பாலம்!
வடலியடைப்பில்
அரசடிச்சந்தி.
அரசே இல்லாத
அரசடிச்சந்தி- அங்கே
அரசோச்சியது வாலிபம்.
அரசைவெட்டி
வெள்ளம் ஓட
கட்டப்பட்டது
பாலம்.
பாலம் மேல் காத்திருக்கும்
பள்ளி மாணவியருக்காய்
காதல்
பாலம் ... ...
காதலின் பாலம்
அது வாலிபத்தின் அடையாளம்
வெள்ளம் ஓட
கட்டிய பாலத்தினூடே- தமிழனின்
இரத்த வெள்ளம் ஓடியது.
அரசமரத்துடன் புத்தனும்
புதைந்து போனான்.
அரசு இருந்திருந்தால்
புத்தன் இருந்திருப்பான்.
இன்று அரசும் இல்லை
காதலை காண
வாலிபமும் இல்லை
அன்று அரசமரத்தால்
குதித்த பேய்கள்
காக்கிச்சட்டையுடன்
வேட்டைக்கு
நிற்கின்றன
காணமல்போன
வாலும் வரியும் கொண்ட
புத்தனைத் தேடி...
புத்தனுக்கு இது
வனவாசம் முடிந்து
அஞ்ஞானவாசம்!
- நோர்வே நக்கீரா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.