இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் முறை சாரா சேமிப்புக் கழகங்களின் பின்னணியில் பெண்களை சமூகமயமாக்குவதற்கான ஒரு பிரபலமான அமைப்பாக, கிட்டி விருந்து (Kitty Party) இருக்கிறது. இது பொதுவாக பெண்களால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு வகையான விருந்து. பொதுவாக மாதாந்திர அடிப்படையில் மதிய நேரத்தில் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு உறுப்பினரும், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பங்களிக்கின்றனர். விருந்தில் சேகரிக்கப்பட்ட தொகை மூலதனமாக குறிப்பிடப்படுகிறது. கிட்டி விருந்தின் பொறுப்பு ஒவ்வொரு மாதமும் குழுவின் ஒரு உறுப்பினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் சீட்டுக் கட்டுதல் போன்ற பணிகளும் நடைபெறுகின்றன.
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட குழுவினரால் நடத்தப்படுகிறது. குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும், ஒரு முறையாவது ஒரு விருந்தை நடத்த வேண்டும் என்பது விதியாகும். ஒழுங்கமைக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு உணவு மற்றும் பிற தளவாடங்களை ஏற்பாடு செய்கிறார். மேலும், விருந்து பொதுவாகப் பெண்களுக்கு ஒரு வதந்திகளை பேசும் இடமாகவும் இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில், இது பொதுவாக ஒரு 'சமிதி' என்று குறிப்பிடப்படுகிறது.
கிட்டி விருந்துகள் புகழ் பெற்ற பின்னர் இந்த பெயர் உயரடுக்கினரிடையே மேலும் பிரபலமடைந்தது. இது கிட்டி விருந்து என்ற பெயரின் பயன்பாடு அதிகரிக்க வழிவகுத்தது. கிட்டி விருந்துகள் பலவிதமான சிறிய விளையாட்டுகளையும் மற்ற உறுப்பினர்களுடன் விவாதிக்க ஒரு தலைப்பையும் கொண்டிருக்கும்.
இதன் மூலம், அனைத்து உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் நிறையப் பணம் சம்பாதிப்பதால் கிட்டி விருந்து பெண்களின் பொருளாதார வலுவூட்டலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிட்டி விருந்து சமூகமயமாக்கத்திற்கான ஒரு சிறந்த வழியாகும். கிட்டி அனைத்து பெண்களின் கல்வி மற்றும் உணர்ச்சி வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒருவரின் குடும்பத்துடனான பிணைப்பையும் வலுவாக்குகிறது என்பது போன்ற நன்மைகளைக் கொண்டிருந்தாலும், கிட்டி விருந்துகளில் கலந்து கொள்ளும் பெரும்பாலான பெண்கள் வதந்திகளில் ஈடுபடுதல், கிட்டியின் அனைத்து உறுப்பினர்களும் மற்ற உறுப்பினர்களின் வாழ்க்கை முறை காரணமாக, தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்படுதல் மற்றும் கிட்டி விருந்துகளில் போதைப்பொருள் பயன்பாடு, சூதாட்டம் போன்றவைகளும் இடம் பெறுவது குறைகளாகவும் இருக்கின்றன.