எதை ஏற்கலாம்...?
கஷ்டத்தில்
கை நீட்டிக்
கடன் கேட்டேன்...
“என் துன்பத்தில்
எனக்கு யாரும்
உதவவில்லை,
என் உழைப்பால்
நான் உயர்ந்தேன்;
உன் உழைப்பால்
நீ உயர்ந்து கொள்...!”
செவிமடுக்க செப்பினார்
ஒருவர்..!
“என் துன்பம்
என்னவென்று
எடுத்துரைத்த பின்னும்
உதவினார் யாருமிலர்;
எனவே,
உன் துன்பம் நானறிவேன்
நான் தரும் முன் பணம்
உன் நல் வாழ்விற்கு
பெற்றுக் கொள்”. என
உதவ முன் வந்தார்
மற்றொருவர்..!
இரண்டு பேரும்
இயல்பாய்ச் சொன்னவை
இனிதானவை...!
எதை ஏற்றுக் கொள்வது?!
- பாளை.சுசி .

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.