எனக்கு முன் தனது வலது கைவிரல்கள் இரண்டை நீட்டினார் ஆர்னிகா.
“ரெண்டுல ஒண்ணை தொடுடா தம்பீ!”
“எதுக்குப்பா?”
“தொடேன்!”
இரண்டு விரல்களில் ஒன்றை தொட்டேன்.
“நூறுக்குள்ள ஒரு நம்பர் சொல்லு!”
சொன்னேன்
மீண்டும் ஏதோ கேட்கப் போனவரை வாயடக்கினேன். “இதுக்கு மேல கேள்விகள் கேட்டா பதில் சொல்ல மாட்டேன். மருமகளுக்கு பிறக்கப் போற குழந்தை ஆணா பெண்ணான்னு ஒத்தையா ரெட்டையா பிடிக்கிறீங்க… சொல்லுப்பா
என்ன பிள்ளைன்னு கண்டுபிடிச்ச?”
“ஆண் குழந்தைதான்!”
“எப்படி?”
“தென்காசி ஷேக்குக்கு வரிசையா மூணு ஆம்பிளை பசங்கள். அந்த வாசனை இங்கயும் கிடைக்குது!”
“ஆணோ பெண்ணோ தாயும் சேயும் நலமா இருக்கணும்!” தொப்பை குலுங்க ஆடும் கணவரை வெறித்தேன்.
“புருஷா! உன் ட்ரிபிள் கன்ட்ரீஸ் டூர் அம்பேல் ஆய்டுச்சே… அதைp பத்தி உனக்கு கவலை இல்லையா? பொதுவா நீ நினைச்ச காரியம் நடக்கலேன்னா உராங்குட்டான் மாதிரி மூஞ்சில தூக்கி வச்சுக்கிட்டு அலைவ… திடீர்னு தியாகி ஆய்ட்ட!”
“டூர் போகலைன்ற வேதனைல துக்கம் தொண்டையை அடைக்குது. மீண்டும் பேரனோ பேத்தியோ பிறக்கப் போகும் சந்தோஷத்ல எனக்கு முதுகுல ரெண்டு இறக்கை முளைக்குது!”
“ஒண்ணு செய்யேன்பா. நீ மட்டும் தனியா பயணம் போய்ட்டு வந்திர்றேன்!”
“நோ.. ரெவர்!”
காரில் நானும் மருமகள் பஹிமா ஆப்ரினும் மகப்பேறு மருத்துவரிடம் செக்கப் போனோம். ஸ்கேன் பண்ணினார்கள்.
எல்லாம் முடித்து வீடு திரும்பிய போது மருமகள் என்னிடம் திரும்பினார்.
“மாமி!”
“என்னம்மா?”
“என் பிரக்னன்ஸி உங்கள் பயணத்தை பாதிக்கக் கூடாது. துபாய் எகிப்துp பயணத்தை விடுங்க.. உம்ரா மிகமிக முக்கியமானது. பயணத்தைth தள்ளிப் போட வேண்டாம்… நீங்க தீர்மானிச்ச தேதில போய்ட்டு வாங்க!”
“நிலா கல்கத்தால இருக்கான். முஹம்மது அர்ஹானை யார் பார்த்துக்கிரது? உன்னைk கண்ணும் கருத்துமாய் யார் கவனிச்சிக்கிரது?”
பஹிமா ஆப்ரின் எனக்கு மருமகளாக வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. எங்களுக்குள் சிறு வாக்குவாதம் கூட வந்தது இல்லை. உறவினர்களும் நண்பர்களும் எங்களுக்குள் மாமியார் - மருமகள் உள்நாட்டு யுத்தம் வராதா என
விளக்கெண்ணையைk கண்களில் ஊற்றிக் கொண்டு காத்திருப்பர். யாரிடமும் என் மருமகள் பற்றி குறை பேச மாட்டேன் மருமகளும் அப்படியே. ஆர்னிகா நாசர் - நிலாமகன் – பஹிமா ஆப்ரின் - முஹம்மது அர்ஹான் இந்த நால்வருக்கான என் அர்ப்பணிப்பை பூரணமாக உணர்ந்தவர் சம்பந்தியம்மா.
“நான், நிலா மற்றும் அப்பாம்மாகிட்ட உங்க பயணத்தை பேசினேன்!”
“சரி!”
“நீங்க என்ன தேதில மூன்று நாடுகள் பயணம் போறீங்க?”
“ஜனவரி 19 மதியம் ரயிலில் தாம்பரத்துக்கு புறப்படுகிறோம். தாம்பரம் நள்ளிரவு மூன்று மணிக்கு சேருகிறோம். ஏர்போர்ட்டுக்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் போய் விடுவோம். ஜனவரி 20லிருந்து 23 துபாய். ஜனவரி 23இரவிலிருந்து ஜனவரி 28 வரை உம்ரா. ஜனவரி 28 லிருந்து பிப்ரவரி 2 வரை எகிப்து!”
“மொத்தம் எத்தனை நாட்கள் உங்கள் பயணம்?”
“பதினாலு நாட்கள்!”
“கிளினிக்கை கவனிக்க ஒரு டென்டிஸ்ட்டை பணியமர்த்துகிறோம். முதல் ஏழு நாள் நிலா என்னை உடனிருந்து கவனித்துக் கொள்வார். அடுத்த ஏழு நாட்கள் எங்கத்தாம்மா உடனிருந்து கவனிச்சிக்குவாங்க!”
“முஹம்மது அர்ஹான்!”
“ஸ்கூலுக்கு வேன்ல போய்ட்டு வந்திருவான். ப்ளேஸ்கூலுக்கு ஆட்டோல போய்ட்டு வந்திருவான்!”
“சமையல்?”
“பிரச்சனை இல்லை. நானே பார்த்துப்பேன்!”
“வாழை மரங்களுக்கு தண்ணி ஊத்றது?”
“வேலைக்காரம்மா பார்த்துக்கும்!”
“உனக்கொண்ணும் சங்கடமில்லையே?”
“தாராளமா போய்ட்டு வாங்க!”
“வரும்போது உனக்கும் அர்ஹானுக்கும் என்னம்மா வாங்கிட்டு வரட்டும்?” என்றார் ஆர்னிகா.
“நீங்க ரெண்டு பேரும் பத்ரமா போய் பத்ரமாக திரும்பி வந்தா அதுவே எனக்குப் போதுமானது மாமா!”
முஹம்மது அர்ஹான் ஆர்னிகாவைப் பின்புறமாக செல்லமாகக் கடித்து வைத்தான். கடியிலிருந்து தப்பிப்பது போல நடித்துக் கொண்டே அர்ஹானைச் சுற்றி வந்தார் ஆர்னிகா.
சருட்டென்று அவனைத் தூக்கி தன் முகத்தருகே நிறுத்தினார்.
மூக்கோடு மூக்கு வைத்து ஒருவர் கண்ணை ஒருவர் வெறித்துப் பார்த்தனர்.
“பேசாம இவனை முதுகுல வச்சுக்கிட்டு மத்தியகிழக்கு ஆசியா பயணம் போய் வருவோமா?”
“ஏர்ஹோஸ்டஸ்ஸை செல்லமா கடிச்சு வச்சிருவான்.. பைலட்டைத் தள்ளிக்கச் சொல்லி நான் விமானம் ஓட்றேன்னு அடம் பிடிப்பான்?”
“மதுவுக்கு அல்லது மைதிலி டீச்சருக்கு போன் பண்ணி இவனை அடக்க வேண்டியதுதான்!”
அழகிய பல்வரிசை பளீரிட சிரித்தான் முஹம்மது அர்ஹான்.
“நாலு குஞ்சு பூச்சாண்டி பெயரை சொல்லி இவனைக் கன்ட்ரோல் பண்ணுவோம்!” சிறிதாக சிரித்தாள் மருமகள்.
என் திறன்பேசி சிணுங்கியது. டிஸ்பிளேவில் நிலாமகன்.
“அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வஅலைக்கும் ஸலாம்”
“நாங்க எல்லாம் பேசி உங்கள் பயணத்தை தொடர வச்சிட்டோம்!”
“சந்தோஷம்டா நிலா!”
“ஏர் டிக்கெட் புக் பண்ண ஆரம்பிச்சிடலாமா?”
“இப்பவேவா?”
“இப்பவே ஏர்டிக்கெட் எடுத்தா டிக்கெட் விலை கம்மியா இருக்கும்?”
“அப்டின்னா நீயே எடுத்துக் கொடுத்துடுடா பணம் நாங்க குடுத்திடுரோம்”
“பணம் தேவைப்பட்டால் என் ஜெயப்பிரியா சீட்டை தள்ளி எடுத்துக்கங்க!”
“ஏர் டிக்கெட்டை எடுக்க போதுமான பணம் உன் அப்பாகிட்ட இருக்கு!”
“அப்பாகிட்ட போனைக் கொடு!”
“நல்லாருக்கியா நிலா?”
“நல்லா இருக்கேன்த்தா!’
“ஜனவரி இருபதாம் தேதி சென்னை - துபாய் டிக்கெட் எடு. ஜனவரி இருபத்தி மூன்றாம் தேதி துபாய் - ஜெத்தா டிக்கெட் எடு. ஜனவரி 28 இரவு ஜெத்தா டு கெய்ரோ டிக்கெட் எடு. பிப்ரவரி இரண்டு இரவு கெய்ரோ டு சென்னை
டிக்கெட் எடு!”
“சரி!”
“காசு கம்மியா இருக்கிற ஏர்லைன்ஸ் பாரு..”
“ஓகே!”
“வேற ஏதாவது பிரச்சனை இருக்கா?”
“விசா எடுக்காம ஏர் டிக்கெட் எடுக்கிறோமே விசா எடுக்கிறதுல பிரச்சனை வந்தா என்ன பண்றது?”
“ஒரு பிரச்சனையும் வராது. அல்லாஹ் பார்த்துப்பான்!”
“பாஸ்போர்ட்ல இருக்கிற பெயர்களை மாத்தாம அப்படியே தான் ஏர் டிக்கெட் எடுக்கனும்!”
“எடு!”
“உங்க ரெண்டு பேர் பாஸ்போர்ட் முதல் பக்கத்தை ஒளிப்படம் எடுத்து அனுப்புங்க. உங்க பாஸ்போர்ட் இன்னும் குறைஞ்ச பட்சம் ஆறு மாசத்துக்கு வேலிட்டா இருக்கான்னு பாருங்க!”
“2029 வரைக்கும் இருக்கு!”
“ஓகே.. ஒரு அரை மணி நேரத்ல பத்துக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு போய் காசு கம்மியான ஏர்டிக்கெட் எடுக்கிறேன்!”
துழாவி விட்டு ஒரு மணி நேரத்தில் தொடர்புக்கு வந்தான் நிலா.
“அத்தா… கோயம்புத்தூர் டு துபாய் காஸ்ட்லி. 20.01.2025 காலை 7:20 மணிக்கு wy252 ஓமன் ஏர் விமானம் கிளம்பி மஸ்கட்டுக்கு காலை 9.50 மணிக்கு சேருகிறது. சில மணி நேரம் காத்திருப்புக்கு பின் wy609 ஓமன் ஏர்விமானம்
மதியம் 2:20மணிக்கு கிளம்பி மதியம் 3.35மணிக்கு துபாய் DXB விமானநிலையம் சேருகிறது. உங்கள் இருவருக்குமான கட்டணம் 21, 596 ரூபாய். 23.01.25 மாலை 7:30க்கு XY 510 ப்ளைனாஸ் விமானம் மூலம் துபாயில் இருந்து ஜெத்தா போகிறீர்கள். ஜெத்தாவில் இரவு 9: 55க்கு சேருகிறீர்கள். உங்களிருவருக்குமான கட்டணம் 15, 392 ரூபாய். 28.01.2025 இரவு 7 மணிக்கு ஏர்கெய்ரோ SM480 ல் ஜெத்தாவில் கிளம்பி இரவு 8: 15 மணிக்கு கெய்ரோ சேருகிறீர்கள். ஜெத்தா டு கெய்ரோ கட்டணம் 15,752 ரூபாய். 02.02.2025 மாலை 5: 40மணிக்கு இத்திகாட் EY 716 விமானத்தில் ஏறி அபுதாபியில் இரவு 10: 55 மணிக்கு இறங்குகிறீர்கள். 3. 2. 2025 நள்ளிரவு 2.50மணிக்கு அபுதாபியில் இத்திகாட் EY342ல் ஏறி சென்னைக்கு காலை 8.30 மணிக்கு வந்து சேருகிறீர்கள். உங்கள் இருவருக்குமான கட்டணம் 31,301 ரூபாய். கிராண்ட் டோட்டல் 84040 ரூபாய். இதில் முக்கியமான விஷயம் டிக்கெட்டை கான்சல் பண்ண முடியாது. ரீபண்ட் பண்ண முடியாது. பயணத்தை முன்பின் தேதிகளுக்கு ப்ரிபோன் போஸ்ட்போன் பண்ண முடியாது!”
ஆர்னிகா முழுவதாக 100 வினாடி யோசித்தார். பின் “நாலு டிக்கெட்களையும் எடுத்திடு!” எடுக்கப் போகும் டிக்கெட்டுக்களால் வரப்போகும் பிரச்சனைகளை நானும் ஆர்னிகாவும் சிறிதும் அறிந்தோமில்லை!