உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிக உயரமான திருமணமான இணைகள் (Tallest Married Couple Living) என்று கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில், சீனாவைச் சேர்ந்த சன் மிங்மிங் (Sun Mingming) மற்றும் அவரது மனைவி சூ யான் (Xu Yan) ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்களில் சன் மிங்மிங் 236.17 செமீ (7 அடி 8.98 அங்குலம்) உயரமும், சூ யான் 187.3 (6 அடி 1.74 அங்குலம்) உயரமும் கொண்டுள்ளனர்.
சீனாவின் கூடைப்பந்து வீரரான சன் மிங்மிங், கைப்பந்து வீராங்கனையான சூ யான் என்று இருவரும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சீன தேசிய விளையாட்டுப் போட்டியில் சந்தித்துக் கொண்டனர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இருவரும் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் நாளில் திருமணம் செய்து கொண்டனர். 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் நாளில் இருவரது உயரங்களும் அளவீடு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிக உயரமான திருமணமான இணைகள்’ எனும் இடம் கிடைத்தது.
கார் மற்றும் விமானப் பயணங்களின் போதும், விடுதிகளில் அறை எடுக்கும் போதும், உயரப் பிரச்சனைகளால் தாங்கள் இருவருமேப் பெரிதும் பாதிப்படைவதாகத் தெரிவிக்கும் இவர்கள், தங்களுக்கிடையே எவ்விதப் பிரச்சனைகள் ஏதுமில்லை என்கின்றனர். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, அன்றாட வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்லக் கற்றுக் கொண்டால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடையதாக அமையும் என்று இளம் வயதினருக்கு அறிவுரையும் சொல்கின்றனர்.
இந்த இணைகளுக்கு முன்பாக, உலகில் மிக உயரமான திருமணமான இணைகள் (Tallest Married Couple) என்று கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் 1871 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் இடம் பெற்றிருக்கும் வான் ப்யூரன் பேட்ஸ் (Martin van Buren Bates) மற்றும் அன்னா ஹைனிங் ஸ்வான் (Anna Haining Swan) எனும் இணைகளின் உயரத்தை இதுவரை எவரும் எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பதையும் இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கனடாவில் 1846 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாளில் பிறந்த அன்னா ஹைனிங் ஸ்வான் (Anna Haining Swan) எனும் 241.3 செமீ (7 அடி 11 அங்குலம்) உயரமுடைய பெண்மணியும், அமெரிக்காவில் 1837 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று பிறந்த மார்ட்டின் வான் ப்யூரன் பேட்ஸ் (Martin van Buren Bates) எனும் 236.22 செ.மீ உயரம் கொண்ட ஆணும் ஒரு சர்க்கஸ் குழுவில் சந்தித்துக் கொண்டனர்.
1869 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் தனித்தனியாகவும், இணைகளாகவும் பல சர்க்கஸ் குழுக்களில் அதிகமான உயரமுடையவர்களாகப் பங்கு பெற்று ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். இவர்களிருவருக்குமிடையே ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து, 1871 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் நாளில் லண்டனில் சர்க்கஸ் பார்வையாளர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, உலகில் மிக உயரமான திருமணமான இணைகள் என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர். இந்தத் திருமண இணைகளின் உயரத்தை இதுவரை எவராலும் எட்ட முடியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.