வசந்த விடியல் - 21
காரிருள் சூழ்ந்த உலகிற்கு
கதிரவனின் வருகை வசந்த விடியல்
தேன் தேடி அலையும் தேனீக்களுக்கு
மொட்டவிழ்க்கும் மலர்கள் வசந்த விடியல்
களைப்போடு தூங்கும் விவசாயிக்கு
சேவலின் கூவல் வசந்த விடியல்
வானம் பார்க்கும் சம்சாரிக்கு
நன்மழை வசந்த விடியல்
மண்ணிற்குள்ளிருந்து வெளி வரும் துளிருக்கு
இவ்வையகம் வசந்த விடியல்
மொழியின் தாயான தமிழ் கீழடியிலிருந்து வெளி வந்தது
உலகத் தமிழருக்கெல்லாம் வசந்த விடியல்
அறியாமல் வாழ்வோரின் உள்ளங்களுக்குள்
அறிவு உள்நுழைவது அவர்களுக்கு வசந்த விடியல்
முல்லைப் பெரியாற்றில் நீர் வரும்போதெல்லாம்
தேனி மாவட்ட விவசாயிகளுக்கு வசந்த விடியல்
’விடிய;’ என்றால் வைகறைப் பொழுதுதானா?
வேலை முடிந்து திரும்பும் கணவனின் வருகை
வீட்டில் காத்திருக்கும் இல்லாளுக்கு வசந்த விடியல்
இத்தேன் துளிகள் கவியரங்கில் கவிபாட வந்தவர்களுக்கு
இந்த மேடையே வசந்த விடியல்தான்
நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு
நாளெல்லாம் வசந்த விடியலே...!
- எஸ். செந்தில்குமார், தேனி.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.