கோடரிக் காம்புகள்!
ஆக்களும் ‘அம்மா’ வென்னும்;
அம்குயில் ‘குக்கூ’ வென்னும்;
காக்கையும் ‘காகா’ வென்னும்;
கரிபரி நரிநாய் போன்ற
மாக்களும் தத்தம் வாயால்
மலர்ந்துதாய் மொழியே பேச
ஆக்கமில் தமிழா நீயோ
ஆங்கிலம் பேசு கின்றாய்!
மலத்தினில் மொய்க்கும் ஈயாய்
மாறிடல் நன்றா? செங்க
மலத்தினில் மொய்க்கும் ஈ நீ
மறந்திடல் வேண்டா; தங்கள்
குலத்தினை அழிக்க வந்த
கோடரி காம்பே! இங்காங்
கிலத்தினில் பேசிப் பேசி
இன்றமிழ் கொன்று போட்டாய்!
படித்தவன் என்று காட்ட
பைந்தமிழ் தடையா? மேன்மை
படைத்தவன் என்று நாட்ட
பழந்தமிழ் முடையா? நாவில்
அடுத்தவன் ஆங்கி லத்தை
அடுக்குதல் சரியா? சீச்சீ
குடித்தவன் கூட உன்போல்
கொன்றிடான் தமிழை போ!போ!
- அகரம் அமுதா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.