அன்றும் இன்றும் - 17

அன்று
தென்பொதிகைப் பூக்காட்டில் பிறந்ததனால், மலராய்
தேன் சிந்தி, மணம் பரப்பி, மனம் வென்ற தாயே!
தென் மதுரைச் சங்கத்தில் வளர்ந்ததனால், அறிவுத்
தீம்பாலில் தேன் கலந்து இனிப்பவளே, அமுதே!
மன்னர்கள் மணிமகுடத் தலைவணங்க வளர்ந்தாய்
மாத்தமிழர் நெஞ்சத்தில் உலவுகின்ற காற்றே!
இன்பமூட்டும் செந்தமிழின் நூல்களெல்லாம் தவழ்ந்தாய்
இயற்கையன்னையின் உடன் பிறந்த தமிழே!
வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட்டவளும் நீயே!
வெண்நிலவாய், விண்மீனாய் இருள்நீக்கும் விளக்கே!
உள்ளத்தில் அன்புடைமை விதைத்துவிட்ட குறளால்
உலகத்து மக்களெல்லாம் ஒன்றிணைத்த பாவே!
கள்ளமுள்ள சாதிமதம் காணாத தாயே!
கவிஞர்கள் தண்நிழலில் உடன்செல்லும் மாதே!
அள்ள அள்ளக் குறையாத அமுதூறும் குறளில்
அகரத்தை முதலாகக் கொண்டதமிழ்ச் சுடரே!
இன்று
உரைவீச்சு முட்டாள்கள் அடிக்கின்றான் கொள்ளை
உணர்வற்ற தமிழர்கள் விளையாட்டுப்பிள்ளை
கறைபடிந்து, திரைப்படங்கள் தொலைக்காட்சி யாச்சு
கல்வியெல்லாம் தமிங்கிலமாய் திசைமாறிப் போச்சு
கறைபடிந்த குடியுரிமைச் சட்டத்தால் உலகம்
கரைபோட்டுத் தடுத்திட்டால் யார்கேளீர் சொல்வீர்!
கரை தட்டி நிற்கின்ற கப்பலான ஏழை
கண்ணீரை வடிக்கின்றால் பசியால் இன்று!
- பாவலர் ஆ. சின்னச்சாமி, போடி நாயக்கனூர்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.