அன்றும் இன்றும் - 24

கண்ணகியின் கால் சிலம்பு, நீதி பேசியது அன்று
கண்ணகி கூட நீதிக்குக் காத்திருக்கனும் இன்று
நீதியை நிலைநிறுத்த, மன்னர்கள் தன் கை வெட்டியதும்
தன் மகனை மாய்த்ததும் தன்னைச் சாய்த்ததும் அன்று
மன்னனுக்கும் மகனுக்கும் நிதியை நிலைநிறுத்த
நீதியைச் சாய்க்கின்றனர் இன்று!
அன்று, வழிப்போக்கனும் முதியவர்களும் ஓய்வாய் சாய்ந்து
முதிர்ந்த கதை பேசிய திண்ணை இல்லை இன்று
தாண்டிய காலும் கால்வாய் தண்ணியும் எல்லைச் சண்டையிழுக்கும் இன்று
வாசலுக்கும் இருபக்கமும் குத்த வைத்த கற்களின் காவல் சான்று
பெருசுகள் இல்லாத இல்லமதில் இளசுகள் மனது இன்று சிறுசு!
பெற்றவர் சம்மதத்துடனோ இல்லாமலோ திருமணம் அன்று
பெற்றவர்கள் ஆனபின்புதான் சில திருமணங்கள் இன்று
ஊட்டமும் உயிரோட்டமுமாய் ருசியுமாய் உணவு அன்று
பார்வைக்கும் பகட்டுக்கும்தான் உணவு இன்று
தட்டு ஏந்தி விதவிதமாய் ’இராப்பிச்சை’ கண்ட அன்றைய உணவு
தட்டு ஏந்தித்தான் இன்றைய இரவு நட்சத்திர விடுதி உணவு
ஆடையில் அன்றைய நாகரிகம்! ஆடைக் குறைப்பில் இன்று
அன்றிருந்த வாக்கும் நாணயமும் விசமில்லா விவசாயமும்
பணத்திடம் மண்டியிடுகிறது இன்று!
நாடித்துடிப்பு பார்த்தது அன்றைய வைத்தியம்!
பணமுடிப்பு கேட்கிறது இன்றைய மருத்துவம்
காலாவதியான பின்புதான் வந்தான் காலன்...
வியாதியால் காலம்பாராது வருகிறான் இன்று
இருந்தாலும் அன்றின் கொஞ்சம் மிச்சமே
இன்றின் உயர்வுக்கு அச்சாரம்!
- வழக்குரைஞர் க. மகேந்திரன், தூத்துக்குடி..

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.