நூறு பாடல்கள் கொண்ட நூல் சதகம் எனப்படும். சதகம் என்னும் சொல் - வட மொழியைச் சார்ந்தது. வடமொழியில் சதம் என்னும் சொல்லுக்கு நூறு என்று பொருள். 'சதம்' என்னும் சொல்லில் இடையில் 'க' என்னும் ஓர் எழுத்துக் கூடிச் 'சதகம்' என்று ஆயிற்று. இவ்வாறு இடையில் ககரம் கூடி வருதலை வடமொழி இலக்கண அறிஞர்கள் 'க'ப்பிரத்தியயம் என்று கூறுவர். எனவே, சதம் என்னும் சொல் கப்பிரத்தியயம் பெற்றுச் சதகம் என்றேப் பெயர் பெற்றது. தமிழிலுள்ள தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் சதகமும் ஒன்று. சதக இலக்கியத்திற்கு முதன் முதலில் வித்திட்டவர் மாணிக்கவாசகர். திருவாசகத்தில் அமைந்துள்ள திருச்சதகம் சதக இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்துள்ளது.
தமிழ் இலக்கியங்களில் தண்டலையார் சதகம், செயங் கொண்டார் சதகம், கோவிந்த சதகம், கார்மண்டல சதகம், சோழமண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், மழவ சதகம், அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், அண்ணாமலையார் சதகம், அருணாசல சதகம், அவையாம்பிகை சதகம், எம்பிரான் சதகம், திருவேங்கட சதகம், (மணவாள நாராயண சதகம்), சிவசங்கர சதகம், தில்லைக் கற்பக விநாயகர் சதகம், அகத்தீசர் சதகம், இயேசு நாதர் திருச் சதகம், இலக்குகாந்தச் சதகம், அரபிச் சதகம், ஈழ மண்டல சதகம், உமாயேசுர சதகம், கந்த புராண சதகம், கறுப்பண்ண சாமி சதகம், கைலாசநாதர் சதகம், பர்த்துருஹரி சதகம், கோதண்டராம சதகம், எதிராஜ சதகம், திருச்செங்கோட்டுச் சதகம், வானமாமலைச் சதகம், நந்த மண்டல சதகம், அர்ச்தேவமாதா சதகம், சிற்சுகவாரிச் சதகம், தசரதராம சதகம், திருவருட் சதகம், இராமாயண சதகம், விசுவகுல சதகம். தில்லைச் சிவகாம சுந்தரி சதகம், வடவேங்கட நாராயண சதகம், காந்தி சதகம் முதலியவை தமிழிலுள்ள குறிப்பிடத்தக்க சதக இலக்கியங்களாகும்.
இவற்றுள் தண்டலையார் சதகம், செயங்கொண்டார் சதகம், கோவிந்த சதகம் ஆகிய மூன்றும் பழமொழியை அடிப்படையாகக் கொண்டவை. இம்மூன்று சதகங்களிலுள்ள ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழி அமைந்திருப்பதைக் காணலாம். எனவே, இம்மூன்று நூல்களுக்கும் சேர்த்துப் பழமொழிச் சதகம் என்று பொதுப் பெயர் சூட்டினாலும் பொருந்தும்.