இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக உடலில் ஏற்படும் தொப்பையைக் குறைக்கப் பலரும் உணவுக் கட்டுப்பாடு, யோகா பயிற்சி மற்றும் பல உடற்பயிற்சி முறைகள் என்று மேற்கொண்டு வருகிறார்கள். திருமணத்திற்கு முன்பு வளர்ந்து விட்ட தொப்பையைக் குறைத்து விட வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கும் பலரையும் பார்க்கிறோம்.
ஆனால், தொப்பை இருந்தால்தான் திருமணத்திற்குப் பெண் கொடுப்பார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த போடி என்ற பழங்குடியினர்களின் மத்தியில் தான் இத்தகைய வித்தியாசமான பழக்கம் உள்ளது. அங்குள்ள ஓமோ பள்ளத்தாக்கில் உள்ள காடுகளில் வாழும் இவர்கள், தங்கள் பாரம்பரிய முறைப்படி தொப்பை வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
அங்கு தொப்பை வளர்த்து கொழுக் மொழுக் என இருக்கும் ஆண்களைத்தான் திருமணம் செய்து கொள்ள பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். நன்கு பெரிய தொப்பையைக் கொண்டிருப்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தும், மதிப்பும் மரியாதையும் அதிகம் கிடைக்கும் என்பதால், தங்கள் தொப்பையை வளர்க்க ஆண்கள் பலரும் அதற்கான சிறப்பு உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
குறிப்பாக, தினமும் இரண்டு லிட்டர் பசும்பாலில் மாட்டின் ரத்தம் கலந்து குடிக்கிறார்கள். அதற்காக, பசுக்களைக் கொல்லாமல் அதன் உடலில் ஏதாவது ஒரு பகுதியில் காயம் ஏற்படுத்தி ரத்த ருசி பார்க்கிறார்கள். இங்கு திருமணமாகாத ஆண்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தொப்பை போட்டி என்று நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிக்காக ஆறு மாதத்திற்கு முன்பிருந்தேத் தயாராக ஆரம்பித்து விடுகின்றனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களைத் திருமணம் செய்யப் பெண்களிடையேப் பலத்த போட்டி இருக்குமாம்...!