இருந்தும் இல்லாமல்..!
எளிமையான
இரவு உடையில்
அடுக்களையில் நீ
ஆசையாய்
தோசை வார்க்கும் போது
அழகாயிருக்கிறாய்..!
அதை விடக்
காலையில் குளித்து
அள்ளி முடிக்காத
அடர்ந்த கூந்தலோடு
பளிச்சென்றிருக்கிறாய்..!
தலை சீவி, பவுடர் பூசி
பொட்டு வைத்து, பூச்சூடி
பட்டுடுத்தி
பதுமை போல்
பாவையாய்
நீ வருகையில்
இன்னும் அழகாயிருக்கிறாய்..!
என்றாலும்
முகம் சுண்டி
உதடு துடிக்க
பற்கள் கடித்து
கண்கள் சிவக்க
கோபங் கொண்டு
என்னோடு நீ
பேசும் போது
உன்னிடம் கண்ட
அழகெல்லாம்
இருட்டில் நிழலாய்
இல்லாது போகிறது..!!
- பாளை. சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.