எனக்கும் ஆர்னிகா நாசருக்கும் திருமணமாகி நாற்பது வருடங்கள் ஆகின்றன. திருமணத்திற்கு முன்பே அவர் என் உறவுக்காரர்த்தான். திருமணத்திற்கு முந்தைய உறவு முறையில் நான் அவருக்கு சின்னம்மா. திருமணத்திற்கு பிறகு எங்கள் உறவு முறைகள் மாறின. சின்னம்மா, மனைவி என்கிற இரு வெவ்வேறு ஆளுமைகளுடன் தான் அவருடன் குடும்பம் நடத்தி வருகிறேன்.
திருமணமான புதிதில் வெடவெடப்பான உடலுடன் மீசை முளைக்காத விடலைப்பையனாய் அவர் காட்சியளிப்பார். நடிகர் ரஜினிகாந்த் போல அவருக்கு கோரை முடி தலைகேசம். முன்கோபி. உணர்ச்சிப்பூர்வமானவர். விழித்துக் கொண்டே கனவு காண்பவர். தலைமைப் பண்புமிக்கவர். எதனையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உடையவர்.
என் சொந்த ஊர் திருக்குற்றாலம் அருகில் உள்ள தென்காசி. என் உறவுக்காரர்கள் எல்லாம் பருவக்காலத்துக்கு வந்தால் ஒரே நாளில் நீர்வீழ்ச்சியில் நான்கைந்து தடவை குளிப்பர். நான்கைந்து தடவை அசைவம் சாப்பிடுவர். என் கணவர் அவர்களுக்கு எதிர்மறையானவர். வீட்டிலேயே ஒத்தைக் குரங்காகத் தங்கிக் கொள்வார்.
திருமணமான முதல் முப்பது வருடங்கள், நாங்கள் எங்கும் சுற்றுப் பயணம் போனது கிடையாது. கடந்த 10 வருடங்களாகதான் இந்தியா முழுக்கச் சுற்றி வருகிறோம்.
ஆர்னிகாவை சுற்றுலா மோகினி பிடித்துக் கொண்டாள் போலும். எந்த ஊருக்குச் சுற்றுலா சென்றாலும் அபாரமாகத் திட்டமிடுவார் ஆர்னிகா. நான்கு மாதங்களுக்கு முன்பே ரயில் முன்பதிவு. லோக்கலில் சுற்றிப் பார்க்க ஆட்டோ அமர்த்துவார். அரை வயிறுதான் சாப்பாடு அசைவம் அறவே கிடையாது.
சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை அட்டவணைப்படுத்தி வைத்திருப்பார். நுழைவுக் கட்டணம், அனுமதி நேரம், விடுமுறை நாள், தங்குமிடத்திலிருந்து தூரம் எல்லாம் குறித்து வைத்திருப்பார்.
அறுபதாயிரம் செலவு பண்ணி சுற்றுலா செல்லும் இடங்களுக்கு வெறும் இருபதாயிரம்தான் செலவு பண்ணுவார்.
இந்தி கிரிக்கெட் வர்ணனையைக் கேட்டுக் கேட்டு ஒன்றிலிருந்து நூறு வரை எண்களை இந்தியில் சரியாகச் சொல்வார். சின்ன சின்ன வாக்கியங்கள் பேசுவார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆர்னிகா பணி புரிந்த போது சுந்தரம் என்கிற கேரளாக்காரர் குடும்ப நண்பரானார்.
அவரது மகள் சுமி துபாயில் ஒரு கார்கோ கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவர் எப்ப பார்த்தாலும் “மாமா மாமி! துபாய் ஒரு வாரம் தங்கிட்டு போங்க. உங்களுக்கு துபாய் சுத்திக் காட்றேன்!” என்பார்.
என் கணவருடன் தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படித்த சம்பத் என்கிற நண்பர் எகிப்து போகும் ஆசையை வளர்த்தார்.
என் கணவர் ஒரு சுற்றுலா ஆர்வலர் இல்லையா? அவர் பள்ளி நாட்களில் எகிப்து பிரமிடுகளைப் பற்றி அதிகம் படித்துப் படித்து பிரமிடுகள் மீதான காதலை வளர்த்துக் கொண்டார்.
என் கணவரின் இயற்பெயர் நாசர். முகமது நாசரோ நாசர் முகமதோ இல்லை. என் மாமனார் என் கணவருக்கு எகிப்து அதிபர் நாசரின் நினைவைப் போற்றி அவரின் பெயரை வைத்திருந்திருக்கிறார்.
பின்னாளில் வெறும் நாசர் என்கிற பெயர் பிடிக்காமல் ஆர்னிகா நாசர் ஆனார் என் கணவர். இருந்தாலும் எகிப்தின் மீதான இரகசியக் காதலை வளர்த்துக் கொண்டேதான் இப்போதும் இருக்கிறார்.
அடுத்து உம்ரா -
மனசாட்சிதான் உலகின் உண்மையான கடவுள் என கூறி தன்னை மதம் சாராத ஆத்திகனாக அறிவித்துக் கொண்டவர் ஆர்னிகா.
ஆனாலும், தொடர்ந்து திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் படித்துப் படித்து இஸ்லாமிய நீதிக் கதைகள் எழுதி எழுதி நபிகள் நாயகத்தின் பெரும் அபிமானி ஆனார் என் கணவர்.
‘நபிகள் நாயகம். இருபது எம்பிஏ பட்டதாரிகளுக்கு சமம். இஸ்லாமில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை. உலகின் லட்சம் தகவல்களை ஹராம் ஹலால் என வகை பிரித்த ஒரே மதம் இஸ்லாம். இஸ்லாமின் ஒழுங்கு ரசிக்கதக்கது. நாத்திகர்களும் இஸ்லாமை பின்பற்றி நல்ல மனிதனாக வாழ்ந்து சந்தோஷமாக மரிக்கலாம். பள்ளிவாசல்களில் பாசாங்கு இல்லாத வழிபாடு மனதிற்கு இதம் பதம் சுகம்’ என்பார்.
அதன் தொடர்ச்சியாக காபாவை தரிசிக்கும் ஆவலை உள்ளுக்குள் வளர்த்துக் கொண்டார்.
சுற்றுலா அழைத்துச் செல்லும் முகவர்களைத் தொடர்பு கொண்டார்.
சென்னை - துபாய் நான்கு நாட்கள் சுற்றுலா இருவருக்கு 2,20,000 ரூபாய் கேட்டார்கள்.
உம்ரா புனிதப் பயணம் ஆறு நாட்களுக்கு இருவருக்கு 2,20,000 ரூபாய் கேட்டார்கள்.
எகிப்து ஆறு நாட்கள் சுற்றுலா. இருவருக்கு நான்கு லட்சம் கேட்டார்கள்.
எங்கள் தனிச்செலவு இரண்டு லட்சம் என வைத்துக் கொண்டால் மொத்தம் பத்தரை லட்சம் ரூபாய் தேவை.
எகிப்து சுற்றுலா வழிகாட்டிகளை அணுகினோம். எகிப்தைச் சுற்றிக் காட்ட எங்கள் சென்னை வீட்டை விற்றுத் தரக் கேட்டார்கள்.
துபாய், மெக்கா, எகிப்தில் உள்ள நண்பர்களை அணுகி ஆலோசனை கேட்டார் ஆர்னிகா. அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் நழுவினார்கள்.
துபாய் சுமி வேலையை விட்டுவிட்டு கேரளா திரும்பி விட்டார்.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் துபாயில் வேலை பார்த்து, தமிழகம் திரும்பிய உப்பிலி ‘தகவல் தொடர்புகள் காலாவதி ஆகி விட்டன’ என்றார்.
எகிப்து ஹம்சா தாமரை இலைத் தண்ணீர் போல, தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் நடந்து கொண்டார்.
ஒரு முகநூல் நண்பர் மூலம் எழுத்தாளர் ஜஸிலா பானு அறிமுகமானார். அவரும் எங்களுக்கு சிக்கனமாகப் பல சுற்றுலா நிரல்களை வடிவமைத்துக் கொடுத்தார்.
எங்களுடைய சிக்கனமான நிதிநிலைக்கு யாருமே ஒத்து வரவில்லை.
எங்கள் துபாய் - உம்ரா - எகிப்து பயண திட்டம் கசிந்தது. எங்கள் மருமகளும் மகனும் எங்களிடம் திட்டவரை அப்பட்டமானது.
நானும் என் கணவரும் மகன் வீட்டில்தான் இருக்கிறோம். தினமும் பேரன் முஹம்மது அர்ஹானை பள்ளிக்கு ஒன்பது டு மதியம் ஒன்று அனுப்ப வேண்டும். மதியம் சிறு தூக்கம். மாலை இருந்து இரவு வரை நான் பேரனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்க வேண்டும்.
மகன் கல்கத்தாவில் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறான். கோவை ஆர்எஸ்புரம் மருத்துவமனையைக் கவனிக்கும் பொறுப்பு மருமகளிடம் போய்ச் சேர்ந்தது.
மகன் - மருமகள் - பேரன்- கணவர் என்கிற கப்பலின் நங்கூரம் நான்.
திடீரென்று நிலாமகன் என்னை அலைபேசியில் அழைத்தான்.
“நல்லா இருக்கீங்களாம்மா?”
“நல்லாயிருக்கேன். நீ நல்லாருக்கியா?”
“இம்… அப்பா சும்மாவே இருக்க மாட்டாரா?”
“அவர் என்னடா செஞ்சாரு?”
“துபாய் -உம்ரா- எகிப்து சுற்றுப்பயணம் போகப் போறீங்களாமே...?”
“பேசிக்கிட்டு இருக்கோம்!”
“சுற்றுலாவுக்குக் குறைந்தது பத்து லட்சம் வரை செலவாகுமாமே… அப்பா வச்சிருக்காரா?”
“கவலைப்படாத. உன்கிட்டயும் ஜாஸ்மின்கிட்டயும் பணம் கேட்டுத் துன்புறுத்த மாட்டோம்!”
“அப்படியா? எத்தனை நாள் சுற்றூலா?”
“பதினைஞ்சு நாள்!”
“கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தீங்களா? அப்பாவுக்கு வயசு 65, உங்களுக்கு வயசு 62, இரண்டு பேரும் மூணு நாடுகளுக்கு பயணம் போறது உங்க உடம்புகளுக்கு ஒத்து வருமா? உம்ரா மட்டும் போய்ட்டு வர வேண்டியதுதானே?”
“சென்னை - துபாய், துபாய் - ஜித்தா, ஜித்தா- கெய்ரோ, கெய்ரோ - சென்னை நேரம் மிச்சம் பணம் மிச்சம் தனித்தனியாக மூணு நாடுகளுக்கு, நாங்க எந்தந்த வயசில போய்ட்டு வரது? எங்க வண்டி ரிசர்வ்ல ஓடுதுடா. எப்ப பெட்ரோல் தீந்து நிக்குமோ அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்!”
“எந்தத் தேதில போறீங்க?”
“பேசிக்கிட்ருக்கம் இன்னும் முடிவாகலை…”
“அம்மா! உங்க பயணத்தை அடுத்த வருஷத்துக்கு தள்ளிப் போடுங்க. மீண்டும் ஒரு பேரனோ பேத்தியோ உங்க மருமகள் பெத்து தரப் போறா… புது விருந்தாளியை வரவேற்கத் தயாராகுங்க!” என்றான் ஆணியடித்தாற் போல...!