகுதி. இது மாவும், காணியும் எடை கொண்ட கணக்காகும்.
1/10 மஞ்சாடி - 1 மா.1/40 மஞ்சாடி - 1 காணி.
என்ற அளவில் முதல் இராசரசன் காலத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
“ஸ்ரீவாஹீவளையும் - நிறைமுக்கழஞ்சே இரண்டு மஞ்சாடியும் முக்காணியும்” (தெ.கல்.தொ.2:1.கல்.7.) (க.க.சொ.அகரமுதலி, ப.407.)
மாச்சின்னம் - (பொ)
நாணய மதிப்பீட்டளவிலும் நில மதிப்பீட்டளவிலும் மிகச் சிறிய கடைசி மதிப்பீடு.
“இதில் ஒரு மாச்சின்னம் பெருவான் கெங்கைக்கரையில் குரால் பசுவைக் கொன்றான் பாவம் கொள்வான்.” (தெ.கல்.தொ.8.கல்.127.) (க.க.சொ.அகரமுதலி, ப.407.)
மாடை - (பொ)
பொற்காசு. தொண்டை நாட்டில் பல்லவர் ஆட்சிக் காலம் முதலாக சோழர் காலத்திலும் நாட்டு வழக்கில் இருந்த பொற்காசின் பெயர். இக்காசு “நெல்லுார் மாடை” என்றும், இராசராசன் ஆட்சிக்காலத்தில் “இராசராசன் மாடை” என்றும் பெயர் பெற்றுள்ளது.
“கோயிலிலே சந்தி விளக்கு எரிக்க உபையமாகக் கைக்கொண்ட மாடை - ஒன்று இம்மாடை ஒன்றும்.”
“சீ பண்டாரத்து ஒடுக்கின நெல்லுார் மாடை.” (தெ.கல்.தொ.12.கல்.197, 218.)
“மழவராயன் இட்டமாடை ஒன்றுக்கு சந்தி விளக்கு ஒன்று.” (தெ.கல்.தொ.5.கல்.499.)
மாடை - (பொ)
சோழர் காலம் முதலாக நாட்டு வழக்கிலிருந்த பொற் காசுகளில் ஒன்று. (க.க.சொ.அகரமுதலி, ப.488.)
மாடைக்கு மாறி - (பொ)
மாடை என்னும் பொற்காசுக்கு ஒத்த மதிப்பீடு கொண்ட மாற்றமுடைய பொன்.
“இது மாடைக்கு ஒந்பதரை மாறி” (க.க.சொ.அகரமுதலி, ப.409.)
மாத்தால் - (வே)
மா ஒன்றுக்கு இவ்வளவு என்று நெல் அளத்தல்.
“நிலம் - யாண்டு பதினாறாவது முதல் கைக்கொண்டு உழுது அச்சுவற்கம் இறுத்தும் மாத்தால் பதினறு கலனே துாணியாக வந்த பாட்டம் அளக்கவும்.” (தெ.கல்.தொ.5.கல்.243.)
“இந்நிலத்தால் மாத்தால் இருபத்து இருகலமாகவுந் நெல் குடுப்போமானோம்.” (தெ.கல்.தொ.5.கல்.244.) (க.க.சொ.அகரமுதலி, ப.417.)
மாப்பணம் - (பொ)
நாயக்கர் ஆட்சியில் சோழ நாட்டில் வழக்கிலிருந்த நாணயம். இது பணம், மாப்பணம் என இரண்டு தரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. (தொ.5.கல்.555.) (க.க.சொ.அகரமுதலி, ப.489.)
மாநிலம் - (வே)
ஒரு மாநிலம். இந்நில அளவு, பதினாறு சாண் கோலால் நுாறு கொண்டது ஒரு மாவாகப் பெரும்பான்மையும் இருந்துள்ளதாயினும், நிலத்தின் தரம் விளைவு ஆகியவற்றிற்கேற்ப மாறுபட்டுள்ளது.
“பதினறு சாண் கோலால் நுாறு குழி கொண்டது ஒரு மாவாக” (தெ.கல்.தொ.8, கல்.316.)
“பதினறு சாண்கோலால் ஐந்நுாற்றொருபத்திரண்டு குழி கொண்டது ஒரு மாவாக” (தெ.கல்.தொ.7,கல்.947.) (க.க.சொ.அகரமுதலி, ப.411.)
மாற்கமாடை - (சம)
நாள் வழிச் செலவு. (மாடை - காசு.)
“இக்கோயில் - சீகாரியப் பேற்றுக்கும் மாற்க - மாடைக்குமாக” (தெ.கல்.தொ.12.பகு.1.கல்.187.) (க.க.சொ.அகரமுதலி, ப.413.)
மானாய நாழி - (அ)
நிருபதுங்க வர்ம பல்லவன் ஆட்சிக் காலத்தில், தொண்டை மண்டலத்துக் காவிதிப்பாக்கத்தில் வழக்கிலிருந்து முகத்தல் அளவைக்குரிய நாழி யளவைப் படியின் பெயர்.
“நிசதி உழக்கெண்ணை மானாயனாழியோடொக்கும் உழக்கினால்.” (தெ.கல்.தொ.12:1.கல்.67.) (க.க.சொ.அகரமுதலி, ப.413.)
முக்காலே அரைக்கால் முழம் - (பொ) முதல் இராசராசனுடைய மனைவியருள் சோழ மகா தேவியார் ஸ்ரீராஜராஜீஸ்வரத்தில் செய்தமைத்த உலோகத் திருமேனியாகும். ஆட வல்லான் திருமேனியை முழுத்தால் அளந்த முறை.
“பதாதி கேஸாந்தம் முக்காலே அரைக்கால் முழ உசரம்.” (தெ.கல்.தொ.2:2.கல்.42.) (க.க.சொ.அகரமுதலி, ப.416.)
முழ அளவையாகச் சொல்லப்பட்ட இவ்வளவை, ஒரு சாண் 72 தோரை உயரம் என்பதாகும்.
1 - நெல் - 1 தோரை. 12 விரல் - 1 சாண்.
3 - தோரை - 1 விரல். 2 சாண் - 1 முழம்.
முழத்தின் கீழ் - (வா)
நீட்டலளவையுள் ஒன்று. முழம் என்ற அளவைக்குக் கீழ்ப்பட்ட சாண் விரல், தோரை முதலிய அளவைகள்.
“இரு முழமே இருபதிற்று விரலேய் ஆறு தோரை சுற்றிற் கனமாகச் செய்து இவரைக் கவித்த பிரபை ஒன்று.” (தெ.கல்.தொ.2.கல்.52.) (க.க.சொ.அகரமுதலி, ப.423.)
மூன்று துாணி ஒரு கலம் - (பொ)
மூன்று துாணி முகத்தல் அளவு கொண்டது ஒரு கலம்.
“ஆக நாள் 1 க்கு நெல்லுத் துாணியாக நாள் 360 - க்கு நெல் 120 கலத்தின் நெல்லு நுாற்றிருபதின் கலமும்.” (தெ.கல்.தொ.8.கல்.285.) (க.க.சொ.அகரமுதலி, ப.426.)
மூல நாழி - (பொ)
சிவபெருமானுக்குரிய சூலக்குறி பொறிக்கப்பட்ட நாழி அளவு. சூல இலச்சினை பொறிக்கப்பட்ட மரக்கால். சூலக்கால் என்றும், சூலம் பொறிக்கப்பட்ட மரக்கால் சூலப் பொன் கால் என்றும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன.
“நெல்லு சூலக்காலால் கலம்”
“நெல் சூலப் பொற்காலால் நுாற்றிருபதின் கலமும்” (தெ.கல்.தொ.8,கல்.580,581.)
“இத்தேவர் பண்டாரத்து சூலநாழியால் நிசதி உரிய நெய் அட்டுவதற்கு” (தெ.கல்.தொ.14,கல்.5.) (க.க.சொ.அகரமுதலி, ப.201.)
மெய்யாலரிசி நாடுரியாக - (வ)
ஆள் ஒன்றுக்குரிய சோற்றரிசி நாழியும் உரியும் கொண்ட அளவினதாக (மெய் - ஓர் ஆள்)
“ஆயிரவர்க்கும் பத்தெட்டுக்குடுத்தல், மெய்யாலரிசி நாடுரியாக நிசதம் மரிசி இருநுாற்றறுபத்திருகாடி” (தெ.கல்.தொ.8.கல்.529.) (க.க.சொ.அகரமுதலி, ப.428.)
மேனி - (வ)
முழுமை. முழுத்தொகை. விகிதம்.அளவு முறை. விழுக்காடு.
“வாடாக் கடமையாகத் தண்டல்மேனி நானுாற்றைம்பது பொன்” (தெ.கல்.தொ.5.கல்.305.)
“மாவுக்கு இருபது கல நெல் விளைவில் ஐந்து மேனி குத்தகை அளப்பது.” (மேனி - விகிதம்.) (க.க.சொ.அகரமுதலி, ப.431.)
மேனி - (மொ)
விகிதம். வீதம்.
“விளைந்த நிலத்துக்குப் பதினாறு மேனித்திரமம் ஒன்றும்” (க.க.சொ.அகரமுதலி, ப.489.)
ராஜ ராஜீஸ்வரம் அளவை வகை - (அ)
திருமேனிகள், படிமங்கள் ஆகிய உலோகச் சிலைகள் முழம், சாண், விரல், தோரை என்னும் அளவையினைக் கொண்டும், ரத்னங்கள் தட்ஷிண மேருவிடங்கள் என்னும் நிறை கல்லினைக் கொண்டும், பொன் - வெள்ளி ஆகியவற்றை ஆட வல்லான் என்னும் கல்லினைக் கொண்டும் எடையிடப்பட்டன.
“ராஜராஜீஸ்வரம் உடையார் கோயிலில் செப்புத் திருமேனிகள், உடையார் கோயிலில் முழத்தால் அளந்தும், ரத்னங்கள் தட்ஷிண மேரு விடங்கனென்னுங் கல்லால் நிறை எடுத்தும் பொன்னும், வெள்ளியும் ஆடவல்லானென்னும் கல்லால் நிறை எடுத்தும் கல்லில் வெட்டினபடி.” (தெ.கல்.தொ.2:2.கல்.51.) (க.க.சொ.அகரமுதலி, ப.495.)
ராஜராஜன் மாடை - (அ)
முதல் இராசராசன் ஆட்சியில் சோணாட்டில் வழக்கிலிருந்த பொற்காசு.
“ராஜராஜன் மாடையோடொக்கும் பொன்” (தெ.கல்.தொ.7.கல்.836.) (தெ.கல்.தொ.5.கல்.702.) (க.க.சொ.அகரமுதலி, ப.494.)
ரிஷபக்கோல் - (வா)
இடபம் என்னும் பெயரோடு சார்த்தி பெயரிடப்பட்ட தராசு. இத்துலாக்கோல், இராசாதிராசன் ஆட்சியில் மதுராந்தகத்தில் இருந்த வியாபாரிகள் பயன்படுத்திய துலாக்கோலாகும். (இராசாதிராசன் கி.பி. 1172, தெ.கல்.தொ.5.கல்.994.) (க.க.சொ.அகரமுதலி, ப.497.)
வண்ணார் கற்காசு - (அ)
நீர் நிலைகளில் வண்ணார் துணி துவைப்பதற்கென்றும், காய வைப்பதற்கென்றும் அமைத்துக் கொள்ளும் கற்கள் பரப்பின இடத்துக்குப் பெறும் காசு வரி. இதனை வண்ணார் பாட்டம் என்னும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப் பெறும். (க.க.சொ.அகரமுதலி, ப.425.)
வாசி - (பொ)
பொன்னின் மாற்றுரை. பொன்னின் தரம்.
“நகரப்பொன் ஆணியோடொத்த பொன்னுக்கு காணவாசி நல்ல பொன்.” (தெ.கல்.தொ.5.கல்.266.) (க.க.சொ.அகரமுதலி, ப.434.)
வாமனக்கல் - (அ)
திருமால் வாமன பிராமணனாக மகாபலியிடம் வந்த வடிவினை, பிராமணர்க்கு வழங்கும் தான சாசனத்திலும் பொறித்து வேதியர்க்கு அளித்த பிர்மதேய இறையிலி கற்சாசனம். திருமால் வாமன பிராமணனாக மகாபலியிடம் வந்த வடிவுடன் பொறித்து வைத்தல் “வாமனக்கல்” என்பதாகும். (தலைமலை பாறைச் சாசனம்) (க.க.சொ.அகரமுதலி, ப.445.)
விரல் உயரம் - (வா)
எட்டு தோரை நெல் நீளம். ஒரு நெல் அளவு “8 தோரை கொண்டது ஒரு விரல் அளவு.” (க.க.சொ.அகரமுதலி, ப.451.)
வெள்ளிக்கல் - (வா)
திருக்கோயிலுார் திருவிடைக்கழி கோயிலில் சர்க்கரை முதலிய பொருள்களை நிறுவை செய்யப் பயன் படுத்தப் பெற்ற வெற்றியாலான எடை கல்.
“வெள்ளிக்கல்லால் நாற்பதின் பலச்சர்க்கரையும்.” (தெ.கல்.தொ.7.கல்.139.) (க.க.சொ.அகரமுதலி, ப.461.)
இவ்விதமாக தமிழனின் பழைய கால அளவை முறைகளைச் சான்றுடன் இந்த நுால் பதிவு செய்துள்ளது.