மார்கழிக் கோலங்கள் - 5
வாசல்களின் வைபவமே
சாலைகளின் பண்டிகையே...
காலை வந்து எழுப்பும் கதிரவனின்...
கண் கூசும் ஒளி மயமே...
கருக்கலிலே வளையோசை
கலகலப்பாய்க் கேட்கிறதே...
ஏழுவகைப் பெண்ணினமும்
பரபரப்பாய் இயங்கிடுதே...
வெண்ணிறத்து கோலங்களும் அழகுபடுத்தி மகிழ...
வண்ண வண்ண உடை உடுத்தியதே...
பூசணிப்பூ வாசனையும்
புத்துணர்வு தருகிறதே...
கண்ணுறக்கம் தடுத்தாலும்
கலைநயத்தில் குறையிலையே...
பண்பாட்டுப் பழக்கங்கள்
நிலையெனவே இருக்கிறதே...
மை இருட்டு வேளையிலே நம்...
மை விழிகள் போடும் கூட்டணியோ?
கை வழியே வழிவதென்ன?
ஓவியமோ ? காவியமோ ?
மையமிட்ட மகளிரணி
வளைத்திட்ட கம்பிகளோ?
தைமகளை வரவேற்க
மார்கழியின் கம்பளமோ ?
அழகாகச் சிரிக்கின்ற
பூச்செடியும் வரைகிறதே...
அதன் மீதும் பனித்துளிகள்
மெதுவாகப் படர்கிறதே.
புதுமைகள் நிறைந்திட்ட
பதுமைகளும் வடிக்கிறதே...
அறியாத மழலைகளோ
அதையெடுக்கத் துடிக்கிறதே...
தென்றலது வந்தாலும்
அசையாத மரங்களிங்கே...
சின்னத்தூறல் விழுந்தாலும்
கலையாத நிறங்களிங்கே...
காலங்கள் செய்த கோலங்கள் ஒன்றானதே...
எல்லோர் வீட்டு வாசலும் கோலங்களும்...
கோலங்கள் நம் இல்லத்துக் கோவில்கள்...
- தி. இராஜபிரபா, தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.