நெஞ்சுக்குள் சுகம்
எழுதுவது உனக்குப் பிடிக்கும்
அதனால்
நானும் எழுதுகிறேன்...
கவிதை உனக்குப் பிடிக்கும்
அதனால்
கவிதையாய் எழுதுகிறேன்...
ஞாபகங்கள் உனக்குப் பிடிக்கும்
அதனால்
‘அந்தநாள் ஞாபகங்களை’-
ஆசையோடு நினைவுபடுத்துகிறேன்...
‘நினைவுகள்’...
தோன்றி மறையும்
நீர்க்குமிழி தான்...
வந்து போகும்
கடல் அலை தான்...
நிரந்தரமில்லை...
ஆனாலும்,
நிரந்தரமாய்
நெஞ்சுக் குழிக்குள்
புதைந்து கிடப்பவை...
அவைகள்
அடிக்கடி
நினைவுகளாய்
நினைக்கப்படுகின்றன...
கனவுகளாய்
காணப்படுகின்றன...
நினைவுகளாய் நினைப்பதிலும்
கனவுகளாய் காண்பதிலும்
நெஞ்சுக்கு ஒரு சுகம்..!
- பாளை.சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.